Saturday, November 7, 2009

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையையே ஏற்காத மாவோயிஸ்ட்டுகள்:பிரகாஷ்காரத்




புதுதில்லி, நவ. 07-

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையையே ஏற்காதவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்றும்,அவர்களது உலகக் கண்ணோட்டம் காலாவதியாகிப்போன ஒன்று என்றும் அவர்களின் தாக்குதலை எதிர்த்து முன்னேறுவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

தலைநகர் புதுதில்லியில் மேற்கு வங்க கலாச்சார மையத்தில் உள்ள முக்ததாரா அரங்கத்தில் ‘‘இடதுசாரிகளின் பார்வையில்’’ (Left view) என்னும் அமைப்பின் கீழ் ‘‘இந்தியாவில் இன்றைய நிலையில் மாவோயிஸ்ட்டுகளின் பங்கு’’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தில்லி அறிவியல் இயக்கத்தின் தலைவர் பிரபீர் புர்கயஸ்தா தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜெயதி கோஷ் உரையாற்றியபின் நிறைவுரையாற்றுகையில் பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

‘‘நக்சலைட் இயக்கம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 1960இல் இந்தியாவில் தோன்றியது. இந்திய அரசைத் தூக்கி எறிவதற்காகவும், மக்களை நிலவுடைமை நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்தும் காப்பாற்றுவதற்குத் மக்களைத் திரட்டுவதற்காக உருவான ஒரே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கம் இது என்று கூறப்பட்டது. அவ்வாறு தோன்றி 40 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆயினும் அதனால் நாட்டின் எந்தப் பகுதியிலும் மக்களைத் திரட்ட முடியவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் இடது குழுவாதிகளால் (Left sectarians), அதிதீவிரவாதிகளால் (Ultra-Left) ஆட்சி அமைக்கப்பட்டதாக வரலாறில்லை. உலகில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது. ஆயினும் இன்று ஐயாயிரத்திற்கும் குறைவான அளவில் அதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேபாளத்தில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்டுகள் நம்முடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஜனநாயகப் பாதைக்குத் திரும்புங்கள் என்று அறிவுறுத்தினோம். அவர்களும் நம் அறிவுரையைக் கேட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினார்கள், மகத்தான அளவில் வெற்றியும் பெற்றார்கள்.
நக்சலைட்டுகள் தங்கள் சித்தாந்தத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது இடது குழுவாதிகளின்/அதிதீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த காலத்தில் கடைப்பிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றினார்கள். ஆனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த சிந்தாந்தத்தைக் கைவிட்டுவிட்ட போதிலும், இவர்கள் இன்னும் அதனைக் கைவிடவில்லை.
மாவோயிஸ்ட்டுகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒருவகையில் அது சரி என்ற போதிலும், அவர்களை லஸ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிடத் தேவையில்லை.

மாவோயிஸ்ட்டுகளின் உலகக் கண்ணோட்டம் என்ன? அவர்கள் உலக நிலைமைகள்குறித்தெல்லாம் எதுவும் கூறுவதாகத் தெரியவில்லை.
தெற்காசியா புரட்சியின் விளிம்பில் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தெற்காசியாவில் தேசிய விடுதலை இயக்கங்கள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பாகிஸ்தான் அமெரிக்காவின் தொங்கு சதையாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். அமெரிக்காவின் உதவி இல்லாமல் ஒரு நாள் கூட அதனால் நீடிக்க முடியாது. இப்போது இந்தியாவும் அமெரிக்காவின் மிகப்பெரிய நட்பு நாடாக மாறியிருக்கிறது. வங்க தேசம், இலங்கை நிலைமைகள் சொல்லத் தேவையில்லை. ஆப்கானிஸ்தானத்தில் ஏகாதிபத்தியமும், ‘ நேட்டோ’ படையினரும் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய தெற்காசியா.

மாவோயிஸ்ட்டுகள், எல்டிடிஇ-இனரை தேசிய விடுதலை இயக்கமாக பார்த்தார்கள். எனவேதான் அவர்களின் தோல்வி மாவோயிஸ்டுகளை நிலைகுலைய வைத்துள்ளது.
எல்டிடிஇ இயக்கமானது மிகவும் திட்டமிட்டமுறையில் இலங்கையில் தங்கள் பகுதியிலிருந்த அனைத்து ஜனநாயக மற்றும் இடதுசாரி எண்ணங்கொண்டோரையும், இயக்கங்களையும் அழித்து ஒழித்தது. தாங்கள் வலுவாக இருந்த தமிழ்பேசும் மக்கள் பகுதியில் எதேச்சாதிகார ராணுவ அமைப்பினை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அவர்களது தோல்வியடைந்ததை அடுத்து, அப்பகுதியில் மீண்டும் ஜனநாயக மற்றும் இடதுசாரி இயக்கங்கள் துளிர்விடத் துவங்கியிருக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகளின் உலகக் கண்ணோட்டம் மிகவும் காலாவதியானதும், உருச்சிதைந்ததுமாகும். எனவே இதன் அடிப்படையில் அவர்களால் எந்தவிதமான முடிவுக்கு வர முடியும்?

இந்தியாவைப் பொறுத்தவரை, அவர்கள் 1960களில் தங்கள் கட்சியை ஆரம்பித்தபோது இந்திய ஆளும் வர்க்கமானது ‘தரகுமுதலாளிகள்’ என்ற கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தைத்தான் இன்றைக்கும் கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடு என்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? இந்தியாவில் இன்றைய தினம் வலுவான பெருமுதலாளிகளைக் கொண்ட ஒரு நாடாக வளர்ந்திருக்கிறது.
மாவோயிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை, அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் பாத்திரத்தைப்பற்றி எதுவுமே கூறவில்லை. அவர்கள் விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனாலும் வலுவான விவசாய இயக்கத்தைக் கூட அவர்களால் எந்தப் பகுதியிலும் உருவாக்க முடியவில்லை.

இன்றையதினம் நாட்டின் சில மாநிலங்களில் சட்டீஸ்கார், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்தில் எல்லைப்பகுதிகளில் உள்ள மூன்று மாவட்டங்களில் பழங்குடியினர் பகுதிகளில் - அரசு நிர்வாகம் எளிதில் செல்லமுடியாத வனப்பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளை அணிவகுத்து புரட்சிகர இயக்கத்தை எங்கே அவர்கள் கட்டியிருக்கிறார்கள்?
வர்க்க எதிரிகளை அழித்தொழிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கொல்வது எல்லாம் யாரை? சாதாரண போலீஸ்காரர்கள், அப்பாவி பொது மக்களை. போலீசாருக்கு ‘ஆள்காட்டி’யாக இருந்தார்கள் என்று கூறி இவர்களைக் கொல்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளில் இவர்கள் முழுமையாகத் தங்களுடைய ‘ஆயுதக் குழு’ வையும், துப்பாக்கிகளையும் மற்றும் பல்வேறுவிதமான ஆயுதங்களையும் சார்ந்து இயங்கி வருகிறார்களேயொழிய, மக்களைச் சார்ந்து அல்ல.

ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சகாலம் ஆந்திராவில் சில இடங்களில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு நிலைகுலைவு ஏற்பட்டபின்னர், அவர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

நக்சலைட் இயக்கம் தோன்றிய காலத்திலிருந்தே, மார்க்சிஸ்ட் கட்சிதான் அதன் குறியாக இருந்து வந்தது. 1967இல் மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்தபோதும், பின்னர் 1969இலும், ஆட்சியாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை வேட்டையாடினர். ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொன்று குவித்தனர். 1970களுக்கும் 77களுக்கும் இடையில் 1200க்கும் மேற்பட்ட கட்சியின் முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 350க்கும் மேற்பட்டோர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டவர்களாவார்கள். ஏன்? தாங்கள் வளர வேண்டுமானால், சிபிஎம் தொலைய வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். சிபிஎம் மக்களோடு பின்னிப்பிணைந்து இருந்துவரும் வரை தங்களுக்கு வளர்ச்சிகிடையாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். எனவேதான், எப்போதும் நம் கட்சியின் முன்னணி ஊழியர்களைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள். சென்ற வாரம்கூட 70 தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. நாம் அவ்வாறு கருதவில்லை. அதனை மக்கள் உதவியுடன் அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் எதிர்கொள்வோம். அவ்வாறு அவர்களை நாம் எதிர்த்து நின்றதால்தான் நக்சலைட் இயக்கம் மேற்கு வங்கத்தில் உருவானபோதும், அதனால் அங்கு காலூன்ற முடியாமல் பிற மாநிலங்களுக்குச் சென்றது. இப்போது, ஆளும் வர்க்கத்தின் உதவியுடன் மீண்டும் மேற்கு வங்கத்தில் தலைதூக்க முயற்சிக்கிறது. இதனை நிச்சயம் மக்கள் உதவியுடன் முறியடிப்போம்.

மேற்கு வங்கத்தில் நம் தலைவர்களை அவர்கள் படுகொலை செய்திட குறி வைத்திருக்கிறார்கள். எண்ணற்ற தியாகங்களைச் செய்துதான் மார்க்சிஸ்ட் கட்சி வளர்ந்திருக்கிறது. இப்போதும் அவர்களின் சவால்களை நாம் எதிர்த்து முறியடித்து முன்னேறுவோம்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

(ச. வீரமணி)

3 comments:

Unknown said...

இங்கு உள்ள அதீ தீவிரவாதிகள் கற்பனை உலகில் மிதந்து , தவருதாலன முறையில் எதிர் பிரட்சாரம் செய்து வருவதற்கு எதிராக நம் நிலையை விளக்கிய சிறந்த கட்டுரை.

Thanjai Ramesh said...

மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவு தளம், நிலத்தை, உரிமையை பறிகொடுக்கும் பழங்குடிகள், விவசாயிகள் மத்தியில் இருப்பதையும், மார்க்சிஸ்ட்டுகள் உள்ளிட்ட மையநீரோட்ட இடதுசாரி மாநில அரசுகளின் கொள்கைகள்-தொழில்மயம்-மத்திய அரசின் உலகமய, தாராளமய, பெருமுதலாளிய ஆதரவாக இருப்பதையும் கவனத்தில் கொள்ளாத, போலீ்ஸ்-ராணுவத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்த சுய விமர்சனம் இல்லாத காரத்தின் பேச்சு, சித்தாந்த ரீதியில் மாவோயிஸ்ட்டுகளை எதிர்கொள்ள உதவாத ஒன்றே.

vimalavidya said...

"இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 1960இல் இந்தியாவில் தோன்றியது".The com.Prakash karat's speech about the CPI-ML needs small correction.The CPI-M formed in 1964 and then only the CPI-ML formed at Panchideva,Saribari and Naxalbari in 1969. Now 40 years have rolled with 32 groups in 2009. vimalavidya