Thursday, February 28, 2008

‘அவதிப்படும்’ இந்தியாவைக் கண்டுகொள்ளாத குடியரசுத்தலைவர் உரை





ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குச் சற்று முன்னதாக, குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பட்டீல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றியிருக்கும் தன் முதல் உரையில், அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மிகவும் அதிகமான அளவில் கூறியிருக்கிறார். அவரது உரையை ஒட்டுமொத்தமாக ஆராய்கையில், நாட்டின் பொருளாதார சூழ்நிலையின் உண்மையான இருப்பு நிலைக் குறிப்பை - உண்மையான நிலைமையினை - அது முன்வைப்பதாக இல்லை என்பதை உணர முடியும். பதிலாக, ‘‘அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் உள்ளடங்கலான வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது’’ என்று கூறி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளையே சாதனைகளாகப் பட்டியலிட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ‘ஒளிர்கின்ற’ இந்தியாவுக்கும் ‘அவதிப்படும்’ இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்று இப் பகுதியின் வாயிலாக, பலமுறை வலியுறுத்தி இருக்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, குடியரசுத் தலைவர் உரை வெள்ளிடைமலை போன்ற இந்த உண்மையை அங்கீகரிக்கக்கூடிய வகையில் இல்லை. ‘‘வரலாற்றில் முதன்முறையாக, இந்தியப் பொருளாதாரம், வரிசையாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வோராண்டும் 9 சதவீத வளர்ச்சிக்கு மிக அருகாமையில் வளர்ந்திருக்கிறது’’ என்று ஒருபக்கத்தில் பீற்றிக்கொண்டாலும், மறுபக்கத்தில் நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருவர் என்கிற வீதத்தில் கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும், நாட்டு மக்களில் 78 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் பெறும் நிலை தொடர்வதையும் நாணமற்ற முறையில் சொல்லாமல் விட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகளின் யதார்த்த நிலை என்பது இதுதான். இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. ‘ஒளிர்கின்ற’ இந்தியாவின் சிறப்பம்சங்களை -- பங்குச்சந்தை குறியீட்டெண் திடீர் உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு, உயரளவில் முதலீடு, சேமிப்பு விகிதம் 34 சதவீதத்திற்கும் மேலாக இருத்தல், 48 அமெரிக்க டாலர் பில்லியனர்கள் உருவாகி இருத்தல் - ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் அதே சமயத்தில், ‘அவதிப்படும்’ இந்தியாவின் பரிதாபகரமான நிலையை - அவரது உரை முற்றிலுமாக ஓரங்கட்டிவிட்டது. எல்லாவற்றையும் விட மோசம், தொடர்ந்து ஏறிவரும், குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி குறித்தும், அதன் விளைவாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் அரிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது குறித்தும் எதுவுமே கூறப்படவில்லை.
இந்திய வேளாண்மையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தோ, விவசாயிகள் தற்கொலைகள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகளுக்கான கடன் கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி அனைவரையும் முட்டாளாக்கப் பார்க்கிறார்கள். உண்மையில் விவசாயிகளில் இன்னும் மூன்றில் இரண்டு பகுதியினர் கந்துவட்டிக்காரர்களின் கடன்வலையில் சிக்கி வெளி வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையல்லவா? இவ்வாறு இவர்கள் கடன் வலையில் சிக்கியிருப்பதுதான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு அடிப்படைக் காரணமாகும். இதுகுறித்தெல்லாம் குடியரசுத்தலைவர் உரையில் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதேபோன்று நம் நாட்டின் உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக உணவு தான்ய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த நம் நாட்டில் சென்ற ஆண்டு ஐந்து மில்லியன் டன்கள் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும்கூட பொது விநியோக முறை தொடர்ந்து அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்து வந்த உணவு தான்யங்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் எதிர்காலத்தில் சாமானிய மக்களின் வாழ்நிலை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்கான முன்னறிகுறிகளேயாகும்.
இந்தப் பகுதியில் நாம் முன்பே பலமுறை விவாதித்திருப்பதைப்போல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்படவிருக்கும் கடைசி பட்ஜெட்டிலாவது, குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் அளித்துள்ள மக்கள் நலம் சார்ந்த உறுதிமொழிகளை அமல்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்திடும் என்று நம்புவோமாக.
குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டிருக்கிறார். ‘‘வானத்தில் பாதிப் பகுதி பெண்கள்’’ என்கிற மேற்கோளை குடியரசுத்தலைவர் பயன்படுத்தியிருந்தாலும், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவு குறித்து குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறார். ஐமுகூ அரசாங்கம் தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலுவையில் உள்ள இச்சட்டமுன்வடிவை வெகுவிரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருந்தபோதிலும், இன்னும் அது குறித்து சிந்திப்பதற்கான காலம் ஐமுகூ அரசாங்கத்திற்கு வரவில்லை.
ஆட்சியின் கடைசி ஆண்டான இப்போதாவது ஐமுகூ அரசாங்கம் இச்சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில், குடியரசுத் தலைவர், பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக் குறியீடுகளைக் கணக்கிட்டிருக்கிறார். பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட ஒதுக்கீடுகள் இன்னும் ஐந்தாண்டு காலம் கழிந்தபிறகுதான் நடைமுறைக்கு வரும் என்பதைக் குடியரசுத்தலைவர் ஏனோ நாட்டிற்குச் சொல்ல முன்வரவில்லை. எனவே தற்சமயம் கடும் இன்னல்களுக்காளாகி இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனடி நிவாரணம் இவற்றால் கிடைக்காது என்பதை இவர் இவ்வாறு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மற்ற பல பிரச்சனைகள் குறித்து - அதாவது பூமி வெப்பமாதலிலிருந்து தொலைத் தகவல் தொடர்பு, ஆயுதப் படைகள், அயல்துறைக் கொள்கை வரை உரையாற்றிய குடியரசுத் தலைவர் அவர்கள் - மேலும், ‘‘ராணுவம் சாரா துறைகளில் அமெரிக்கா மற்றும் இதர நட்பு நாடுகளுடனான அணுசக்தி ஒத்துழைப்பு சாத்தியமாக மாறும்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனையில் இடதுசாரிக் கட்சிகள் மிகவும் தெள்ளத் தெளிவாகவும், எவ்வித ஊசலாட்டமுமின்றி இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வருகின்றன.
இன்றைய நிலையில், ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகள் ‘‘அணுசக்தித் துறையில் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து இந்திய அரசாங்கம் சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் விவாதிப்பதைத் தொடரலாம், பேச்சுவார்த்தையின் முடிவுகளை மீண்டும் அரசாங்கம் ஐமுகூ - இடதுசாரிக் கட்சிகளின் குழுவின் முன் சமர்ப்பித்திட வேண்டும், அக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை அடுத்தே அரசாங்கம் இப்பிரச்சனையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்’’ என்பதை ஐமுகூ அரசாங்கம் - இடதுசாரிக் கட்சிகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன. அதுவரை அரசாங்கம் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் இடதுசாரிக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
குடியரசுத் தலைவர் உரையின் தொனி மற்றும் அது செல்லும் திசைவழி என்பது, வரவிருக்கும் பொதுத்தேர்தலை அது கணக்கில் எடுத்துக்கொண்ட அளவிற்கு, ஆட்சியின் சாதனைகளையும் சோதனைகளையும் கூற வில்லை என்பதையே காட்டுகிறது. எது எப்படி இருந்தாலும், இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிர்ப்பந்தத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் வெகுஜனப் போராட்டங்களை வலுப்படுத்த உறுதிபூண்டிருக்கிறது.
(தமிழில்: ச. வீரமணி)

No comments: