Tuesday, March 9, 2010

பெண்கள் அரசியலுக்கு வருவது கலாச்சாரத்திலும் மாற்றத்தைக் கொண்டுவரும்-பிருந்தா காரத்



புதுதில்லி, மார்ச் 10-
பெண்கள் அரசியலுக்கு வருவது நாட்டின் கலாச்சாரத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய் அன்று மகளிர் இடஒதுக்கீடு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பிருந்தா காரத் பேசியதாவது:
‘‘இந்திய அரசியலின் முகத்தோற்றத்தையே நிச்சயமாக மாற்றி அமைக்கப் போகிற வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சட்டமுன்வடிவினை ஆதரித்துப் பேச முன்வந்திருக்கும் இத்தருணத்தில் இச்சட்டமுன்வடிவிற்கு என் கட்சியின் சார்பிலும் நான் இத்தனை ஆண்டு காலம் செயல்பட்டு வந்த மகளிர் அமைப்புகளின் சார்பிலும் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி முழு ஆதரவினை முழுத் திருப்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இது நாட்டைச் சிறப்பான முறையில் மாற்றியமைத்திடும் என்று நம்புகிறேன். இச்சட்டமுன்வடிவானது, இத்தனை ஆண்டு காலமாக அரசியல் அரங்கில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த பாகுபாடுகளை நீக்குவதற்கு உதவிடும் என்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக நடைமுறைகளையும் ஆழமான முறையில் விரிவாக்கிடும் என்றும் நம்புகிறேன்.
இச்சட்டமுன்வடிவைக் கொண்டு வருவதற்காகக் கடந்த 13 ஆண்டுகளாக மகளிர் அமைப்புகள் போராடி வந்தன. இதற்கு எதிராக எண்ணற்ற மோசமான விமர்சனங்களையும் நாம் எதிர்கொண்டோம். சமூக அவலங்களை சீர்திருத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போதெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நாடாளுமன்ற மக்களவையில் கூறிய வார்த்தைகளை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்.
இந்து சீர்திருத்தச் சட்டமுன்வடிவின் மீது நீண்ட நெடிய விவாதம் நடைபெற்றது. அப்போது அதற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. அப்போது அவர், ‘‘பெண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எந்த ஒரு நாடும் முன்னுக்குப் போக முடியாது’’ என்றார். அதனை இப்போது நினைவுகூர்கிறேன்.
இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால், நம் நாட்டில் மாபெரும் சமூக சீர்திருத்தவாதிகளில் பலர் ஆண்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது இந்தச் சட்டமுன்வடிவும் ஜனநாயக எண்ணம் படைத்த ஆண்களின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே இந்தச் சட்டமுன்வடிவை ஆதரிக்கும் இந்த நாட்டில் உள்ள, இந்த அவையில் உள்ள அனைத்து ஆண்களையும் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவு இன்று நிறைவேற்றப்படுகிறது என்றால் அதற்கு எண்ணற்றோர் தங்கள் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இன்றையதினம் நினைவுகூர மறக்க மாட்டோம்.
இந்தச் சட்டமுன்வடிவு இன்றையதினம் உயிருடன் இருக்கிறதென்றால் அதற்கு மகளிர் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம். அவை அனைத்து அரசியல் கட்சிகளையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன. எனவே அனைத்து மகளிர் அமைப்புகளுக்கும் இந்த சமயத்தில் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்ததற்காக அனைத்து மகளிர் அமைப்புகளின் சார்பாகவும் பிரதமருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சட்டமுன்வடிவு தொடர்பாக இரண்டு, மூன்று முக்கிய அம்சங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்கு வர வேண்டும், அவர்கள் நியமனம் மூலம் வரக்கூடாது. அதுவே ஜனநாயகத்தினை வலுப்படுத்திடும்.
இந்திய அரசியலில் கடந்த இருபதாண்டு காலமாக, பல மாநிலங்களில் பெண்கள் பஞ்சாயத்துக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். பெண்களாகிய நாங்கள் தற்சமயம் பஞ்சாயத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு அல்ல, அதற்கும் மேல் 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு வரை அங்கம் வகிக்கிறோம். அதே போன்று சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் எங்கள் திறமையின் மூலமாக, எங்கள் தியாகங்களின் மூலமாக மூன்றில் ஒரு பங்கை விஞ்சுவோம், 40 விழுக்காடு அல்லது 50 விழுக்காடு அளவிற்கு வருவோம். இது சத்தியம்.
பெண்கள் தேர்தல் அரசியலுக்கு வருவது என்பது நிச்சயமாக அரசியல் களத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது நிச்சயம்.
பெண்கள் அரசியலுக்கு வருவதானது, நம் கலாச்சாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் நாட்டில் பாரம்பர்யம் என்ற பெயரில், கலாச்சாரம் என்ற பெயரில் பழம் பஞ்சாங்கப் பழக்க வழக்கங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் திணிக்கப்படுகின்றன. பொது வாழ்வில் ஏராளமான அளவில் பெண்கள் பங்கேற்கும்போது இந்நிலைமைகள் மாறும் என்று நான் நம்புகிறேன். பெண்களை, பாரம்பர்யத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் பிணைத்து வைத்திருக்கும் பல்வேறு தளைகள் அறுபடும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.
(ச.வீரமணி)

No comments: