Monday, March 1, 2010

உ.ரா.வரதராசனின் துயாரார்ந்த மரணம் - -பிரகாஷ் காரத்

தோழர் உ.ரா. வரதராசன் தற்கொலை செய்து கொண்டு மரணமுற்றிருப்பது கட்சி முழுமையையும், விரிவான அளவல் தொழிற்சங்கத் தொழிலாளர்களையும் மற்றும் ஆதரவாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. டபிள்யுஆர்வி என்று அனைவராலும் அறியப்பட்ட தோழர் உ.ரா. வரதராசன் ஒரு திறமைமிக தொழிற்சங்கத் தலைவராகவும், அகில இந்திய சிஐடியு-வின் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். பிப்ரவரியில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டம் வரை மத்தியக் குழு உறுப்பினராகவும், தமிழ் நாடு மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தடவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளராவார்.
பிப்ரவரியில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநிலக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், டபிள்யுஆர்வி=க்கு எதிராக மத்தியக் குழுவால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மத்தியக்குழுவிலும் மாநிலக் குழுவிலும் அவர் வகித்த அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனை அடுத்துத்தான் டபிள்யுஆர்வி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அநேகமாக பிப்ரவரி 11 அன்று இரவு அது நடைபெற்றிருக்கலாம். தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ள பல்வேறு திறமைகள் படைத்த தோழர் டபிள்யுஆர்வி-யின் துயரார்ந்த மறைவு கட்சியின் உள்ள நம் அனைவருக்கும் மிகப்பெரிய அளவில் வருத்தத்தையும் துயரத்தையும் அளித்துள்ளது.

அவர் இறந்த விதமானது கட்சிக்கு உள்ளும் வெளியேயும் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியுள்ளது இயற்கையே. துரதிர்ஷ்டவசமாக ஊடகங்களில் ஒரு பிரிவு பாதி உண்மைகளை மட்டும் கூறுதல், உண்மைகளைத் திரித்துக் கூறுதுல் மற்றும் அடிப்படையற்ற ஊகங்களை எழுப்புதல் போன்று எண்ணற்ற வழிகளில் இத்துயரார்ந்த நிகழ்வினை கட்சிமீது தாக்குதலைத் தொடுப்பற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே டபிள்யுஆர்வி-க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எப்படி மற்றும் ஏன் எடுக்கப்பட்டது என்பது தொடர்பான உண்மைகள் முழுவதையும் முன்வைப்பது அவசியம் என்று அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.

டபிள்யுஆர்வி ஒரு பெண்ணுக்கு எதிராகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு பெண்ணிடமிருந்து முறையீடு ஒன்றைத் தமிழ்நாடு மாநிலக்குழுப் பெற்றது. இது நடந்தது 2009 செப்டம்பரில். கட்சியின் செயல்முறைகளின்படி, மாநிலக்குழு உறுப்பினர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், மாநிலக்குழுவானது இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக மூவர் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்தது. ஒரு மத்தியக் குழு உறுப்பினர் உட்பட அதில் மூன்று மாநிலக்குழு உறுப்பினர்கள் இடம் பெற்றனர். மூவரில் மத்தியக் குழு உறுப்பினர் அக்குழுவின் கன்வீனராக இருந்தார். மற்றோர் உறுப்பினர் மாநில செயற்குழுவைச் சேர்ந்தவர்.

விசாரணைக்குப் பின்னர், குழுவின் அறிக்கை 2009 நவம்பர் 25 அன்று தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன், அதன் பரிசீலனைக்காக வைக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் முடிவுகளின்படி, மாநிலச் செயற்குழு, டபிள்யுஆர்வி-க்கு எதிராக நடவடிக்கை எடுத்திடப் பரிந்துரைத்தது. கட்சி செயல்முறைகளின்படி, டபிள்யுஆர்வி மாநிலக்குழு உறுப்பினராக இருந்ததாலும், அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாலும், மாநிலக்குழுவிற்கு அவரின் நிலையை விளக்கக்கோரி, அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின் தமிழ்நாடு மாநிலக்குழு, விசாரணைக் குழுவின் முடிவுகளைச் சரி என்று ஒப்புதல் அளித்து, டபிள்யுஆர்வி தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தது.

டபிள்யுஆர்வி மேல் கமிட்டி உறுப்பினராகவும் - அதாவது மத்தியக்குழு உறுப்பினராகவும் - இருந்ததால், தமிழ்நாடு மாநிலக்குழு தீர்ப்பினை எடுத்திட முடியாது. கட்சியின் விதிமுறைகளின்படி அது தன் முடிவுகளை மத்தியக்குழுவிற்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்திட வேண்டும்.

இவ்விஷயம் 2010 பிப்ரவரி 4 முதல் 6 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில் பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு மாநிலக்குழுவின் அறிக்கை மற்றும் தீர்மானம் மற்றும் இவ்வழக்கு தொடர்பான அனைத்து அம்சங்களும், டபிள்யுஆர்வி- தன் நிலையை விளக்கித் தன்னைத் தற்காத்துக் கூறியிருந்த கடிதத்துடன் அனைத்து மத்தியக்குழு உறுப்பினர்களுக்கும் சுற்றுக்கு விடப்பட்டது. (டபிள்யுஆர்வி-யின் கடிதத்தின் சாராம்சங்கள் சில செய்தித்தாள்களின் வெளியாகியுள்ளன.)

இவ்விஷயம் பரிசீலனைக்காக எடுக்கப்பட்டபோது, டபிள்யுஆர்வி தன் நிலையைத் தற்காத்திட ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு மணி நேர விவாதத்திற்குப்பின், மத்தியக் குழுவானது, தமிழ்நாடு மாநிலக்குழு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக அனுப்பியிருந்த பரிந்துரைகளை ஏற்பது என்று தீர்மானித்தது. மத்தியக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 74 உறுப்பினர்களில் எவரொருவரும் டபிள்யுஆர்வி-க்கு எதிராக விதிக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்திடவில்லை. முடிவு வாக்குக்கு விடப்பட்டபோது ஐந்து உறுப்பினர்கள் மட்டும் தங்களை விட்டுவிடும்படிப் (abstension) பதிவு செய்தனர்.
டபிள்யுஆர்வி-யும் மத்தியக்குழுவின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாகக் கூறி அதனை ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் இது தொடர்பாக மத்தியக் கன்ட்ரோல் கமிஷனுக்கு மேல்முறையீடு செய்வதற்காகத் தன் உரிமையைப் பயன்படுத்தப்போவதாவும் தெரிவித்தார்.
டபிள்யுஆர்வி-க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு டவடிக்கை தொடர்பான இந்த விவரங்கள் அனைத்தும், மத்தியக்குழு மற்றும் தமிழ்நாடு மாநிலக்குழு கட்சி உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். ஆயினும் பத்திரிகைகளில் பல விவரங்களை வேண்டுமென்றே திரித்து, தப்பெண்ணங்களை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விவரிக்கப்பட்டிருப்பதால், இவற்றை நாம் வெளிப்படையாக விளக்கிக் கூற வேண்டியதாயிற்று.

டபிள்யுஆர்விக்கு எதிராகக் கூறப்படும் தப்பெண்ணங்கள் மற்றும் பாதி உண்மைககள் எவை எவை? டபிள்யுஆர்வி கட்சியிலிருந்து விரட்டப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. டபிள்யிஆர்வி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வில்லை. (He has not been expelled) தேர்ந்தெடுக்கப்பட்ட நிலைகளிலிருந்து நீக்கப்படுதல் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதன்பொருள், அவர் கட்சியின் ஏதேனும் ஒரு பொருத்தமான குழுவில் வைக்கப்படுவார் என்பதாகும். இந்த வழக்கில், தமிழ்நாடு மாநில செயற்குழுவானது, இது தொடர்பாக பிப்ரவரி 12 அன்று விவாதித்திருக்கிறது. அவரை தென்சென்னை மாவட்டக்குழுவில் சேர்த்துக்கொள்வது என்றும், அங்கு தொழிற்சங்க அரங்கில் பணியாற்றிட வேண்டும் என்றும் கோரப் பட்டிருக்கிறது. கட்சி உறுப்பினர் நிலையிலிருந்து இடைநீக்கமோ (suspension) அல்லது வெளியேற்றப்படுதலோ (expulsion) இல்லாத இத்தகைய ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கம், டபிள்யுஆர்வி கட்சிக்கு தொடர்ந்து பணிசெய்திட வேண்டும் என்பதும், அவர் தன் திறமைக்கேற்ப கட்சிக்குத் தன் முழுப் பங்களிப்புகளை அளித்திட வேண்டும் என்பதுமேயாகும். இவ்வாறு கட்சியின் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் ஏராளமானோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, வேலை செய்து, தங்களுடையப் பிழைகளைத் திருத்திக்கொண்டு, மீண்டும் கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.

எனவே, கட்சியில் எடுக்கப்பட்ட ஓர் ஒழுங்கு நடவடிக்கையை, ஒரு கட்சித் தலைவர் ‘‘மரணத்திற்கு விரட்டப்பட்டார்’’ (hounded to death) என்பதுபோல் சித்தரிக்க முயற்சிப்பது அடிப்படையற்ற ஒன்று மட்டுமல்ல, இத்துயரார்ந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கட்சிமீதும் கட்சித் தலைமைமீதும் அவதூறுச் சேற்றை அள்ளிவீசும் முயற்சியுமாகும். கட்சி, இவ்வாறு ஒரு பெண்ணால் கொடுக்கப்பட்ட முறையீட்டின்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்திருந்தால், அதனை அடுத்து அப்பெண் தன் குற்றச்சாட்டுகளுடன் வெளிப்படையாகச் செயல்பட்டிருந்தால், இதே ஊடகங்கள் ‘‘கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக வந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டினை கட்சி உதாசீனப்படுத்திவிட்டது’’ என்று கட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத்திருக்கும்.

கட்சி, டபிள்யுஆர்வி-க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான காரணங்களைக் கூறாமல் அசமந்தமாக இருந்துவிட்டது என்றோ, அல்லது, அதற்கு மாறாக, அவரை ‘‘பகிரங்கமாக அவமதிப்புக்கு உள்ளாக்கி இருக்க வேண்டும்’’ என்றோ இப்போது கட்சிமீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். டபிள்யுஆர்வி கட்சியிலிருந்து நீக்கப்படாததால், மத்தியக்குழு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், கட்சியில் டபிள்யுஆர்வி தொடர்ந்து தன் நிலைகளைத் தக்க வைத்துக்கொள்வார் என்றும் தனக்கு அளிக்கப்படும் பொறுப்புக்களை நிறைவேற்றுவார் என்றும் கட்சி எதிர்பார்த்ததேயாகும். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி தன் ஊழியர்களை ‘‘பகிரங்கமாக அவமதிப்புக்கு உள்ளாக்குவதில்’’ நம்பிக்கைகொள்வதில்லை. டபிள்யுஆர்வி மீதான நடவடிக்கை என்பது அவரை, அவர் புரிந்திட்ட சிறுதவறுகளிலிருந்து அவரைத் திருத்தி, கட்சியில் தொடர்ந்து அவர் பணிபுரிந்திட உதவ வேண்டும் என்பதற்கான முயற்சியேயாகும்.

இந்நிகழ்வினைப் பயன்படுத்தி, ஜனநாயக மத்தியத்துவம் என்னும் கட்சியின் °தாபனக்கோட்பாட்டையே இழிவுபடுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. டபிள்யுஆர்வி வழக்கு ‘‘மத்தியத்துவம்’’ மற்றும் ‘‘எதேச்சாதிகார’’ நடவடிக்கை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவற்றால் குறிப்பிடப்படுகின்றன. உண்மையில், ஒழுங்கு நடவடிக்கையின்போது பின்பற்றப்பட்ட செயல்முறைகள் இவற்றிற்கு நேர் எதிர்மறையானது என்பதை மெய்ப்பித்திருக்கின்றன. அவர் நேரடியாக வேலை செய்து வந்த மாநிலக் குழுவில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேல் கமிட்டி - அதாவது மத்தியக்குழு - மாநிலக்குழுவால் நடவடிக்கை கோரப்பட்ட சமயத்தில்தான் இப்பிரச்சனையிலேயே சம்பந்தப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் சமயங்களில் விதிமுறைகளுக்கு உட்படாத நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்கிற உண்மையிலிருந்து ஜனநாயக நடைமுறை பின்பற்றப்பட்டிருப்பதை அடிக்கோடிட்டுக்கொள்ள வேண்டும். முறையான விசாரணை நடைபெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்ட தோழர் தன்னுடைய வழக்கை முன்வைக்கவும் மற்றும் குழுவால் தனிப்பட்ட முறையில் கேட்கப்படவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியால் தொடங்கப்பட்டுள்ள நெறிப்படுத்தும் இயக்கத்துடன் டபிள்யுஆர்வி-க்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்புபடுத்திடும் மற்றொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. டபிள்யுஆர்வி சம்பந்தப்பட்ட இவ்விஷயத்திற்கும் நெறிப்படுத்தும் இயக்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. உண்மையில், மத்தியக் குழுவால் நெறிப்படுத்தும் இயக்கம் துவங்கப்படுவதற்கு முன்பே, டபிள்யுஆர்வி-க்கு எதிராக முறையீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. நெறிப்படுத்தும் இயக்கம் என்பது கட்சியின் காணப்படும் தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதற்கான ஒன்றேயாகும். தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

கம்யூனி°ட் கட்சி °தாபனம், அதன் முன்னணி ஊழியர்களுக்கு -அதிலும் குறிப்பாக, கட்சியின் பணிகளுக்காகத் தங்கள் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு - மிகுந்த முன்னுரிமை கொடுக்கிறது. தோழர்கள் தங்கள் கணிப்பில் தவறும்போதெல்லாம், அல்லது தவறுகள் புரியும்போதெல்லாம், கட்சி, சம்பந்தப்பட்ட தோழரின் பங்களிப்புகளை முழுமையாகப் பரிசீலித்து அதன் அடிப்படையில்தான் அவரைச் சரிசெய்திடக்கூடிய வகையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. அவ்வாறு ஒரு தோழரைத் திருத்தவே முடியவில்லை என்றால்தான் அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றுதல் என்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டபிள்யுஆர்வி-யைப் பொறுத்தவரை, அவர் தன் பிரச்சனைகளிலிருந்து மீண்டெழ வேண்டும், கட்சிக்கும் இயக்கத்திற்கும் அவர் தன் முழுப் பங்களிப்பினைச் செய்திட வேண்டும் என்றுதான் கட்சி எதிர்பார்த்தது. அவ்வாறு நடைபெறாமல் போனதென்பது மிகவும் வருந்தத்தக்கது.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: