Saturday, December 17, 2011

வலுவான லோக்பால் சட்டம் தேவை



ரசாங்கத்தின் உயர் மட்டத்திலும் மற்றும் பல்வேறு பொதுநிறுனங்களிலும் நிலவும் ஊழல்கள் ஒழிக்கப்படக்கூடிய வகையில் ஒரு வலுவான லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் படலாம் என்கிற முறையில் அபரிமிதமான ஆர்வத்துடன் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவக்கூடிய பின்னணியில்தான் அரசாங்கம் நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த வரைவு சட்டமுன்வடிவின் மீது அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் பலமுறை சொல்லி வந்ததைப்போல், கடந்த இருபதாண்டு காலமாகவே நாட்டில் லோக்பால் போன்றதொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வந்திருக்கிறது. போஃபோர்ஸ் ஊழல் நாட்டையே உலுக்கியபின், அதன் விளைவாக அரசாங்கத்திலும் அரசியல் தலைமையில் மாற்றம் வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, உயர்மட்டங்கள் நடைபெறும் ஊழலை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரி வந்திருக்கிறது. 1989இல் விபி சிங் அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்து வந்த சமயத்தில், இத்தகையதோர் சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்தது. அந்த சமயத்திலும், பின்னர் இரு தடவைகளிலும், 1996இல் தேவ கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கமும் அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தயவில் ஆட்சியில் நீடித்த சமயத்திலும் லோக்பால் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டது. ஆயினும் அது சட்டமாக நிறைவேறக்கூடிய சூழல் உருவாகவில்லை. மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தத்தின் விளைவாக, 2004இல் ஐமுகூ-1 அரசாங்கம் உருவாவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் இடதுசாரிகளின் தயவை நாடியிருந்த சமயத்தில், அதனுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்கிற உறுதிமொழியைச் சேர்க்கப்பட்டது.

மேற்கண்டவாறு நாம் முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து சமயங்களிலும் வரைவு சட்டமுன்வடிவு பல்வேறு பிரச்சனைகளில் சச்சரவுகள் இருந்து வந்ததால் வெளிச்சத்திற்கே வரவில்லை. அதில் மிகவும் முக்கியமான விஷயம், இச்சட்டத்தின் வரையறைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது குறித்ததாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே, அதிலும் குறிப்பாக போஃபோர்ஸ் ஊழலுக்குப் பின், பிரதமரும் லோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்தத் தடவையும் அரசின் உயர்மட்ட அளவில் நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள பின்னணியில், மக்களின் கோபாவேசம் அதிகரித்துள்ளது.
ஐமுகூ-2 அரசாங்கமானது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலை விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அடாவடித்தனத்தின் காரணமாக, 2010இல் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமையாக வீணடிக்கப்பட்ட கசப்பான உண்மையை அடுத்து, நாடாளுமன்றத்தின் மீதே மக்களுக்கிருந்து வந்த நம்பிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இவ்வாறு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபாவேசத்தை அறிந்தபின்னர் ஐமுகூ-2 அரசாங்கம் கடைசியில் முந்தைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வரைவு சட்டமுன்வடிவை மீளவும் தாக்கல செய்ய முன்வந்துள்ளது.

தற்போது, நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய விவாதங்களை முடித்துள்ள நிலையில், சட்டமுன்வடிவானது இறுதி வடிவத்திற்கு வந்திருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இதன் மீது அனைத்துக் கட்சியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, வரைவு சட்டமுன்வடிவை ஒரு வலுவான சட்டமுன்வடிவாக மாற்றிட, அச்சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும், திருத்தங்களையும் சமர்ப்பித்தார். அவ்வாறு அவர் சமர்ப்பித்த குறிப்புகளுடன், தற்போது நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும், கீழ்க்கண்ட முன்மொழிவுகள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டது.

(1) லோக்பால் சட்டத்தின் அதிகாரவரம்பெல்லைக்குள் பிரதமரையும் கொண்டுவருவது தொடர்பாக ஒரு பொதுவான கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. லோக்பாலின் வரையறைக்குள் பிரதமரும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக அரசு துல்லியமான பரிந்துரைகளுடன் வர வேண்டும். எக்காரணம் கொண்டும், சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் பிரதமர் அலுவலகத்தின் வணிகத் தொடர்புகள் எதுவும் இதன் வரையறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படக் கூடாது.

(2) ஊழலை வலுவாகக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் நீதித்துறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். நீதித்துறையிலும் நியமனங்கள், மாற்றல்கள் தொடர்பாக ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் அவற்றை விசாரிக்கக்கூடிய அளவிற்கு ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(3) நாட்டில் தேர்தல்கள் நடைபெறும்போது பணபலம் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழித்திட வகைசெய்யும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படாமல் நம் நாட்டில் இலஞ்ச ஊழலை வலுவாக ஒழித்திட முடியாது.

(4) அனைத்து மட்டங்களிலும் லஞ்ச ஊழலால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் தொடர்பாக வரும் குறைபாடுகளை விசாரிப்பதற்குத் தனியே குறைதீர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
(5) லோக்பால் சட்டத்தின் அதிகாரங்கள் ஊழலில் ஈடுபடும் அனைத்துத்தர அதிகாரிகளின்மீதும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அளவிற்கு விரிவாக்கப்பட வேண்டும். இதேபோன்று அனைத்து இனத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் மாநில மட்டத்தில் லோகாயுக்தாக்கள் அமைக்கப்பட வேண்டும்.

(6) லோக் பால் சட்டத்தின் கீழ் ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act) மீது பிரத்யேக அதிகாரவரம்பெல்லையுடன் தனியே ஒரு புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஊழல் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்கக்கூடிய அளவிற்குத் தனி புலனாய்வு அமைப்பாக இது அமைந்திட வேண்டும். மத்தியப் புலனாய்வுக் கழகமும் லோக்பால் வரம்பெல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவ்வித அதிகாரமுமற்ற, வலுவற்ற அமைப்பாக லோக்பால் மாற்றப்பட்டுவிடக் கூடாது.

(7) லோக்பால் கீழான தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் சுயேச்சையான தேர்வுக் குழுவின் மூலமே மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் இயக்குநரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

(8) இத்தகைய நியமனங்களுக்கான தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும் பெயர்களைத் தயார் செய்வதற்கான ஆய்வுக் குழு அமைக்கப்படுதல் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

(9) ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீச்சுடன் நடத்திட, 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் வரையறை (னநகinவைiடிn) திருத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இன்றுள்ள சட்டத்தின்படி லஞ்சம் பெறுபவர் மட்டுமே குற்றத்துடன் பிணைக்கப்படுகிறார், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குப் புறம்பாக முறைகேடாக ஆதாயம் அடைபவர்கள் குற்றத்துடன் பிணைக்கப்படுவதில்லை. யாருடைய செயல்பாடுகளினாலும் முடிவுகளினாலும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறதோ அவர்கள் அனைவரும் இச்சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் கொண்டுவரப் பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை ஆகியவை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் அதே சமயத்தில், அவர்கள் லஞ்சஊழலில் ஈடுபட்டால் இதனை அமல்படுத்திடக் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத்தின் 105ஆவது விதி திருத்தப்படுவது உட்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், இகழார்ந்த ஜேஎம்எம் லஞ்சை வழக்கில் நடைபெற்றதைப்போல லஞ்சம் கொடுத்தவர் தண்டிக்கப்படுவதையும், லஞ்சம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதையும் (exonerated) தடுத்திட முடியாது. இது தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க மற்றொரு உதாரணம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மீது 2008இல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்ற அசிங்கமாகும்.

(11) ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுவாக அமைந்திட வேண்டுமானால், ஒப்பந்தங்கள், உரிமங்கள் முதலானவற்றைப் பெற்றிட கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் லஞ்சலாவண்யங்களை விசாரிக்கக்கூடிய அளவிலும் லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசின் உதவிகளைப் பெறும் அனைத்து அமைப்புகளும் இச்சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

லோக்பால் சட்டம் தொடர்பான விதிகள் ஆட்சிகள் மாறும்போதெல்லாம் மாறக்கூடிய விதத்தில் அமைந்துவிடக் கூடாது. முறையான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள இந்த ஆலோசனைகள் அரசு உரிய முறையில் பரிசீலித்து உரிய திருத்தங்களுடன் மீண்டும் அனைத்துக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டிட வேண்டும்.
இவ்வாறு அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்மொழிவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனை மீது ஓர் அவசரகதியில் அரசாங்கத்தை செயல்பட வைப்பதை உத்தரவாதப்படுத்திட நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வலுவான வகையில் நிர்ப்பந்தம் அளித்திடக் கூடிய வகையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: