Tuesday, December 6, 2011

அந்நிய நேரடி முதலீடு: ஒத்திவைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,பிரகாஷ் காரத் கண்டிப்பு




புதுதில்லி, டிச.7-
சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்னும் கொள்கையை மத்திய அரசு ‘‘தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்’’ என்னும் பேச்சுக்கே இடமில்லை, மாறாக அதனை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் சுமுகமான செயல்பாடு இவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளும் நிலையைப் பொறுத்தே இருக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார்.
‘‘சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்திடுக’’ என்னும் தலைப்பில் 36 பக்கங்கள் கொண்ட ஒரு சிறுபிரசுரம் செவ்வாய் அன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதன் பிரதிகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கி, பிரகாஷ் காரத் பேசியதாவது:

‘‘மத்திய அரசாங்கம், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தாங்கள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்னும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இது ஒரு சதிச் செயல் என்பது தெளிவு. இவ்வாறு நிறுத்தி வைப்பதென்பது குளிர்காலக் கூட்டத்தொடர் முடியும் வரைக்கும்தான். 2011 முடியப் போகிறது. 2012 என்பது மற்றோர் ஆண்டு. அதன்பின்னர், இவ்வாறு நிறுத்தி வைப்பதென்பது இல்லை.

எனவே, அரசு இம்முடிவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை. இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். குளிர்காலக் கூட்டத்தொடரை சமாளித்து விட்டு, பின்னர் இதனைக் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் நினைத்தால் அவர்கள் தவறு செய்கிறார்கள். நாங்கள் மற்ற அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நின்று இதனை எதிர்த்திடுவோம்.

புதன்கிழமையன்று அனைத்து எதிர்க்கட்சி யினரையும் சந்தித்து, அரசாங்கம் தன் இறுதி முடிவைச் சொல்ல இருக்கிறது. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இதனை முழுமையாகத் திரும்பப்பெறுகிறோம் என்கிற உறுதிமொழியை அளித்திட ஒப்புக்கொண்டால்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அப்போதுதான் நாடாளுமன்றம் சுமுகமாக இயங்கிடும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

திரிணாமுல் காங்கிரசும் இப்பிரச்சனையில் இடதுசாரிகளுடன் சேர்ந்துகொண்டிருக்கிறதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘‘மிக்க மகிழ்ச்சி, ஆயினும் அவர்கள் தற்காலிக நிறுத்தி வைப்பு என்கிற அரசின் முடிவோடு திருப்தியடைந்துவிடக்கூடாது, முழுமையாக ரத்து செய்திட அவர்கள் கோர வேண்டும்’’ என்றார்.

நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை நிலவுவது குறித்து, ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, ‘‘அரசாங்கம் இது ஒர் அமைச்சரவை முடிவு என்றும் எனவே நாடாளுமன்றத்தின் அனுமதி இதற்குத் தேவையில்லை என்றும் அடிக்கடி கூறிவருகிறது. அரசின் இத்தகைய கடினமான நிலைப்பாடுதான் நாடாளுமன்றத்தின் இன்றைய முட்டுக்கட்டை நிலைக்குக் காரணமாகும். அரசின் இத்தகைய நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது மற்றும் வருந்தத்தக்கது’’ என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.

மேலும் அவர், ‘‘நம்முடைய அரசாங்கம், மேற்கத்திய அரசாங்கங்களின் பேச்சைக் கேட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் துடிக்கிறதேயொழிய, நம் நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை’’ என்றார்.
‘‘நாடாளுமன்ற நிலைக்குழு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஒருமனதாக எதிர்த்திருக்கிறது. ஆனால், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. லோக்பால் சட்டமுன்வடிவு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த அறிக்கையை ஓரங்கட்டிவிட்டு தாங்கள் தயாரித்த சட்டமுன்வடிவைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணா ஹசாரே மற்றும் அவர்தம் குழுவினர் கோரியபோது அதனை அரசாங்கம் கண்டித்தது. இது நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் செயல் என்று கூறியது. ஆனால் இப்போது அரசாங்கமே, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளைத் தூக்கி எறிவதை என்னென்பது? அரசாங்கம் ஆடும் கபடநாடகத்தின் உச்சநிலை இது’’ என்று பிரகாஷ்காரத் குறிப்பிட்டார்.

No comments: