Sunday, November 22, 2009

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலகளாவிய போராட்டம் - சர்வதேச கம்யூனிஸ்ட் - தொழிலாளர் கட்சிகள் மாநாடு முடிவு



புதுதில்லி, நவ.22-

புதுதில்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது.

இதையொட்டி வெளி யிடப்பட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:-

48 நாடுகளைச் சேர்ந்த 57 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 83 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். “சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, உழைப்பாளர்கள் மற்றும் மக்கள் போராட்டம், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மாற்று மற்றும் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்தின.

மாநாட்டின் முத்தாய்ப்பாக நிறைவேற்றப்பட்ட தில்லி பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த சர்வதேச இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வங்கதேச தொழிலாளர் கட்சியின் கோரிக்கையை மாநாடு ஏற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்தக் கட்சியும் இதில் இணைத்துக் கொள்ளப்படும்.

12-வது சர்வதேச மாநாட்டை ஆப்பிரிக்க கண்டத்தில் நடத்துவது என்றும், மாநாட்டை நடத் தும் பொறுப்பை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் செயற்குழு கூடி மாநாட்டின் ஆய்வுப் பொருள், தேதி மற்றும் இடம் குறித்த விபரத்தை முடிவு செய்யும்.

அமைதி, இறையாண்மை, ஜனநாயகம், சமூக நீதிக்காக உலகம் முழுவதும் தொழிலாளர்கள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு இந்த மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேட்டோ மற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய போர்த் தந்திரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவது என்று மாநாடு முடிவு செய்துள்ளது.

டமாஸ்கசில் 2009 செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுப்படி, நவம்பர் 29-ம்தேதியை பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக அனுஷ்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டை பாசிசத்தை முறியடித்த 60-ம் ஆண்டாக அனுஷ்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்த முறையில் போராடுவது என்றும், சிறைபிடிக்கப்பட்டுள்ள கியூப குடிமக்கள் 5 பேரை விடுவிக்கக்கோரி சர்வதேச அளவிலான ஆதரவுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், வேலை செய்யும் உரிமையை வலியுறுத்தி இளைஞர் இயக்கங்களோடு சேர்ந்து அந்தந்த நாடுகளில் மக்கள் போராட்டத்தை தொழிற் சங்கங்கள் வலிமையாக முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட் டுள்ளது.

No comments: