Thursday, June 9, 2016

அமெரிக்காவின் நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு துணைபோகிறது மோடி அரசு--பிரதான ராணுவக் கூட்டாளியாக அறிவிப்பு --நாசகர அணு உலைகளை வாங்குவதற்கும் ஒப்பந்தம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்; நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தல்
புதுதில்லி, ஜூன் 9-
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள, 50 பத்திகள் கொண்ட இந்திய - அமெரிக்க கூட்டறிக்கையானது, இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றி விட்டது என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையில் பெரிய அளவில் விலகிச் சென்றுள்ளதை அனுமதிக்க முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அரசியல் தலைமைக்குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள சமயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும்: 21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள உலகக் கூட்டாளிகள் - 1 என்னும் தலைப்பிட்டு 50 பத்திகளுடன் இந்திய - அமெரிக்க கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் உலகளாவிய நீண்டகால நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு இந் தியாவை, ஓர் இளைய பங்காளியாக மாற்றி இருக்கிறது. ஒப்பந்தத்தில் அநேகமாக இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்துஉறவுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக் கிறது. அதேபோன்று, இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த சுயேச்சை யான அயல்துறைக் கொள்கை கைவிடப்படுவ தாகவும், அமெரிக்காவின் உலக அளவி லான நீண்டகால நயவஞ்சகச் சூழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவும் செயல்படும் என்றும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் பிரகடனத்தை செயல்படுத்திட இந்தியாவின் உறுதிமொழி, அமெரிக்காவின் குறிக்கோள்களை சரி என்று ஏற்றுக்கொள்ளும் அறிவுசார் சொத்துரிமைகள் (இது இந்தியாவின் நலன்களுக்குமானது என்றும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது), ராணுவம் சாரா அணுசக்தி ஒத்து ழைப்பு மற்றும் முக்கியமாக பாதுகாப்புத் துறை யிலான ஒப்பந்தங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஒப்பந்தத்தில் காணப்படுகின்றன. இதில் பத்து பத்திகள் ராணுவம் (பாதுகாப்பு) சம்பந்தப்பட்ட பிரச் சனைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடல்வழி மற்றும் ஆகாய வழி பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம்
கடல்வழி மற்றும் ஆகாய வழி ஆதரவு ஒப்பந்தத்திற்கு தளவாடப் பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஒரு புதிய பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இது, அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், கடல் வழி மற்றும் ஆகாய வழி வழியாக எரிபொருள், உதிரி பாகங்கள், மெக் கானிக்குகள் போன்றவர்களை கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கிறது. இதன்மூலம் அமெரிக்கா, உலகின் எந்தப் பகுதியில் தன் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அமெரிக்காவின் விமானப்படையின் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வது உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். மேற்கு ஆசியாவில் அமெரிக்க/நேட்டோ ராணுவத் தலையீடுகள் இருக் கின்ற சமயத்தில், அந்த நாடுகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அதிகம் வாழக் கூடிய நிலையில், இந்த ஒப்பந்தமானது இந்தியாவின் அயல்துறைக் கொள்கைக்கும் அதே போன்று அந்த நாடுகளில் வேலை செய்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நம்முடைய சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைக் கைவிடுவ தோடு, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிரதேசத்தில் உள்ள நட்பு நாடுகளுடனான நம் இருதரப்பு நலன்களையும் கைவிடுவதாகும்.
ஆசியா-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்மை பங்காளிகள்
இந்தியாவின் உறவுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஆசியா-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்கள் தற்போது அமெரிக்காவின் நலன்களுடனும், சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்கிற சூழ்ச்சித் தனமான குறிக்கோளுடனும் சமப்படுத்தப்பட்டிருக்கிறது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு என்று இந்தியா நீண்டகாலமாகப் பேணிப்பாதுகாத்து வந்த கொள்கையையும், கிழக்கே நட்புக்கரம் நீட்டும் கொள்கை’’ யையும் மோடி அரசாங்கம் மிகவும் தெளிவான முறையில் கைவிட்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் இந்தியா யாருக்கு எதிராக அமெரிக்காவின் முதன்மைப் பங்காளியாக மாறியிருக்கிறது என்பதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்
பிரதான ராணுவக் கூட்டாளி
மேற்படி கூட்டறிக்கையில், அமெரிக்கா இந்தியாவிற்கு பிரதான ராணுவக் கூட்டாளி என்ற அந்தஸ்தை அளித்திருக்கிறது. இதன் கடப்பாடுகள் என்ன? இவை அனைத்தும் மிகப்பெரிய பிரச்சனைகள். இவை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இப்போதைய பாஜக தலைமையிலான மோடி அரசாங்கத்தால் எவ்வித விவாதமும் இன்றி தீர்மானிக்கப் பட முடியாதவைகளாகும்.
ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தம் : அணு உலைகள் வாங்குவதை ரத்து செய்க!
ஆந்திரப்பிரதேச மாநிலம் கொவ்வடா வில் அமைக்கப்படவிருக்கும் அணுமின் நிலையத்திற்காக வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் அணு உலைகளை வாங்க இருக்கிறார்கள். இவை மிகவும் அதீத விலையுள்ளவைகளாகும். ஏற்க முடியாத, பொருத்தமற்ற வணிகமுமாகும். இது அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்திற்கான பிரதிபலனாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ‘ஏபி1000’ எனும் அணு உலைகளின் விலை மிகவும் அதிகமானது என்பதால் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஜெய்தாப்பூரில் அமைக்கப்படும் பிரான்சின் ‘அரிவா’ அணுஉலை களைப் போலவே இதுவும் தடை செய்யப்பட வேண்டியதேயாகும். ஆறு அணு உலைகளுக்கும் மிகவும் குறைத்து மதிப்பிட்டாலும் 2.8 லட்சம் கோடி ரூபாய் விலை கொடுக்க வேண்டி வரும். அதன்காரணமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் மக்களால் வாங்கமுடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும். மேலும், ஆறு உலைகளையும் ஒரே இடத்தில் நிறுவுவது பாதுகாப்பு அம்சங்களுடன் சமரசம் செய்வதாகிவிடும். ஏதேனும் அணு விபத்து ஏற்படின் அதன் பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருந்திடும். வெஸ்டிங்ஹவுஸ் அணு உலைகளுக் கான ஒப்பந்தம், இது தொடர்பாக ஏற்கனவே அணு உலைகளை விநியோகிப்பவருக்கு இருக்கும் பொறுப்பை பயனற்றதாக்கும் விதத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் உள்ள காப்பீடு இடர் மற்றும் பொறுப்புகளை இந்தியாவில் உள்ள தேசியமய மாக்கப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலமாக பொதுத்துறை நிறுவனங்கள்தான் ஏற்க வேண்டும். இவ்வாறு மிகவும் அதீத விலை கொடுத்து, எவ்விதப் பிரயோஜனமும் இல்லாத அணு உலைகளை வாங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. ஏனெனில் இறுதி ஒப்பந்தம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் கார்ப்ப ரேட்டுகளுக்கு இந்திய மக்களின் நலன்கள் மற்றும் வளத்தை அடகு வைத்து கொள்ளை லாபம் ஈட்ட இந்திய அரசை அனுமதிக்க முடியாது.
இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் பொது மக்களின் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இந்தியாவின் அயல்துறைக் கொள்கை மற்றும் சுயேச்சையான ராணுவ வல்லமை போன்றவை தொடர்பாக இத்தகைய பெரியதொரு கொள்கை விலகலை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியிருக்கிறது.
(ந.நி.)






No comments: