(1930 டிசம்பர் 23 அன்று பஞ்சாப் ஆளுநர், லாகூர் பல்கலைக் கழகக் கூடத்திலிருந்து, பல்கலைக்கழக பேருரையாற்றியபின் வெளியே வந்துகொண்டிருந்தபோது, ஹரி கிஷன்அவரை நோக்கிச் சுட்டார். ஒருவர் சம்பவயிடத்திலேயே இறந்தார். ஆளுநர் லேசான காயம் அடைந்தார். விசாரணையின்போது, ஹரி கிஷன் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், ஹரி கிஷனுக்கு ஆளுநரைக் கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், அவர் ஒரு எச்சரிக்கை கொடுப்பதற்காகமட்டுமே அவ்வாறு செய்தார் என்றும் எதிர்நிலை எடுத்தார். பகத்சிங் இந்நிலையை எதிர்த்தார்.
புரட்சியாளர்களின் வழக்குகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அவருடைய நண்பர்களில் ஒருவருக்கு இக் கடிதத்தை எழுதினார். இக்கடிதம், 1931 ஜூன் ‘பீப்பிள்’ (மக்கள்) இதழில் வெளிவந்தது.)
நான் இதற்கு முன் இது தொடர்பாக எழுதிய கடிதம் உரிய நேரத்தில் உரிய இடத்திற்குப் போய்ச்சேரவில்லை என்பதையும், அதனால் அக்கடிதம் பயன்படுத்தப்படாமல் போய்விட்டது அல்லது அக்கடிதம் என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அது நிறைவேறாமல் போய்விட்டது என்பதையும் அறிந்து மிகவும் வருந்துகிறேன். எனவே, அரசியல் வழக்குகளில் பொதுவாகவும் புரட்சிகர வழக்குகளில் குறிப்பாகவும் எதிர்வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து எனது கருத்துக்களை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். எனது முந்தைய கடிதத்தில், ஏற்கனவே விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் நீங்கலாக மற்றொரு நோக்கத்திற்கும் இது பயன்படும். அதாவது, இந்த விளைவுகளுக்குப் பிறகும் நான் புத்திசாலியாக மாறவில்லை என்பதற்கான ஆவணச்சான்றாக இது இருக்கும். எது எப்படியானாலும் ஹரிகிஷன் வழக்கில் எதிர்வழக்கு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த வழக்கறிஞர் யோசனையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நான் அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால் உன்னுடைய மற்றும் என்னுடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவ்வாறே செய்யப்பட்டு விட்டது. இருந்தபோதிலும், எதிர்காலத்தில், இதுபோன்ற சமயங்களில் நாம் நாம் எப்படி எதிர்வழக்காட வேண்டும் என்பது குறித்து, தீர்மானகரமானமுறையில் சில வரையறைகளை வகுத்திடலாம். அனைத்து அரசியல் கைதிகளும் எதிர்வழக்காடுவதற்கு ஆதரவாக நான் எப்போதும் இருந்ததில்லை என்பதை நீ அறிவாய். ஆனால் இதன் பொருள், உண்மை போராட்டத்தின் அழகு ஒட்டுமொத்தத்தில் சிதைக்கப்பட வேண்டும் என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. (இங்கு நான் ‘அழகு’ என்கிற சொல்லை அழகியல் பொருளில் பயன்படுத்தவில்லை, மாறாக ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்கான நோக்கத்தைக் குறித்து அதனைப் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை அருள்கூர்ந்து குறித்துக்கொள்க). அனைத்து அரசியல் கைதிகளும் எப்பொழுதும் தங்களுக்காக எதிர்வழக்காட வேண்டும் என்று நான் கூறும்பொழுது, சில வரம்புளை மனதிற்கொண்டே அதனைக் கூறுகிறேன்.
ஏதோவொரு விளைவை மனதிற் கொண்டுதான் ஒருவர் ஒரு செயலைச் செய்கிறார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது செயலின் அரசியல் முக்கியத்துவம் ஒரு சிறிதும் குறைக்கப்படக்கூடாது. செய்யப்பட்ட செயலைக் காட்டிலும் அச்செயலைச் செய்தவர், அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆகிவிடக்கூடாது. இதனை உதாரணத்தின் மூலம் மேலும் விளக்குவோம். ஹரி கிஷன் ஆளுநரைச் சுடுவதற்காக வந்தார். அவரது செயலை அறநெறி நின்று நான் விவாதிக்க விரும்பவில்லை. அதனை அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே விவாதிக்க விரும்புகிறேன். அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். அவரது நடவடிக்கையின் விளைவாக துரதிஷ்டவசமாக யாரோ ஒரு காவல்துறை அலுவலர் இறந்துவிட்டார். இப்பொழுது எதிர்வழக்காடுவது பற்றிய கேள்வி எழுகிறது.
நல்லது. அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பியிருக்கும் பொழுது, அவரது வழக்கில் மிக அழகாக எதிர்வழக்கை நடத்தியிருக்க முடியும். அதாவது, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைப்போல, உண்மை விவரங்களை வாக்குமூலமாகக் கொடுத்திருக்கலாம். அது ஒன்றும் மோசமில்லை. அது சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளையும் நிறைவேற்றியதாக இருந்திருக்கும். காவல் உதவி ஆய்வாளரின் மரணம் குறித்து வழக்கறிஞர் எடுத்துவைத்த வியாக்கியானத்திலிருந்து அவரது அறிவுக்கூர்மையையும் வாதத்திறமையையும் அறியமுடிகிறது.
ஆளுநரைக் கொல்வது எதிரியின் நோக்கமல்ல, அவரை எச்சரிப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார் என்று வாதிடுவதன் மூலம் அவர் அடைந்த ஆதாயம்தான் என்ன? இதுபோன்றதொரு தூண்டுரையை ஒரு கணமாவது நேர்மையான நபர் எவராலும் நினைத்தாவது பார்க்க முடியுமா? இதற்கு ஏதாவது சட்டரீதியான மதிப்புதான் உண்டா? முற்றிலுமாக இல்லை. பின், குறிப்பிட்ட இந்தச் செயலை மட்டுமல்ல, பொதுவாக இயக்கத்தின் அழகையும் அசிங்கப்படுத்துவதன் மூலம் அடைந்திட்ட பயன்தான் என்ன?
எச்சரிக்கைகளையும், வீணாகிப்போன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் எப்போதும் செய்துகொண்டேயிருக்க முடியாது. நெடுங்காலத்திற்கு முன்பே ஒருமுறை எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டது. புரட்சிகரக் கட்சியின் வலு அனுமதித்த அளவிற்கு, சரியான அளவில் புரட்சிகரப் போராட்டம் தொடங்கிவிட்டது.
வைஸ்ராயின் ரயில் நடவடிக்கை, சோதனை முயற்சியோ எச்சரிக்கையோ அல்ல. அதேபோன்று, ஹரி கிஷனின் நடவடிக்கை, அப்போராட்டத்தின் ஒரு பகுதியே அன்றி, அது ஓர் எச்சரிக்கை அல்ல. நடவடிக்கை தோல்வியடைந்த பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர் அத்தோல்வியை விளையாட்டு வீரனுக்குரிய உணர்வுடன் எடுத்துக்கொள்ளலாம். நோக்கம் நிறைவேறிவிட்டதையடுத்து, அதிர்ஷ்டவசமாக ஆளுநர் தப்பியதில் அவர் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். தனிநபர் எவரையும் கொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இறுதிப் போராட்டத்திற்கு இன்றியமையாத தேவைப்படும் சூழ்நிலையையும் மனப்பக்குவத்தையும் உருவாக்குவதால் இத்தகைய நடவடிக்கைள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வளவு தான். மக்களின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கும் தனிநபர் நடவடிக்கைகள் தேவை. நாம் சில சமயங்களில் அவற்றை ‘செயல் மூலம் பிரச்சாரமாக’ப் பயன்படுத்துகிறோம்.இவ்வாறு இவற்றைப் பரிசீலனை செய்த அடிப்படையில்தான் எதிர்வழக்கினை நடத்திட வேண்டும். எப்படி இருந்தாலும் வழக்கை நடத்திடும் அனைவருமே அதிகபட்சம் ஆதாயத்தையும் குறைந்தபட்சம் இழப்பையும் அடைவதற்கே எப்போதும் முயற்சிப்பார்கள், இதுவே பொதுவான நியதி. தனக்குக் கிடைக்கும் ஆதாயத்திற்கும் மேலாக பெரிய இழப்புகளைச் செய்திடக்கூடிய வகையில் எந்த ஒரு போர்த்தளபதியும் உத்திகளை வகுத்திட மாட்டார்.
ஹரி கிஷனின் மதிப்புமிக்க உயிரைக் காப்பாற்றுவதில் என்னைக் காட்டிலும் அதிக அக்கறையுள்ளவர் எவருமில்லை. ஆனால் அவருடைய உயிரை மதிப்புமிக்கதாக எது ஆக்கியதோ அந்த விஷயத்தையே புறந்தள்ளி விடக்கூடாது. என்ன விலை கொடுத்தாயினும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது நமது கொள்கையல்ல. ‘சாய்வு நாற்காலி அரசியல்வாதி’களின் கொள்கையாக அது இருக்கலாம், ஆனால் அது நம் கொள்கை அல்ல. ஒரு வழக்கில் எதிர்வழக்கிடுவது பற்றிய கொள்கையின் பெரும்பகுதி குற்றம் சாட்டப்பட்டவரின் மனப்போக்கைச் சார்ந்ததே. ஆயினும், குற்றம்சாட்டப்பட்டவர், பயந்து ஒடுங்கிப்போகாதவராக மட்டுமல்ல, கொள்கையின்பால் மேலும் ஆர்வத்துடன் எப்போதும்போல் இருந்தாரானால், அப்போது அவர் எதற்காக அந்தக் குற்றச்செய்கையினைச் செய்திடத் துணிந்தாரோ, அதுவே முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டும். அவரது சொந்தப்பிரச்சனைகள் எல்லாம் அப்புறம்தான்.
மீண்டும் ஒரு வகையான குழப்பம் ஏற்படலாம். சில நடவடிக்கைகள், உள்ளூர் வட்டாரத்தில் மிகப்பெரிதாக கருதப் பட்டாலுங்கூட அவற்றிற்குப் பொதுவான முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அவ்விடத்தில் பொறுப்பை ஒப்புக்கொள்வது குறித்து குற்றம் சாட்டப்பட்டவர் உணர்ச்சிவசப்பட்டு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. இதற்கு பிரபலமான நிர்மல் காந்த் ராய் வழக்கு விசாரணையே சிறந்த உதாரணமாக இருக்கும்.
ஆனால், இது போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், அரசியல் அம்சங்களைக் காட்டிலும் தனிப்பட்ட அம்சங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கக் கூடாது. இந்த வழக்கு பற்றிய எனது வெளிப்படையான அபிப்ராயத்தை அறிந்து கொள்ள நீ விரும்பினால், நான் ஒளிவு மறைவின்றி உனக்குச் சொல்கிறேன். இது, போலித்தனமான சட்டத் தொழிலின் பலிபீடத்தில் செய்யப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் அரசியல் படுகொலை என்று கூறுவதைத் தவிர வேறொன்றுமில்லை.
மேலும் ஒரு விஷயத்தை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கின் கழுத்தை நெறித்துக் கொல்வதற்குப் பொறுப்பானவர்கள், இப்போது தங்களது பெருந்தவறை உணர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அந்நிகழ்வுக்குப் பின்னர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவர்களுக்குத் துணிவில்லை. அதனால் அவர்கள் நமது இளம் தோழரின் அற்புதமான மன உரத்தின் அழகையே சிறுமைப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வழக்கைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கு அஞ்சி ஹரி கிஷன் பின்வாங்கிவிட்டார் என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இது மிகவும் வெட்கப்பட்டத்தக்க கடைந்தெடுத்த பொய்யாகும். அவரைப் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்ட இளைஞனை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.
மக்கள் நம் மீது கருணை உடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நெறிபிறழ்ந்தவர்களாக, தரம் தாழ்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டு நன்கு கவனித்துக்கொள்ளப்படுவதைவிட, கண்டு கொள்ளப்படாதவர்களாக இருப்பது நல்லது.
துன்பத்தில் வாடும் மனிதகுலத்தின் விடுதலை என்ற பொன்னான மார்க்கத்துக்காக, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்துள்ள இளைஞர்களின் வாழ்வை - ஏன், அவர்கள் மரணத்தைக்கூட - சுரண்டிப் பிழைக்கும் அளவிற்கு இழிவான அற்பர்களாக வழக்கறிஞர்கள் இருந்திடக் கூடாது. நான் உண்மையிலேயே.......*
இல்லாவிட்டால் மேற்சொன்ன வழக்கில் கொடுக்கப்பட்டது போன்று நம்பமுடியாத அளவிற்கு, ஒரு பெரும் தொகையைக் கட்டணமாக ஒரு வழக்கறிஞர் ஏன் கோர வேண்டும்?
ராஜத்துரோக வழக்குகளில் எந்த அளவிற்கு நம்மால் எதிர்வழக்காட முடியும் என்பது குறித்து, நான் உனக்குச் சொல்கிறேன். கடந்த ஆண்டு, சோசலிசக் கருத்துக்களைப் பேசியதற்காக ஒரு தோழர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்தபோது நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம். இதுபோன்ற வழக்குகளில் நாம் பேச்சுரிமையை வலியுறுத்திக் கோரியிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எதிர்வழக்காட வேண்டும் என்று ஒருவர் அறிவுறுத்தப்பட்டால், அது இயக்கத்தின் நலன்களுக்கு முரணானதாக இருக்குமானால், அதனை மறுத்திட வேண்டும்.
இப்போது நடந்து வரும் இயக்கத்தைப் பொறுத்து, காங்கிரஸ் தன் உறுப்பினர்களை எதிர்வழக்காடாமல் சிறைக்குச் செல்ல அனுமதித்திருப்பதன்மூலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறு என்றே கூறுவேன்.எப்படியோ, நீ இந்தக் கடிதத்தையும் என்னுடைய முந்தைய கடிதத்தையும் இணைத்து வாசித்தாயானால், அரசியல் வழக்குகளில் எதிர்வழக்காடுவது எப்படி என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஹரி கிஷன் வழக்கில், என் கருத்துப்படி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும். இதில் தவறக்கூடாது. அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும்.இந்தப்பொருள் குறித்து நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் இந்த இரண்டு கடிதங்களிலும் குறிப்பிட்டுவிட்டேன் என்றே நம்புகிறேன்.
*** *** ***-------------------------------------* இங்கே சில வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment