Thursday, February 21, 2008

வயதானவர்களிடம் அன்பாக இருக்க இளைஞர்களைத் தூண்டினால்அதுவே நான் பெறும் மகத்தான வெகுமதி: நீல பத்மனாபன்

‘‘யதானவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும்’என்கிற உணர்வை இளைஞர்கள் மத்தியில் தூண்டினால் அதுவே ‘இலை உதிர் காலம்’ நாவல் எழுதியதால் எனக்குக் கிடைத்த மகத்தான வெகுமதி என்று நாவலாசிரியர் நீல பத்மனாபன் கூறினார்.

தலைநகரில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வியாழன் அன்று மாலை ‘இலை உதிர் காலம்’ நாவலுக்காக சாகித்திய அகடமி விருதினைப் பெற்ற நீல பத்மனாபனைப் பாராட்டி, சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்புரையாற்றினார். முதுபெரும் எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி, சிற்பி பாலசுப்பிரமணியன், ஆர். விசுவநாதன், எதார்த்தா கி. பென்னேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீல பத்மனாபன் பேசியதாவது:
‘‘கலைத் திறன் என்பது பளிச் என்று சொல்லாமல் சற்று கலைத்தன்மையோடு நிற்க வேண்டும். படிக்கும்போது அந்த அனுபவம் ஊடாடி வர வேண்டும். சிற்பத்தை உருவாக்குவதற்கு, சிற்றுழி உதவுவதுபோல் படைப்பிலக்கியங்கள் உருவாக, வார்த்தைகள் பயன்படுகின்றன. படைப்பாளி, கூடிய மட்டும் தான் படைத்த படைப்பு குறித்து பேச விரும்புவதில்லை. படைத்த படைப்புகள் குறித்து கூடிய மட்டும் சொல்லாமல் விடுவது நல்லது என்பதே என் கருத்தாகும். இருந்தாலும் ஒரு சமூக ஜீவி என்ற முறையிலே, எந்த ஒரு எழுத்தாளரும் சமூகத்திலிருந்து விடுபட்டுப் போய்விட முடியாது. என்னுடைய வாழ்க்கை வேறு, எழுத்து வேறு என்பது கிடையாது. வாழ்க்கையில் நமக்கெல்லாம் பிறவிக் கடன்கள் என்று சில உண்டு. மனைவி, மக்களுடன் வாழ்வது. அவர்களை நல்ல முறையில் வளர்ப்பது. குழந்தைகள் சரியாக வாழ்வதற்கு வழிவகை செய்வது. இதுவே நம் பண்பாடு. இதையெல்லாம் மீறி தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு துறையில், அது கலைத்துறையாக இருக்கலாம், அல்லது ஓவியத்திலே பிறவியிலிருந்தே ஓர் ஈடுபாடு இருக்கக்கூடும்.வாழ்க்கைக்காக ஏதாவது தொழில் செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் பாடுவதில், இசைப்பதில், ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையின் ஓட்டத்தில் அவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் சிறுவயதிலிருந்தே எழுதும் வழக்கம் வளர்ந்து வந்துகொண்டிருந்திருக்கிறது. எந்த மனிதனுக்கும் வாழ்க்கை முழுமையாக பூரணத்துவம் அடைந்தது கிடையாது. லட்சியக் கணவர், லட்சிய மனைவி, லட்சியத் தந்தை என்பது உண்மையான வாழ்க்கையில் கிடையாது. பல இடங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இதனை என்னுடைய பல படைப்புகளில் பார்க்கலாம். இதையெல்லாம் மீறி என்னையும் மாற்றியமைத்த நாவல் என்னுடைய ‘கூண்டுக்குள் பட்சிகள்’ நாவல். அதனை எழுதுவதற்கு முன்பிருந்த ‘நான்’ அல்ல பின்னால் இருந்த ‘நான்’. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாவல், கூண்டுக்குள் பட்சிகள்.

இப்போது ‘இலையுதிர் காலம்’. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சக நண்பர்களைப் பார்த்தேன். நான் சிறுவனாக இருக்கும்போதே, வயதானவர்களிடம் பாசத்துடன் இருப்பேன். ‘‘என்ன கிழவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்?’’ என்று பலபேர் என்னிடம் கேட்பார்கள். உண்மையிலேயே அப்படி ஓர் ஈடுபாடு உண்டு. இதனை என்னுடைய படைப்புகளிலும் காணலாம். தொழுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்போன மருத்துவருக்கே தொழுநோய் வந்தால் எப்படி இருக்கும்? அதேபோல் வயதானவர்களிடம் அன்பு காட்டிய நானே கொஞ்சம் கொஞ்சமாக வயதானவனாக மாறியபோது, உடல்பூர்வமாக, உள்ளபூர்வமாக, நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பதை நான் உணர்ந்தேன். என் சக நண்பர்கள் படும் அவஸ்தைகளை நேரடியாகப் பார்த்தேன். குழந்தைகளுக்குப் படிப்பு, கல்யாணம் என்று செய்தவர்கள் இப்போது அந்தக் குழந்தைகளுக்குப் பாரமாக மாறியிருக்கும் நிலை. தலைமுறைகள் மாறும்போது உலக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள். இதனையே நாவலில் கொண்டு வந்துள்ளேன். ‘இலை உதிர்காலம்’ நாவலைப் படித்தபிறகு ஒருவர் வயதானவர்களிடம் கொஞ்சம் அன்பாகவும், ஆதரவாகவும் பழகவேண்டும் என்று தூண்டியது என்றால், இளைஞர்கள் முதியவர்களிடம் குற்றம் பாராட்டாமல் இருக்க வேண்டும் என்று தூண்டினால், சாகித்திய அகடமியில் எனக்குக் கிடைத்த வெகுமதியை விட அதனையே பெரிய வெகுமதியாக நான் கருதுவேன்.’’

இவ்வாறு நீல பத்மனாபன் கூறினார். பின்னர் சங்கத்தின் பொருளாளர் என். சந்தானம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை உலகநாதன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக திரைப்பட இயக்குநர் வ. கௌதமன் சாகித்ய அகாதமிக்காக தயாரித்து இயக்கிய ‘நீலபத்மனாபனும் அவருடைய சித்திர எழுத்துக்களும்’ என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

(தொகுப்பு: ச.வீரமணி)

No comments: