Saturday, March 27, 2010

அனைவருக்குமான வேலைவாய்ப்பு உத்தரவாதம்-இடதுசாரி அரசாங்கங்கள் வழிகாட்டுகின்றன


தலையங்கம்:


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இயங்கும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் உள்ள இடது முன்னணி அரசாங்கங்களும் மற்றும் கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும் தங்கள் தங்கள் மாநிலங்களில் அனைவருக்குமான வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டங்களை (ருniஎநசளயட நுஅயீடடிலஅநவே ழுரயசயவேநந ஞசடிதநஉவள) உருவாக்கி நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, நாட்டுக்கு வழிகாட்டி இருக்கின்றன. இவற்றில் திரிபுராதான் முதலில் திரிபுரா நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவித்தது. கேரளாவில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் அய்யன்காளி நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதேபோன்று மேற்கு வங்க நிதி அமைச்சர், சென்ற வாரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கையில் ஒரு நகர்ப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஐமுகூ-1 ஆட்சிபுரிந்த சமயத்தில் அதற்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தார்கள் என்பதையும், அவர்கள் ஆதரவின்றி அது நீடித்திருக்க முடியாது என்பதையும், அத்தகைய நிலைமையில் இடதுசாரிக் கட்சிகள் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் உட்பட குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை நிறைவேற்ற ஐமுகூ-1 அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்தி வந்ததையும் வாசகர்கள் நினைவுகூர்வார்களாக. இடதுசாரிகள், ஐமுகூ-1 அரசாங்கத்தை தொடர்ந்து மூன்றாண்டு காலம் வற்புறுத்தி வந்ததன் விளைவாக, மன்மோகன் சிங் அரசாங்கமானது நான்காவது ஆண்டு தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றியது. வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டின் வளங்கள் வீணாகும் என்கிற கருத்து ஐமுகூ-1 அரசாங்கத்திற்குள்ளேயே கடுமையான முறையில் இருந்து வந்தது என்ற போதிலும், நடைமுறையில் நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் இச்சட்டம் கணிசமான அளவில் பயன்களையும் ஆதாயத்தையும் அளித்ததை நாம் கண்டோம். இதில் வேடிக்கை விநோதம் என்னவெனில், இச்சட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என்று அப்போது கூப்பாடு போட்டவர்கள் தான் அதன்பின் நடைபெற்ற தேர்தலில் இச்சட்டத்தின் காரணமாக அரசியல் ரீதியாக ஆதாயம் அடைந்து, மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே இடதுசாரிக் கட்சிகள், இதேபோன்றதொரு சட்டம் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, நாட்டின் நகர்ப்புறங்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவிட வேண்டும் என்று கோரி வருகின்றன. இது இதுநாள் வரை செய்யப்படவில்லை. இதனை அடுத்து இப்போது தாங்கள் ஆளும் மாநிலங்களில் இதனை அமல்படுத்தி, மத்திய அரசுக்கும் மற்ற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியுள்ளன. 13ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்களைக் குறைத்திடப் பரிந்துரைத்துள்ள போதிலும் (கேரள அரசு மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாயை இழக்க வேண்டி வரும்.) இடதுசாரி அரசாங்கங்கள் இத்திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இடதுசாரி அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ஆதாரங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றபோதிலும், தங்களுக்குள்ள நிதி ஆதாரங்களை ஏழை மக்களுக்காகவும் நலிந்த பிரிவினருக்காகவும் விரிவான வகையிலும் சிறந்த முறையிலும் பயன்படுத்தித் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்த வருகின்றன.
திரிபுராவில் அறிவிக்கப்பட்டிருக்கிற திட்டமானது, அகர்தலா நகராட்சிப் பகுதி மற்றும் 12 இதர நகர் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் பதிவு செய்யப்படாத நகர்ப்புற ஏழைகளுக்கும் விரிவாக்கக்கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் அதன் மக்கள் தொகையில் 68 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று திரிபுரா மாநில அரசாங்கம் மதிப்பிட்டிருக்கிறது. ஆயினும் மத்திய அரசாங்கமும் திட்டக் கமிஷனும் இம்மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் 40 விழுக்காட்டினர் என்று வரையறுத்திருக்கின்றன. மாநில அரசாங்கமானது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராத ஏழைகளுக்கும் இடையே எவ்விதப் பாகுபாட்டையும் மேற்கொள்ளப்போவதில்லை என்றும், அனைத்து நகர்ப்புற ஏழைகளுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைத்திடக்கூடிய வகையில் விரிவாக்கிடுவது என்றும் தீர்மானித் திருக்கிறது. ஏற்கனவே, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை அமல்படுத்துவதில், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள அரசுகளில் திரிபுரா அரசு மிகச் சிறந்த முறையில் செயல்படுவதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசானது தன்னுடைய கொள்கைகளின் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் விண்ணிற்கு எடுத்துச் சென், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏழை மக்கள் மீது சுமைகளை ஏற்றியுள்ள சூழ்நிலையில்தான் இடதுசாரிகள் தலைமை தாங்கும் மாநிலங்களில் நகர்ப்புற மக்களின் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பட்ஜெட்டினாலும் டில்லி மாநில அரசு போன்ற சில மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளினாலும் அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் வானத்தை நோக்கி மிக வேகமாகப் பறந்து சென்று கொண்டிருக்கின்றன. இடதுசாரி அரசு களுக்கும் மற்ற அரசுகளுக்கும் இடையிலான வர்க்க அணுகுமுறையை இது மிகத் தெளிவாகக் காட்டுகிறது. தங்கள் மாநிலங்களில் நிதி ஆதாரங்கள் மிகக் குறைவாக இருந்தபோதிலும், அரசமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமைக்கான உத்தரவாதத்தை அளித்திட வேண்டும் என்பதில் இடதுசாரி அரசுகள் எந்த அளவிற்கு உளப்பூர்வமாகவும் உண்மையாகவும் செயல்படுகின்றன என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. ‘‘வாழ்வுரிமை என்பது பாலத்திற்கு அடியில் படுத்து உறங்குவதோ அல்லது வீதிகளில் பிச்சை எடுப்பதோ அல்ல, மாறாக ஒருவர் நாகரிகமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை அளிப்பதேயாகும்’’ என்று உச்சநீதிமன்றம் இப்பிரிவு குறித்து தெளிவுபடுத்தித் தீர்ப்பளித்திருக்கிறது.

நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்துவதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமையை விரிவாக்கம் செய்திட வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இதனை மத்திய அரசு மேற்கொள்ளாவிடில், அது ‘‘உள்ளார்ந்த வளர்ச்சி’’ (‘inclusive growth') என்று சொல்வதில் எந்தப் பொருளுமில்லை.
நிறைவாக, வலுவான வெகுஜன மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தத் துடித்திடும் ஐமுகூ-2 அரசாங்கத்தின் திசை வழியை மாற்றியமைத்திட முடியும், மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை அளித்திட நிர்ப்பந்தத்திட முடியும். இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ள ஏப்ரல் 8 - சிறைநிரப்பும் போர் எதிர்காலத்தில் இத்தகு போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதற்கானதோர் ஆரம்பமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: