Sunday, November 15, 2009
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு-20ஆம் தேதி தொடங்குகிறது: சீத்தராம் யெச்சூரி பேட்டி
புதுடில்லி, நவ. 15-
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலார் கட்சிகளின் மாநாடு வரும் நவம்பர் 20, 22, 22 தேதிகளில் நடைபெறுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
இம்மாநாடு தொடர்பாக ஞாயிறு அன்று கட்சி செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வரும் 2009 நவம்பர் 20 - 22 தேதிகளில் புதுடில்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன.
1993களில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மார்க்சிசம் - லெனினிசம் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பதில் நம்பிக்கை யுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கருத்தரங்கத்திற்கு கட்சி அழைத்தது, இதனைஅடுத்து கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது, சோவியத் யூனியனிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசுகள் வீழ்ந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தது. மாநாட்டின் முடிவில் இரு முக்கிய அடிப்படை அம்சங்கள் குறித்து மறுபடியும் உத்தரவாதமான முடிவினை மேற்கொண்டது. அதாவது, சோவியத் யூனியன் சோசலிசத்தைக் கைவிட்டதால், மார்க்சிசம் - லெனினிசமும் சோசலிச சிந்தனைகளும் தவறாகிவிடாது, மாறாக அந்நாடுகள் மார்க்சிசம் - லெனினிசத்தின் புரட்சிகர சாராம்சத்தையும், சோசலிச சிந்தனைகளையும் கைவிட்டதே காரணம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது.
எனவே மார்க்சிச-லெனினிசம் மற்றும் சோசலிசத்தின் சாதனைகள் மீது நம்பிக்கை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். நாம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட 30 நாடுகளில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். அவற்றில் 25 கட்சிகள் கலந்து கொண்டன. ஐந்து கட்சிகள் கலந்துகொள்ள முடியாத தங்கள் இயலாமையைத் தெரிவித்திருந்தன.
அந்தக் கருத்தரங்கில் இத்தகையதொரு கூட்டத்தை தொடர்ந்து நடத்திடுவது என்றும் உலகில் உள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கூட்டங்களுக்கு அழைப்பது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.
அதனை அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்காக ஒரு செயலாற்றும் குழு (working group) அமைக்கப்பட்டது. அதில் கியுபா, பிரேசில், ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ், லெபனான், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, செக்கோஸ்லேவேகியா மற்றும் நம் கட்சி ஆகியவை அதில் அங்கம் வகித்தன. 1998ல் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியானது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடுகளை நடத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன் அடிப்படையில் முதல் ஏழு மாநாடுகளை கிரீஸில் ஏதன்ஸ் நகரில் நடத்தியது. இம்மாநாடுகளில் கலந்து கொள்ளும் கட்சிகளின் பங்கேற்பது என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்தது.
நாம் இம்மாநாட்டினை உலகின் பல பகுதிகளிலும் நடத்திட வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அதன் அடிப்படையில் அதன்பின்னர் இம்மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எட்டாவது மாநாடு போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனிலும், ஒன்பதாவது மாநாடு பெலாரஸ், மின்ஸ்க்கிலும், பத்தாவது மாநாட பிரேசில், சாவோ பாலோவிலும் நடத்தப்பட்டன. 11வது மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்தியாவில் நடத்துகின்றன.12ஆவது மாநாடு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கிறது. அதன் மூலம் அனைத்துக் கண்டங்களிலும் இம்மாநாடு நடைபெற்று முடிந்துவிடுகிறது.
ஒவ்வொரு மாநாட்டின்போதும் ஒரு சில ஆய்வுப்பொருள்களின் அடிப்படையில் மாநாட்டை நடத்தி வருகிறோம். இப்போது நாம் நடத்தவிருக்கும் 11வது மாநாட்டின் ஆய்வுப் பொருள்களாக, சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு என்பனவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
செயலாற்றும் குழுவின் முடிவின்படி மாநாட்டிற்கு 87 நாடுகளிலுள்ள 111 கட்சிகளை அழைத்திட முடிவு செய்து அழைப்பிதழ்கள் அனுப்பியிருக்கிறோம். இவற்றில்இதுவரை 43 நாடுகளிலிருந்து 53 கட்சிகள் தங்கள் ஒப்புதலை தெரிவித்துள்ளன. அடுத்த சில நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்திடும்.
மாநாட்டின் அடிப்படை நிகழ்ச்சிநிரல் குறித்து சொல்ல வேண்டுமானால், மாநாட்டில் ஒரு வரைவு தீர்மானம் ஆரம்பத்தில் முன்மொழியப்படும். அதனைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று அது இறுதி செய்யப்படும். விவாதங்களில் கலந்துகொண்டுள்ள நாடுகள் ஆங்கில அகரவரிசையில் பங்கேற்றிடும்.
மாநாட்டை நாமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்துவதால், மாநாட்டின் தொடக்க நாள் அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்புரை அளிக்கப்படவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் வரைவு தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
மாநாட்டில் மூன்று நாட்களும் மொத்தம் ஐந்து அமர்வுகள் நடைபெறவுள்ளன. மாநாட்டின் இறுதிநாளன்று மாலை 5 மணிக்கு மாவலங்கார் அரங்கில் பொது மாநாடு நடைபெறும். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களும் மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சிலரும் உரை நிகழ்த்துகிறார்கள்.
சீனம், கியுபா, வியட்நாம், கொரியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டின் முதல் நாளன்று முதல் அமர்விற்கும் இறுதி நாளன்று மாலை நடைபெறவிருக்கும் பொது அமர்விற்கும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அமர்வுகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பத்திரிகையாளர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment