(அவருடைய வாழ்க்கை மென்மையானது; இயற்கையெழுந்து இந்த உலகத்தில் எல்லாரிடத்தும் சொல்லும், இவன்தான் மனிதன் என்று சொல்லக்கூடிய வகையில் இவருடைய குணாம்சங்கள் கலந்திருக்கின்றன. - ஜுலியஸ் சீஸர் நாடகத்தில் - வில்லியம் ஷேக்ஸ்பியர்)
2007ஆம் ஆண்டு இதழியல், இலக்கியம் மற்றும் தகவல்தொடர்புத் துறை தொடர்பான ரமான் மகாசேசே விருது, தி ஹிந்து நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள் துறைஆசிரியர் பி.சாய்நாத் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி மணிலாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும். இவ்விருதிற்கான காரணம் குறித்து, விருதிற்கான தேர்வுக் குழுவினர் கூறுகையில், “இந்திய மக்களின் மனத்தில் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கையைப் பதிவு செய்வதைத் தன் பெரும் கடமையாகக் கருதி, செயல்பட்டுவரும் பத்திரிகையாளர். இவருடைய அறிக்கைகள், இந்திய அதிகாரிகளின் கவனத்தை சில பிரச்சனைகளின்பால் ஈர்க்கவும் அதற்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் வைத்துள்ளன. அரசு சொல்வதைப் போல இந்தியாவின் மிக வறிய மாவட்டங்களின் துயர நிலை வறட்சியால் ஏற்பட்டதல்ல மாறாக நாட்டின் சமச்சீரற்றக் கட்டமைப்பு, வறுமை, எழுத்தறிவின்மை, சாதி பாகுபாடுகள், பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்பட்ட வெளிநாட்டு முதலீடுகள், தனியார்மயம் இவற்றால் ஏற்பட்டதே என்பதைக் கண்டறிந்துள்ளார்.”
பி.சாய்நாத் இதழியல், இலக்கியம் மற்றும் தகவல்தொடர்பு துறையில் இந்த விருதைப்பெறும் ஆறாவது இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். 1984இல் ஆர். கே. இலட்சுமணன் இவ்விருதைப் பெற்ற பிறகு 23 ஆண்டுகள் கழித்து இவ்விருதைப் பெறும் இந்தியர் பி.சாய்நாத். 1957இல் சென்னையில் பிறந்த இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம். முன்னாள் குடியரசுத்தலைவர் வி.வி.கிரியின் பேரன். கல்லுhரி மாணவராக இருக்கும்போதிருந்தே சமூகப் பிரச்சனைகள் குறித்த கண்ணோட்டம், தேடுதல் அவருக்கிருந்தது. இவர் தன்னுடைய முதுகலைப் பட்டத்திற்காக புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற போது மாணவர் இயக்கங்களில் தீவிர பங்கு பெற்றார். வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக 1980ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கினார். இந்நிறுவனத்தில் வழங்கப்படும் தனிப்பட்ட மனிதருக்கு உயரிய விருது இவருக்கு வழங்கப் பட்டது. பின்னர் தெற்காசியாவின் முக்கிய பத்திரிக்கைகளில் ஒன்றான ‘பிளிட்ஸ்’ பத்திரிக்கையில் வெளிநாட்டு விவகாரங்கள் துறை ஆசிரியராகவும் அப்பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பத்தாண்டுகள் பணிபுரிந்தார்.
1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இந்தியப் பத்திரிகைத் துறையின் கவனம் “செய்தி”க்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து மாறி “பொழுதுபோக்கு அம்சங்கள், நுகர்வோரியம், நகர்ப்புற மேல்மட்டு மக்களின் வாழ்க்கை முறை” போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இந்திய வறுமையின் உண்மை நிலை என்ன வென்பதை மக்களுக்கு கொண்டு செல்வது பற்றி இந்தியப் பத்திரிகைகள் பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்த சூழ்நிலை பி.சாய்நாத்தின் தொழிலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. “மற்ற பத்திரிகைகள் மேல் மட்டத்திலுள்ள ஐந்து சதவீதத்தினரைப் பற்றி எழுதினால். நான் அடி மட்டத்திலுள்ள ஐந்து சதவீதத்தினரை பற்றி எழுத வேண்டும்” என்று முடிவு செய்தார் பி.சாய்நாத். இதன் விளைவாக 1993ஆம் ஆண்டு ‘பிளிட்ஸ்’ பத்திரிகையிலிருந்து வெளியில் வந்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வழங்கிய படிப்புதவி தொகைக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வின்போது தான் கிராமப்புறங்களைப் பற்றி எழுத விரும்புவதாக தெரிவித்தார். அப்பொழுது அப்பத்திரிகையின் ஆசிரியர், “இப்படிபட்ட செய்திகளில் எங்கள் வாசகர்களுக்கு ஆர்வமில்லை என்று நாங்கள் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்டார். அதற்கு பி.சாய்நாத், “நீங்கள் கடைசியாக உங்கள் வாசகரை எப்பொழுது சந்தித்தீர்க்ள்? அவர்கள் சார்பாக அவர்கள் என்ன விருப்பம் தெரிவித்தார்கள்?” என்று கேட்டார். இக்கேள்விக்கான பதிலாக அவருக்கு அவ்வுதவித்தொகை கிடைத்தது.
இவ்வுதவித் தொகையுடன், ஐந்து மாநிலங்களிலுள்ள மிக வறிய பத்து கிராமங்களுக்குச் சென்றார். இதற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார். 16 விதமான போக்குவரத்து முறைகளை பின்பற்றியிருக்கிறார். நடந்தே ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்றிருக்கிறார். மிக வறிய கிராமங்களில் மக்களின் வாழ்க்கைமுறை எப்படியுள்ளது, அவர்கள் எவ்வாறெல்லாம் அவதிப்படுகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை நிலைக்கு அரசின் கொள்கைகள் எவ்வாறு காரணமாயிருக்கின்றன என்பனவற்றை ஆராய்ந்து தன் கட்டுரைகளில் எழுதினார்.
இவ்வனுபங்களைப் பற்றி அவர் நினைவு கூர்கையில், “இந்தக் கிராமங்களுக்குச் சென்ற பிறகுதான் பாரம்பரிய இதழியல், ஆட்சி - அதிகாரத்தில் இருப்பவர்கள் பற்றிய செய்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதையும், அது உண்மையான மக்களின் வாழ்க்கைமுறை பற்றிக் கண்டு கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தேன். அந்நேரத்தில் எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தன. ஆனால் மக்களுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்ற உணர்வினால் வெட்கப்பட்டு இவ்விருதுகளை புறக்கணித்தேன்,” என்கிறார்.
இதழியல் துறையைப் பற்றி கூறுகையில், “20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் இதய நாடியாக பத்திரிகைகள் விளங்கின. மனிதனின் விடுதலைக்காக பத்திரிகைகள் மகத்தான பங்காற்றின. ஆனால் இன்று அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் சேவகம் செய்யும் வெறும் சுருக்கெழுத்தாளர்கள்போல் பத்திரிகைகள் செயல்படுகின்றன. பொருளாதாரத்தில் நெருக்கடிகள் வரும்போது, அது குறித்து பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தெளிவினை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, நடிகர்களைப் பற்றியும், அழகு ராணிகளைப் பற்றியும், பங்குச் சந்தைகளைப் பற்றியும், தகவல் தொழில்நுட்பத்துறையின் மகோன்னதங்களைப்பற்றியும் எழுதி அதிக பக்கங்களை நிரப்புகின்றன. இன்றைய இதழியல் சாமானிய மக்களின் பிரச்சனைகைளைப் பற்றியோ சகமனிதர்களின் உணர்வுகளைப் பற்றியோ கவலைப்படாத வாசகர்களை உருவாக்குகிறது.
“ஆனால் இப்படிபட்ட பத்திரிகையாளர்களிடமிருந்து சாய்நாத் வேறுபட்டார். இதழியல் என்பது பங்குசந்தை பங்குதாரர்களுக்கானது அல்ல, மாறாக அது மக்களுக்கானது என்பதை உணர்ந்தார். பெரும்பான்மை பத்திரிகைகள் எண்ணியும் பாராத ஏழை மக்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் மற்றவர்களுக்கு கொண்டு சென்றார். இந்தியாவில் கடனில் மூழ்கிய விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இக்கட்டுரைகளை எந்தவிதமான புள்ளியியல் குறிப்பையும் வைத்து அவர் எழுத வில்லை. மகாராஷ்ட்ர மாநிலம் விதர்பா பகுதியிலும், ஆந்திராவிலும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் சிரமங்களைக் கட்டுரைகளாக எழுதி வாசகர்களுக்கு தெரிவித்தது மட்டுமல்லாமல், அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
1997ஆம் ஆண்டு “எல்லோரும் விரும்புவது ஒரு நல்ல வறட்சியையே” ( Everybody loves a good drought) என்ற புத்தகத்தை வெளியிட்டு தன்னுடை கிராமப்புற அனுபங்களைத் தொகுத்துள்ளார். “கண்ணுக்குத் தெரியும் வேலை, கண்ணுக்குத் தெரியாத பெண்கள்” என்ற புகைப்படக் கண்காட்சியை இந்தியாவின் பல நகரங்களிலும், அமெரிக்கா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் நடத்தியுள்ளார். நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென், “ பஞ்சம், பசி பற்றி நன்கு அறிந்துள்ள உலக வல்லுநர்களில் ஒருவர் பி. சாய்நாத்” என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய கிராமப்புற பயணத்திற்காகவும் பயணச் செலவுகளுக்காகவும் பத்திரிகைகள் கொடுக்கும் தொகை போதவில்லையென்றால் தன்னுடைய தனிப்பட்ட வருமானத்திலிருந்தோ, சேமிப் பிலிருந்தோதான் செலவு செய்வார். பெரு முதலாளிகள் இவருக்கு அளிக்கும் உதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார். இவருடைய தற்போதையத் திட்டம் தலித்துகள் பற்றி எழுதுவதாகும். இதற்காக 15 மாநிலங்களை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். ஏற்கெனவே 10 மாநிலங்களையும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் கிலோ மீட்டர்கள் தொலையும் பயணம் செய்து முடித்துவிட்டார். இன்னும் ஐந்து மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். இவை மட்டுமல்லாது கிராமப்புற விவகாரங்களை புதிய கண்ணோட்டத்தோடு அணுகும் முறை , அவற்றிற்கான இதழியல் நுட்பங்கள் பற்றி பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். இவருடைய இதழியல் வகுப்புகள் நேரடியாக கிராமங்களிலேயே நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும் சமூக மாற்றத்தின் பிரதிநிதியாக இருக்கவும் இவருடைய மாணவர்களை ஊக்கமளித்து பயிற்றுவிக்கிறார். இப்படியொரு பத்திரிகையாளரைப் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படுகிறது. உண்மையான நாட்டுப்பற்று என்றால் என்னவென்பதைத் தன் எழுத்துக்கள் மூலம் மெய்ப்பித்துக்கொண்டிருக்கும் பி. சாய்நாத்திற்கு விருது வழங்கிய ரமான் மகாசேசே தேர்வுக் குழுவினருக்கு இந்தியா தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..
.
No comments:
Post a Comment