Tuesday, February 26, 2008

கொசாவோ: ஏகாதிபத்தியத்தின் ஏவலாட்சி



செர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த கொசாவோ, சுதந்திரம் அடைந்து விட்டதாக வந்துள்ள பிரகடனம், யுகோஸ்லேவியா சிதைவுறுவதில் கடைசிக் கட்டமாகும். இச்செயலை மேற்கத்திய வல்லரசுகள் இருபதாண்டுகளுக்கும் முன்பே தொடங்கின. 1991இல் ஸ்லோவேனியா மற்றும் குரோசியா சிதைவுண்டபோது அதனை அங்கீகரித்த மேற்கத்திய வல்லரசுகள் மேலும் ஒருபடி முன்னே சென்று போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா ஆகியவற்றையும் வெட்டி உருவாக்கின. செர்பியா மீது நேட்டோ படைகள் மிகப் பெரிய அளவில் வான்வெளி வழியாக குண்டுகளைப் பொழிந்து, ஸ்லோபோடான் மிலோசெவிக்கை ஆட்சியிலிருந்து அகற்றியதன் மூலம் இது மிகவும் எளிதாயிற்று. யுகோஸ்லேவியாவை அழிப்பது என்பது அமெரிக்க ஏகாதிபத்தியம், காஸ்பியன் எண்ணெய்ப் படுகையில் வள ஆதாரங்கள் நிரம்பிய பால்கன்ஸ் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். கொசாவன் உருவாகியிருப்பது கடைசியான நடவடிக்கையாகும்.

பதினாறாயிரத்திற்கும் அதிகமான நேட்டோ துருப்புகள் நிலைகொண்டுள்ள நிலையிலேயே கொசாவான் சுதந்திரம் அடைந்திருப்பதாக கொசாவான் நாடாளுமன்றம் பிரகடனம் செய்திருக்கிறது. கொசாவான் அரசை உருவாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் பணியில் நேட்டோ துருப்புகள் இறங்கியிருக்கின்றன. இச்செயலானது, 1999இல் செர்பியாவிற்கு எதிராக அமெரிக்கா - நேட்டோ யுத்தம் நடத்தியதற்குப்பின் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களுக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானதாகும். அமெரிக்காவும் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் 1990களின் முற்பகுதிகளில் தங்கள் அத்துமீறல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காகவும், அதுநாள்வரை தங்கள் அதிகார வரம்பெல்லைக்குள் வராது, தற்சமயம் வந்துள்ள பகுதிகளுக்கும் தங்களுடைய நவீன தாராளமயக் கொள்கைகளைத் திணிப்பதற்காகவும் ஒரு புதிய கொள்கையை உருவாக்கி வெளியிட்டார்கள். இன மோதல்கள் மீது ‘‘மனிதாபிமான முறையில் தலையிடலாம்’’ என்று கூறி அனைத்து நாடுகளின் இறையாண்மையை மிதித்துச் சென்றன. அப்போது அமெரிக்க அரசின் செயலாளராக இருந்த மடிலென் ஆல்பிரைட், ‘‘நாடுகளின் இறையாண்மை’’ என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் சித்தாந்தம் என்றும் அதனை இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப குறைத்துச் சுருக்கிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். ‘‘மனிதாபிமானமுறையில் தலையிடலாம்’’ என்பதிலிருந்து ‘‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்’’ வரை, அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனையாளர்கள், எந்த நாடுகளின் மீதும் ராணுவரீதியாகத் தலையிட்டு, ஏவலாட்சிகளை நிறுவிடலாம் என்று கூறத் தொடங்கிவிட்டார்கள்.

ஈராக் மீது ஆக்கிரமிப்பு, அதற்கு முன் வடக்கில் குர்திஷ் ஏவலாட்சி ஆகிய அனைத்தும் இவ்வாறு ஏகாதிபத்திய சிந்தனையாளர்களின் கொள்கைகளே.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய அரசை அங்கீகரித்திட தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் தூதர் அப்பகுதிக்குச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்த முதல் நபராவார். தனி வடக்கு அயர்லாந்துக்காகப் போராடும் ஐரிஷ் குடியரசுப் படையினருடன் பல ஆண்டு காலம், போராடிக் களைத்துப் போயிருக்கும் இதே பிரிட்டிஷ் அரசாங்கம்தான், இவ்வாறு தெரிவித்திருக்கிறது. ஆனால் ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகள் கொசாவோ சுதந்திரம் அடைவதற்கு ஆதரவாக ஒருமனதாக இல்லை.

கிரீஸ், ஸ்பெயின், சைப்ரஸ், ஸ்லோவேகியா, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகியவை ‘கொசாவா சுதந்திரம் அடைவதை’ எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.செர்பியா மற்றும் ரஷ்யா, கொசாவிற்கு சுதந்திரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்திருக்கின்றன. இப்பிரச்சனையை பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கொண்டு சென்றிருக்கின்றன. இப்பிரச்சனை மீது சீனா தன் ‘‘ஆழ்ந்த கவலையைத்’’ தெரிவித்துள்ளது. ‘‘சர்வதேச உறவுகளைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நெறிமுறைகளையும், அதேபோல் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் பாத்திரத்தையும் இது கடுமையாகப் பாதிக்கும்’’ என்று சீன அயல்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தனி நாடு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இந்தோனேசியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற மற்ற ஆசிய நாடுகளும் இதனை எதிர்த்திருக்கின்றன. தேசிய சிறுபான்மை இனங்களை உள்ளடக்கியுள்ள பல நாடுகள் தனிநாடு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவும் செர்பியா பிளவுபடுவதற்கு எதிராகத் தெளிவான அறிக்கையை வெளியிட முன்வர வேண்டும். ஆனால், அயல்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர், மிகவும் தெளிவற்றதோர் நிலைபாட்டினை எடுத்திருக்கிறார். இப்பிரச்சனை தொடர்பாகக் கூறுகையில், ‘‘கொசாவோவால் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டுள்ள சுதந்திரப் பிரகடனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரகடனத்தில் பல்வேறு சட்டப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உருவாகியுள்ள சூழ்நிலையை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறும் அதே சமயத்தில், ‘‘அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லைகள் அனைத்து நாடுகளாலும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா எவ்வித முரண்பாடும் இல்லாத வகையில் உறுதியாக நிலை எடுத்துள்ளது’’ என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார். அப்படியாயின், அது செர்பியாவுக்கும் பொருந்தும் அல்லவா! பின் ஏன் இந்திய அரசு ‘‘ஆழமான சட்டப் பிரச்சனைகளை’’ ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்குகிறது?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எண்ணற்ற பிரிவினைக் கோரிக்கைகளை எதிர்கொண்ட இந்திய அரசு, ஒரு நாட்டின் இறையாண்மையை முற்றிலுமாக மீறியிருக்கக்கூடிய இச்செயல்பாட்டைத் ஐயத்திற்கிடமற்ற வகையில் ஆணித்தரமாகக் கண்டித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், ஐமுகூ அரசாங்கம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதில் அமெரிக்காவுடன் மோதக்கூடிய நிலை ஏற்படும் எனில் அதிலிருந்து நழுவும் நிலைபாட்டினையே ஐமுகூ அரசு எடுத்து வருகிறது. ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடிய, சிறுபான்மை இனங்களைப் பாதிக்கக்கூடிய, சர்வதேச சட்டவிதிகளுக்குச் சவால் விடக்கூடிய இத்தகு பிரச்சனைகளிலாவது இந்தியா தன் நிலைபாட்டினை உரத்துப் பேசிட முன்வரவேண்டும்.

ஏகாதிபத்திய ஆணவத்தின் சமீபத்திய நடவடிக்கையாக, நேட்டோ படையினரின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கொசாவோ, இப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டுவருவதற்கு உதவிடாது.

தமிழில்: ச. வீரமணி

No comments: