Thursday, February 7, 2008

பிராந்திய வெறி தன் கோர முகத்தை மீண்டும் தூக்குகிறது


தலையங்கம்:
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிராந்திய வெறி தன் கோர முகத்தை மீண்டும் உயர்த்தியிருக்கிறது. தன்னுடைய சுயேட்சையான அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தங்கள் மாமாவும் சிவசேனைத் தலைவருமான பால் தாக்கரேயிடமிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்துள்ள ராஜ்தாக்கரே, தன்னுடைய மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா மூலமாக மாநிலத்தில் பிராந்திய வெறியைக் கிளப்பக்கூடிய பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார், மும்பையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வட இந்தியர்கள் மீது தாக்குதல்களை ஏவிவிட்டிருக்கிறார்.
1960களின் பிந்தைய ஆண்டுகளில், அரசியலில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிவசேனை மேற்கொண்ட நடவடிக்கைகளையே இது நினைவுபடுத்துகிறது. அப்போது சிவசேனைக் கட்சியானது, ‘மண்ணின் மைந்தர்கள்’ என்னும் முழக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு, ‘வேட்டி கட்டியவர்களை எல்லாம் விரட்டி அடியுங்கள்’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு, தென்னிந்தியர்களை எல்லாம் விரட்டி அடித்தது. சிவசேனை பின்னர், பிராந்திய வெறிப்போக்கைக் கைவிட்டு, படிப்படியாகப் பட்டம் பெற்று, இந்திய அரசியல் மற்றும் சமூகத்தின் மாபெரும் பிரிவினைக் கொள்கையாக உள்ள இந்துத்வாக் கொள்கையை ஆரத் தழுவிக்கொண்டது.
ஆயினும் ராஜ் தாக்கரே, தற்சமயம் சிவசேனாவின் ஆரம்ப கால பிற்போக்குப் பாரம்பர்யத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மராத்திய பிராந்திய வெறித் தீயை விசிறி விடுவதன் மூலமாக, வட இந்தியர்களின் மீது - குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் மீது - மிகவும் கயமைத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள். டாக்சிகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதனை அடுத்து டாக்சி யூனியன்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்தல்களை விடுத்திருக்கின்றன. போஜ்பூரி திரைப்படங்கள் காட்டப்பட்ட தியேட்டர்கள் எல்லாம் சூறையாடப்பட்டுள்ளன. மத்திய இரயில்வே அமைச்சர் லாலு தனியே அடையாளப்படுத்தப்பட்டு, ‘‘இரயில்வேயில் பீகாரிகளை மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்’’ என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தித் திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் கூட, கயவர்களின் தாக்குதல் இலக்கிலிருந்து, விட்டு வைக்கப்படவில்லை.பீகார் மக்கள் மீது மிகவும் கேவலமான முறையில் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்னவெனில், அவர்கள் தீபாவளிப் பண்டிகைக்கு ஆறு நாட்கள் கழித்து வரும் சாட் பண்டிகையை (chhat festival) வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்களாம். உண்மையில் அந்த சமயத்தில் மும்பையில் குறைந்த கூலியில் வெகுநேரம் வேலை செய்திடும் பீகாரித் தொழிலாளர்கள் கிடைக்காமல் போய்விடுவதுதான், இத்தகைய விரக்தியான வெளிப்பாட்டிற்குக் காரணமாகும். இந்தியா போன்ற சமூக, கலாச்சார, மொழி வேற்றுமைப் பண்புகள் வளமாக உள்ள ஒரு நாட்டில், பல்வேறு விதமான மக்கள் தங்களுடைய பாரம்பர்யப் பண்டிகைகளைக் கொண்டாடுவது இயற்கையே. அவர்களின் பண்டிகை கால உணர்வுகளுக்கு மையமாக இருப்பதே பாரம்பர்யக் கலாச்சாரங்கள்தான். எந்த ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது கலாச்சாரப் பிரிவினரும் மற்றொரு மொழி அல்லது கலாச்சாரப் பிரிவினர் மீது தங்கள் பண்டிகையைத்தான் கொண்டாட வேண்டும் என்று நிர்ப்பந்தத்தைத் திணிக்க முடியாது.
இத்தகைய பல்வேறு சமூக, கலாச்சார, மொழி வேற்றுமைப் பண்புகளினூடே ஒற்றுமையைக் காண்பதன் மூலம்தான் வலுவான இந்தியாவைக் கட்டிட முடியும். இந்த வேற்றுமைப் பண்புகளில் ஒரு சீரான தன்மையைத் திணிக்க முயன்றால், அது நாட்டின் ஒற்றுமையைத் தகர்ப்பதற்கே இட்டுச் செல்லும். இதைத்தான் தற்சமயம் மும்பையில் பிராந்திய வெறி சக்திகள் செய்து கொண்டிருக்கின்றன. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிப் பாதுகாத்திட நினைக்கும் ஒவ்வொருவரும் இத்தகையப் பிரிவினை சக்திகளை ஓரங்கட்ட வேண்டியது அவசியம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகள் இந்தப் புரிதலுடனே அமைந்திருக்கிறது. அது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையையும், குடியேறும் உரிமையையும் அளிக்கிறது. எனவே, மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பிராந்திய வெறியானது அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் சரி, சமுதாய நெறிமுறைகளின்படியும் சரி விரோதமானதாகும். முந்தைய ஆண்டுகளில் சிவசேனையின் வெறித்தனமான பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்ட, அதிலிருந்து தங்களை உருக்கு போன்று மாற்றிக்கொண்டுள்ள இன்றைய மும்பையினர், இப்போது ‘‘மும்பை மும்பையினருக்கே’’ என்ற முழக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் பொருள் உலக நாகரிகத்தின் மையமாக மாறியுள்ள மும்பை மாநகரத்தில் வாழும் அனைவரும் - அவர்கள் எந்த கலாச்சார, மத, மொழி அல்லது அடையாளத்தைக் கொண்டிருந்தாலும் சரி, அவர்களனைவரும் - மும்பையினரே. இத்தகைய உலக நாகரிகத்தின் பொது மையமான, இந்தியாவின் வணிகத் தலைநகரான, மும்பை மாநகரம்தான் பிராந்திய வெறியர்களால் இன்றைக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. நவீன இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கருத்தாக்கத்தையே இது அச்சுறுத்தலுக் குள்ளாக்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது. இது துரதிர்ஷ்வசமானது மட்டுமல்ல, ஐயத்திற்கிடமற்ற வகையில் நாட்டின் ஒற்றுமைக்கு அழிவு உண்டாக்கக்கூடியதுமாகும். தேர்தல் ஆதாயத்திற்காகப் பல்வேறு வெறித்தனங்களையும் ஊட்டி வளர்த்திடும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் இத்தகைய குறுகிய வழியைத் தேர்ந்தெடுக்கின்றன. நவீன இந்தியாவைப் பாதுகாத்திடவும், ஓர் ஆரோக்கியமான ஜனநாயக அரசியலமைப்பை வலுப்படுத்திடவும் வேண்டுமென்றால் இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலேயே முழுமையாகக் கிள்ளி எறிந்திட வேண்டும். நவீன-தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டில் மாநிலங்களுக்கிடையே பொருளாதார சமத்துவமின்மையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில் இது மேலும் அவசியமாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வான நிலைமையானது பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து மக்களை நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும் வளர்ந்த மாநிலங்களை நோக்கி புலம்பெயரச் செய்கிறது. இத்தகைய செயல்பாடுகளானது ஒரு நீண்ட நெடிய காலகட்டத்தில், ஒரு சமச்சீரான பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை. மும்பையில் சமீபத்திய தாக்குதல்கள்போல் அல்லது தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் போல் அப்போது எழாது என்பதும் நிச்சயம். ஆயினும், அத்தகைய சமச் சீரான வளர்ச்சியை அரசின் உறுதியான தலையீட்டின் மூலம்தான் அமல்படுத்த முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன தாராளமய பொருளாதார நிகழ்ச்சிநிரலைக் கட்டித் தழுவிக்கொண்டுள்ள இந்திய ஆளும் வர்க்கம் ‘சந்தையாகிய கடவுள் கிருபையே’ தேவை என்று கிடப்பதால், இதனைச் செய்யாமல் விட்டுவிட்டது. விளைவு, ஆட்சியாளர்கள் பொருளாதார செயல்பாடுகளிலிருந்து தங்களை விலக்கிக் கொள்வது அதிகரித்தவண்ணம் உள்ளது.பொருளாதார சமத்துவத்தை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்று சொல்கிறபோது, இன்றைய சூழ்நிலையில், பிராந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்குறித்து கவலைப்படாமல் இருப்பதோ அல்லது ஏற்றத்தாழ்வுகளைக் காட்டி பிராந்திய வெறியைக் கிளப்புவதோ சரியல்ல என்பதும் அடிக்கோடிடப்பட வேண்டும். பொறுப்புமிக்க அனைத்து அரசியல் கட்சிகளும், மும்பையில் கிளறிவிடப்பட்டுள்ள பிராந்திய வெறி என்னும் தீயை அணைத்திடமுன்வர வேண்டும். இதனை நாடு முழுதும் பரப்பிட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
தமிழில்: ச. வீரமணி

No comments: