Wednesday, November 18, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு



புதுடில்லி, நவ. 18-

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு புதுடில்லியில் வெள்ளியன்று காலை தொடங்குகிறது. 47 நாடுகளிலிருந்து 55 கட்சிகளைச் சேர்ந்த 87 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இது தொடர்பாக புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் இயங்கும் ஏ.கே.கோபாலன் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசியக்குழு உறுப்பினர்கள் டி.ராஜா மற்றும் பல்லப் சென் குப்தா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வரும் 2009 நவம்பர் 20 - 22 தேதிகளில் புதுடில்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன. இம்மாநாட்டில் 47 நாடுகளிலிருந்து 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த 87 பேர் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் பிரகாஷ்காரத் மற்றும் ஏ.பி.பரதன் ஆகியோரும் அடங்குவர்.

11வது மாநாட்டின் ஆய்வுப் பொருள் ‘‘ சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்பதாகும்.

மாநாட்டில் சீனா, ரஷ்யா, வியட்நாம், கியுபா, உக்ரேன், லெபனான், ஸ்வீடன், பாலஸ்தீனம், லக்சம்பர்க், ஸ்பெயின், ஈராக், பின்லாந்து, பிரேசில், டென்மார்க், பாகிஸ்தான், ஹங்கேரி, இங்கிலாந்து, செக்கோஸ்லேவேகியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிரியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், கனடா, வடகொரியா, அயர்லாந்து, சிரியா, போர்த்துக்கல், லாட்வியா, ஜெர்மனி, இத்தாலி, கயானா, யுகோஸ்லேவியா, ஈரான், கிரீஸ், இலங்கை, வங்கதேசம், சைப்ரஸ், பெரு, டென்மார்க், மெக்சிகோ, துருக்கி, இஸ்ரேல், கிர்கிஸ்தான், நேபாளம், தென் ஆப்ரிக்கா, அர்ஜன்டினா ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிமன் பாசு, மாணிக் சர்க்கார், எம்.கே. பாந்தே மற்றும் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகிய ஐந்து பிரதிநிதிகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிலிருந்து டி.ராஜா, எஸ். சுதாகர்ரெட்டி, பல்லப் சென் குப்தா, சி.திவாகரன் மற்றும் குருதாஸ் தாஸ் குப்தா ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

மாநாடு வெள்ளியன்று காலை 11 மணியளவில் தொடங்குகிறது. மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்படுகிறது. ஆய்வுப் பொருள் தொடர்பான வரைவு பிரகடனத்தை சீத்தாராம் யெச்சூரி முன்மொழிகிறார். அதன் பேரில் பிரதிநிதிகள் விவாதம் நடைபெறுகிறது. காலையில் பொது அமர்வுக்கு பத்திரிகையாளர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலை அமர்வும் 21ஆம் தேதி அமர்வுகளும் 22ஆம் தேதி காலை அமர்வும் பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு பொது அமர்வு புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் நடைபெறுகிறது. அங்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களும் மற்றும் சில உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். தற்போதுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மாநாடு அதுகுறித்து விவாதித்து 22ஆம் தேதி உங்களுக்குத் தெளிவுபடுத்தும் என்று சீத்தாராம் கூறினார்.

இடதுசாரிக் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனவா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, நடைபெறும் மாநாடு உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு என்பதால் இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகளை அழைக்கவில்லை, ஆயினும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் 22ஆம் தேதி மாலை பொது அமர்வில் கலந்து கொள்கிறார்கள் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ச.வீரமணி)

No comments: