Tuesday, March 9, 2010

ஆண்-பெண் சமத்துவம் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்திடும்

ஐ.நா.வளர்ச்சித் திட்டம் அறிக்கை
புதுதில்லி, மார்ச் 9-
ஆண் - பெண் இரு பாலருக்குமிடையே சமத்துவம், சமுதாயத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்திடும் என்று ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மகளிர் தினமான மார்ச் 8 அன்று, புதுதில்லியில், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் நிர்வாகியும் நியுசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமருமான ஹெலன் கிளார்க், பெண்கள் சம்பந்தமான ஆய்வறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட சட்டம் இயற்றப்படவிருக்கிறது. இச்சட்டம் நிறைவேறினால், இது வரலாறு படைத்திடும்.
சமீபத்தில் ஆசிய - பசிபிக் நாடுகள் அபரிமிதமான முறையில் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளன. ஆயினும் அதன் மூலம் ஆண் - பெண் சமத்துவம் ஏற்பட்டு விட்டதாகக் கூறுவதற்கில்லை. நாட்டின் சட்டங்கள் முன் ஆண் - பெண் சமம் என்றும், சம வேலைக்க சம ஊதியம் என்று கூறப்பட்டபோதிலும், பல நாடுகளில் அது இன்னமும் அமலாகவில்லை.
ஆசிய நாடுகளில் சுமார் பத்து கோடி பெண்கள் போதிய சுகாதார வசதியும் ஊட்டச் சத்தும் இல்லாததாகல் இறந்துள்ளார்கள். இந்தியா மற்றும் சீனாவில் மட்டும் 42 லட்சத்து 60 ஆயிரம் (42.6 மில்லியன்) பேர் இறந்திருக்கிறார்கள் என்று ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள பின்னணியில், ஆண் - பெண் வேற்றமையும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் வேலைபார்த்து வந்த பெண்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியே அவர்கள்வேலை பார்த்தாலும் அவர்களுக்கென்று இருக்கின்ற பிரத்யேக உரிமைகளான மகப்பேறு விடுப்பு மற்றும் பல்வேறு விதமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.
தெற்காசியாவில் உள்ள நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் (அதாவது ஆப்கானிஸ்தானம், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள்) ஆண்களுக்கு மட்டுமே நிலத்தில் பாரம்பர்ய உரிமைகளை வழங்கி சட்டங்கள் இயற்றியிருக்கின்றன.
ஆண்-பெண் சமத்துவம் என்பது இரு பாலினருக்கும் சுதந்திரத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அளித்திட வேண்டும். சமத்துவமின்மை என்பது சமூக நீதிக்கும் சமூக உறுதிப்பாட்டிற்கும் எதிரானது.
பாலின சமத்துவத்தின்று ஐ.நா.வளர்ச்சித் திட்ட அறிக்கை மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறது. பெண்களின் பொருளாதார வல்லமையை மேம்படுத்துவதுடன், அவர்களிடம் அரசியல் அதிகாரத்தையும் வழங்கிட வேண்டும், ஆண்களுக்கு சமமாக சட்ட உரிமைகளையும் அளித்திட வேண்டும். இதில் அரசியல் அதிகாரத்தைச் சுற்றி மற்ற இரு உரிமைகளும் பிணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஹெலன் கிளார்க் கூறினார்.
(ச.வீரமணி)

No comments: