Thursday, June 9, 2016

ஈராண்டு மோடி ஆட்சி கொண்டாட்டம் சாமானிய மக்களுக்குத் திண்டாட்டம்


ஈராண்டு மோடி ஆட்சி கொண்டாட்டம்
சாமானிய மக்களுக்குத் திண்டாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுபிரசுரம் வெளியிடப்பட்டது
புதுதில்லி, ஜூன் 10-
…“ஈராண்டு மோடி ஆட்சி கொண்டாட்டம், சாமானிய மக்களுக்குத் திண்டாட்டம்’’ என்னும் தலைப்பில் மோடி ஆட்சியின் ஈராண்டு காலம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுபிரசுரம் ஒன்று வியாழக்கிழமை  வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும் இதனை வெளியிட்டார்கள்.
இது தொடர்பாக கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இப்பிரசுரத்தை சீத்தாராம் யெச்சூரியும், பிருந்தா காரத்தும் வெளியிட்டார்கள். அதன்பின்னர் செய்தியாளர்களிடையே அவர்கள் பேசியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்று ஈராண்டுகள் ஆனதை அடுத்து அக்கட்சியின் சார்பில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்விரண்டு ஆண்டு கால ஆட்சி என்பது சாமானிய மக்களுக்குப் பல்வேறு துறைகளிலும் கடும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது எப்படி என்று இந்த சிறுபிரசுரத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ள
மோடி அரசாங்கம் மூன்று முனைகளில் மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை, அதைவிட மிகவும் கொடூரமான முறையில் மோடி அரசாங்கம் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, நாட்டில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறித் தீயை மிகவும் கூர்மையாக விசிறி விட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், தாத்ரியில் மாட்டுக்கறி உண்டார்கள் என்று கூறி ஒரு குடும்பத்தினருக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரத்தைக் கிளறி விட்டிருக்கக்கூடிய நிகழ்வாகும். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, இந்துத்துவாவின் மதவெறி வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியாக இப்போது மிகவும் இழிவான முறையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிடத் தொடங்கிவிட்டது. மூன்றாவதாக நாட்டின் அரசமைப்புச் சட்டத்தைக் கிஞ்சிற்றும் மதிக்காது, எதேச்சாதிகாரப் பாதையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜக அல்லாத மாநில அரசுகளைக் கலைக்க முயற்சிகள் மேற்கொண்டது. அருணாசலப் பிரதேச மாநில அரசைக் கலைத்தது. அடுத்து உத்தர்கண்ட் மாநில அரசைக் கலைத்தது.
இவ்வாறு எப்படி எல்லாம் மோடி அரசாங்கம் மக்கள் விரோதப் பாதையில் கடந்த ஈராண்டு காலமாக செயல்பட்டு வந்திருக்கிறது என்பது இந்தச் சிறுபிரசுரத்தில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரியும், பிருந்தா காரத்தும் கூறினார்கள்.
தோ சால், ஜனதா பேஹால் (மோடி அரசாங்கத்தின் ஈராண்டுகள்) என்று தலைப்பிட்டுள்ள இந்த சிறுபிரசுரம் 88 பக்களைக் கொண்டிருக்கிறது. பிருந்தா காரத்தின் அறிமுகத்துடனும், புதிய மும்மூர்த்தியின் கோர முகங்கள் என்கிற சீத்தாராம் யெச்சூரியின் கட்டுரையையும் அடுத்து நான்கு பிரிவுகளில் 17 கட்டரைகள் வெளியாகி இருக்கின்றன.
முதல் பகுதியில் பணக்காரர்களுக்கான ஆட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோடி அரசாங்கத்தின் தாக்குதல்கள், வேளாண்மை: விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துக் கட்டியிருத்தல், மகளிர்க்கு எதிராக பாஜக தொடுத்துள்ள யுத்தம், மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு பட்ஜெட் செலவினங்களை வெட்டிக் குறைத்திருக்கிறது, மாணவர்கள் மீது மோடி அரசாங்கத்தின் தாக்குதல்கள், சுகாதாரத் துறையில் மோடி அரசாங்கம் படுதோல்வி, தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் என்னும் தலைப்புகளில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது பகுதியில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது, மக்கள் முன் உள்ள கேள்விகள், விலைவாசி உயர்வு, வர்த்தகர்களைக் கொழிக்க வைக்க சாமானிய மக்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள், பசி-பட்டினி-பஞ்சத்திலும் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவுடனும் இருப்போருக்கு எந்த நிவாரணமும் இல்லை என்று மூன்று கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
மூன்றாவது பகுதியில் லஞ்சம் வாங்கமாட்டோம், எவரையும் லஞ்சம் கொடுக்க அனுமதிக்கவும் மாட்டோம் என்றீர்களே, எதார்த்த நிலை என்ன என்று ஒரு கட்டுரையும், ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகும்போது என்று ஒரு கட்டுரையும், ஏன் மௌனமாக இருக்கிறீர்கள் மிஸ்டர் மோடி என்று ஒரு கட்டுரையும் ஆக மொத்தம்  மூன்று கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
நான்காவது பகுதியில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையால் அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள ஆதாயங்கள் என்று ஒரு கட்டுரையும் வெளியாகி இருக்கிறது.
(ந.நி.)



No comments: