எது நடந்தாலும் காணாதது போலவும். கேளாதது போலவும் மவுனமாக இருப்பதற்கான காரணம் என்ன, மிஸ்டர் மோடி?
-சுபாஷிணி அலி
உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்னுமிடத்தில் 2015 செப்டம்பர் 28 அன்று முகமது அக்லாக் என்பவர் இந்து மத வெறியர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார், அவர் மகன் தானிஷ் என்பவர் பலத்த காயங்களுக்கு ஆளானார், அவரது வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அக்குடும்பத்தார் மாட்டுக் கறி வைத்திருந்தார்கள் என்று வதந்தி பரவி இருந்ததே காரணமாகும். மனிதாபிமானம் உள்ள எவராலும் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் இந்து ராஷ்ட்ரம் நிகழ்ச்சிநிரலின் ஒரு பயங்கரமான அடையாளமாக இத்தகைய வெறித்தனத்தை நடத்தி இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் நிகழ்ச்சிநிரலை எப்படி எல்லாம் உந்தித்தள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்? நாட்டின் மிக உயர்ந்த கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களின் தலைவர்களாக, தகுதி குறைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது என்பது வழக்கமாகவே மாறி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் வளையத்திற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் எவ்வளவு பெரிய வல்லுநர்களாக இருந்தாலும் அவர்களை வேண்டுமென்றே தரக்குறைவாகத் தாக்குவதை நடைமுறையாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம், ரிசர்வ் வங்கி ஆளுநரை பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி மிகவும் கண்டித்தக்கவிதத்தில் கோழைத்தனமாகத் தாக்கி இருப்பதாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள வரலாறு மற்றும் இதரப் பாடப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இருந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் மற்றும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு குறித்தும் இருந்த பகுதிகளை நீக்கியிருப்பதாகும். இதையே நீக்கியவர்கள், நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றதை பாடப் புத்தகத்தில் விட்டு வைப்பார்களா? அதையும் நீக்கி விட்டார்கள்.
அதிகரித்து வரும் மதவெறி வன்முறைகள்
ஆர்எஸ்எஸ் தலைமையில் உள்ள சங் பரிவாரம் (பாஜக இதன் ஓர் அங்கம்தான்) தங்கள் அரசியல் வெற்றிகளுக்கும், தங்களை நோக்கி இந்து மதத்தில் உள்ள பல்வேறு இனங்களையும் தங்களை நோக்கி இழுப்பதற்கும் மதவெறியை அதிகரிப்பதே ஒரே வழி என்று நம்பி அதன் படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங் பரிவாரம் உருவான காலத்திலிருந்தே, மதவெறி நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் கூர்மைப்படுத்தி அதன் மூலம் தாங்கள் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. மாநில அரசுகளை அமைப்பதில் எங்கெல்லாம் அவர்கள் வெற்றி பெற்றார்களோ அங்கெல்லாம் இந்த வேலைகளை மிகவும் வேகமாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகரான மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் வழிகாட்டுதலின்படி, பல்வேறு மாநிலங்களிலும் சங் பரிவாரம் தன் மதவெறியாட்டங்களை நடத்துவதற்கு ஒரு கேடயமாக நின்று அதற்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. 2014ஆம் ஆண்டைக் காட்டிலும், 2015ஆம் ஆண்டில் மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் 17 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.
இந்தப் புள்ளி விவரங்கள் கூட உண்மையில் மதவெறியின் உண்மையான பரிமாணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்காது. ஏனெனில் பதிவு செய்யப்பட்ட மதக் கலவரங்களின் அடிப்படையில்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் மதவெறி உணர்வைக் கொண்டு சென்றிருப்பது என்பது இதைவிடப் பன்மடங்கு அதிகமாகும். மத மாற்றம் என்ற பெயரில் முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் அல்லது வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் இப்புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் எல்லாம் `பாகிஸ்தான் ஆதரவு தேச விரோதிகள்’ என்று உடனடியாக முத்திரை குத்தப்பட்டு, அவர்களது எதிர்ப்புக்கு மதவெறிச் சாயம் பூசப்பட்டுவிடுகிறது.
2014 மே
இறுதியில் பிரதமர் மோடி “அனைவருடனும்
இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’’ (‘Sabka Vikas, Sabke Saath’,,) என்று உறுதிமொழி
எடுத்துக் கொண்ட ஒருசில நாட்களிலேயே, இந்து வெறியர்களின் கும்பல் ஒன்று புனேயில்
முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளையும், சொத்துக்களையும் அடித்து நொறுக்கின. சங்
பரிவாரக் கும்பலிடமே மிகவும் `நல்ல
முஸ்லீம்’ என்று பெயர் வாங்கியிருந்த ஓர் இளம் ஐடி பொறியாளர், மொஹ்சின் ஷேக்
என்பவர் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப் பட்டார். இதன்பின்னர் சில நாட்கள் கழித்து ஒரு தலித்
சிறுமி முஸ்லீம்களால் மானபங்கப்படுத்தப்பட்டார் என்றும், சிவாஜி சிலை
சேதப்படுத்தப்பட்டது என்றும் சில பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் பல
அப்பாவி முஸ்லீம்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
இதுபோன்று தங்களின் ஊடகங்களில் செய்திகளைப் போட்டு, அதனைத் தொடர்ந்து
முஸ்லீம்கள் மீது தாக்குதல் தொடுப்பது சங்
பரிவாரக் கும்பலின் உத்தியாகும். இவ்விரு
செய்திகளுமே பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்று பின்பு தெரிந்துவிட்டன. 2015ஆம் ஆண்டில் ஜாம்ஷெட்பூரிலும் இதேபோன்று
வதந்திகள் பரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லீம்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு மோதல் ஏற்பட்டதை அடுத்து பல நாட்கள் அங்கே
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயினும் பின்னர் அவ்வாறு ஒரு நிகழ்வே
நடைபெறவில்லை என்று காவல்துறையினர் கூறினார்கள்.
அப்படியே சம்பவங்கள் நடந்திருந்தால்கூட, ஆர்எஸ்எஸ்-உம் அதன் பரிவாரங்களும், அவ்வாறு வன்புணர்வுக் குற்றங்களைச் செய்திட்ட கிரிமினல்கள், அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சம்பவங்களுக்கு மதவெறிச் சாயம் பூசுவதிலேயே குறியாக இருப்பார்கள். இவ்வாறு, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களையும் சங் பரிவாரம் தங்கள் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும். ஒவ்வோராண்டும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துப் பெண்கள் தங்கள் சொந்தக் குடும்பங்களிலேயே வரதட்சணைக் கொடுமை காரணமாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இது குறித்து எல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
உத்தரப்பிரதேசத்தில் மிக அதிக அளவில் மதவெறி மோதல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. 2017இல் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருப்பதையொட்டி, பாஜக-வினர் இவ்வாறான மோதல்களை அதிகப்படுத்திட முனைந்துள்ளனர். இவ்வாறு இவர்கள் சென்ற மக்களவைத் தேர்தலின்போது மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மதவெறிக் கலகங்களை ஏற்படுத்தியதன் மூலம் தேர்தலில் அதிக அளவில் அறுவடை செய்தனர். அதேபோன்று சட்டமன்றத் தேர்தலிலும் அறுவடை செய்திட மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். 2014 மே மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடையில் இம்மாநிலத்தில் 13 மத வெறி மோதல்கள் நடைபெற்று ஐந்து பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீரட்டில் மூன்று மோதல்கள் நடந்துள்ளன. மொராதாபாத்தில் ஒன்று நடந்துள்ளது. முசாபர்நகர் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்வுகள் நடந்து தொடர்ந்து பதற்றத்திலேயே இருந்துவருகிறது. பிரதாப்கார், பைசாபாத், பஹ்ரைச், சஹரான்பூர், ஷாம்லி, கௌதம் புத் நகர், மதுரா என அனைத்து இடங்களிலும் மோதல்கள் நடந்ததைப் பார்த்தோம். மக்களவைத் தேர்தலுக்குப்பின் 2014 ஆகஸ்ட்டில் 600க்கும் மேற்பட்ட மத மோதல்கள் உ.பி.யில் நடந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஈராண்டுகளில் இதே போன்ற சம்பவங்கள் சிற்சில மாற்றங்களுடன் ஹரியானா, தில்லி, ஹைதராபாத், குஜராத், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும் உத்தரப்பிரதேசம்தான் இவர்களின் குவி மையமாகும். இதன் பொதுவான அம்சங்கள் என்னவெனில் சங் பரிவாரக் கும்பல் இத்தகைய மோதலில் ஈடுபடும், வழக்கம்போலவே காவல்துறையினரும் நிர்வாகத்தினரும் இதற்கு உடந்தையாக இருப்பார்கள். சொத்துக்கள் அழிக்கப்படுவது, உயிரைப் பறிப்பது என்பது முஸ்லீம்களுக்குள் மட்டுமே இருந்திடும்.
இரு மதத்தினருக்கும் இடையே மதவெறி நஞ்சை விதைப்பதில் சங் பரிவாரம் கலகங்களை உருவாக்குவது என்கிற உத்தியை மட்டும் மேற்கொள்வதில்லை, வேறு பல விதங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்துத்துவா பயங்கரவாதத் தாக்குதல்கள்
மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோதே, இந்துத்துவா குழுக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டு, கடைசியில் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும் என்ற சந்தேகம் ஆழமான முறையில் இருந்தது. மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கு, ஹைதராபாத் மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல்கள் வழக்கு, சம்ஜூவாதா எக்ஸ்பிரஸ் தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் ஷரீப் வெடிகுண்டுத் தாக்குதல்கள் என இந்த வழக்குகள் அனைத்துமே பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. இதேபோன்று இந்துத்துவா பயங்கரவாதிகள் நாட்டில் 16 நிகழ்வுகளை நடத்தியுள்ளதாக சந்தேகத்திற்குள்ளாகி இருக்கின்றனர். மாலேகான் குண்டுவெடிப்புத் தாக்குதலை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான ஹேமந்த் கர்காரே என்னும் நேர்மையான மற்றும் வீரம்செறிந்த காவல்துறை அதிகாரிதான் அபினவ் பாரத் என்று அழைக்கப்படும் இந்துத்துவா குழுதான் இந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் அனைத்திற்கும் காரணம் என்பதை மிகவும் உன்னிப்பாகப் புலனாய்வு செய்து வெளிக்கொணர்ந்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை தாக்குதலை நடத்தியபோது அதில் ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ள ராஷ்ட்ரிய ஜக்ரன் மஞ்ச், சாரதா சர்வாக்யா பீத், இந்து ராஷ்ட்ர சேனா மற்றும் பல அமைப்புகள் குறித்தும் புலனாய்வு மேற்கொண்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஸ்வாமி ஆசீமானந்த் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் தான் மேற்கொண்ட சந்திப்புகள் குறித்து ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார்.
மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த வழக்குகளை நடத்தி வந்த தேசியப் புலனாய்வு ஏஜன்சியின் அரசுத்தரப்பு வழக்குரைஞரான ரோஹினி சாலியான் என்பவரை இவ்வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, அவர் ராஜினாமா செய்து விட்டார். வழக்கில் சாட்சிகளாக பிணைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அரசுத் தரப்பு வழக்கிற்கு பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். சம்ஜூவாதா எக்ஸ்பிரஸ் வழக்கில் 15 சாட்சிகளும், ஆஜ்மீர் ஷரிப் தாக்குதல் வழக்கில் 19 சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள். ஸ்வாமி ஆசீமானாந்த்திற்கு எதிராக சாட்சியம் அளித்திருந்த இரு சாட்சிகளும் கூட பிறழ் சாட்சிகளாகி விட்டார்கள். இப்போது தேசியப் புலனாய்வு ஏஜன்சி, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த “சாமியாரினி’’ பிரக்யாவிற்கும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் சுத்தவாளி என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம் ஹேமந்த் கர்காரே போன்ற அற்புதமான அதிகாரியின் புலனாய்வுகள் அனைத்தும் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டன. இது பாஜக ஆட்சியின் இரண்டகமான நிலையையே காட்டுகிறது. அவர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதம் என்பதற்கு மத முத்திரை குத்தப்பட்டு, அதனை இந்துத்துவா பயங்கரவாதிகள் புரிந்திருந்தால், அவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்பட மாட்டார்கள்.
புனித ஜிகாத் காதல்
2014
ஆகஸ்ட் 4 அன்று தேசிய நாளேடுகளில் ஓர் 20 வயது இந்து ஆசிரியை, கட்டாயப்படுத்தப்பட்டு முஸ்லீமாக மாற்றப்பட்டு, முஸ்லீம்களால் கூடடு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று அனைவரையும் ஆவேசத்திற்கு உள்ளாக்கும் விதத்தில் ஒரு செய்து வெளிவந்தது. மத மோதல்கள் அடிக்கடி நடந்து கொண்டிருந்த மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சஹரன்பூர் மாவட்டம் அருகே இவ்வாறு நடந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு சென்று, தான் ஒரு முஸ்லீம் இளைஞருடன் ஓடிவிட்டதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் முஸ்லீமாக மாறிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார். மேலும் அவர், தன்னை தன் கணவருடன் வாழ அனுமதிக்குமாறும்
வலியுறுத்தி இருக்கிறார். அந்தப் பெண்மணியின் தந்தை, தன்னை ஒரு உள்ளூர் பாஜக தலைவர் அணுகி 25 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், இந்த சம்பவத்தை வன்புணர்வு என்று மாற்றி, அவர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார் என்று வாக்குமூலம் அளிக்குமாறும் தன்னிடம் கூறியதாகவும் கூறியிருக்கிறார். இதேபோன்று அந்தப் பகுதிகளில் மதப் பதற்றத்தை உருவாக்கும் விதத்தில் நிகழ்ச்சிகளை உருவாக்கி இருக்கின்றனர். காலங்காலமாக நம்பிக்கையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்த இரு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே, இவ்வாறு குடுமிபிடி சண்டையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதே போன்றதொரு சம்பவம் 2014 அக்டோபரில் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஒரு கிறித்துவ இளைஞன், ஜோசப், ஓர் இந்து பெண்ணை, ஆயுஷி, (இருவரும் திருமண வயதைத் தாண்டியவர்கள்தான்) போபாலில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக அவர்களுடைய ஊரான ஜோபாட்டில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தோர் நூற்றுக்கணக்கானோர் கூடி கிளர்ச்சி செய்திருக்கிறார்கள். ஜோசப் இந்துவாக மாறியிருக்கிறார் என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களைப் பார்த்து சமாதானம் செய்ய முயற்சித்திருக்கிறார். கிறித்துவர்கள் தங்கள் மக்கள்தொகையைப் பெருக்குவதற்காக இவ்வாறு திருமணங்கள் செய்து கொள்கிறார்கள் என்று பஜ்ரங் தளத்தினர் குற்றம்சாட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆயுஷி தற்போது ஓர் அரசின் இல்லத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார். ஜோசப் அவருடைய வீட்டில் இருக்கிறார். இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லீம் மற்றும் கிறித்துவ இளைஞர்கள் இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுவருகிறார்கள் என்று பஜ்ரங் தளத்தினரும் மற்றும் அதனுடன் இணைந்த இதர அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்கள் குறித்தும் மிகவும் தரக்குறைவாக வசைமொழிகளில் அவதூறு செய்து வருகின்றனர்.
கிறித்துவர்கள் மீதும் தாக்குதல்
சட்டீஸ்கார் மாநிலத்தில் பஸ்டார் மாவட்டத்தில் சிரிஸ்குடா என்னுமிடத்தில், கிறித்துவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக விசுவ இந்து பரிசத் பிரச்சாரம் மேற்கொண்டதைத் தொடர்ந்து 2014 ஜூலையில் 50 கிராமங்களுக்குள் கிறித்துவ மிஷனரிகள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பஸ்டார் மாவட்டத்தில் உள்ள 50 கிராம பஞ்சாயத்துக்கள் சட்டீஸ்கார் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் 129(ஜி) பிரிவின்கீழ், “கிராமங்களில் இந்து அல்லாத மதப் பிரச்சாரம், பிரார்த்தனைகள் மற்றும் பேச்சுக்களுக்குத் தடை’’ விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில், “சில வெளி மதப் பிரச்சாரகர்களால் கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடை செய்வதற்காகவும், இந்து தெய்வங்கள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காகவும்,
சிரிஸ்குடா கிராம சபை இந்து அல்லாத மதங்களின் பிரார்த்தனைகள், சந்திப்புகள் மற்றும் பிரச்சாரம் போன்ற மத நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கிறது,’’ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. கிறித்துவர்கள் தாக்கப்பட்டனர். கிராமப் பஞ்சாயத்தின் உத்தரவின்படி ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டில் கிறித்துவ மதத்திற்கு மாற்றி சோனூறு மண்டவி கூறுகையில், “நாங்கள் கடந்த இரு மாதங்களாக ரேஷன் பொருட்கள் எதுவும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டிருக்கிறோம். ரேஷன் பொருட்களை வாங்கச் சென்ற 10 கிறித்துவர்கள் தாக்கப்பட்டனர்,’’ என்றார்.
வெறுப்பைக் கக்கும் பேச்சு
சங் பரிவாரத்தின் தலைவர்கள், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களை உமிழ்வது என்பது நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறி இருக்கிறது. இதில் மிகவும் மோசமான பேச்சு என்பது 2015 மார்ச் 15 அன்று யோகி ஆதித்யநாத், எம்.பி. உமிழ்ந்ததாகும். இறந்த முஸ்லீம் பெண்களை மீண்டும் தோண்டி எடுத்து அவர்களை வன்புணர்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்று தன் கூட்டத்தைக் கேட்க வந்தவர்களுக்கு வெறியேற்றக்கூடிய அளவிற்கு மிகவும் தரம் தாழ்ந்தமுறையில் இந்த நபர் பேசினார். உத்தரப்பிரதேசம், காசியாபாத்தில் அதன்பின் சில மாதங்களில் அக்டோபரில் இதேபோன்று காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை ஒன்று நடந்தது. அந்தச் செயலைச் செய்த இழிபிறவிகள் இந்த ஆளின் பேச்சைக் கேட்டு அவ்வாறான இழிசெயலில் இறங்கி இருக்கலாம். இரு இந்து இளைஞர்கள் இரு நாட்களுக்கு முன் புதைக்கப்பட்ட ஓர் 26 வயது முஸ்லீம் பெண்ணைத் தோண்டி எடுத்து, வன்புணர்வில் ஈடுபட்டார்கள்.
புனிதப் பசு பிரச்சனை
தாங்கள் கும்பிடும் பசுவை முஸ்லீம்கள் கறிக்காக அடித்துக் கொல்லுகிறார்கள் என்று சங் பரிவாரக் கும்பல் அடிக்கடி பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கிறது. மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தபின்னர் பல மாநில அரசுகள் பசு வதைத் தடைச் சட்டங்களைக் கடுமையாக்கி இருக்கின்றன. எருதுகளையும், இளங்கன்றுகளையும் அதன் வரையறைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. இது முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்கள் மத்தியிலும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மத்தியிலும் பெருமளவில் பொருளாதார சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைச் சாக்காக வைத்துக் கொண்டு நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்களைக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது.
2015
மற்றும் 2016களில் ஜம்மு (ஜம்மு-காஷ்மீர்), ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இவ்வாறு முஸ்லீம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி, கொல்லப்பட்டார்கள். இதில் மிகவும் மோசமான உதாரணம், ஜார்கண்ட் மாநிலத்தில் லடேகர் என்னுமிடத்தில் நடந்ததாகும். ஒரு 12 வயது சிறுவனும், அவனது மாமாவும் மாட்டுச் சந்தைக்காக எட்டு எருதுகளை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். பசு பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, மிகவும் கொடூரமான முறையில் அடித்து, கொன்று அவர்களை மரத்தில் தொங்கவிட்டிருக்கின்றனர். கால்நடைகளைக் கடத்துபவர்கள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அம்மாநில பாஜக முதல்வர் இதனை நியாயப்படுத்தி இருக்கிறார். நடந்த சம்பவம் என்ன என்று வெளியே வந்தபின்னர், அவர் பின்வாங்கினார். எனினும் முதல்வரின் கருத்தைத் தெரிந்து கொண்ட காவல்துறையினர் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செய்கையில் ஈடுபட்டவர்களை விசாரிக்கக்கூட மறுத்துவிட்டனர். ஏனெனில் பசு பாதுகாப்புச் சங்கம் என்பது ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். இவ்வாறு இந்த அமைப்பு பாஜகவினரின் பாதுகாப்புடன் நாடு முழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு சாமானிய முஸ்லீம்கள் மத்தியில் அச்ச உணர்வு கடுமையாக எழுந்துள்ளது. பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இதனால் ஊக்கம் அடைந்து முஸ்லீம்களை ஆங்காங்கே தாக்குவதிலும், கொல்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாரத் மாதா கி ஜே சொன்னால்தான் தேசப்பற்று உள்ளவர்
மகாராஷ்ட்ர முதல்வர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உட்பட சங் பரிவாரத்தைச் சேர்ந்த பல தலைவர்களும், அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள சிவ சேனைத் தலைவர்களும் “பாரத் மாதா கி ஜே’’ கூறாதவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும் என்றும் பேசத் தொடங்கிவிட்டார்கள். இதில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய விஷயம், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் எம்ஐஎம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் 2016 மார்ச் 17 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகும். இவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் தெரியுமா? இவர் “பாரத் மாதா கி ஜே’’ என்று முழக்கமிட மறுத்துவிட்டாராம். மாறாக, “ஜெய் இந்துஸ்தான்’’ என்று முழக்கமிடுவேன் என்று அவர் கூறினாராம். இதில் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு மதவெறியர்கள் எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சிக்காரர்களும் துணை போனதுதான்.
இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லாம் தேசப் பற்றாளர்கள் அல்ல என்று நஞ்சு விதைக்கப்படும் செயல் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மதவெறி நஞ்சை மறைத்துக் கொண்டு அரசியல் பிரச்சாரம்
நரேந்திர மோடி வளர்ச்சி என்னும் உறுதிமொழியை மக்கள் முன் வைத்துத்தான் பல தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆயினும் இதன் பின்னே மதவெறித் தீ மிகவும் கூர்மையாக விசிறிவிடப்பட்டு அதன் மூலமே வெற்றிகள் பெற்றிருப்பது என்பதே வெற்றிக்கான உண்மையான காரணிகளாகும். இதற்கு சமீபத்திய உதாரணம் அசாம் மாநிலத்தில் அது பெற்ற வெற்றியாகும். வங்க தேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள முஸ்லீம்களுக்கு எதிராகத் தொடர்ந்து அது மேற்கொண்டு வந்த பிரச்சாரம் இதற்கு முக்கியமான காரணமாகும்.
முடிவுரை
இவர்களின் முழக்கங்கள் “புனிதக் காதல்’’ என்பதிலிருந்து “பசுவைப் பாதுகாப்போம்’’ என்பது போல மாறினாலும், இவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் குறிக்கோள் ஒன்றுதான். “சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குவது, அதன்மூலம் இந்தியாவை ஓர் இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவது’’ என்பதே அவர்களின் குறிக்கோளாகும். இதன் சரியான பொருள், மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்குப் பாதுகாப்பாக விளங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களைத் தகர்ப்பது என்பதாகும். இவ்வாறு இவர்கள் மேற்கொண்டுவரும் வெறித்தனமான நடவடிக்கைகள் மதச் சிறுபான்மையினரின் மத்தியில் இயங்கிடும் அடிப்படைவாத சக்திகளுக்கு, இதற்கு எதிராகப் “பழிக்குப்பழி’’வாங்குதுல் என்ற முறையில் உதவி, ஊக்கப்படுத்துகிறது. இவ்வாறு ஒரு மதவெறி இன்னொரு மதவெறியை ஊட்டி வளர்க்கிறது. இந்திய மக்களின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தக்கூடிய தேச விரோத நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் சங் பரிவாரக் கும்பலால் உருவாக்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் ஈராண்டுகள் இதற்கு எண்ணற்ற சான்றுகளை அளித்திருக்கின்றன. ஆயினும் பிரதமர் மோடி எது நடந்தாலும் காணாதது போலவும். கேளாதது போலவும் மவுனமாக இருந்து வருகிறார்.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment