Friday, December 9, 2011

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ஐமுகூ-2 அரசாங்கம் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது



கடைசியாக நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் அமைச்சரவையின் முடிவை ரத்து செய்திட ஐமுகூ-2 அரசாங்கம் இறுதியாக முடிவு செய்து இருப்பதாக, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் தெரிவித்ததை அடுத்து, குளிர்காலக் கூட்டத்தொடரில் பத்து நாட்களாக நிலவிவந்த முட்டுக்கட்டை முடிவுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், நாடாளுமன்றத்தைக் கலக்காமல், அமைச்சரவைத் தன்னிச்சையாக எடுத்த முடிவுதான் இக்கூட்டத்தொடர் நடைபெறாது முட்டுக்கட்டை ஏற்பட்டதற்கு முழுமுதற் காரணமாகும். நாம், சென்ற வாரம் குறிப்பிட்டதைப்போல, அமைச்சரவை அவ்வாறு நிர்வாக முடிவினை எடுப்பதற்கு அதிகாரம் படைத்திருந்தபோதிலும், இத்தகைய முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது விவேகமாகும். அரசாங்கம் கடைசியாக மக்களின் கோபத்தைப் பிரதிபலித்த எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்துள்ளது. மக்களின் மத்தியில் இருந்த கோபமானது, ஐமுகூ-வில் அங்கம் வகிக்கும் காங்கிரசுடனான கூட்டணிக் கட்சிகள் சிலவற்றையும் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்திடக் கட்டாயப்படுத்தியது. எப்படியிருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அதன் அனுமதியைப் பெறாது இத்தகைய முக்கிய முடிவுகளை எடுத்திடக்கூடாது என்கிற நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பு உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.
நம் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பு என்பதும் நாட்டு மக்களின் உச்சபட்ச இறையாண்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால்தான் நம் அரசமைப்புச் சட்டம், ‘‘மக்களாகிய, நாம்’’ என்ற சொற்றொடருடன் தொடங்குகிறது. இத்தகைய இறையாண்மை, மக்களால் தங்களுடைய பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கம் என்பவை நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் மூலமாக மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவைகளாகும். நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கக்கூடிய, நாட்டின் பொருளாதாரத்தையே குலைக்கக்கூடிய கொள்கை முடிவுகளை, நாடாளுமன்ற/சட்டமன்றங்களைக் கண்டுகொள்ளாது அவற்றைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கமே தன்னிச்சையாக மேற்கொள்ளக் கூடாது. இதுதான் நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிமுறை விதியாகும். இத்தகைய நெறிமுறைகள் எப்போது மீறப்பட்டாலும், அரசாங்கம் அவ்வாறு நெறிமுறைகளை மீறுவதை அனுமதிக்காது விழிப்புடனிருந்து தடுப்பது நாடாளுமன்றத்தின் பணியாகும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்னும் அமைச்சரவையின் முடிவின் மீது இத்தகைய விழிப்புணர்வைத்தான் நாடாளுமன்றம் பிரயோகித்தது. அரசாங்கததின் முடிவுதான், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைந்திட முழுமுதற் காரணமாகும். அரசாங்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது குறித்து விவாதிக்கத் தயாராகவே இருந்தது என்றும், ஆனால் எதிர்க்கட்சிகள்தான் அதனைக் கேட்காது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை சீர்குலைத்தன என்றும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. அமைச்சரவை ஒரு முடிவை எடுத்தபின், அதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவது என்பது காலத்தை விரயம் செய்யும் நடவடிக்கையேயாகும். மக்களின் வாழ்வாதாரங் களைப் பாதிக்கக்கூடிய எந்த முடிவையும் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி எடுத்திடக்கூடாது என்று எதிர்காலத்தில் உருவாகும் அரசாங்கங்களுக்கு இது ஓர் உதாரணமாக விளங்கிடும். மேலும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் அதற்குத் தெரிவிக்காது சிறிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளைக் கூட அரசாங்கம் எடுத்திடக் கூடாது என்பதற்கும் இது ஓர் அனுபவமாக அமைந்திடும்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஏன் எதிர்க்கிறோம் என்று இப்பகுதியில் நாம் பலமுறை எழுதியிருக்கிறோம். இப்பிரச்சனையில் தொடர் நடவடிக்கை எதையும் எடுப்பதற்கு முன் நாம் முன்வைத்த அம்சங்கள் அனைத்தையும் அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும். இதன் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இப்பிரச்சனை மீது அரசாங்கம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு இது மிகவும் அவசியமாகும்.
சென்ற ஆண்டின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க அரசாங்கம் பிடிவாதமாக மறுத்ததன் காரணமாக, அக்கூட்டத்தொடரே முழுமையாக வீணடிக்கப்பட்டது. அரசாங்கம் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்கும் முடிவை முன்னமேயே விவேகத்துடன் எடுத்திருந்திருக்குமானால், சென்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வீணடிக்கப் பட்டிருக்காது. இப்போது, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் நிறுத்தி வைத்திட முன்வந்திருப்பதன் மூலம் அடுத்து வரும் நாட்களாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பை அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் நிறுத்தி வைத்திட முன்வந்திருப்பது மட்டுமல்ல, இது தொடர்பாக மேற்கொண்டு என்ன முடிவு எடுப்பதாக இருந்தாலும், இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருடனும் (stakeholders) கலந்தாலோசனை செய்து அதன் இறுதியில் வரும் கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அத்தகைய கருத்தொற்றுமையானது நாடாளுமன்றம் மற்றும் மாநில அரசாங்கங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கலந்தாலோசனைகளுக்குப் பின் வரக்கூடியதாக இருந்திட வேண்டும் என்று வலியுறுத்தியது. அரசாங்கம், ‘இதில் சம்பந்தப்பட்டவர்கள்’ (stakeholders) என்பதன் பொருள் அனைத்து அரசியல் கட்சிகள், மாநில அரசாங்கங்கள் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகிய அனைவருமா என்பதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவேண்டிய நிலையில் இருக்கிறது.

ஆயினும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதற்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. நாம் இப்பகுதியில் ஏற்கனவே வாதித்துள்ளதுபடி, நம் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களின் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய முடிவானது, ஏகாதிபத்தியத்தாலும், சர்வதேச நிதி மூலதனத்தாலும் தங்கள் கொள்ளை லாப வேட்டைக்காக கடுமையான முறையில் உந்தித்தள்ளப்படக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் பாலியில் நடைபெற்ற கூட்டத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கஅதிபர் ஒபாமாவிடம் இது தொடர்பாக உறுதி அளித்துள்ளார் என்கிற சந்தேகம் மிகவும் வலுவான முறையில் முன்வந்துள்ளது. மிகவும் ஆழமாகியுள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளாதார இரட்டிப்பு ஆழத்தில் சென்றுள்ள மந்த நிலை (double dip depression), சர்வதேச நிதி மூலதனம் தங்கள் கொள்ளை லாபத்திற்குப் புதிய பாதைகளைக் காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆயினும், நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்காமல் அத்தகைய வாய்ப்பினை அந்நிய மூலதனத்திற்கு அளித்திட முடியாது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது, தற்காலிகமாக தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தபின்னரோ அல்லது சிறிது காலம் கழித்தோ, இத்தகைய நாசகரமான முடிவினை மேற்கொள்ளாமல் அரசாங்கத்தை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டுமானால், பெருந்திரள் மக்கள் போராட்டங்களின் மூலமாக அரசாங்கத்திற்குக் கடும் நிர்ப்பந்தம் அளித்திட வேண்டும். நாடாளுமன்றத்தின் முன் அனுமதியின்றி இத்தகைய முடிவுகள் எக்காலத்திலும் அனுமதிக்கப்படக் கூடாது.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: