Sunday, February 3, 2008

ஜும்பா லஹிரி - புளிட்சர் பரிசு பெற்ற ஒரேயொரு தெற்காசிய எழுத்தாளர்-சிவ. வீர. வியட்நாம்


“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி. திரவியம் தேடுவதற்காக திரைகடலோடி சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. உலகமய காலகட்டத்தில் நாடுகளின் எல்லைதாண்டிய போக்குவரத்து, கலாச்சார பரிமாற்றம் போன்றவையெல்லாம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலை எப்படியுள்ளது? அவர்களுடைய ஆசைகள், கனவுகள், திருமண வாழ்க்கை, வெளிநாட்டுக் குடியுரிமை, குழந்தைகளின் எதிர்காலம் போன்றவை எப்படியுள்ளன? வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொர்க்கமா? நரகமா? அங்கு வாழும் நம் மக்கள், குறிப்பாக உயர் மத்தியதர அறிவுஜீவிகள் சொகுசாக வாழ்வதாக நமக்குத் தோன்றும். ஆனால் அவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்களா?
இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட இலக்கிய இயக்கத்தை உருவாக்க வேண்டுமென்பது தற்போதைய இலக்கிய உலகம் எதிர்கொள்ளும் சவால். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பற்றிய இலக்கியத்திற்கு - கலாச்சார மோதல்கள், தனிமை, இடமாற்றம், சுய அடையாளம் இழத்தல், மாறுபட்ட திருமண வாழ்க்கை போன்ற பல்வேறு கருப்பொருள்கள் உள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கற்பனை செய்து எழுதுவதை விட ஒருவெளிநாட்டு வாழ் இந்தியரே எழுதும்போது அவர்களுடைய உண்மையான உணர்வுகள், ஆசாபாசங்கள், சிக்கல்கள், எதிர்கால வாழ்க்கை போன்றவற்றை உலக வாசகர்கள் நன்றாக உணரமுடியும். அப்படி , ஓர் எழுத்தாளராக உருவாகிக்கொண்டிருப்பவர்தான் ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரி.
இளம்பெண்ணான இவர் ஓர் அமெரிக்க வாழ் இந்தியர். இவர் 1967ம் ஆண்டு இலண்டனில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வங்காளி. இவர் ஆங்கில இலக்கியம், படைப்பிலக்கியம், ஒப்பிலக்கியம் என்ற மூன்று துறைகளிலும் தனித்தனியாக எம்.ஏ. பட்டம் - அதாவது மூன்று முறை எம்.ஏ. பட்டம் பெற்று - மறுமலர்ச்சி இலக்கியத்தில் (ஷேக்ஸ்பியர் கால இலக்கியத்தில்) முனைவர் பட்டம் பெற்றவர். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் படைப்பிலக்கியம் பற்றி போதித்து வரும் ஆசிரியர். பிறந்ததிலிருந்து அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தன்னுடைய குழந்தைகள் இந்தியர்களாகவே வளர வேண்டும் என்பதில் இவருடைய தாய் உறுதியாக இருந்தார், அதனால்தான் இவருக்கு சிறுவயதிலிருந்தே வங்கமொழியும் இந்திய பாரம்பரியமும் இந்திய வாழ்க்கைமுறையும் பயிற்றுவிக்கப்பட்டது. இவருடைய தந்தை ஒரு நூலகர். தாய் ஆசிரியர். இலக்கியமும் எழுத்தும் இவருக்கு சிறுவயதிலிருந்தே பொழுதுபோக்கு. ஆரம்ப காலத்தில் பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ஜும்பா லஹிரி, தன்னுடைய சிறுகதைகளைத் தொகுத்து முதன் முதலாக “பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளர்” (இன்டர்பிரடர் ஆஃப் மலடிஸ் -Interpreter of Maladies) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த முதல் புத்தகத்திற்கே இவருக்கு புளிட்சர் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசு அமெரிக்கவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றி மிகச்சிறந்த கதைகளை வெளியிடும் அமெரிக்கவாழ் எழுத்தாளருக்கு வழங்கப்படும் பரிசாகும்.
ஜும்பா லஹிரி இந்த விருதைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்க வாழ் தெற்காசிய எழுத்தாளர். ‘நியூயார்க்கர்’ என்னும் அமெரிக்கப் பத்திரிகை “40 வயதுக்குள் எழுத்தாளராகிய உலகின் மிகச் சிறந்த 20 எழுத்தாளர்களுள் ஒருவர்,” என்று ஜும்பாலஹிரி குறித்துக் குறிப்பிட்டுள்ளது.
இப்புத்தகம் உலகின் 29 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், குறிப்பாக அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தப் புத்தகத்தைப் படித்தால் போதும். எல்லாக் கதைகளுமே இந்த ஆசிரியரைப் போல் இந்தியாவை விட்டு சென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இந்தியர்களைப் பற்றிய கதைகள்.
அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் படித்த மத்திய தர வர்க்க இந்தியர்களுக்கு வருமானத்திற்குக் குறைவில்லை. ஆனால் இந்த வருமானத்திற்காக அவர்களின் வாழ்க்கையின் போக்கு எப்படியெல்லாம் மாறிப்போகிறது, அவர்களுடைய சக மனித உறவுகள் எப்படியெல்லாம் கணித்துக் கூறமுடியாததாக உள்ளது என்பதை மையமாக வைத்துத் தன் கதைகளை படைத்தார் ஜும்பா லஹிரி.
இந்தக் கதைகளின் கருக்களாக புலம்பெயர்ந்த இந்தியர்களின் முதல் தலைமுறையும் இரண்டாம் தலைமுறையும் சந்திக்கும் சிக்கல்கள், இந்தியத் திருமண முறைக்கும் மேற்கத்திய வாழ்கை நிலைக்கும் உள்ள வேறுபாடுகள், குடும்பத்தில் கணவன்-மனைவி பாத்திரங்களில் ஏற்படும் வேறுபாடுகள் போன்றவை உள்ளன. இக்கதைக்கருக்களை மனித மனத்தின் ஆழமான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜும்பா லஹிரி படைத்துள்ளார்.
இந்தப் புத்தகத்தின் தலைப்பை பற்றி கூறுகையில் அவர் சொல்கிறார்: “பாஸ்டன் நகரில் நான் ஒரு ரஷ்யரைச் சந்தித்தேன். அவர் தான் மருத்துவமனையில் பணிபுரிவதாகக் கூறினார். ஆனால் உண்மையில் அவர் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். மருத்துவத் துறை சம்பந்தமாக எந்தப் படிப்புகளையும் அவர் படிக்கவில்லை. ஆனால் தினமும் மருத்துவமனைக்குச் செல்வார். அவருடைய வேலை என்ன என்று ஒரு நாள் கேட்டேன். அவர் சொன்னார் ‘நான் பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளன் என்று.’ எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நாள் அவருடன் நானும் மருத்துவமனைக்குச் சென்றேன். அந்த மருத்துவமனையில் பல நோயாளிகள் ரஷ்யர்கள். ஆனால் மருத்துவர்கள் அனைவரும் ஆங்கிலம் மட்டும் தெரிந்த அமெரிக்கர்கள். இருவருக்கும் இடையில் மொழிப் பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில் அந்த நபர் ரஷ்ய நோயாளிகளின் வியாதியை மருத்துவருக்கும் மருத்துவரின் பரிசோதனையை ரஷ்ய நோயாளிகளுக்கும் மொழி பெயர்த்துச் சொன்னது மட்டுமல்லாமல், நோயாளிகளின் மன ஆறுதலுக்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அந்த ஆறுதல் வார்த்தைகளை மருத்துவர் கூறியதாக அவரே சொல்லிக்கொண்டிருந்தார். ‘ஒருவருடைய வியாதியை மட்டும் மருத்துவருக்குச் சொல்லும் மொழிபெயர்ப்பு, கணிதம் போடுவது போன்று நடுநிலையானது. ஆனால் அவர்களுக்கு மிக முக்கிய தேவை பேச்சுத் துணையும் ஆறுதல் வார்த்தைகளும்தான். நான் அவர்கள் நோய்களை மட்டுமல்ல பிரச்சனைகளையும் மொழிபெயர்க்கிறேன்’ என்றார் அந்த நண்பர். இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தின. எழுத்தாளன் என்பவனும் பிரச்சனைகளின் மொழிபெயர்ப்பாளன்தான் என்று எனக்குத் தோன்றியது. அந்த வாக்கியத்தையே எனது புத்தகத்தின் தலைப்பாக்கியது மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தையும் என்னுடைய ஒரு கதையில் பதிவு செய்துள்ளேன்.”
இந்தப் புத்தகத்தின் மற்ற கதைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணவன்-மனைவி உறவு எப்படியுள்ளது என்பதைச் சித்தரிக்கின்றன. இதுகுறித்துப் பேசுகையில் ஜும்பா லஹிரி கூறுகிறார்: “இந்தியாவில் குடும்பங்களைக்கட்டிக் காப்பதில் கணவனின் பங்கு என்ன, மனைவியின் பங்கு என்ன என்பது பற்றி வரையறுக்கப்பட்டுள்ளது. வெளிவாழ்க்கையில் ஒரு கணவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வீட்டு வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் புலம் பெயர்ந்து வரும்போது இந்த வரையறைகள் மாறுகின்றன, சில சமயங்களில் தூக்கியெறியப்படுகின்றன. இந்தியக் கலாச்சாரத்தின்படி பெண் என்றால் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், குழந்தைகளை வளர்க்க வேண்டும், வயோதிகர்களைக் கவனிக்க வேண்டும். அவள் வேலைக்குச் செல்பவளாக இருந்தால் மேற்கொண்ட வேலைகளோடு சம்பாதிக்கவும் வேண்டும். வேலைக்குச் செல்கிறாள் என்பதற்காக இந்தியச் சமூகம் அவளுடைய பொறுப்புக்களைக் குறைத்திடவில்லை. இந்தியாவின் வேலை நேரமும் அதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் வேலை நேரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. எனவே மனைவி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணவர்கள் சமையல், குழந்தை வளர்ப்பு போன்ற பல்வேறு வேலைகளையும் மனிதாபிமான அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல் நம் ஊரில் வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வார்கள் என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டிருந்தால், அந்தக் குடும்பம் வெளிநாட்டு வசதிக்காக வாழ்க்கையை தொலைத்த குடும்பம் ஆகிப்போகும். மேலும் வெளிநாடுகளில் வாழும் தம்பதியருக்கு வேறு சொந்த பந்தங்கள் கிடையாது. கலாச்சாரம், மொழி, நாடு கடந்த சக ஊழியர்கள், உண்மையான நண்பர்களும் குறைவு. வாழ்க்கைத் துணைதான் மிகச் சிறந்த நண்பராகவும் உறவினராகவும் விளங்க வேண்டும். பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலை ஒதுக்கிவிட்டு பொருளற்ற சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் பிடித்துகொண்டு வாழும் இந்திய ஆண்களின் திருமண வாழ்கை இதனால் இங்கே இனிப்பதில்லை. இந்தியப் பெண்களும் தற்போது பன்மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். முன்பெல்லாம் படித்த பெண்கள் கூட வன்முறையான கணவன் கிடைத்தால் விதியென்று ஏற்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடைய பொறுமையைத்தான் அந்த கால இலக்கியங்கள் போற்றியிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய உள்ளக் குமுறல்களையோ குடும்பம் என்ற நிறுவனத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையோ யாரும் பெரிதாக எழுதிடவில்லை. ஆனால் தற்காலப் படித்த பெண்கள் ஆண்களின் அராஜகத்தை புரிந்துகொள்கின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் திருமணம் செய்து கொள்ளும் இந்தியப் பெண்கள் நன்கு படித்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு உடனே வேலையும் கிடைத்து விடுகிறது. ஆனால் வேலை நேரம் மிகக் கடுமையானது. இந்தச் சூழ்நிலையில் கணவன் நல்ல நண்பனாக நடந்துகொள்ளாவிட்டால் , திருமணம் என்பது புனிதம், உடைக்கமுடியாதது என்ற போதனைகள் தூக்கியெறியப்படுகின்றன. எனவே விவாகரத்துகளும் அதிகாமாகிறது. எந்த இந்திய பெண்ணும் முட்டாள்தனமான மேற்கத்திய கலாச்சாரத்தின் காரணங்களுக்காக விவாகரத்து செய்வதில்லை.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற இந்தியத் தத்துவம் கணவனின் கொடுமைகளையெல்லாம் ஒரு பெண் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று போதிக்கிறது. கொடுமை தாங்காமல் விவாகரத்து செய்தால் இந்திய சமுகம் அவளை வாழாவெட்டி என்றுஎள்ளி நகையாடுகிறது. இந்திய சாத்திரங்கள் அவள் தெருவில் சென்றால் அபசகுணம் என்று அறிவிக்கின்றன. ஆனால் இம்மாதிரியான கேலிகள் வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்குக் கிடையாது. எனவே விவாகரத்து செய்வதால் உறவு முறிகிறதே தவிர அந்த சமூகம் அவளை எள்ளி நகையாடுவதில்லை.”
இப்படிப்பட்ட வெளிநாட்டு பெண்களின் உணர்வுகள், கஷ்டங்கள் போன்றவற்றை நடுநிலையுடன் தன் கதைகளில் சித்தரித்துள்ளார் ஜும்பா லஹிரி. இவர் விவாகரத்துகளை நியாயப்படுத்தவும் இல்லை, குற்றம் கூறவும் இல்லை. வெளிநாட்டு வாழ் இந்தியப் பெண்களின் உண்மையான பிரச்சனைகளை அப்படியே தம் கதைகளில் படம் பிடித்திருக்கிறார். இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நாவல் “பெயரளவில்” (தி நேம் சேக்).
அதாவது வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு எல்லாமே பெயரளவில் உள்ளது. இந்தியன் என்ற அடையாளமும் பெயரளவில் உள்ளது. வெளிநாட்டுக்காரன் என்ற அடையாளமும் பெயரளவில் உள்ளது என்கிறார் ஆசிரியர் ஜும்பா லஹிரி . இக்கதை இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் முப்பதாண்டு காலம் வாழ்ந்துவரும் ஒரு வங்காளி குடும்பத்தின் கதை. சுயவாழ்க்கை அனுபவங்களை மையமாக வைத்து ஜும்பா லஹிரி இந்த நாவலை படைத்துள்ளார். இந்தியாவில் 25-30 ஆண்டுகள் வாழ்ந்து கல்வி கற்று தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியப் பெற்றோருக்கு குழந்தையாக அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் தலைமுறையினரின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாடுகள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தியாவில் 25-30 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு வெளிநாடு செல்பவர்களுக்கு இந்தியா என்றால் என்ன, இந்திய வாழ்க்கைமுறை என்றால் என்னவென்று தெரியும். வெளிநாடுகளின் வாழும் அந்நிய வாழ்க்கை, தனிமை, எப்போது நாடு திரும்புவோம் என்ற ஏக்கம், கலாச்சார கர்வம், இந்திய இசை, இந்திய உணவுகள், இந்திய பொழுதுபோக்குகள்- போன்றவையே அவர்களுடைய சிந்தனையில் நிறைந்திருக்கும். எப்படியாவது தன் குழந்தைகளை, தன் கலாச்சாரத்தின்படி தன் மொழி பேசி, தன் நாட்டு உணவுகளை பழக்கப்படுத்தி வளர்த்துவிட வேண்டும் என்பது ஒவ்வொரு தாயின் ஆசையாகவும் இருக்கும். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்தியா என்றால் அவர்களுடைய பெற்றோரிடமிருந்து என்ன கற்கிறார்களோ அதுதான். ஏனென்றால் அவர்களுடைய இந்திய வாழ்க்கை விடுமுறையின்போது பாட்டனார் வீட்டுக்கு வருவதும் ஊர் சுற்றி பார்ப்பதும் மட்டும்தான். ஆனால் இந்திய சமூகம் என்றால் என்னவென்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இதனால் இரண்டாம் தலைமுறையினருக்கு அடையாள சிக்கல் ஏற்படுகிறது. ‘நீ யார்?’ என்ற கேள்விக்கு அவர்களுக்குப் பதில் தெரியாது. ‘நான் முழுமையான இந்தியன்’ என்று அவர்களால் சொல்லமுடியாது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்ததில்லை. நான் அமெரிக்கன் என்றும் அவர்களால் சொல்லமுடியாது. அவர்களுடைய உணவு, உடை, பெயர், குடும்பம் அவர்களை அமெரிக்கர்களிடமிருந்து நன்றாகவே வேறுபடுத்திகாட்டும். எனவே தற்போது பலர் நான் அமெரிக்க-இந்தியன் என்று சொல்லி வருகின்றனர்.
எனவே இவர்களைப் பற்றி எழுதிய அமெரிக்க-இந்தியர் ஜும்பா லஹிரியின் புத்தகங்களுக்கு உலகளவில் பெரும் கிராக்கி உள்ளது. இவருடைய புத்தகங்களைப் படிக்கும்வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையையே இவர் எழுதியிருப்பதாக இவருக்குப் பாராட்டுக் கடிதங்கள்எழுதுகிறார்கள். இவரை, மாக்சிம் கார்க்கியைப் போல், அச்சிபியைப் போல் இலட்சிய எழுத்தாளர் வரிசையில் நிறுத்த முடியாது. இவர் வளர்ந்து வரும் எழுத்தாளராவார்.
இலக்கியம் என்பது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. அமெரிக்க-இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கம் கண்ணாடியாக ஜும்பா லஹிரியின் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த அமெரிக்க இந்தியர் ஓர் அமெரிக்க வாழ் கிரேக்கரை காதல் மணம் புரிந்துள்ளார். தற்போது இவருக்கு இரண்டு வயது மகன் உள்ளான். எல்லா வெளிநாட்டு வாழ் இந்தியர்களையும் போலவே, அவனுக்குத் தாய்மொழியான வங்காள மொழியையும் தந்தை மொழியான ஸ்பானிசையும் இப்போதிருந்தே கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
----

No comments: