Saturday, December 3, 2011
அந்நிய நேரடி முதலீடு: அமைச்சரவை முடிவைத் திரும்பப்பெறுக
நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரை நடத்த விடாது எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. சென்ற தடவையும் 2ஜி அலைக்கற்றை வரிசை ஊழல் தொடர்பாக விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கடசி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசின் அடாவடித்தனத்தினால் சென்ற கூட்டத் தொடர் முழுவதும் வீணடிக்கப்பட்டது. கடைசியில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்து, கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்தது. இத்தகைய விவேகம் முன்னதாகவே அரசுக்கு வந்திருக்குமானால், ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் வீணடிக்கப்படாது இருந்திருக்கும். மன்மோகன் சிங் அரசாங்கம் நாடாளு மன்றத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் இவ்வாறுதான் ஆணவத்துடன் அவமதித்துக் கொண்டிருக் கிறது.
நாட்டில் வால்மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ போன்ற மாபெரும் சர்வதேச சூப்பர் மார்க்கெட் ஜாம்பவான்களை இந்தியாவில் கடை பரப்பிட அனுமதிக்கக்கூடிய வகையில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் அமைச்சரவை முடிவால் இத்தகையதொரு நிலைமையை மீண்டும் அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.
அமைச்சரவையானது நிர்வாக முடிவுகளை மேற்கொள்ள உரிமை படைத்திருக்கக்கூடிய அதே சமயத்தில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு முடிவுகள் மேற்கொண்டு அறிவிப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும். இவ்வாறு அறிவித்திருப்பதானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்குமே முற்றிலும் முரணானதாகும். எனவேதான் நாடாளுமன்றவாதிகள் அரசியல் கட்சி மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இது தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்ட பின்னர்தான் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று கோரியிருப்பது அடிப்படையற்ற ஒன்றல்ல. இப்பிரச்சனையில் முடிவு எதுவும் எடுக்கப்பட்டபின்னர் அதன் மீது விவாதம் நடைபெறுவது பயனற்றதாகும்.
இப்போது ஆட்சிபுரியும் இதே காங்கிரஸ் கட்சிதான், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், கொள்கை முடிவுகளை அரசாங்கம் அறிவிப்பதைக் கடுமையாக ஆட்சேபித்திருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 1989இல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், துணை ராணுவப் படைகளில் ஒன்றாக நேஷனல் ரைஃபிள்ஸ் என்னும் படைப்பிரிவை நிறுவிடும் முடிவை அரசாங்கம் அறிவித்த சமயத்தில், அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக உரிமைமீறல் தீர்மானத்தை (privelege motion) தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவர் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தீர்மானம் அனுமதிக்கப் படவில்லை என்றபோதிலும் கூட அப்போது மக்களவை சபாநாயகராக இருந்த ரபி ராய் அரசாங்கத்தின் இத்தகைய முடிவானது நேர்மை தவறியமை (breach of propriety) என்று தீர்ப்பளித்திருக்கிறார். பின்னர், 1999இல், இதே போன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயி நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாக நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிவித்தமைக்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தோஷ் மோகன் தேவ் இதேபோன்றதொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அன்றைய மக்களவை சபாநாயகர் பாலயோகியும் இதேபோன்றதொரு தீர்ப்பினைக் கொடுத்திருக்கிறார்.
ஆயினும், இன்று காங்கிரஸ் கட்சியானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை நியதிகளை முற்றிலுமாக மீறி நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும்விட மிகவும் மோசமான விஷயம் என்னவெனில், பிரதமர் அவர்கள் இளைஞர் காங்கிரஸ் விழா ஒன்றில் பேசுகையில், அரசாங்கத்தின் இத்தகைய முடிவை நியாயப்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல், இதனால் ஏற்படவிருக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டிருக்கிறார். இது, வேலைவாய்ப்பைப் பெருக்கிடுமாம், விலைவாசியைக் குறைத்திடுமாம், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திடுமாம். இவ்வாறெல்லாம் கதையளந்திருக்கிறார்.
இப்படித்தான் முன்பு மின்சார உற்பத்திக்காக என்ரான் என்னும் பன்னாட்டு நிறுவனத்தினை அனுமதிக்கும்போதும் அதனை நியாயப்படுத்தி பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டில் நலிவடைந்துள்ள எரிசக்தித் துறைக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும், எரிசக்தி பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்திட இது இட்டுச்செல்லும் என்றெல்லாம் புகழப்பட்டது. இதேபோன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாறி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டபோதும் அதனை நியாயப்படுத்தி, கதை அளக்கப்பட்டது. அதாவது, விவசாயிகள் தட்டுப்பாடின்றி மின்சாரம் பெறுவார்கள் என்றும் இதனால் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும், மின்வெட்டு எதுவுமின்றி குழந்தைகள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள் என்றெல்லாம் அளக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? என்ரான் மிகவும் அவமானகரமான முறையில் நாட்டிலிருந்து வெளியேறியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் நம் நாட்டின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கைதான் பலியாகியிருக்கிறதேயொழிய, நாட்டிற்கோ அல்லது நாட்டுமக்களுக்கோ இதுவரை எந்தவிதப் பயனையும் அது கொண்டுவரவில்லை.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று அரசுத்தரப்பில் 2004-05ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட அந்தக் கணத்திலிருந்தே அதன் மீதான எதிர்ப்பு என்பதும் தொடங்கிவிட்டது. இடதுசாரிக் கட்சிகள் மிகவும் உறுதியான முறையில் எதிர்ப்பினை அளித்து வந்த காரணத்தால், அப்போது ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு அவர்களின் ஆதரவு முக்கியமாக இருந்தமையால், இது கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது.
அரசின் முடிவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஐமுகூ-இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு (ருஞஹ-டுநகவ ஊடிடிசனiயேவiடிn ஊடிஅஅவைவநந)விற்கு 2005 அக்டோபரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அதில், சில்லரை வர்த்தகம் நாட்டில் அனுமதிக்கப்பட்டால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 11 விழுக்காடு அளவிற்குப் பங்கினைச் செலுத்திடும் என்றும், 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் என்றும் கூறப்பட்டிருந்தது. 1998ஆம் ஆண்டின் நான்காவது பொருளாதாரக் கணக்கெடுப்பானது (குடிரசவா நுஉடிnடிஅiஉ ஊநளேரள 1998), நாட்டில் சில்லரை வர்த்தகம் ஒட்டுமொத்த வேளாண்மை அல்லாத நிறுவனங்களில் வர்த்தகத்தில் கிராமப் பகுதிகளில் 42.5 விழுக்காடு அளவிற்கும் நகர்ப்பகுதிகளில் 50.5 விழுக்காடு அளவிற்கும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது. இது இப்போது கிராமப்பகுதிகளில் 38.2 விழுக்காட்டினருக்கும் நகர்ப்பகுதிகளில் 46.4 விழுக்காட்டினருக்கும் வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. இவ்வாறு இன்றைய தினம் சில்லரை வர்த்தகத்தைத் தங்களின் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மை நிலைமையைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஜாம்பவான்களை இத்துறைக்குள் அனுமதித்தோமானால், இத்துறையை இப்போது சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, வறுமையிலும் கடும் துன்ப துயரத்திலும் தள்ளப்படுவார்கள். தற்சமயம் நாட்டில் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவதிப்படும் 80 கோடிக்கும் மேலான மக்கள்தொகை இதனால் மேலும் கூடும்.
சூப்பர்மார்க்கெட் ஜாம்பவான்கள் நாட்டிற்குள் நுழைந்தார்களானால், விலைவாசிகள் குறையும் என்பதும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதும் கட்டுக்கதைகளாகும். உண்மையில், வால்மார்ட் வெற்றி குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் (ருளு ழடிரளந டிக சுநயீசநளநவேயவiஎநள) ஒரு குழு, 2004 பிப்ரவரியில் ஓர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதில், ‘‘வால்மார்ட்டின் வெற்றி என்பது தொழிலாளர்கள் பெறும் ஊதியங்கள் மற்றும் பயன்களை குறைப்பதற்கு நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மூர்க்கத்தனமாக மீறப்பட்டிருக்கின்றன, நாடு முழுதும் பல்வேறு இனத்தினரிடையே வாழ்க்கைத்தரம் வீழும் என்கிற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வணிகத்தின் வெற்றி என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் வயிற்றிலடிப்பதாக இருந்துவிடக் கூடாது. இத்தகைய குறுகிய லாபநோக்கம் கொண்ட உத்திகள் இறுதியில் நம் பொருளாதாரத்தையே அரித்து வீழ்த்திவிடும்,’’ என்று முடிவுரையாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான முடிவு என்பது நம் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சமீபத்தில் பாலியில் நடைபெற்ற சந்திப்பின்போது எடுக்கப்பட்டதென்பது தெள்ளத் தெளிவு. மிகவும் ஆழமாகியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார இரட்டிப்பு ஆழத்தில் சென்றுள்ள மந்த நிலை (னடிரடெந னiயீ சநஉநளளiடிn), சர்வதேச நிதி மூலதனம் தங்கள் கொள்ளை லாபத்திற்குப் புதிய பாதைகளைக் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதற்கு இந்திய சில்லரைச் சந்தை ஒரு மிகவும் இலாபகரமான தேர்வாகும். இந்த முடிவானது சர்வதேச மூலதனம், இந்தியாவின் பொருளாதாரத்தையும், இந்திய மக்களையும் நன்கு சுரண்டி, மிக அதிக அளவில் லாபம் ஈட்டுவதற்கு அனுமதித்திடும் என்பதில் ஐயமேதுமில்லை.
மேலும், இவ்வாறு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நம் நாட்டில் சரிந்து வரும் ரூபாய் மதிப்பைத் தடுத்து நிறுத்திடலாம் என்றும் அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு மாயையேயாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஈரோ ஐரோப்பிய நாடுகளின் பொது நாணயமாக நீடிக்குமா என்று ஐயப்படக்கூடிய அளவிற்கு பொருளாதார நெருக்கடி அங்கே முற்றியிருக்கிறது. ஜப்பானிலும் யென் நாணயத்தின் மதிப்பு கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, நம் நாட்டில் சில்லரை வர்த்தகத்தை சர்வதேச மூலதனத்திற்கு திறந்து விடுவது என்பது அவை தங்கள் லாபத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்குத்தானேயொழிய வேறெதற்காகவும் கிடையாது. அதை மூடி மறைக்கும் விதத்திலேயே அரசாங்கத்தின் வாதம் அமைந்திருக்கிறது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருள்களின் பணவீக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் காட்டுவது என்ன? லத்தீன் அமெரிக்க நாடுகள் (மெக்சிகோ, நிகரகுவா, அர்ஜண்டினா), ஆப்பிரிக்க நாடுகள் (கென்யா, மடகாஸ்கர்), வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள், பாரம்பர்யமான சந்தைகளில் உள்ள அதே உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளைவிட அதிகமாகத்தான் இருந்திருக்கின்றன.
அதேபோன்று சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் வேலைவாய்ப்புப் பெருகும் என்பதும் வியட்நாம் அனுபவத்திருந்து பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தெருவில் வியாபாரம் செய்பவர் 18 பேருக்கு வேலை அளிக்கிறார், பாரம்பர்ய சில்லரை வியாபாரி 10 பேருக்கு வேலை அளிக்கிறார், கடை வைத்திருப்பவர் 8 பேருக்கு வேலை அளிக்கிறார், ஆனால் சூப்பர் மார்கெட்டில் 4 நபர்களை வைத்துக்கொண்டு அந்த வேலையைச் செய்து முடித்து விடுகிறார்கள். இதுதான் உலகம் முழுதும் உள்ள அனுபவமாகும்.
அடுத்து, உற்பத்தியாளர் நல்ல விலையைப் பெறுவார் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் கதைதான். இது தொடர்பாக ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தரப்பட்ட குறிப்பில் ஓர் ஆய்வினைச் சுட்டிக் காட்டியிருந்தோம். கானா நாட்டைச் சேர்ந்த கோகா (cocoa) விவசாயி ஒரு தனித்துவமான மில்க் சாக்கலேட் தயாரிப்பதற்கு உற்பத்தி செய்த கோகோவை, சில்லரை வர்த்தக ஜாம்பவான்களுக்கு விற்றபோது, சாக்கலேட்டின் விலையில் 3.9 விழுக்காடு விவசாயிக்குக் கிடைத்த அதே சமயத்தில், சில்லரை வர்த்தகர் 34 விழுக்காடு லாபம் ஈட்டியிருக்கிறார். அதே போன்று வாழை உற்பத்தி செய்த விவசாயி, தான் விற்ற வாழைப்பழங்களுக்கு அவை விற்ற விலையில் 5 விழுக்காடு அளவிற்குத் தொகையைப் பெற்ற அதே சமயத்தில், வர்த்தகரோ 34 விழுக்காடு லாபம் ஈட்டியிருக்கிறார். இதேபோன்று ஜீன்ஸ் தயாரித்த தொழிலாளிக்கு 12 விழுக்காடு தொகை கிடைத்த அதே சமயத்தில் சில்லரை வர்த்தகர் அதில் 54 விழுக்காடு தொகையை அடைந்துள்ளார்.
இப்போது மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டால்தான் தங்கள் முடிவு அமல்படுத்தப்படும் என்று இப்போது வாதிடுகிறது. மாநில அரசாங்கங்கள் இம்முடிவினை அமல்படுத்துவது தொடர்பாக தங்கள் விருப்பம்போல் நடந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் மாநிலங்கள் அல்லாது மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருக்கும் அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களில்தான் இவை நடைபெறும் என்று நாடு நம்பவேண்டும் என்று மன்மோகன் சிங் அரசாங்கம் விரும்புகிறதா என்று தெரியவில்லை.
இத்தகைய அம்சங்கள் அனைத்துமே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியவைகளாகும். இதற்கு அரசாங்கம் இதன்மீதான தன் முடிவை ரத்து செய்துவிட்டு, ஒரு பொருள்பொதிந்த விவாதத்திற்கு அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம். இதனைத் தொடர்ந்து அரசாங்கமானது அவையின் உணர்வை உயர்த்திப்பிடித்து அதன் அடிப்படையில் ஒரு முடிவினை மேற்கொண்டிட உறுதிபூண வேண்டும்.
இவ்வாறாக, இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடர் வீணாகாமல் காப்பாற்றப்படுமா, அல்லது, இதுபோன்றதொரு நியாயமான மற்றும் பொருத்தமான கோரிக்கைக்கு செவிமடுத்திட அரசாங்கம் தன் விருப்பத்தினைத் தெரிவிக்காது வீணடிக்கப்பட விருக்கிறதா என்பது அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தே இருக்கிறது. இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்பால் சட்டமுன்வடிவு உட்பட மிக முக்கியமான பல சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டிருந்தன. லோக்பால் வரைவு சட்டமுன்வடிவை ஆய்வு செய்து வந்த நாடாளுமன்ற நிலைக்குழு அதன் மீதான தன் ஆய்வுகளை முடித்து, தன் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி விட்டது என்று தெரியவருகிறது. இச்சட்டமுன்வடிவு, அரசாங்கம் உறுதி அளித்தபடியும், இரு அவைகளிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது போலவும், இக்குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுமா, இல்லையா என்பது சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை தன் முடிவைத் திரும்பப் பெறுவதைப் பொறுத்தே இருக்கிறது.
இவ்வாறு நடைபெறாவிட்டால், பின், அரசாங்கத்தின் உள்நோக்கங்கள் குறித்து மிகவும் ஆழமான முறையிலும் அதன் நேர்மையின் மீதும் ஐயங்கள் எழத் தொடங்கிவிடும. லோக்பால் சட்டமுன்வடிவில் சம்பந்தப்பட்டுள்ள சச்சரவுக்குரிய பல்வேறு பிரச்சனைகள் உட்பட விண்ணையெட்டியுள்ள விலைவாசி உயர்வு, வெளிச்சத்திற்கு வந்துள்ள உயர்மட்ட அளவிலான லஞ்ச ஊழல்கள், கறுப்புப் பணம் முதலானவை குறித்தும் மக்களுக்குப் பதில் எதுவும் அளிக்காது அரசாங்கம் சவுகரியமாகத் தப்பித்துக் கொள்ள இவ்வாறு குளிர்காலக் கூட்டத் தொடரின் சீர்குலைவு அனுமதித்துவிடும். கடந்த இருபதாண்டுகளில் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படும்போதெல்லாம் இதன் வரையறைக்குள் பிரதமரைக் கொண்டுவருவதா, வேண்டாமா என்பதில் ஒத்த கருத்து ஏற்படாததால், இச்சட்டமுன்வடிவே நாடாளுமன்றத்தினை எட்டிப்பார்க்காது கிடப்பில் போடப்பட்டிருப்பதை நினைவுகூர்க. இப்போது நாடாளுமன்றம் சீர்குலைக்கப்படுவதற்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பாகும்.
பந்து, இவ்வாறு, இப்போது அரசின் பக்கம் இருக்கிறது. சாமானிய மக்களின் நலன் மீது அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இம்முட்டுக்கட்டையைப் போக்கிட அரசாங்கம்தான் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதற்கு அது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான தன் முடிவினைத் திரும்பப் பெற வேண்டும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்திட வேண்டும். அதன்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளுக்கிணங்க முடிவினை எடுத்திட வேண்டும்.
இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டம் தொடரும் அதே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை அளித்திட வேண்டும். டிசம்பர் 1 அன்று வர்த்தகர் சங்கங்கள் அறைகூவலுக்கிணங்க நடந்த கடையடைப்புப் போராட்டம் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
(நவம்பர் 30, 2011)
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment