Friday, March 19, 2010

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற போராட்டங்கள்-பிரகாஷ் காரத்



நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் பகுதி மூன்றுவார காலம் நடைபெற்று இடைவேளை விடப்பட்டிருக்கிறது. அடுத்து ஏப்ரல் திங்களில் கூடும். கடந்த மூன்று வார காலமும் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரானது நாட்டின் அரசியல் வானில் சில தெளிவான அடையாளங்களைப் பதித்திருக்கின்றன. சென்ற ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ கூட்டணி மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் அதனால் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. ஐமுகூட்டணிக்கு 262 இடங்கள் மட்டுமே கிடைத்தது. ஆயினும் அது சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் அளித்த ஆதரவினை அடுத்து அதனால் அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. இதில் வினோதம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியானது இக்கட்சிகளிடம் ஆதரவு எதுவும் முறையாக கோராத நிலையிலேயே இக்கட்சிகள் அதற்கு ஆதரவு அளித்தன.

ஆயினும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது தன்னுடைய கொள்கைகளுக்கு மக்கள் அபரிமிதமான ஆதரவினை அளித்திருப்பது போலவே கருதிக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டணிக்கு முன்பிருந்த பலம் இப்போதில்லை என்பதையோ, தனக்கு வெளியிலிருந்து சில கட்சிகள் ஆதரவு அளிப்பதால்தான் அரசாங்கத்தை அமைக்க முடிந்திருக்கிறது என்பதையோ அது அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. எனவேதான் ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்திற்குள்ளேயே அது ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. ஆட்சியாளர்களிடம் அதிருப்திகொண்ட முதல் கட்சி சமாஜ்வாதிக் கட்சிதான். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின்போது திடீரென்று குட்டிக்கரணம் போட்டு, மிகவும் இழிவான முறையில் சந்தர்ப்பவாத நிலை எடுத்து, காங்கிரசுடன் போய் சேர்ந்து கொண்ட சமாஜ்வாதக் கட்சியின் தலைவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்பேயே காங்கிரசுடன் கசப்புணர்வுகள் தொடங்கிவிட்டன. அப்போது காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது தவறு என்றும் அவ்வாறு ஆதரவு அளித்ததற்கு வருந்துவதாகவும் வெளிப்படையாகவே முலாயம் சிங் பேசத் தொடங்கிவிட்டார். ஐமுகூட்டணியின் மற்றொரு விசுவாசக் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடி-யும் தேர்தல்களுக்குப்பின் வெறுப்பை உமிழத் தொடங்கிவிட்டது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்திருப்பதற்கு, ஐமுகூ அரசாங்கம் எவ்விதப் பொறுப்பையும் ஏற்கத் தயாராயில்லை. சர்வதேச அளவில் இவற்றின் விலைகள் உயர்ந்திருப்பதும், விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த விளைபொருள்களுக்குக் கூடுதல் விலை கொடுத்ததும், அதனால் அவர்கள் நிறைய உண்ணத் தொடங்கி விட்டதும், மாநில அரசுகள் விலைவாசி உயர்வுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்காததும்தான் விலை உயர்வுக்குக் காரணங்கள் என்று ஆட்சியாளர்கள் மக்கள் மீதும், மாநில அரசுகள் மீதும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய மத்திய அரசின் மிக முரட்டுத்தனமான நடவடிக்கைகளினால் நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுமே வெகுண்டெழுந்தன. இது இயற்கையே, இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே நம்மால் காண முடிந்தது. விலைவாசிக்கு எதிராக நடைபெற்ற விவாதங்களில் அரசாங்கத்தை வெளியிலிருந்து ஆதரித்து வந்த கட்சிகளும் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக நம்முடன் இணைந்து குரல் கொடுத்தன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திட வேண்டும் என்று கிரித் பாரிக் குழு அறிக்கை சமர்ப்பித்தபின் அதன் அடிப்படையில் அரசாங்கம் செயல்படத் தீர்மானித்தபோது, அதன் கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. திமுகவும் திரிணாமுல் காங்கிரசுமே தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தின. எனவே பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது என்ற தன் முடிவை மத்திய அமைச்சரவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதிலும், காங்கிரஸ் சரியான தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசு, யூனியன் பட்ஜெட்டை பெட்ரோல் மற்றும் டீசல்களின் மேல் சுங்கம் மற்றும் கலால் தீர்வைகளை உயர்த்திடப் பயன்படுத்திக் கொண்டது. பட்ஜெட் உரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறிவிப்புக்கு எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் கிளம்பியது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே வெளிநடப்புச் செய்ததைப் பார்க்க முடிந்தது.

மத்திய அரசு உருப்படியாக ஏதேனும் செய்திருக்கிறது என்று சொன்னால் அது மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவை மாநிலங்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதுதான். மாநிலங்களவையில் இடதுசாரிக் கட்சிகள், பாஜக மற்றும் சில பெரிய மாநிலக் கட்சிகள் ஆதரவு அளித்ததால் இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிந்தது. ஆயினும், இந்தச் சட்டமுன்வடிவுக்கு எதிரானவர்களை - சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களை - மேலும் கூடுதலான முறையில் ஆத்திரப்பட வைத்திருக்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் எவ்விதமான தயக்கமுமின்றி தங்கள் முழு ஆதரவினை அளித்தன. அதேபோன்று அவை நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அரசின் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எவ்விதத் தயவுதாட்சண்யமுமின்றி தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஐமுகூ அரசாங்கமானது, தன்னுடைய அமெரிக்க ஆதரவு. பெரு முதலாளிகள் ஆதரவு, தனியார்மயக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அரசு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கக்கூடிய சட்டமுன்வடிவுகளில் ஒன்று, தேசிய மயமாக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்க முன்வந்திருப்பதாகும். தற்போதுஅதில் அரசின் பங்குகள் 55 விழுக்காடு இருக்கிறது. அதனை 51ஆகக் குறைத்திட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து, நாட்டின் ‘‘கல்விச் சந்தை’’யில் அந்நிய கல்வி நிறுவனங்களும் புகுந்திட வழிவகுத்துத் தந்திருக்கிறது. லாபகரமாக இயங்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தனியாருக்குத் தாரை வார்க்க பட்ஜெட்டில் முன்மொழிந்திருப்பதுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இடதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்திருப்பதோடு மட்டுமல்ல, மற்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளாலும் எதிர்க்கக்கூடிய நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. ரசாயன உரத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மான்யங்களில் மூவாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வெட்டிக் குறைத்திட அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்ல, சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் அதற்கு முன்னாள்களில் ஆதரவு அளித்து வந்த கட்சிகளும் எதிர்த்துள்ளன. அரசு இவ்வாறு உணவு மற்றும் ரசாயன உரத்திற்கு அளித்து வந்த மான்யங்களை வெட்டிக் குறைத்துள்ள அதே சமயத்தில், சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளித்திருப்பதையும் எவரும் பார்க்கத் தவறிவிடக் கூடாது. ஐமுகூ அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த எந்த வொரு கட்சியும் இத்தகைய நடவடிக்கைகளை மன்னிக்க முடியாது. அவ்வாறு அவை செய்யுமானால் அவற்றிற்கு மக்கள் இதுநாள்வரை அளித்து வந்த ஆதரவு அகன்று அவை தனிப்படும் என்பது நிச்சயம்.

மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்திற்குக் கிஞ்சிற்றும் கவலை யில்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, அது தற்போது கொண்டுவர முயன்றுகொண்டிருக்கும் ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவு (Civil Nuclear Liability Bill) ஆகும். நாட்டில் நிறுவப்படும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அப்போது மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்து இச்சட்டமுன்வடிவு சில விவரங்களைத் தெரிவிக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது, நாட்டில் 10 ஆயிரம் மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்வதற்காக அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அணுஉலைகளை வாங்குவது தொடர்பாக கொண்டுவரப்படுகிறது. அணு உலைகளை அளித்திடும் அமெரிக்க நிறுவனங்கள், அவை அளித்திடும் அணு உலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிப்புகள் உருவானால் அதனால் விளையும் இழப்பு எதற்கும் பொறுப்பு இல்லை என்று இந்தச் சட்டமுன்வடிவு கூறுகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், விபத்தால் ஏற்படும் அனைத்துப் பாதிப்புகளுக்கும் இந்திய அரசாங்கமும் நாட்டு மக்களும்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமேயொழிய, அணுஉலைகளைத் தந்திட்ட அமெரிக்க நிறுவனங்கள் அல்ல. இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமானாhல், அதன்பின் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடு, மருத்துவ சிகிச்சை முதலானவற்றை இந்த அணுஉலைகளை அளித்த அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கோர முடியாது.
ஆயினும், இத்தகைய சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதில் மன்மோகன்சிங் அரசாங்கத்திற்கு எவ்விதமான லஜ்ஜையுமில்லை. இந்தச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஐமுகூ அரசு முன்வந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு கிளம்பியதிலிருந்து ஐமுகூ அரசாங்மானது எந்த அளவிற்கு தனிமைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

அடுத்து, ஐமுகூ அரசாங்கமானது மாநிலங்களின் உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள முயன்றுவருவதைக் காண முடிகிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரை, கல்வியில் மாநிலங்களுக்கு இருந்துவரும் பங்கினைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பள்ளி மற்றும் உயர் கல்வி தொடர்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவிப்புகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார். முன்மொழியப்பட்டிருக்கும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம் (National Commission for Higher Education and Research) என்பது உயர் கல்வித்துறையில் மாநிலங்களின் பங்கைக் கடுமையாக வெட்டிக் குறைக்கிறது. மேலும், மத்திய அரசானது மாநிலங்களுக்குப் போதிய நிதி உதவி எதனையும் அளித்திடாமல் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education Act) தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக எண்ணற்ற கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு ஆக்கிரமிக்க முயல்வதும் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதி ஆதாரங்களைக் குறைத்துக் கொண்டிருப்பதும் வரவிருக்கும் காலங்களில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல்களை அதிகப்படுத்தும் நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மூன்று வார இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கூடவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரானது, மத்திய அரசு கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய சட்டமுன்வடிவுகள், விலைவாசி உயர்வு, வேளாண்மை நெருக்கடி, மற்றும் பட்ஜெட்டில் அரசு முன்மொழிந்துள்ள சில திட்டங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆவேச அலைவீச்சைப் பார்க்கப்போகிறது.

இடதுசாரிக் கட்சிகள், விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறையை வலுப்படுத்தி, எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடக் கோரியும் மக்களை அணிதிரட்டி வருகின்றன. மாநிலங்களில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்ற இயக்கங்கள் காரணமாக மார்ச் 12 அன்று தில்லியில் நடைபெற்ற பேரணி / ஆர்ப்பாட்டம் மகத்தான வெற்றி பெற்றது. நாடு முழுதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றனர். அடுத்து இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 8 அன்று நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் செய்து 25 லட்சம் மக்கள் சிறையேகத் திட்டமிட்டிருக்கிறோம்.

வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரும், தொழிலாளர் வர்க்கத்தின் உடனடிக் கோரிக்கைகளுக்காக ஐந்து மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ள இருக்கிறது. மார்ச் 5 அன்று நாடு முழுதும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கைதானார்கள். தொழிலாளர் வர்க்கமும் வரவிருக்கும் காலங்களில் தங்கள் போராட்டங்ளையும் வேலைநிறுத்தங்களையும் தீவிரப்படுத்த முனைந்துள்ளன. இவை அனைத்தும் மாற்றுக் கொள்கைகளுக்கானதொரு போராட்டத்தை ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் இடதுசாரி சக்திகளும் ஒருமுகப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வழிவகுத்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: