Friday, November 13, 2009

பெர்லின் சுவர் தகர்ப்பு: நெருக்கடியின் பாதிப்புகளை மறைத்திட கோலாகலக் கொண்டாட்டங்கள்



வெற்றி வீரர்களே எப்போதும் வரலாற்றை எழுதுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் மிகவும் தாமதமாகத்தான் போராட்டங்களின்போது அவற்றில் சிக்கிக்கொண்ட மக்களின் துன்ப துயரங்கள் பற்றி ஆவணப்படுத்துகிறார்கள். இது பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இப்போதும் நன்கு புலப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெர்லின் இரண்டாகப் பிரிவதற்கான உண்மையான வரலாற்றை இருட்டடிப்புச் செய்திடுவதற்காக, இத்தகைய ஆரவார நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பாசிசம் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வினை அடையாளப்படுத்தும் வண்ணம் ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கட்டிடத்தின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் கொடி எதுவும் ஏற்றப்படவில்லை.

யுத்தம் முடிவுற்றபின்னர், பெர்லின் நகரை நான்கு நேச நாடுகளும் (யடடநைன யீடிறநசள) கூட்டாக நிர்வகிக்கத் தீர்மானித்தன. கிழக்கு பெர்லின் சோவியத் செம்படையின் நிர்வாகத்தின்கீழ் இருந்த அதேசமயத்தில், மேற்கு பெர்லின் நகரானது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பெர்லினை கூட்டாக நிர்வகித்திடலாம் என்று சோவியத் யூனியன் சார்பில் விடுக்கப்பட்ட அனைத்து வேண்டுகோள்களையும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்துவிட்டன. ஏனெனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சோசலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பெர்லின் நகரையே முழுமையாக ஈர்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். பல ஆண்டுகள் பெர்லின் நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேற்கு பெர்லின் தனியே தனித்துவத்துடன் இருந்து வந்தது. இப்பகுதியை மேற்கத்திய ஆட்சியாளர்கள் சோசலிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான பனிப்போரின் நீரூற்றாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சோசலிசத்தின் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கை சீர்குலைத்திட அவை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து பதினாறு ஆண்டுகள் கழித்து, 1961 ஆகஸ்ட்டில்தான், வார்சா ஒப்பந்த நாடுகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெர்லின் சுவரை எழுப்பிடத் தீர்மானித்தன. ஆனால் பெர்லின் பிரிக்கப்பட்டு சுவர் எழுப்பப்படுவதற்கு சோசலிசமும் சோவியத் யூனியனும்தான் காரணம் என்கிற முறையில் இப்போது வரலாறு திரிக்கப்பட்டு கூறப்படுகிறது.

நிச்சயமாக எதிர்காலத்தில் உண்மை வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்வார்கள். ஆயினும், ஏகாதிபத்தியத்திற்குத் தன்னுடைய பங்குச்சந்தை (றுயடட ளுவசநநவ) நிலைகுலைந்து வீழ்ந்தகொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில், இவ்வாறு பெர்லின் சுவர் தொடர்பாக வரலாற்றைத் திரித்துக்கூற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது எந்தவிதமான வெளியார் தாக்குதலாலும் ஏற்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்ளீடான மாற்றங்களே ஏகாதிபத்தியத்தின் உலகமயத்தில் இத்தகைய நெருக்கடியைக் கொண்டுவந்திருக்கின்றன. இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் குணம் குறித்த இப்பகுதியில் ஏற்கனவே நாம் பல முறை ஆய்வு செய்திருக்கிறோம். எனவே இப்போது அதனை மீண்டும் கூறவேண்டிய தேவையில்லை.

உலகில் உள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, தங்களுடைய வாழ்வில் மிகக் கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்திட்ட ஏகாதிபத்திய பங்குச்சந்தைதான் (wall street) நிலைகுலைந்துள்ளது. இந்த ஆண்டு, தற்போதைய உலக முதலாளித்துவ மந்தம் தொடங்கியதிலிருந்து, உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீழ்ச்சியடைந்திருப்பது மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதன்முறையாக, மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பசிக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டு, ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள். பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 102 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் பசியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மட்டும், பசியால் வாடும் பட்டியலில் 10 கோடியே 30 லட்சம் மக்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து தன்னை மீண்டும் எழுந்து நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஒரு தூண்டுகோலாகவே பெர்லின் சுவர் தகர்வு தொடர்பான கோலாகலக் கொண்டாட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. இப்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்கு எந்த கார்பரேட் நிறுவனங்கள் காரணமாக இருந்தனவோ அவற்றுக்கே மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கான டாலர்கள் உதவிகளை அளிப்பதன் மூலம், அவற்றின் இருப்பு நிலைக் குறிப்பையும், லாபத்தையும் நல்லமுறையில் வைத்திட முன்வந்திருக்கிறது. ஆனால் இந்நெருக்கடியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. முதலாளித்துவத்தின் வர்க்கக் குணத்தைத் தெரிந்து கொண்டுள்ளவர்களுக்கு இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனம் (OECD) வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி இந்தக் காலகட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வேலையில்லாப் பட்டாளத்தில் இணைந் திருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலையில்லாதோரின் விகிதம் அதிகாரபூர்வ அறிக்கையின்படியே இரண்டு இலக்கத்தை - அதாவது 10.2 சதவீதத்தை - தொட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் இதனை 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அமெரிக்காவில் வறுமை விகிதம் 13.2 சதவீதமாகும். இதன்பொருள் சுமார் 4 கோடி மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அதேசமயம் மறுபக்கத்தில், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட அதீதமான நிதி உதவியின் காரணமாக, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மார்கன் சேஸ் என்னும் இரு பெரிய வங்கிகள் அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதாகப் பிரகடனம் செய்து, தன் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கான டாலர் போனஸ் அளித்து அதனைக் கொண்டாடி யிருக்கிறது. முதலாளித்துவம் எப்படி இயங்கும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணமாகும். ‘மக்கள் எக்கேடுகெட்டால் என்ன எனக்கு வேண்டியது லாபம்’ என்பதே அதன் குறிக்கோளாகும்.

எனவே, பெர்லின் சுவர் தகர்வை கோலாகலமாகக் கொண்டாட ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் உலகம் முழுதுமுள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிட முடியாது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளின் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டக்கூடிய வகையில் வெகுஜன இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: