Saturday, December 31, 2011
மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிட வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்
‘‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’’ தன் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
2011 முடிந்து 2012இல் அடி எடுத்து வைக்கும் இந்நாளில் நம் வாழ்வாதாரங்களைத் தீர்மானிக்கக்கூடிய மூன்று முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகள் 2011இல் நடைபெற்று அவை 2012ஆம் ஆண்டிற்கும் தொடரவிருக்கின்றன.
முதலாவதாக, உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலை ஒழித்துக்கட்டுவதற்காக, அகில இந்திய அளவில் லோக்பால் சட்டமும், மாநிலங்கள் அளவில் லோகாயுக்தா சட்டமும் கொண்டு வருவதற்கானதொரு சட்டமுன்வடிவு மக்களவையில் மட்டும் கடைசியில் நிறைவேறி இருக்கிறது. ஊழலை ஒழிப்பற்காக இதுபோன்ற அமைப்புகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக ஒரு சட்ட முன்வடிவு முதன்முறையாக 1968 மே 9ஆம் நாள் நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும், தேர்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நான்காவது மக்களவை கலைக்கப்பட்டுவிட்டது. அதன்மூலம் அச்சட்டமுன்வடிவும் காலாவதியாகிவிட்டது. அதேபோன்று, 1971 ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் ஐந்தாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்துக் காலாவதியானது. மறுபடியும் நாட்டிலிருந்த அவசரநிலைக்காலம் முடிவடைந்தபின், ஜனதா கட்சி அரசாங்கத்தின் காலத்தில், 1977 ஜூலை 28 அன்று கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவும், மற்றொரு தேர்வுக்குழு அதனைப் பரிசீலனை செய்து முடிப்பதற்கு முன்னமேயே ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டதால், காலாவதியாகிப்போனது. மீண்டும் ஒருமுறை, 1985 ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமுன்வடிவும் கூட்டுத் தேர்வுக் குழுவினரின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போக முடியாததால் வெளிச்சத்திற்கே வர வில்லை. போஃபோர்ஸ் ஊழலை அடுத்து ராஜீவ்காந்தி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டபின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஒரு லோக்பால் சட்டமுன்வடிவு 1989 டிசம்பர் 29 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும்கூட 1991 மார்ச்சில் ஒன்பதாவது மக்களவைக் கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. 1996இலிருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போது, மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தின்பேரில் 1996 செப்டம்பர் 13 அன்று ஒரு சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மீது விரிவான ஆய்வினை மேற்கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழு தன் அறிக்கையை 1997 மே மாதத்தில் சமர்ப்பித்தது. ஆயினும், மீண்டும் ஒருமுறை, இவற்றின் அடிப்படையில் ஒரு சட்டமுன்வடிவை இறுதிப்படுத்துவதற்கு முன்னமேயே பதினோராவது மக்களவை கலைக்கப்பட்டதால் இச்சட்டமுன்வடிவும் காலாவதியானது.
1996இல் 13 நாட்கள் மட்டும் ஆட்சி செய்துவிட்டு, ஆட்சியைவிட்டு அகன்றபின், பின்னர் மறுபடியும் இரண்டாவது தடவையாக 13 மாதங்கள் ஆட்சி செய்த வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசாங்கம் 1998 ஆகஸ்ட்டில் ஒரு சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியது. அதுவும் 1999இல் 12ஆவது மக்களவை கலைக்கப்பட்டதை அடுத்து காலாவதியானது. பின்னர் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2001 ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்திய ஒரு சட்டமுன்வடிவை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு மிகவும் ஆழமாகப் பரிசீலனை செய்து அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஆயினும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்த போதிலும் பாஜக அதனைச் சட்டமாக்கிட எந்தவிதமான முயற்சியும் எடுத்திடவில்லை. இப்போது ஒன்பதாவது முறையாக லோக்பால் சட்டமுன்வடிவும் லோகாயுக்தா சட்டமுன்வடிவும் நாடாளுமன்றத்தின் முன் வந்திருக்கிறது. மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஒருவிதத்தில் இறுதியாக இதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, இது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வந்திருப்பதால், அங்கே பரிசீலனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் நிறுவனங்கள் வலுவானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, நான்கு முக்கிய பிரச்சனைகள் மீது திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. இந்த அமைப்புகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் மிகவும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஊழலுக்கு இடங்கொடாது, குற்றமிழைத்தோரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை வெளி சக்திகள் தலையிட்டு தடுக்க முடியாத வகையில், சுயேச்சையாக இயங்கக்கூடிய வகையில் வலுவானதொரு புலனாய்வு எந்திரம் அளிக்கப்பட வேண்டும், இச்சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கார்பரேட்டுகள் மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி உதவி பெறும் அரசு சாரா அமைப்புகளையும் கொண்டுவரவேண்டும், மாநிலங்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்படாது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்தத் திருத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அளிக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்றோ அல்லது அதற்கும் மேலோ ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநிலங்களவையில் இச்சட்டமுன்வடிவு நிறைவேறும் பட்சத்தில், இச்சட்டமுன்வடிவு மக்களவைக்கு அவற்றை ஏற்பதற்காக மீளவும் அனுப்பப்பட வேண்டும். அரசாங்கம், லோக்பால் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அமைப்புகள் மேலும் வலுவானதாக அமைந்திட ஏற்பட்டிருக்கக்கூடிய வித்தியாசங்களைச் சரிசெய்வதற்காகக் கூட்டு தேர்வுக் குழுவை (துடிiவே ளுநடநஉவ ஊடிஅஅவைவநந) அமைத்திடலாம், அல்லது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முன்வரலாம்.
எது எப்படி இருந்தபோதிலும், உயர் மட்ட அளவில் நடைபெறும் ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக, சரியான அமைப்புகளை உருவாக்குவதற்காக, கடந்த நாற்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த நீண்ட நெடிய போராட்டம் கடைசியாக 2012இல் அமைவதற்கான வாய்ப்புகள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும், இதுவும் தாமாகவே ஏற்பட்டுவிடாது. இதற்கான நிர்ப்பந்தத்தை மக்களின் மகத்தான போராட்டங்கள் மூலமாக அரசுக்கு தொடர்ந்து இடைவிடாது அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மூன்றாவதாக, அண்ணா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார். தன் சிறை நிரப்பும் போராட்டத்தையும் நிறுத்தி வைத்திருக்கிறார். ஆயினும் அவர், நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யவிருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கதே. ஒரு ஜனநாயக நாட்டில்,அரசியல் இயக்கங்களின் உயிர்த்துடிப்புடன் மக்கள் எந்த அளவிற்கு அதிகமாக அரசியல் இயக்கங்களில் பங்குபெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்துத்தான் அந்நாட்டின் ஜனநாயகத்தின் முதிர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தோமானால் அண்ணா ஹசாரேயும் அவர்தம் குழுவினரும் அரசியல் இயக்கங்களில் பங்களிக்க முன்வந்திருப்பதும், தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருப்பதும் அவர்களின் நிலைப்பாடு சரியா, இல்லையா என்பதை இனி மக்கள் தீர்மானித்துக்கொள்ள விட்டிருப்பதும் வரவேற்கத் தக்கதேயாகும்.
ஆயினும், உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் முழுமையாக வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், இவர்களது பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் அநேகமாகக் காணப்பட வில்லை அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அது என்னவெனில், இன்று காணப்படும் மிகப்பெரிய அளவிலான ஊழல்கள் அனைத்தும் கடந்த இருபதாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் கீழேதான் நடந்துள்ளன. ஊழல் என்பது சான்றோர் பழிக்கும் வினையாகத்தான் நம் சமூகத்தில் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றையதினம் நம்மைச் சுற்றியும் காணப்படும் ஊழல் என்பது மிகவும் வித்தியாசமானவைகளாகும். பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் அறநெறியற்ற குணங்களையும், இழிவழிகளிலும் திடீர்ப்
பணக்காரர்களாவதற்கான வாய்ப்பு வசதிகளையும் உருவாக்கித் தந்திருக்கின்றன. இன்றைய தினம் நாட்டில் உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழலின் முக்கிய காரணிகளாக விளங்கும் கார்பரேட்டுகளையும், தனியார்களையும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் மட்டுமேயாகும். இவ்வாறாக ஊழலை ஒழிப்பதென்பது அறநெறி சார்ந்த ஒன்று மட்டுமல்ல, நம் மக்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கையை அளிப்பதனை மறுத்திடக்கூடிய வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய வள ஆதாரங்களை மிகப்பெரிய அளவில் திருப்பிவிடக்கூடிய நடவடிக்கை களுக்கும் எதிரானதாகும்.
உயர்மட்ட அளவில் நிலவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துடன் சரியானமுறையில் இணைத்திடாமல் வலுவானமுறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் உயர்மட்ட அளவில் ஊழல் புரிந்திட ஏற்படுத்திக்கொடுத்துள்ள ஓட்டைகளை அடைக்காமல் அவர்கள் புரிந்திடும் ஊழல்களை ஒழிக்க முடியாது. இதனை நன்கு கணக்கில் எடுத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவற்றின் மீதான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ளது.
ஆயினும், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டம், மன்மோகன் சிங் அரசாங்கமானது முன்னிலும் மோசமான முறையில் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறது. இதன் பொருள், ஒரு பக்கத்தில் உலகப் பொருளாதார மந்தம் ஆழமாகியுள்ள பின்னணியில் நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் வாழ்நிலைமை மேலும் மோசமாக வீழ்ச்சியுறும் அதே சமயத்தில், மறுபக்கத்தில் உயர்மட்ட அளவில் இயங்குபவர்களின் ஊழல் மூலமாகவும், அறநெறியற்ற நடவடிக்கைகளின் விளைவாகவும் நம் நாட்டின் செல்வாதாரங்கள் மேலும் கொள்ளையடிக்கப்படும். எனவேதான், புத்தாண்டில் நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைத் தக்க வைத்துக்கொண்டு முன்னேற்றப்பாதையில் சென்றிட, ஆட்சியாளர்களின் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு எதிராக வலுவான போராட்டங்களுக்குத் தயாராகிட வேண்டும்.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கக்கூடிய பின்னணியில் மக்களின் வாழ்க்கைச் சுமைகள் தொடர்கின்றன. இவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேலும் அரித்திடுவதற்கு இட்டுச்செல்லுமாகையால், சிறந்ததோர் வாழ்க்கை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, வரவிருக்கும் ஆண்டில் சிறந்ததோர் வாழ்க்கைக்காக நம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்காகவும், நாட்டு மக்களுக்கு நல்லதோர் வாழ்க்கையை அளிப்பதற்காகவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தயாராக வேண்டும் என்றும் அறைகூவி அழைக்கிறோம்.
நாட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றிடவும், ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிடவும் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment