Saturday, March 6, 2010
மொழியும் தேசிய இனமும்--பிரகாஷ்காரத்
(புதுதில்லியில், சப்தர்ஹஸ்மி நினைவு அறக்கட்டளை சார்பில் தோழர் இ.எம்.எஸ். நினைவு சொற்பொழிவு மார்ச 4 வியாழன் அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மொழியும் தேசியஇனமும் என்கிற பொருளில் பிரகாஷ் காரத் பேசியதன் சாரம்)
‘‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர் இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளில் தனித்துவம் மிக்கவர். இந்திய சமூகத்தின் நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிப்பதில் அசாத்திய திறமைகளைப் பெற்றிருந்தார்.
தோழர் இ.எம்.எஸ். நம் நாட்டில் விவசாயிகள் பிரச்சனைகளை மார்க்சிய சிந்தனையில் ஆராய்ந்து விவசாய இயக்கத்தை இந்தியாவில் கட்டினார். நவீன கேரளாவின் சிற்பி அவர். திருவாங்கூர் - கொச்சி - மலபார் என்றிருந்த சமஸ்தானங்களை ஒன்றுபட்ட மலையாள மொழியின் கீழான தேசிய இனமாக ஒன்றிணைப்பதற்கு முதலில் அடித்தளமிட்டவர். அதன் அடிப்படையில்தான் ஒன்றுபட்ட கேரள மாநிலம் உருவானது. அதேபோன்று நாட்டில் சாதி மற்றும் வர்க்கங்களுக்கிடையேயான உறவுகளையும் ஆய்ந்த பேரறிஞர். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கேற்பு எப்படி அமைந்திட வேண்டும் என்பதையும் ஆய்ந்து ள்ளார்.
இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய அம்சம் குறித்து தற்போது விவாதிப்பது பொருத்தமுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன். அதுதான் இந்தியாவில் மொழிவாரி தேசிய இனப் பிரச்சனை என்பதாகும்.
ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச் சந்தை, பொதுக் கலாச்சார அமைப்பு போன்ற மற்ற பல்வேறு காரணிகளைவிட மொழிதான் மிகவும் முக்கியமான காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ்.=உம் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் குறித்து ஆய்வுகள் செய்தார்.
அதன் ஒரு பகுதியாக கேரளாவில் மலபாரிலிருந்த விவசாயி உறவுகள் குறித்து ஆய்வு செய்து, ஜமீன் - நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் விவசாய இயக்கத்தைக் கேரளாவில் கட்டினார்.
மலபாரில் மட்டுமல்ல, மன்னர் சமஸ்தானங்களாக விளங்கிய திருவாங்கூர் - கொச்சி ஆகிய பகுதிகளிலும் ஜமீன் முறை ஒழிப்புக்கான விவசாய இயக்கங்களைக் கட்டினார்.
இவ்வாறு மலையாளம் பேசும் திருவாங்கூர் - கொச்சி - மலபார் பகுதிகளில் வாழ்ந்த மலையாளிகளை மொழிவாரி தேசிய இனமாக ஒருங்கிணைத்திட இ.எம்.எஸ். முயன்றார். 1942இல் அவர் ஒரு சிறு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு ஒன்றே கால் கோடி மலையாளிகள் என்பதாகும். இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் ஆந்திராவில் தோழர் பி.சுந்தரய்யா, ‘விசாலாந்திரா’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன்றிணைப்பதற்கான பைபிளாக விளங்கியது. அதே கால கட்டத்தில் வங்கத்தில் தோழர் பவானி சென், வங்கமொழி பேசும் மக்களை ஒன்றுதிரட்ட ‘‘புதிய வங்கம்’’ என்ற நூலை எழுதினார். இவ்வாறு அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்களை வடிவமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது.
இவ்வாறு மாநிலங்கள் நாட்டிலுள்ள பல்வேறு மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்பதற்கான அவசியத்தை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் முன்வைத்தது.
மொழிவாரித் தேசிய இனத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது திடீரென்ற ஒன்று அல்ல. ஏற்கனவேயே காந்தி தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியிருந்த காங்கிரஸ் கட்சியும் கூட மொழிவாரித் தேசிய இனங்களை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியானது 1920இல் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தன்னுடைய பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளை மொழிவாரி அடிப்படையில் மாற்றியமைத்தது. கேரளாவில் திருவாங்கூர் - கொச்சி - மலபாரிலிருந்த காங்கிரஸ் கமிட்டிகளை மலையாள மொழி அடிப்படையில் ஒருங்கிணைத்தது. அதேபோன்று ஹைதராபாத் மற்றும் தெலுங்கு பகுதி மக்களையும் ஒன்றிணைத்தது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியானது தன் அனைத்து கமிட்டிகளையும் மொழிவாரி அடிப்படையில் மாற்றி அமைத்தது. மற்ற கட்சிகளும் அதனைப் பின்தொடர்ந்தது. இவ்வாறு அனைத்துக் கட்சிகளுமே மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில்தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தன.
நம் நாட்டில் மொழிவாரி தேசியஇனங்கள் உருவாக்கம் என்பது நம் நாட்டிற்கு பிரிட்டிஷார் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பாகவே தேசியஇனங்கள் உருவாவதற்கான மூலக்கூறுகள் நம் நாட்டில் இருந்தன. வர்த்தகம், பண லேவாதேவி, விவசாயம் போன்றவற்றின்மூலம் முதலாளித்துவ மூலக் கூறுகள் வளர்ந்து கொண்டிருந்தன. மக்களால் பேசப்படும் மொழிகள் மூலமாக ஆளும் வர்க்கங்கள் மொழிகளின் மூலமாகவே மக்களிடம் சென்றார்கள். 14ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் மூலமாக மொழிகள் வளர்ந்தன. ஆயினும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தேசியஇன உணர்வு அரும்புவிடத் தொடங்கிவிட்டது.
பின்னர் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வந்தபோது முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி இல்லாமல் மொழிவாரித் தேசியஇனங்களின் வளர்ச்சி கிடையாது என்று இ.எம்.எஸ். கூறினார்.
பல்வேறு தேசிய இனக் குழுக்களும் மொழிவாரித் தேசிய இனக்குழுக்களும் பிராந்திய உணர்வுடன் மொழிவாரித் தேசிய உணர்வினைப் பெற்றிருந்தன. இத்தகைய மொழிவாரித் தேசிய உணர்வின் மூலமாகத்தான் நாட்டின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் மக்கள் இயக்கங்கள் வளர்ச்சி அடைந்தன. அந்த விதத்தில்தான் கேரளாவிலும் விவசாயிகள் இயக்கம் வளர்ச்சி அடைந்தது.
மக்களை அணிதிரட்ட மொழிவாரித் தேசிய இனத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய அந்த சமயத்தில் ஆளும் வர்க்கம் அதனை ஒரு பிரிவினை முழக்கமாகக் கருதியது. முதலாளித்துவமும் பெரும் வர்த்தக நிறுவனங்களும் மொழிவாரி தேசிய இனத்தைத் தங்களின் நலன்களுக்கு எதிராகக் கருதின.
காங்கிரஸ் கட்சியும் சுதந்திரத்திற்கு முன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொழிவாரி மாநிலங்கள் அமைத்திடுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. 1929இலேயே மோதிலால் நேரு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மொழிவாரி மாநிலங்கள் அமைத்திடும் என்று உறுதி கூறியிருந்தார். ஆனால் சுதந்திரத்திற்குப்பின், ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது. மாறாக, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்தது. ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீத்தாராமய்யா என்ற மூவரும் அந்தக் கமிட்டி உறுப்பினர்கள். இந்தக் கமிட்டியானது, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் அது மக்களைப் பிளவுபடுத்தி விடும் என்றும் பரிந்துரை செய்தது.
காங்கிரஸ் கட்சியின் இந்நிலையை எதிர்த்து நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திராவில் விசாலாந்திராவிற்கான போராட்டம் தொடங்கியது. கேரளாவில் ஐக்கிய கேரளாவிற்கான போராட்டமும், கர்நாடகாவில் ஐக்கிய கர்நாடகாவிற்கான போராட்டமும் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் போராட்டங்கள் வெடித்தன. இதனை அடுத்து காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்களைக் கண்டறிவதற்கான குழு ஒன்றை 1953இல் அமைத்தது. அதன் பரிந்துரைகளின்படி நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தன.
மகாராஷ்ட்ராவிலிருந்து குஜராத்தைப் பிரித்திட காங்கிரஸ் முன்வர மறுத்ததை அடுத்து அங்கு குஜராத் மாநிலத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் எண்ணற்றோர் உயிர்நீத்தபிறகு, குஜராத்தைத் தனி மாநிலமாகப் பிரித்தது.
பின்னர் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹர்யானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் வடகிழக்கு மாநிலங்கள். இப்போதுள்ள மேகாலயா, மிசோரம், மணிப்பூர் அனைத்துமே அஸ்ஸாமின் பகுதிகளாகத்தான் இருந்தன. ஆயினும் அவை சிறிய தேசிய இனங்களாக இருந்தன.
ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஒரு காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் தங்கள் நலன்களுக்கு உகந்தது அல்ல என்று நினைத்த முதலாளித்துவம் இன்றைய தினம் சிறிய மாநிலங்கள் உருவானால்தான் தங்கள் நலன்களுக்கு உகந்தது என்று கருதத் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து இப்போது ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலக் கோரிக்கை எழுந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் தனி விதர்பா மாநிலம் கோரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் மாநிலங்களையும் பிரித்திட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிராக இருக்கிறது.
மொழிவாரி மாநிலங்கள்அமைக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் முதலாளித்துவம் நன்கு வளர்ந்தது. உதாரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா. குஜராத் மாநிலங்களைக் குறிப்பிடலாம்.
ஆனால் முதலாளித்துவம் இப்போது சிறிய மாநிலங்களை விரும்புகிறது. ஏனெனில் சிறிய மாநிலங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருந்திடும் என்பதாலும் அவற்றைத் தாம் எழுதில் வாங்கிட முடியும் என்றும் முதலாளித்துவம் கருதுகிறது. உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சொல்லலாம். அங்கே ஆட்சியிலிருந்தவர்களால் மாநிலமே பங்கு போட்டு விற்கப்பட்டதைப் பார்த்தோம். கனிம வளங்கள் விற்கப்பட்டன, காட்டு வளங்கள் விற்கப்பட்டன, ஆற்று நீர் தனியாருக்கு விற்கப்பட்டதை யெல்லாம் கண்டோம். எனவேதான் பெரு முதலாளிகள் சிறு மாநிலங்ளை விரும்புகிறார்கள். சிறிய மாநிலங்களாக இருந்தால் அங்கு ஆட்சிக்கு வருபவர்களைத் தாங்கள் எளிதாக வசப்படுத்தி வாங்கிவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
சிறு மாநிலங்கள் தாங்களாக எதையும் செய்திட முடியாது. அவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கும். இன்றைக்கும் கூட வடகிழக்கில் உள்ள அரசாங்கங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவை மத்தியில் யார் ஆட்சியிலிருக்கிறார்களோ - அது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு ஆதரவாக மாறுவதைப் பார்க்க முடியும். ஏனெனில் பல சிறிய மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கேத் திணறக்கூடிய நிலையில் இருக்கின்றன.
எனவேதான் மொழிவாரி மாநிலங்கள்தான் மிகச் சிறந்த முறையிலும், மிகவம் ஜனநாயக ரீதியிலும் செயல்பட முடியும் என்று நம்புகிறோம். நிர்வாக ரீதியாகவும் சரி, கல்வி ரீதியாகவும் சரி, நீதித்துறை செயல்பாடாக இருந்தாலும் சரி மொழிவாரி மாநிலங்கள்தான்
ஜனநாயக ரீதியாக செம்மையாகச் செயல்பட முடியும்.
ஆனால் இப்போது மாநிலங்களில் ஒரு பகுதி மற்றொரு பகுதியை விடப் பின் தங்கியிருப்பதாகக்கூறி, பின் தங்கிய பகுதிகளைத் தனியே பிரித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்தபின் முதலாளித்துவத்தின் நியதியின்படி ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகியது. முதலாளித்துவ வளர்ச்சியின் விதியே அதுதான். எனவே மாநிலங்களைப் பிரிப்பதால் பிற்பட்ட நிலைமைகளுக்கான பிரச்சனைகள் தீர்ந்திடாது.
சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு மாநிலத்திலேயே பல இடங்களிலும் சமத்துவமின்மை தொடர்கிறது. ஆட்சியாளர்கள் தற்சமயம் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இந்நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.
மொழிவாரி மாநிலங்கள் அமைவது என்பது நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதி என்று தோழர் இ.எம்.எஸ். தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்.
ஆனால் இத்தகைய மொழிவாரி தேசியஇனத்தின் விதிகளை மத்திய அரசு முழுமையாக அமல்படுத்த வில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் வளமான முறையில் வளர்ந்துள்ளன. சுதந்திரம் பெற்ற சமயத்தில் மத்திய அரசு தேசிய மொழிகளாக 13 மொழிகளை அங்கீகரித்திருந்தது. பின்னர் அது 14 ஆக மாறி தற்போது 22 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் சரிதான். நாம் இதற்கு எதிராக இல்லை. இவ்வாறு மொழிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அந்த மொழிகள் பேசும் மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள் தங்கள் தங்கள் மொழிகளை வளர்த்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அது மட்டுமல்ல, மாநிலத்திற்கள்ளேயே சிறுபான்மை இன மக்கள் பேசிடும் மொழிகளையும் வளர்த்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
மாநில அரசுகள் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையைக் கணக்கில் கொண்டு மத்திய அரசும் ஜனநாயக முறையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் மத்திய அரசு அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை.
நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியை மத்திய அரசு செய்ய மறுக்கிறது. இன்றைக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அதுதான் பிரச்சனை. ஒரு ஜனநாயக நாட்டில், உறுப்பினர் பிற நாட்டின் மொழியை பிற பகுதியின் மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை ஏன் மத்திய அரசு வற்புறுத்துகிறது என்பதுதான் எங்கள் கேள்வி. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்திடுவதற்கான செலவு ஒன்றும் அதிகம் கிடையாது. ஒருசில கோடி ரூபாயில் இதனைச் செய்திட முடியும். ஆனாலும் மத்தியஅரசு இதனைச் செய்ய மறுக்கிறது.
மத்திய அமைச்சர் அழகிரி தமிழில் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாட்டின் தேசிய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மொழிவாரி தேசிய இனங்களை நாம் முழுமையாக அங்கீகரித்ததாகக் கொள்ள முடியும்.
மொழி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
‘‘நாடாளுமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர்களின் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளிலும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கிவிட்டு இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத்தப்பட மாட்டாது. பல்வேறு மொழிகளுக்கும் சமத்துவம் அளிப்பதன் மூலம் மட்டுமே நாடு முழுதும் அதனைத் தகவல் தொடர்பு மொழியாக ஏற்கச் செய்ய முடியும்.’’
அவ்வாறு செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதிகள் அந்நிய மொழி ஒன்றை அறிந்திருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமானால் அனைத்து தேசிய மொழிகளும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
(ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment