Friday, November 6, 2009

நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே! - சுகுமால்சென்





ரஷ்யாவில் 1917 அக்டோபர் 17 அன்று நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி, (ரஷ்யாவின் பழைய காலண்டர்படி அக்டோபர் 17 அன்றும், புதிய காலண்டர்படி நவம்பர் 7 அன்றும் நடைபெற்றது) உலகைக் குலுக்கிய முக்கியமானதொரு நிகழ்வு மட்டுமல்ல, அதன் படிப்பினைகள் இன்றைய உலக நிலைமைகளுக்கும் சரியாகப் பொருந்தக் கூடியதேயாகும்.
இன்றைய உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிச் சேற்றில் சிக்கி, பெருமளவில் மந்த நிலைமைக்குச் சென்று செப்டம்பர் 15 உடன் ஓராண்டு காலமாகிவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் மற்றும் முதலாளித்துவ நாடுகளில் வாழும் ஏழை மக்கள் மீதும் எந்த அளவிற்கு அது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இன்னமும் முழுமையாக வெளிக்கொணரப் படவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கிற உலக முதலாளித்துவ நெருக்கடியானது நவம்பர் புரட்சியின் முக்கியத்துவத்தை உலகுக்கு மீண்டும் நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

ஏகாதிபத்தியமானது இன்றையதினம் எவ்வித கூச்சநாச்சமுமின்றி தன் யுத்த முஸ்தீபுகளை கூர்மைப்படுத்திக் கொண்டு உலகின் அனைத்துப் பகுதிகளையுமே தன் மேலாதிக்க நடவடிக்கைகளால் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நலன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாக உலகச் சந்தையில் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் மற்றும் சாமானிய மக்களின் மீதான சுரண்டலும் ஆழமாகியிருக்கிறது.
1917இல் ரஷ்யாதான் முதலாளித்துவ சங்கிலித் தொகுப்பிலிருந்த மிக பலவீனமான கண்ணியை உடைத்துத் தூளாக்கி, தங்களுடைய நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியை நிறுவியது. ரஷ்யப் புரட்சியின் மிக முக்கிய அம்சம் என்னவெனில், அது முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்பதேயாகும்.

சோவியத் சோசலிசக் குடியரசு 1991இல் முடிவுக்கு வந்தது என்றால் அதற்குக் காரணம் அங்கு ஆட்சியிலிருந்தவர்கள் மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு விலகிச் சென்றதேயாகும். உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் அதற்கான காரணங்களை ஆராய்வதில் ஈடுபட்டார்கள்

மார்க்சின் புரட்சித் தத்துவம்
புரட்சிகர மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? மார்க்சின் கூற்றுப்படி, ஒரு வர்க்க சமுதாயத்திற்குள் வளர்ந்திடும் முரண்பாடு என்பது வளர்கின்ற உற்பத்திச் சக்திகளுக்கும் ஏற்கனவேயுள்ள சொத்துடைய வடிவங்களுக்கும் இடையிலானதாக இருந்திடும். இதுவே முதலாளித்துவ அமைப்பைப் பலவீனப் படுத்தி, புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் முக்கிய கூறாகும். அது புராதனப் பொதுவுடைமை சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது ஆண்டை - அடிமை சமுதாயமாக இருந்தாலும் சரி, அல்லது நிலப்பிரபுத்துவ அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது முதலாளித்துவ அமைப்பாக இருந்தாலும் சரி இவ்வாறுதான் மனிதகுல வரலாற்றை ஆய்வு செய்து வந்திருக்கிறோம். முதலாளித்துவத்தின் கீழான இந்த முக்கிய முரண்பாட்டை, ‘‘அதீத உற்பத்தியினால் உருவாகும் கொள்ளை நோய்’’ மூலம் நன்கு உணர முடியும்.

மார்க்ஸ் ஆரம்பத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நன்கு முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்தான் ஏற்படும் என்று நினைத்திருந்தார். ஆனால் அவர் தன் வாழ்நாளின் பிற்பகுதியிலேயே, மிகவும் வளர்ச்சிகுன்றிய ரஷ்யா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட புரட்சி வெடிக்கும் என்பதைக் கண்டார். இதன் மூலம் வளர்ச்சிகுன்றிய அல்லது ‘‘பிற்பட்ட’’ நாடுகளில் கூட முதலாளித்துவ சங்கிலியின் பலவீனமான கண்ணியை உடைத்தெறிவதன் மூலம் புரட்சி சாத்தியம் என்கிற சிந்தனையோட்டம் தோன்றி வளர்ந்தது.

மாமேதை லெனினின் கூர்மதியால் அவரது தலைமையின் கீழான போல்ஷ்விக் கட்சியானது ‘‘பலவீனமான கண்ணியை’’க் கண்டறிந்து உடைத்து சுக்குநூறாக்கி, முதலாளித்துவ ரீதியாக ஒரு பிற்பட்ட ரஷ்யாவில் புரட்சியை வெற்றிகரமானதாக உருவாக்கியது.

மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளை நன்கு ஆய்ந்து, புரட்சி குறித்த சிந்தனைகளை உருவாக்கினார். வாழ்வதற்கான போராட்டம் மற்றும் இயற்கையோடு இருந்த பிணைப்பு ஆகியவற்றின் விளைவாக, மனிதன் சில கருவிகளை, உபகரணங்களை, உழைப்பை அளிப்பதிலும் பல்வேறு வடிவங்களை வளர்த்திட்டான். மார்க்ஸ் இவற்றை உற்பத்திச் சக்திகள் என்று விவரித்தார். பின்னர், அவர் உற்பத்தி உறவுகள் குறித்து விவரித்தார்.

மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையிலும், மூலதனத்திலும் தொடர்ந்து ஏற்படும் முதலாளித்துவ நெருக்கடிகள் அவற்றை மேலும் உக்கிரமானதாக மாற்றும் என்று கருதினார். ‘‘அதீத உற்பத்தி என்னும் கொள்ளைநோயை’’ ஒழித்துக்கட்ட வேண்டுமானால், முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளுக்கு எதிராக, சமூகக் குணத்துடனான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும், உற்பத்திச் சாதனங்கள் சமூகத்திற்கு உடைமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

பொருளாதார நெருக்கடிகள் இந்த மோதலை வெளிப்படையாகக் கொண்டு வந்துவிட்டன. மார்க்சின் கூற்றின்படி, ‘‘உண்மையான எல்லா நெருக்கடிகளுக்கும் முடிவான காரணம் மனித சமூகத்தின் ஏழ்மையேயாகும். அதன் ஓரெல்லைக்குள் கட்டுப்பட்டுள்ள குறைந்த நுகர்வு ஆற்றலே. மக்களது வறுமைக்கும் அவர்தம் குறைந்த நுகர்வாற்றலுக்கும் எதிராக, சமூகத்தில் எல்லையற்ற உயர்ந்த நிலை அளவுக்கு நுகர்வு ஆற்றல் உளது என்று எண்ணிக்கொண்டு, உற்பத்திச் சக்திகளைப் பெருக்குவதில் முதலாளித்துவ உற்பத்தி உந்தப்படுகின்றது.’’

மூலதனத்தின் மற்றொரு பகுதியையும் நாம் ஆராய்வோம். ‘‘மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகிவிடும் நிலை வருகிறது. ஆகவே, அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.’’

ஆயினும் சோசலிசத்திற்கு மாறிச் செல்லுதல் என்பது தானாகவே நடைபெற்று விடாது. தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் அது அமல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் தொழிலாளர் வர்க்கம்தான் சமூகத்தின் ‘‘மாபெரும் உற்பத்தி சக்தி’’யாகும். உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலில் மற்றவர்களை விட அதிகமான அளவில் அவதிப்பட்ட பிரிவுமாகும். எனவே உற்பத்திச் சாதனங்களை சமூகமயப்படுத்துதலில் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தனி ஆர்வம் உண்டு.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்

மக்களை உறிஞ்சும் குணம் கொண்ட சுரண்டல் சமுதாயத்தை அடித்த நொறுக்கிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஓர் அரசை அமைத்திட வேண்டுமானால், உற்பத்திச் சாதனங்களைப் படிப்படியாக சோசலிசமயமாக்கிட வேண்டும். மார்க்ஸ், இதனைக் குறிப்பிடுகையில், ‘‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இந்தச் சொற்றொடரில் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய மகத்தான போராட்டங்கள் மற்றும் வெற்றிகள் மட்டுமல்ல மக்கள்திரளின் மத்தியில் ஜனநாயகத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகிய அனைத்தும் அடங்கியிருக்கின்றன.

தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற வர்க்கப் போராட்டம் அனைத்தும், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று மார்க்ஸ் கூறுகிறார். அனைத்து வர்க்கங்களும் அழித்து ஒழிக்கப்பட்டு, வர்க்க சமுதாயம் உருவாகும்வரை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் அவசியமாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் அரசின் தன்மை குறித்து மார்க்ஸ் விரிவாக எழுதியிருக்கிறார். குறைந்த காலமே நீடித்த 1871 பாரிஸ் கம்யூன் தொழிலாளர் தலைமையில் அமைந்த முதல் அரசாங்கம் என்று அவர் கருதுகிறார்.

சமூக மாற்றத்தின் இன்றைய பிரதிநிதிகள் யார்?

மார்க்ஸ் காலத்தில் ‘‘தொழிலாளர்’’ (proletariat) என்போர் அநேகமாக தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களையே குறித்தது, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அநேகமாக கரத்தால் உழைப்பவர்களாகவே இருந்தார்கள். சுரங்கங்கள் மற்றும் பல்வேறு தொழில்மையங்களில் பணியாற்றியவர்கள். ஆனால் தொழிலாளர் வர்க்கம் என்னும் கருத்தாக்கத்திற்குள் நிதிநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு எந்திரத்தில் பணியாற்றும் கருத்தால் உழைப்பவர்களும் படிப்படியாக ஈர்க்கப் பட்டார்கள். ஏன், சமீபத்தில் இன்போடெக் மற்றும் மிக நவீன பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூட, தாங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரே என்பதை உணரத் தலைப்பட்டுள்ளனர். முதலாளித்துவத்தின் நலன்களுக்கு ஏதேனும் ஒருவகையில் சேவை செய்யும் ஒவ்வொருவரும், தங்கள் பணிநிலைமைகள் மற்றும் வாழ்நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான முறையில் இழிநிலைக்குச் சென்று கொண்டிருப்பதை உணரத் தலைப்பட்டு, தொழிலாளர் வர்க்கப் படையின் போராளிகளாக மாற வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.

ஒரு காலத்தில் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களை, ‘‘காக்கிச் சட்டைத் தொழிலாளர்கள்’’ என்றும், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களை ‘‘வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள்’’ என்றும் வித்தியாசப் படுத்தியதை அறிவோம். காக்கிச்சட்டைத் தொழிலாளர்களைவிட, வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள் அதிகமான அளவில் பணிப்பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று கூட சொல்லப்பட்டது. உண்மையில் இது அனைத்தும் கற்பனாவாதமே. மேலும் வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள் ‘‘மத்திய வர்க்கமாக’’ உயர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆயினும் இன்றும்கூட உலகில் பெரும் பகுதி, கரத்தால் உழைக்கும் காக்கிச்சட்டைத் தொழிலாளர்களேயாவர். இந்தியாவிலும் இதுதான் உண்மை நிலை.
மார்க்ஸ் தன் படைப்புகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் எழுதிக்கொண்டிருந்தார். 1883இல் மரணம் அடைந்தார். அதன்பின் எண்ணிலடங்கா மாற்றஙகள் ஏற்பட்டுள்ளன. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றஙகளை மார்க்ஸ் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.

இந்நூற்றாண்டில் தொடக்கத்தில் முதலாளித்துவம் தன்னைப் புனரமைத்துக் கொண்டு, வளர்ந்தது. ஆயினும் இன்றைய தினம் உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமானதாகும்.
வர்க்கப்போராட்டத்தின் முக்கியத்துவம்

அரசு எந்திரம் அதிகமான அளவில் அதிகாரவர்க்கத்தின் ஆலோசனையின்படி நடப்பதால், அது பெரும்பாலும் மூலதனத்தின் நலன்களுக்கே - முதலாளிகளின் நலன்களுக்கே - சேவகம் செய்கிறது. மார்க்ஸ் புரட்சி குறித்து கூறிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ஆயினும், ‘‘ஒரு பெரிய உந்துதல், அனைத்தையும் மற்றும் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்’’ என்ற சொற்றொடரை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. மார்க்சைப் பொறுத்தவரை புரட்சி என்கிறபோது அவர் எப்போதும் ‘‘சமூகப் புரட்சியையே’’ பொருள் கொண்டார். ஒரு ‘‘பெரிய உந்துலு’’க்காக ஒருசிலரின் தலைகளைக் கொய்துவது எளிதுதான். அதைத்தான் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் புரட்சி என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக மார்க்ஸ் பொருள்கொண்டது இதையல்ல.
இதுபோன்ற காரியங்கள் கடந்த காலத்தில் பயன் அளிக்கவில்லை, எதிர்காலத்திலும் பயனளிக்க முடியாது என்பதை நாம் நம் கசப்பான அனுபவங்களிலிருந்து அறிந்து கொண்டிருக் கிறோம். புரட்சிகர சித்தாந்தம் என்பது முன்பிருந்தது போலவே இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. புரட்சி என்பது ஒன்றை அழிப்பது என்பது மட்டுமல்ல, அந்த இடத்தில் மற்றொன்றை உருவாக்குவது என்பதுமாகும். அழித்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உருவாக்கம் என்பதும் முக்கியம். மார்க்ஸ் ஒருமுறை, ‘‘புரட்சிகரமான சிந்தனை’’ என்பது ‘‘விஷயங்களை அதன் மூலத்திலிருந்தே கிரகித்துக்கொள்வது’’ என்றார். மார்க்சின் இக்கூற்று இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.
சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சிந்தனை, இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் பொருந்தக்கூடியதேயாகும். இதிலிருந்து பிறழ்ந்து செல்வதென்பது புரட்சிகர நடைமுறைக்கு சொல்லொணா தீங்கினை ஏற்படுத்தும்.

1991இல் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அதிர்ச்சியை அளித்தது என்பதும் அதில் பாதிப்பிலிருந்து உலகில் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் முழுமையாக மீண்டு எழவில்லை என்பதும் உண்மை. இவற்றில் சில கட்சிகள் வர்க்கப் போராட்டம் என்னும் கருத்தோட்டத்தைக் கைவிட்டு, ‘‘தெளிவுபெற்ற முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனிதமுகத்துடன் கூடிய உலகமயம்’’ என்பதில் நம்பிக்கைகொண்டு, சமூக ஜனநாயகவாதக் கட்சிகளாக மாறியிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் அனைத்தும் புரட்சிகர வளர்ச்சிப்போக்குகளுக்குத் தீங்கு விளைவிப்பவைகள் என்பதிலும், இறுதியாக இவை மூலதனத்தின் நலன்களுக்கே சேவை செய்திடும் என்பதிலும் எவ்வித ஐயமமில்லை.
இவ்வாறு, இன்றைக்கும் அனைத்து நாடுகளிலும் சமூகப் புரட்சியையும் புரட்சிகரப் போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: