Saturday, November 21, 2009

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள - பொது முதலீட்டை அதிகப்படுத்துக - சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுடில்லி, நவ. 21-

முதலாளித்துவ உலகம் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால், கார்பரேட் முதலாளிகளுக்கு பொருளாதார உதவிகளை அள்ளி வழங்குவதற்குப் பதிலாக, அத்தொகையை பொது முதலீட்டில் ஈடுபடுத்தினால், நெருக்கடியும் தீரும் வேலைவாய்ப்பும் அதிகரித்திடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு புதுடில்லியில் வெள்ளியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ சென் குப்தா சனிக்கிழமையன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டிற்கு 47 நாடுகளிலிருந்து 55 கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 87 பேர்இதுவரை வந்து பங்கேற்றுள்ளனர். இன்று அதிகாலை ஆப்ரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி வந்து சேர்ந்தார். ‘‘சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்னும் ஆய்வுப் பொருளின் மீது பிரதிநிதிகள் விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்கள் ஞாயிறு காலையும் தொடர்கிறது.

இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு இரு வழிகளில் தீர்வு காண முடியும். முதலாவது வழி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுப்பது. இதனைத்தான் உலகம் முழுதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் செய்துள்ளன. நாம் முன்வைக்கும் மற்றொரு மாற்று வழி என்பது, அத்தகைய பொருளாதார உதவிகள் மூலமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாடுகளில் பொது முதலீட்டை அதிகரித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பினைப் பெருக்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, அதன் மூலமாக பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது. இதற்குக் கொஞ்ச கால அவகாசம் ஆகலாம். ஆயினும் முதலாளிகள் லாபத்தை நேரடியாகவும் உடனடியாகவும் அதீதமாகவும் துய்க்கமுடியாது என்பதால் இதனை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இந்தத் திசைவழி நோக்கி மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துள்ள கார்பரேட் முதலாளிகளுக்கு 14 டிரில்லியன் டாலர்கள் உதவியினை அளித்துள்ளது. இதனை பொது முதலீட்டில் செலுத்தியிருந்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புப் பெருகியிருக்கும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும், அதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியும். ஆயினும் முதலாளித்துவ முறை நேரடியாக லாபத்தைத் துய்க்கவே விரும்பும்.
எனவே, மாற்று வழியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மத்தியில் அவற்றை விளக்கிட வேண்டும். அதன் மூலமாக 3 கோடியே 70 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெருக்கிட முடியும். தற்போது வறுமையிலும் பட்டினியிலும் வாடும் அவர்களை அதிலிருந்து மீட்க முடியும். வேலைவாய்ப்பினை அவர்களுக்கு அளித்திட முடியும்.

எனவே தங்கள் தங்கள்நாடுகளில் இந்தத் திசைவழியில் மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் அளித்திட எத்தகைய உத்திகளை வகுப்பது என்று விவாதிக்கப்பட்டது. விவாதங்கள் நாளை காலையுடன் நிறைவுடையும். அதன்பின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பிரகடனம் இறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

மாலையில் மாவலங்கார் அரங்கில் பொது அமர்வு நடைபெறுகிறது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி, பல்லவசென் குப்தா கூறினார்கள்.

(ச.வீரமணி)

1 comment:

Anonymous said...

வணக்கம், ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் நானும் உங்கள் மாணவன். உங்களது வலைப்பூவுக்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. ச. வீரமணி என்ற பெயரைப் பார்க்கும்போதெல்லாம் இவர் என் ஆசிரியராய் இருப்பாரோ என்று ஐயுறுவதுண்டு. உங்களது புகைப்படம் அது நீங்களேதான் என்று உறுதி செய்கிறது. வாய்ப்பு கிடைக்கிறபோது உரையாடுவோம். நன்றி தோழர்.