Monday, November 16, 2009

ஊழலுக்குத் துணைபோகும் ஐமுகூ அரசு - கே. வரதராசன் பேட்டி



புதுதில்லி, நவ. 16-
போபோர்ஸ் ஊழலைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல், நீதிபதி தினகரன் ஊழல் என்று ஊழல்களுக்குத் துணைபோகும் ஐமுகூ அரசு குறித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

தலைநகர் தில்லியில் திங்கள்அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் ஜெயா டிவி செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து அத்தியவாசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்திட அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட உள்ளோம்.

ஐமுகூ அரசாங்கமானது ஆசியன் நாடுகளுடன் செய்துகொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், கேரளா விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள், ஆந்திரா விவசாயிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒப்பந்தமாகும். இதுபோன்று விவசாயிகளைப் பாதிக்கிற, சாதாரண மக்களைப் பாதிக்கிற, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதனை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்.
அதேபோன்று மக்களைக் கடுமையானப் பாதிப்புக்கு ஆளாக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்து கத்தரிக்காய் மற்றும் பல்வேறு பயிர்களைப் பயிரிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே தெரியாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிறுவனங்களுக்கு அனுமதி தந்திருக்கிறது. இது கடும் பிரச்சனைகளை உருவாக்கி உள்ளது. இதனையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது போபோர்ஸ் ஊழல் தொடர்பான விசாரணைகளைக் கைகழுவி விட்டது. அதேபோன்று தொலைத் தகவல் தொடர்புத் துறையில் நடைபெற்றுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை தொலைத் தகவல் தொடர்புத்துறை அலுவலகங்களில் சோதனை செய்துள்ள போதிலும், அதன் அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இன்னமும் அதே துறையில் அமைச்சராக நீடிப்பதற்குத் தார்மீக ரீதியாகவும் உரிமை இல்லை, சட்டரீதியாகவும் உரிமை இல்லை. ஆயினும் அது தொடர்பாக பிரதமர் அவர்கள் தன் விளக்கத்தை அளித்திட வேண்டும். அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட உள்ளோம்.
அதேபோன்று, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன், சுமார் 200 ஏக்கருக்கு மேல் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளார். இதனை வெளிக்கொண்டுவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் இயக்கங்களை நடத்தி வருகிறோம். மத்திய மாநில அரசுகள் இந்த நீதிபதிக்குத் துணைபோகும் விதத்தில் நடத்துகொண்டு வருகின்றன. தமிழக அரசு, இது தொடர்பாக பேச்சு வார்த்தைக்குச் சென்ற எங்கள் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சரித்திரம் படைத்திருக்கிறது. அல் உமா, மாவோயிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூட பேச்சுவார்த்தையின் போது கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்குச் சென்றவர்களைக் கைது செய்து சரித்திரம் படைத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இயக்கம் நடைபெற்ற சமயத்தில் ஆறாயிரம் காவல்துறையினர், ஒரு ஐ.ஜி,. 3 டி.ஐ.ஜி. என்று அனுப்பி தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடப்பதைப்போன்ற ஒரு சித்திரத்தை தமிழக அரசு மேற்கொண்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நீதிபதிக்கு அரசு ஏன் இவ்வாறு துணை போகிறது என்று தெரியவில்லை.

இப்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை உச்சநீதிமன்ற நீதிபதிப் பொறுப்புக்குப் பரிசீலிப்பது என்பதும், உயர்நீதிமன்ற நீதிபதியாக நீடிப்பது என்பதும். பெரும் கேள்விகளுக்குரிய பிரச்சனைகளாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்கிற குழு வெறுமனே சில நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் பலதரப்பினரும் கொண்ட குழுவாக அது மாற்றப்பட்டு அக்குழு உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கக்கூடிய வகையில் மாற்றப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதனை மீண்டும் வலுவாக எழுப்பிட இருக்கிறோம்.

இவ்வாறு கே. வரதராசன் கூறினார்.

(ச.வீரமணி)

No comments: