People's Democracy Editorial
தலைநகர் புதுதில்லியில் தெற்கு
தில்லிப் பகுதியில் மே 21 அன்று மிகவும் கொடூரமான முறையில், மாசோண்டா கிடாண்டா ஒலிவியர்
என்னும் காங்கோ நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க மாணவர் மரணம் அடைந்திருப்பது, நாட்டில்
எந்த அளவிற்கு நிறவெறி வேரூன்றி இருக்கிறது என்பதை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து
வந்து கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள். இந்த கறுப்பு மாணவர்கள் அடிக்கடி நிறவெறிப்
பாகுகாட்டிற்கு ஆளாகி தாக்குதலுக்கு உள்ளாவது வெட்கக்கேடாகும்.
மாணவர்கள் மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலிருந்து
வரும் இதர மக்களும்கூட தங்கள் நிறத்தின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நிலைமை
ஏற்பட்டிருக்கிறது. ஒலிவியர் தாக்கப்பட்டு மரணம் அடைந்திருப்பது என்பது தனித்து நடந்த
ஒரு நிகழ்வு அல்ல. மே மாதத்திலேயே ஆப்பிரிக்க மாணவர்கள் இரு வேறு நிகழ்வுகளில் தாக்கப்பட்டிருப்பதைப்
பார்க்க முடியும். மே 2 அன்று ஐவரி கோஸ்ட்டிலிருந்து வந்துள்ள மாணவர் ஒருவர், பெங்களூருவில்
தாக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று ஹைதராபாத்தில்
23 வயதுடைய நைஜீரியன் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில்
தான்ஜனியா நாட்டைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் துயிலுரியப்பட்டு, தாக்குதலுக்குள்ளான
கொடூர சம்பவம் பற்றி நினைவுகூர்க. அவர் ஆப்பிரிக்க பெண்மணி என்ற ஒரே காரணத்திற்காகவே
தாக்கப்பட்டாரேயொழிய வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல. அவர் பயணம் சென்ற கார் ஓரிடத்தில்
போய்க்கொண்டிருந்த சமயத்தில், ஆப்பிரிக்கர் ஒருவரால் ஓட்டி வரப்பட்ட மற்றொரு கார் அங்கே
ஒருவர் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி, ஒரு பெண் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
இந்த சமயத்தில் தான்ஜனியா மாணவி வந்த காரை ஒரு கும்பல் நிறுத்தி, அவரைத் தாக்கி இருக்கிறது.
அங்கே இருந்த காவல்துறையினர் எதுவும் செய்யாது இந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு மட்டும்
இருந்திருக்கின்றனர்.
தில்லியில் ஒலிவியர் கொல்லப்பட்ட
நிகழ்வு இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கர் இனத்தை அச்சத்திற்கும், கலவரத்திற்கும் உள்ளாக்கி
இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து கூட்டாக
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு மனுச் செய்திருக்கின்றனர். தங்கள் தூதரகங்களில்
ஆப்பிரிக்க தினக் கொண்டாட்டங்களை அனுசரிக்கப்போவதில்லை எனத் தீர்மானித்திருக்கின்றனர். ஆப்பிரிக்கர்கள் நிறவெறியின் காரணமாக குறி வைத்துத்
தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஆப்பிரிக்க மாணவர்களின் பாதுகாப்புக்கு
உத்தரவாதம் அளித்திட உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திட வேண்டும் என்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
ஒலிவியர் கொல்லப்பட்ட பின்னர்
ஒருசில நாட்களுக்குள்ளேயே, மற்றொரு சம்பவம் தில்லி புறநகர்ப்பகுதி ஒன்றில் நடந்திருக்கிறது. தெற்கு தில்லியில் உள்ள ராஜ்புர் குர்த் என்னும் கிராமத்தில் நான்கு
பெண்கள் உட்பட ஏழு ஆப்பிரிக்கர்கள் நிறவெறியைக் கூறி தூஷிக்கப்பட்டு, தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட “கைகலப்பு’’
சம்பவம் என்று கூறியும், சத்தமாக இசைத்தட்டுகளை ஒலிபரப்பியதும், பொது இடத்தில் குடித்ததும்தான்
ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் கூறி இதனைக் காவல்துறையினர்
தள்ளுபடி செய்துவிட்டனர்.
இத்தகைய தாக்குதல்கள் தொடர்பாக காவல் துறையினரின் அணுகுமுறை என்பது இவற்றில் நிறவெறித்
தன்மைகள் இருப்பதை ஏற்க மறுப்பதுடன். இவை ஏதோ சில்லரைச் சண்டை என்பது போலவும், பொது
இடங்களில் நடைபெறும் சச்சரவு என்பது போலவும்
இக்குற்றத்தின் தன்மைகளை குறைத்து மதிப்பிடும் விதங்களிலேயே அமைந்திருக்கின்றன.
ஒலிவியர் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தில் கூட, அது ஆட்டோ ரிக்சாவை
வாடகைக்கு அமர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட சண்டை என்பதுபோன்றே சித்தரிக்க முயன்றிருக்கிறது.
ஆட்டோ ரிக்சாவை வாடகைக்கு அமர்த்துவது தொடர்பாக ஏற்படும் வாக்குவாதம் அடித்துக் கொலை
செய்யும் அளவிற்கு செல்வது இந்தியாவில் சர்வசாதாரணம் என்பதுபோல் அது கூறுகிறது.
ஆனால் உண்மை என்ன? இந்தியாவில்
உள்ள காவல்துறையும், அதிகாரவர்க்கமும் கூட கறுப்பின மக்களுக்கு எதிராக நிறவெறி மனோபாவத்தால்
பீடிக்கப் பட்டுள்ளவைகளேயாகும். மோடி அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலரின் எதிர்வினைகளும் கூட மிகவும் வருந்தத்தக்க விதத்திலேயே
அமைந்திருக்கின்றன. ராஜ்பூர் குர்த் நிகழ்வு
நடைபெற்ற சமயத்தில், ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல் ஒரு “மிகச்சிறிய
சச்சரவு’’ என்றும் அதனை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டன என்றும் அயல்விவகாரங்கள் துறை
இணை அமைச்சர் வி.கே. சிங் ஊடகங்கள் மீது குற்றஞ்சாட்டி இருந்தார். மத்திய கலாச்சாரத்துறை
அமைச்சர் மகேஷ் சர்மா, இதுபோன்ற நிகழ்வுகள் ஆப்பிரிக்காவில்கூட நடக்கின்றன என்றும்
நம் நாட்டில் அதுபோன்று நிறவெறி எதுவும் இல்லை என்றும் கூறி இவற்றை மறுத்திருக்கிறார்.
இறுதியாக, ஆப்பிரிக்க நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் ஆப்பிரிக்க மாணவர்களின் பிரதிநிதிகள்
அடங்கிய கூட்டம் ஒன்றில் பேசுகையில், அயல் விவகாரங்கள் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,
காங்கோ நாட்டைச்சேர்ந்த மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னே நிறவெறி கிடையாது என்று
பிரகடனம் செய்திருக்கிறார்.
இந்திய சமூகத்தில் நிறவெறி எந்த
அளவிற்கு மிகவும் கோரமாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது என்பனவற்றையே இந்த நிகழ்ச்சிப்
போக்குகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இத்தகைய நிறவெறி சாதிய அமைப்புமுறையால்
மீளவும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கில்
வாழும் கறுப்புத் தோல் கொண்ட திராவிடர்களைவிட. வந்தேறிகளாக வந்து வட இந்தியாவில் குடியேறித்
தங்கி இருக்கின்ற சிவப்புத்தோல் “ஆரியர்கள்’’
அழகானவர்கள் என்று காலங்காலமாய் கற்பிக்கப்பட்டு வரும் கற்பனை இதன் பின்னே பொதிந்திருக்கிறது.
சாதியப் பாகுபாடுகளுடன் அமைந்துள்ள சமூகம் சிவப்புத் தோல் உள்ளவர்களை அடிமைத்தனத்துடன்
துதிபாடும் குணம் மீளவும் கட்டமைக்கப்பட்டு
வருகிறது. சிவப்புத் தோல் கொண்ட மணமகள் தேவை என்று வருகிற திருமண விளம்பரங்களில்கூட
இது பிரதிபலிக்கிறது. பிரிட்டிஷ் காலனியவாதிகள்
நம்மை ஆண்ட சமயத்தில், வெள்ளைத் தோலுடன் இருந்த பிரிட்டிஷார் உயர்ந்த இனத்தவர் என்று
துதிக்கப்படும் விதத்தில் இத்தகைய சிவப்புத் தோல் கொண்டோரை கும்பிடும் குணம் மீளவும்
ஆழமாகக் கட்டமைக்கப்பட்டது. கறுப்பின மக்கள்
மனிதகுலத்தில் மட்டமானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
இவ்வாறு தோல் நிறத்தின் அடிப்படையிலான
இனவெறி மக்கள் மத்தியில் காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வந்து, சமூகத்திலும் சாதிகளிலும்
சமத்துவமின்மையைக் கொண்டு வந்திருக்கிறது. இதில்வேடிக்கை வினோதம் என்னவென்றால், வெளிநாடுகளில்
இந்தியர்கள் அனைவருமே -- அவர்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் -- கறுப்பர்கள் என்றேதான்
வெள்ளையர்களால் கருதப்பட்டு, நிறவெறிப் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆனால்
இவர்களோ இங்கேயுள்ள கறுப்புத் தோல் உள்ளவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்று தங்களைக்
கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில், தலித் பெண்கள்
பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது, அல்லது பழங்குடி இனத்தவர் மிகவும் கொடூரமான
முறையில் சுரண்டப்படுவது, அல்லது சாதிய அடுக்கில் அடித்தட்டில் உள்ளவர்கள் கொத்தடிமைகளாக
உழைத்துவருவது ஆகிய அனைத்துமே இத்தகைய நிறவெறி மற்றும் சாதிய வெறி சமூக ஒழுங்கின் கீழ்
அமைந்த அனைத்துவிதமான அம்சங்களுமாகும். எனவேதான், எப்படி நாம் சாதிய ஒடுக்குமுறை மற்றும்
சாதியப் பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அதேபோன்று நிறவெறிக்கு
எதிராகவும் போராட வேண்டும்.
ஆனால், மத்தியில் ஆட்சியில்
உள்ள பாஜக அரசாங்கம், இத்தகைய பாகுபாடுகளின் வடிவங்களை குற்றமாகப் பார்க்கக்கூடிய பார்வையினைப்
பெற்றிருக்கவில்லை. இந்த அரசாங்கம் இந்து தேசியவாதம் மற்றும் தன்னுடைய குறுகிய மதவெறி
அடையாளத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள பல
இனத்தவரையும் ஒதுக்கிவைக்கும் குணத்துடன் அமைந்துள்ள நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்
சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் ஆட்சியின்கீழ்,
வெறிக் கும்பல்களைச் சேர்ந்தோர் மாட்டுக் கறி சாப்பிடுவோரை தாக்குகின்றனர், அல்லது
பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்களைத் தாக்குகின்றனர்,
அல்லது வேறுவிதமான சிந்தனை உடையோரையும் தாக்குகின்றனர். இத்தகைய சூழல்தான், வித்தியாசமாகக்
காண்போரை மற்றும் வித்தியாசமான கலாச்சார வாழ்க்கை முறையைக் கொண்டிருப்போரைத் தாக்குவதற்கு
ஈனப்பிறவியினருக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தங்கள் தோலின் நிறம் மற்றும் வாழும் விதம்
ஆகியவற்றின் காரணமாக சிறுசிறு குழுக்களாக ஆங்காங்கே இவர்கள் தனித்து வாழ்ந்து வருவதால்,
இத்தகைய இழிபிறவிகளால் மிக எளிதாகத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் கண்ணியத்துடனும்,
நிம்மதியுடனும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது
என்பது, எந்த அளவிற்கு இந்தியாவில் சமூக வாழ்க்கை மற்றும் குடிமைப் பண்புகள் தரம் தாழ்ந்து
சென்று கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
(ஜூன் 1, 2016)
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment