புஜ்ஜி தன் கைகளை நக்கத் தொடங்கியதுமே,
அபி எழுந்துவிட்டான். ‘‘இவ்வளவு
சீக்கிரமாக வாக்கிங் போக முடியாது. ஆனால், ஒருவேளை அதுக்கு வயிற்றைக் கலக்கி இருக்கலாம்,’’
என்று நினைத்தான். மற்றவையும் தங்களுடைய கண்களை கசக்கிக் கொண்டே எழுந்து கொண்டன. வெளியே
சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் வந்து தங்கள் இடங்களில் படுத்து, நடுவே விட்ட
தூக்கத்தைத் தொடர்ந்தன.
பின்னர், பகல்பொழுது மிகவும்
வெப்பமாக இருந்ததால், சேகர் பையன்கள் அனைவரையும் சிவில் லைன்ஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இறக்கிவிட்டு,
மதிய உணவுக்கு குறித்த நேரத்தில் வந்துவிடும்படி அபியிடம் நினைவுபடுத்தினார். அன்றைய தினம் சுப்பிரமணியமும் அவர்களுடைய குடும்பத்தினரும்
மதிய உணவு உண்பதற்குத் தங்களுடன் இணைந்து கொள்ள
இருப்பதை அபி அறிந்திருந்தான். ‘‘நிச்சயமாக
அப்பா, குறித்த நேரத்திற்குள் நாங்கள் திரும்பிவிடுவோம்,’’ என்றான்.
அபி கவுண்டருக்குச் சென்று முதலில்
குர்கான் வரை டிக்கெட்டுகள் வாங்கலாம் என்று நினைத்தான். பின்னர் தன் மனதை மாற்றிக்கொண்டு,
பிரதீப்பிடமும், ரவியிடமும் `எய்ம்ஸ்’ மருத்துவமனையைப் பார்க்க விரும்புகிறீர்களா?’’
என்று கேட்டான். ‘‘ரொம்ப நல்ல விஷயம்தான்.
அங்கேயே போகலாம்,’’ என்று ரவி கூறினான். பிரதீப்பும் அதனை ஆமோதித்தான்.
அவர்களது மெட்ரோ நகரத் தொடங்கியது.
காஷ்மீரி கேட் வந்தவுடன், மெட்ரோவின் கதவுகள் திறந்ததையும், பயணிகள் வெளியேறியதையும்,
பின்னர் வெளியே நின்றிருந்த பயணிகள் உள்ளே வந்ததையும், பின்னர் கதவுகள் மீண்டும் மூடிக்கொண்டதையும்
பார்த்தார்கள். இவை அனைத்தும் ஒரு சில விநாடிகளில் நடந்ததைக் கண்டு இருவரும் பிரமித்தார்கள்.
பின்னர் தங்களுக்குள் ஒருவர்க்கொருவர் அரட்டை அடித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கையிலேயே,
அபி, தங்கள் வீட்டிற்கு மதியம் உணவருந்த விருந்தினர்கள் வரவிருப்பது குறித்து அவர்களிடம்
தெரிவித்தான்.
திரு. சுப்பிரமணியம் மிகவும்
நேர்மையான ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இதனால் அவர் பணியாற்றிய துறையில் ஏராளமான பிரச்சனைகளை
எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மேலும், அவர் தன்னுடைய வீட்டிலும், மற்றொரு பிரச்சனையைச்
சந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய குழந்தைகள், நகரில் உள்ள நல்லதொரு பள்ளியில் படித்து
வருகிறார்கள். அவர்கள் தன்னிடம் வந்து, தன்னுடன் படிக்கும் பணக்கார வீட்டுப் பையன்கள்
மிக ஆடம்பரமான கார்களில் வந்து இறங்குவதையும், மொபைல் போன்கள் வைத்திருப்பதையும், இரவு
முழுவதும் பிறந்தநாள் பார்ட்டிகளைக் கொண்டாடுவதையும், அதிகவிலையுள்ள பிறந்தநாள் பரிசுகளை
வழங்குவதையும் ஓர் ஏக்கத்துடன் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ‘‘சில
லஞ்சஊழல் அதிகாரிகளுடனும், நேர்மையற்ற வர்த்தக சூதாடிகளுடனும் நாம் நம்மை ஒப்பிட்டுப்
பார்த்துக் கொள்ளக்கூடாது,’’ என்று அவர்களிடம்
அறிவுறுத்தி சமாளித்துக்கொண்டிருக்கிறேன் என்று அவர் நம்மிடம் கூறினார்.
அபியைப் பார்த்துக்கொண்டே, ரவி,
‘‘அபி, எப்போது நீ இந்த மருத்துவப் படிப்பை
முடிக்கப் போகிறாய்? பின்னர் என்னவாக மாறப் போகிறாய்? அரசு உத்தியோகத்தில் சேரப் போகிறாயா?
அல்லது கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில் சேரப் போகிறாயா?’’ என்று கேட்டான்.
‘‘இந்த சமயத்தில் அதைப்பற்றியெல்லாம் யோசித்துப்
பார்க்கவில்லை. சரி, ஏன் இப்படிக் கேட்கிறாய்?’’
‘‘என்னுடைய வாழ்க்கையில் மிகவும் நேர்மையாளனாக
வாழவே நான் விரும்புகிறேன். ஆனால், சுப்பிரமணியம் அய்யா அவர்களைப்பற்றியும் மற்றும்
இதுபோன்றவர்களின் அனுபவங்களையெல்லாம் கேட்கும்போது, அரசாங்கப் பணியில் நேர்மையானவர்கள்
நீடித்திருப்பது என்பது மிகவும் கடினமாக இருக்குமோ என்று ஐயுறுகிறேன்.’’
‘‘உன்னுடைய இக்கட்டான நிலையை என்னால் புரிந்து
கொள்ள முடிகிறது, ரவி. ஆனாலும், அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட படிப்பினை என்னவெனில்,
நேர்மையாளர்கள் சில சங்கடங்களை எதிர்கொள்ளலாம், இருப்பினும் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த
பாதையில் முன்னேறும்போது மிகுந்த திருப்தியையும் நற்பெயரையுமே அவர்கள் பெறுகிறார்கள்
என்பதையுமே நான் தெரிந்து கொண்டேன். அப்பா ஒரு தடவை என்னிடம், ‘‘ஊழல்
பேர்வழிகள் நேர்மையாளர்களைப் பார்த்துப் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள். ஆனால்,
நான் இதுகுறித்து உன்னிடம் சொல்கிறேன், இத்தகைய பைத்தியக்காரத்தனம் குறித்து நாங்கள்
ஒருபோதும் துன்புற்றதில்லை. ஒவ்வொரு நிமிடத்தையும் நாங்கள் மகிழ்ச்சியுடன்தான் அனுபவித்திருக்கிறோம்,’’
என்றார். மேலும் அபி, ‘‘இன்னும் சரியாகச் சொல்லப்போனால்,
அரசாங்கத்தின் சேவையில் இருக்கும்போது, மக்களுக்குச்
சேவை செய்யக் கிடைத்திட்ட வாய்ப்புகள் ஏராளமாகும். இதுபோன்று மக்களுக்குச் சேவை செய்த தருணங்களில்
அப்பா எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் இருந்திருக்கிறார் என்பதை நான்
பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். எனவே, அப்பாவைப்போன்றே, நானும் அரசாங்கப் பணியில்
சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே
ஆசைப்படுகிறேன்,’’ என்றான். அந்த சமயத்தில்
மெட்ரோ ரயில், சாந்தினி சவுக் ஸ்டேஷனுக்குள் புகுந்தது. நன்கு உடையணிந்த ஒருவன் இவர்கள்
அமர்ந்திருந்த பெட்டிக்குள் வேகமாக நுழைந்து, காலியாக இருந்த இடத்தில் அமர்ந்தான்.
அப்போது அபி, ‘‘பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் ஒருவனுடைய
குறிக்கோள் எனில் அவன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் வேலைக்குப் போக வேண்டும்,’’
என்றான். இதற்கு பிரதீப், ‘‘நீ சொல்வது மிகவும் சரி,
அபி. கார்ப்பரேட் உலகில், வேலை பார்ப்போர் நன்கு உடையணிந்திருப்பார்கள். ஆயினும் எப்போதும்
மன அழுத்தத்துடனும், விரக்தியுடனுமே காணப்படுவார்கள்,’’ என்றான்.
மெட்ரோ மேலும் மேலும் சென்று
கொண்டே இருந்தது. சன்னல் வழியாக தில்லி மாநகரைப் பார்த்துக்கொண்டே அந்தப் பையன்கள்
வந்ததைப் பார்த்த அபி, ‘‘தில்லி நவீனமயமாகிக்
கொண்டிருக்கிறது. அகலப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சாலைகள், புதிய மேம்பாலங்கள்,
கவர்ச்சிகரமான மால்கள், தரையைத் தழுவிச்செல்லும் சொகுசு பேரூந்துகள், முடிவே இல்லாது
அதிகரித்துக் கொண்டிருக்கும் நவநாகரிகமான சொகுசு கார்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்,’’
என்றான். அப்போது மெட்ரோ ரயில் ராஜீவ் சவுக்கை வந்தடைந்தது. அப்போது ரவி, அதனைச் சுற்றியுள்ள கன்னாட் பிளேஸ் பகுதி குறித்தும்,
அங்கே வட்ட வட்டமாக இருக்கும் கட்டிடங்களின்
வரிசைகள் குறித்தும் விவரித்தான். அப்போது
ரவி தன்னுடைய குரலில் ஒருவிதக் கேலியுடன், ‘‘தில்லி
நவீனமயமாவதற்கு போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றுதான் இதுவரை நாங்கள் நினைத்துக்
கொண்டிருந்தோம்,’’ என்றான்.
வீட்டில், ரேகா மதிய உணவுக்கான
ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். சுப்பிரமணியம் தம்பதிகளுக்குப் பொருந்தக் கூடிய
வகையில் உணவு வகைகளை முற்றிலும் சைவத்திற்கு ஏற்கனவே மாற்றிவிட்டார். உணவு தயாரிக்கும்
பணியில் இடையிடையே சுமனையும் பயன்படுத்திக் கொண்டார். அப்போது இருவரும் பல விஷயங்கள் குறித்துப் பேசிக்
கொண்டார்கள். உணவு உண்ண வரும் விருந்தினர்கள் குறித்து அப்போது ரேகா சுமனிடம், ‘‘அவர்கள்
மிகவும் நல்லவங்க. நமக்கும் நல்ல நண்பர்கள். உனக்குத் தெரியுமா? சென்ற கோடையின்போது
அவர்களுக்கு ஓர் இக்கட்டான சூழ்நிலை. ஒவ்வொரு
ஆண்டையும் போலவே அந்த ஆண்டும் வெயில் காலம் மிகவும் மோசமாக இருந்தது. மாலை நேரங்களில்
எங்கிருந்துதான் வருமோ தெரியவில்லை, அவ்வளவு புழுதிக் காற்று. சுப்பிரமணியத்தின் மனைவி,
தங்களுடைய வீட்டில் மட்டும்தான் பிள்ளைகள் தங்கி இருப்பதாகவும், மேசை நாற்காலிகளில்
படியும் தூசியைத் தட்டி சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பதாகவும், அவர்களுடைய நண்பர்கள்
எல்லாம் ஐரோப்பாவுக்கும் வேறு பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்று விட்டதாகவும் கூறி
தன் பையன்களுக்காக ரொம்பவுமே வருத்தப்பட்டுக் கொண்டார். தன்னுடைய குழந்தைகளின் நண்பர்கள்
வெளிநாடுகளில் வாங்கிய அதிகவிலையுள்ள பொருள்கள்
குறித்து, பனிச்சறுக்கு விளையாட்டுகளை விளையாடியது, அவர்கள் சாப்பிட்ட உணவுப் பண்டங்கள்
குறித்து, அவர்கள் சுற்றுலா சென்ற இடங்கள் குறித்து, அவர்கள் தங்கிய ஆடம்பர ஓட்டல்கள்
குறித்து எல்லாம் பீற்றிக்கொண்டதைத் தன் பையன்கள் வந்து சொன்னபோது மிகவும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்திருக்கிறார்.
கடைசியில், ஒருநாள் தன் ஆதங்கத்தை எங்களிடமும் அவர் தெரிவித்துவிட்டார்.’’
‘‘அப்புறம்
என்ன செய்தாங்க?’’ ஆர்வத்துடன் சுமன் வினவினார்.
‘‘சேகர் மிகவும் எளிதாக அவர் பிரச்சனையைத்
தீர்த்துவிட்டார். இதற்காக ரொம்பவும் அலட்டிக்காதீங்க. இந்த மாதிரி பிரச்சனை நேர்மையாக
இருக்கிற எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். நாம் எல்லாம் டேராடூனுக்கும். முசௌரிக்குவும்
நம் குடும்பத்தோடு போய் வருவோம்,’’ என்று கூறி அதேபோன்று விரைவில் ஒரு மினி பஸ்ஸை வாடகைக்கு
அமர்த்திக்கொண்டு இந்த இடங்களுக்கெல்லாம் போய் வந்தோம். நாங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவர்களாக
இருந்ததால், இதை நன்கு அனுபவித்தோம். இது சுப்பிரமணியம் தம்பதியினருக்கும் பெரிய நிம்மதியைத்
தந்தது.
இதேசமயத்தில், பையன்கள் அனைவரும்
`எய்ம்ஸ்’ மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
அபி, இருவருக்கும் மருத்துவமனையைச்
சுற்றிக் காண்பித்தான். மிகவும் கூட்டமாக இருந்த புண் சிகிச்சைக்கான மருத்துவப் பிரிவு,
வார்டுகள் ஆகியவற்றைச் சுற்றிக்காண்பித்த பின், சிறப்பு வார்டுகளையும் சுற்றிக் காண்பித்தான்.
டாக்டர்களின் பெயர்களைப் படித்தபோது, அவர்களுக்குப் பின் அவர்கள் வாங்கிய பட்டங்கள்
மிகவும் நீளமாக இருந்தைப் பிரதீப்பும், ரவியும்
படித்ததைப் பார்த்து அபி, இவர்கள் எல்லாம் மிகவும் புகழ் பெற்ற மருத்துவ வல்லுநர்கள்
என்று விளக்கினான். மனநோய் மருத்துவர் ஒருவரின் பெயர்ப்பலகையைப் பார்த்தபோது, அபி,
‘‘இவர்
ஒரு பெரிய மனநோய் மருத்துவர் மட்டுமல்ல, எங்களுக்கு நிறைய கதைகளை நகைச்சுவையாகவும்
கூறுபவர். ஒரு தடவை அவர் எங்களுக்கு ஒரு கதை சொன்னார்: ஒரு பெண்மணி, ஒரு மனநோய் மருத்துவரிடம்
சென்றிருக்கிறார். தான் தூங்கும் கட்டிலுக்குக் கீழே எப்போதும் ஓர் ஆபத்தான பிராணி
ஒளிந்து கொண்டிருப்பதுபோலவே இருக்கிறது டாக்டர்,’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு
மருத்துவர், ‘‘உங்களுடைய
அச்ச உணர்வை நிச்சயமாக என்னால் குணப்படுத்தி விட முடியும்,’’ என்றும், ‘‘அதற்கு
நீங்கள் குறைந்தபட்சம் 20 தடவையாவது இங்கே வரவேண்டியிருக்கும்,’’ என்றும் கூறியிருக்கிறார்.
அதற்கான கட்டணம் குறித்து அந்தப் பெண்மணி விசாரித்தபோது, ‘‘ஒவ்வொரு
தடவைக்கும் 500 ரூபாய் கட்டணம்,’’ என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்மணி
திரும்பிச் சென்று இதைத் தன் கணவரிடம் கூறியிருக்கிறார். பின்னர் அந்தப் பெண்மணி டாக்டரைப்
பார்க்க வரவேயில்லை. டாக்டரே தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்தப் பெண்மணியிடம் கேட்டபோது,
அந்த அம்மாள், ‘‘கடவுளுக்குத்தான்
நன்றி சொல்லணும். இப்போது நான் நன்கு குணமாகிவிட்டேன், டாக்டர். நான் படுக்கும் கட்டிலின்
கால்களை என் வீட்டுக்காரர் வெட்டி எடுத்துவிட்டார். அதிலிருந்து எனக்கு அந்தப் பயம்
போய்விட்டது, டாக்டர்’’ என்றாராம். அபி இந்தக் கதையைச் சொன்னதைக் கேட்டவுடன், சகோதரர்கள்
இருவரும் குபீர் என்று சிரித்துவிட்டார்கள். பின்னர் அவர்களுக்கு அபி, தன்னுடைய வகுப்பறையையும்,
ஆய்வுக்கூடத்தையும் அதேபோன்று மிகச்சிறந்த நூலகத்தையும் காட்டியிருக்கிறான். பின்னர் அவர்கள் பிணங்கள் வைத்திருக்கும் அறையைக்
கடந்து சென்றபோது, அபி மற்றொரு நகைச்சுவையைக் கூறினான். ஒரு சமயம் விமான நிலையத்திலிருந்து
ஒருவரை ஏற்றிக்கொண்டு ஒரு டாக்சி டிரைவர் வந்திருக்கிறார். டாக்சி கொஞ்ச தூரம் சென்றதும்
பின்னால் உட்கார்ந்திருந்த பயணி, நகரில் ஓர் இடத்தைக் குறித்து விசாரிப்பதற்காக, டிரைவரின்
தோள்களைத் தட்டி இருக்கிறார். அவ்வளவுதான், அந்த டிரைவர், ‘‘அய்யய்யோ....’’
என்று அலறிக்கொண்டே காரை வேகமாக இங்கும் அங்குமாக ஓட்டி, கடைசியில் எப்படியோ நிறுத்தி
விட்டார். பின்னர், பயணியிடம் டிரைவர், ‘‘மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா,
இன்றுதான் முதன்முதலாக விமான நிலையத்திலிருந்து டாக்சியை ஓட்டுகிறேன். கடந்த முப்பதாண்டுகளாக
மருத்துவமனையிலிருந்து பிணங்களைத் தான் நான் என்னுடைய டாக்சியில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறேன்,’’
என்றானாம். பின்னர் அனைவரும் சிரித்துக்கொண்டே, கேன்டீனுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
அங்கே பேராசிரியர்களும் மாணவர்களும் நண்பர்களைப் போல பழகிக் கொண்டும், சிரித்துப் பேசிக்
கொண்டும் இருப்பதைப் பார்த்து, பிரதீப்பும்,
ரவியும் கண்கள் விரிய, பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய பொறியியல் கல்லூரியில் இதுபோன்ற
நிலைமையை கற்பனையே செய்ய முடியாது.
அவர்கள் திரும்பிக் கொண்டிருக்கையில்
அபிக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதனை எடுத்து, ‘‘அம்மா,
நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம். விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவோம். டிரைவரை
சிவில் லைன் ஸ்டேஷனில் 3ஆம் நம்பர் கேட்டில் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிற்கச் சொல்,’’
என்றான். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் ஸ்டேஷனுக்கு வெளியே வந்தபோது, இளம் தம்பதிகள்
- அநேகமாகப் புதுமணத் தம்பதிகளாக இருக்க வேண்டும் - இருவர் அவர்களுக்கு முன்னே கைகோர்த்துக்
கொண்டு, பண்பற்ற முறையில் சிரித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தபின்னர்
பிரதீப் ஒரு கதை சொன்னான்: ‘‘ஒருவன் டாக்டர் ஒருவரிடம் சென்று
தான் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டும் என்றும் அதற்கு மருந்து எழுதித் தாருங்கள் என்றும்
கேட்டிருக்கிறான். அதற்கு அந்த டாக்டர் `திருமணம் செய்துகொள்’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
`நீண்ட நாள் வாழ அது உதவுமா, டாக்டர்?’ என்று அவன் திரும்பவும் கேட்டிருக்கிறான். அதற்கு
அந்த டாக்டர், `இல்லை, இந்த மாதிரியான சிந்தனைகளைத் தவிர்க்க அது உதவும்,’ என்றாராம்.
பின்னர் அனைவரும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தபோது அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த
காரில் ஏறிக்கொண்டனர். பின்னர் அபி, `கூடலும்
ஊடலும் மண வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்கள்,’ என்றுகூறினான். இதனைக் கேட்டதும்
ரவி, ஒரு தம்பதிகளிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறினான். ‘‘உங்களுக்கு எப்பவுமே எங்க சொந்தக்காரங்க
வந்தால் பிடிக்காதே,’’ என்று மனைவி சிடுசிடுப்புடன் கோபித்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு
அந்தக் கணவன், ‘‘அப்படியெல்லாம்
கிடையாது. உண்மையாக சொல்லணும்னா, நான் என்னை விரும்புவதைவிட உங்க மாமியாரை அதிகம் விரும்புவேன்,’’
என்றானாம். அபி, ‘‘மகிழ்ச்சியான மணவாழ்க்கையின் ரகசியம் என்பது எப்போதும்
ஒரு ரகசியம்தான்,’’ என்று கூறினான்.
அவர்கள் வீட்டுக்குப் போய்ச்
சேர்ந்தபோது, வீட்டில் காத்துக் கொண்டிருந்த விருந்தினர்களுக்கு பையன்கள் வணக்கம் தெரிவித்தார்கள்.
திருவாளர் சுப்பிரமணியம் நெற்றியில் திருநீர் பட்டையும், கழுத்தில் உத்திராட்சக் கொட்டையும்
அணிந்து ஓர் உண்மையான பக்தராகக் காட்சி அளித்தார். அமைதி தவழும் முகத்துடன் காணப்பட்ட அவர் எழுந்து
நின்று அவர்களை ஆசிர்வதித்தார். மிகவும் நவீனமாக இல்லாவிட்டாலும் வித்தியாசமாக புடவை
அணிந்திருந்த அவரது மனைவியும் அவர்களைப் பார்த்ததும் புன்னகைத்தார். பின்னர் அவர்கள்
கை கழுவுவதற்காகச் சென்றபோது, அவர்கள் புடவை கட்டியிருக்கும் பாணி, ராஜா ரவிவர்மாவின்
நிவி-ஸ்டைல் என்று அபி அவர்களிடம் தெரிவித்தான்.
நிறைய பேசிக்கொண்டே எல்லோரும்
உணவருந்தி முடித்தார்கள். உணவில் அசைவம் இல்லாமல் முழுமையாக சைவமாக இருந்ததால், பிரதீப்புக்கு
சற்றே ஏமாற்றம்தான்.
பின்னர், பையன்கள் அனைவரும்
இந்தியா கேட் மற்றும் கன்னாட் பிளேஸ் சென்று வந்தார்கள். அனைத்தும் மெட்ரோ மூலம்தான். ஒவ்வொரு பயணத்தின்போதும் மெட்ரோ
மீதான பிடிப்பு சகோதரர்களுக்கு அதிகரித்தது. எட்வர்ட் லுட்யன்னின் கட்டடத் திறன், குடியரசுத்
தலைவரின் மாளிகை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய பிரம்மாண்டமான கட்டடங்களின் பன்முகத் திறன்கள்
அவர்களை மிகவும் அசத்தின. இந்தியா கேட் அவர்கள் மனதில் இருந்த நாட்டுப்பற்று உணர்வுக்கு
மேலும் உணர்வூட்டியது. பகல் பொழுது நன்கு வெப்பமாக
இருந்தும் கூட கன்னாட் பிளேசும், ஜன்பத்தும் அவர்களுக்கு இதமாக இருந்தது. மீண்டும் மெட்ரோவில் வீடு திரும்பியது அவர்களைக்
குளிரச் செய்தது.
இரவு உணவின் இனங்களைப் பார்த்தபோது
பிரதீப் முகம் மலர்ந்தது. மேசையில் வகைவகையான இறைச்சி வகைகளும், தந்தூரி சிக்கனும்
காணப்பட்டன. ரேகாவின் ஸ்பெஷாலிட்டியான இனிப்பு புட்டும் அங்கே காணப்பட்டது. உணவு வகைகளின்
நறுமணமும், பையன்கள் அனைவரும் நன்கு சுற்றிவிட்டு பசியுடன் வந்ததும் ஒருங்கிணைந்து
வேலை செய்தன. அனைத்து உணவு வகைகளையும் மிகவும் ஆர்வத்துடன் சாப்பிட்டார்கள். பையன்கள்
விருப்பத்துடன் உண்ணுவதை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரேகா மனம் நெகிழ்ந்துபோனார்.
சேகர் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, பின்னர் விசாரித்தார்:
‘‘மெட்ரோ
பயணமும் மற்று இடங்களுக்குப் போய் வந்ததும் எப்படி இருந்தன?’’
தட்டிலிருந்த சிக்கனை ஒரு கடி
கடித்துக்கொண்டே, ரவி, ‘‘மாமா,
மெட்ரோவில் போய் வந்தது மிகவும் நன்றாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உண்மையிலேயே மிக நல்ல அனுபவம். உள்ளுக்குள் சென்றுவிட்டால்
குளிர். ஆனால், அதே சமயத்தில், மலைப்பாகவும் இருந்தது. சாலைகளில் பயணம் செய்யும்போது,
ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயல்வதும், சாலைகளில் பாதைகளை அடிக்கடி மாற்றி
மாற்றிச் செல்வதும், கார்களின் உள்ளே இருப்பவர்கள் வெளியே நிற்பவர்களைப்பற்றிக் கவலைப்படாமல்
எச்சில் உமிழ்வதும், கார்களிலிருந்தும் பேருந்துகளிலிருந்தும் குப்பைகளை வீசி எறிவதும்,
எல்லாவற்றிற்கும் மேலாக சாலைகளில் எவ்விதமான போக்குவரத்து விதிகளையும் பின்பற்றாது
நடந்து போவோரும் பார்த்துப் பழகிய எங்களுக்கு, மெட்ரோ பயணம் உண்மையில் ஆச்சர்யத்தையும்
இனிய அதிர்ச்சியையும்தான் அளித்தது. நிலையங்களும், மெட்ரோ பெட்டிகளும் மிகவும் சுத்தமாக
இருந்தன. எங்கேயும் எவரும் எச்சில் துப்பிய சுவடே கிடையாது. வண்டி நிலையத்திற்குள் வரும்போது மக்கள் வரிசையில்
காத்துக் கொண்டு நின்று, தங்கள் முறை வரும்போது ஏறுகிறார்கள். என்ன முரண்பாடான காட்சி!’’
ரவி இவ்வாறு சொல்லிவிட்டு மீண்டும்
சாப்பிடத் தொடங்கியதும், சேகர் அவன் கூறியதை ஒப்புக்கொண்டு, ‘‘நீ
கவனித்த விதம் மிகவும் துல்லியமானது. சுறுசுறுப்பாக இயங்கும் தில்லி மெட்ரோ, சாலைப்
போக்குவரத்தில் இருந்த நெரிசலைக் கணிசமான அளவிற்கு மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,
நாள்தோறும் ஜனங்களைக் கவலையேதும் இன்றி கொன்று குவித்த புளூ லைன் தனியார் பேருந்துகளின்
முக்கியத்துவத்தையும் குறைத்து விட்டது. அதோடு, மக்கள் மத்தியில் ஒருவிதமான கட்டுப்பாட்டையும்
ஒழுங்கையும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வையும்
கொண்டு வந்திருக்கிறது. இந்த மெட்ரோ-கலாச்சாரம் படிப்படியாக சாலைகளுக்கும் பரவ வேண்டும்,’’
என்றார். உடனே ரவி குறுக்கிட்டு, ‘‘தில்லியில் மட்டுமல்ல, மாமா,
நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இவ்வாறு பரவ வேண்டும்,’’ என்றான். சேகர் அவன் கூறுவதை
ஆமோதிக்கும் விதத்தில் தலையையாட்டியபோது, பிரதீப்
கேலியாக, சாலைகளில் திரியும் தெரு நாய்களுக்கும், ஆடு மாடுகளுக்கும்கூட எப்படி நடந்துகொள்ள
வேண்டும் என்று சொல்லித்தர வேண்டும் என்றான்.
பிரதீப் சொன்னதைக் கேட்டு எல்லோரும்
சிரித்ததைப் பார்த்தபின்னர், ரவி அன்று மாலை பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதி ஒன்றில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்ததைப் பார்த்ததாகக் கூறி, எப்படி இது மாதிரியெல்லாம் அனுமதிக்கப்படுகிறது
என்று கேட்டான். சேகர் சிரித்துக்கொண்டே, ‘‘ஓ, அந்த மாடுகளா? அவற்றை யாரும்
பிடிக்க முடியாது. அவை சில முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமானவை. இதில் சில நீதிபதிகளுக்கும்
கூட சொந்தமானவைகளாகும். அவர்கள்தான் தங்கள் விசாலமான பங்களாக்களில் அவற்றை வளர்க்கிறார்கள்,’’
என்றார். ‘‘என்ன?’’
என்று சுமன் வாயைப்பிளந்து கேட்டார். அவரது
மை தீட்டப்பட்ட கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன, அவரது கண்புருவங்களும் மேலே உயர்ந்தன.
அவர்கள் வீட்டின் புல்தரையானது
மாலையில் தண்ணீர் ஊற்றியதன் காரணமாக சற்றே ஈரப்பசையுடனும், நறுமணத்துடனும் இருந்தது.
அவர்கள் அனைவரும் அங்கே அமர்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு, காபியின் வருகைக்காகக்
காத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மிகவும் கண்ணியமாக நின்று கொண்டிருந்த
பென்குவின்-ஃப்ரூட்டி ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தது. விளையாட்டில் ஆர்வம்
கொண்ட புஜ்ஜியும் பாப்லுவும் தரையில் உருண்டு கொண்டும், தங்கள் முதுகை புல்தரையில்
தேய்த்துக் கொண்டும், மிருதுவான புல் தரும் சுகத்தை அனுபவித்துக் கொண்டும் இருந்தன.
ரவி பின்னர் சேகரிடம், ‘‘மாமா,
தில்லி மெட்ரோ நிலையங்களின் பாதுகாப்புக்கு சிஐஎஸ்எப் ஆட்கள் நிறுத்தப் பட்டிருப்பதைப்
பார்த்தேன். இதனால்தான் மெட்ரோ கலாச்சாரம் மேம்பட்ட நிலையில் இருக்கிறதா? பொதுவாகவே
லோகல் போலீசார் மிகவும் நாகரிகமற்றவர்களாகவும், தடித்தனமாகவும், லஞ்சப் பேர்வழிகளாகவும்
இருப்பார்கள், இல்லையா?’’
சேகர் விளக்கினார்: ‘‘வாதத்திற்குரிய
விஷயம்தான். மெட்ரோவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிஐஎஸ்எப் போலீசாருக்கு
ஒரு பங்கு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால்,
மெட்ரோ கலாச்சாரம் அவர்களால் மட்டும் உருவாக்கப்பட வில்லை என்பதையும் நீ உணர்ந்துகொள்ள
வேண்டும். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகத்திற்கு நிச்சயமாகப் மிகப் பெரிய பங்கு உண்டு.
அதே சமயத்தில் அது போலீசாரிடம் என்று வரும்போது, எல்லா இடத்திலுமே சில மோசமான சக்திகள்
இருப்பதைப் பார்க்க முடியும்.’’
ரவிக்குத் தெரிந்த பல சம்வங்கள்
அவன் மனதில் ஓடியது. அதனைத்தொடர்ந்து அவன்,
‘‘ஆயினும்,
மாமா, தங்கள் சக்தியை வீணடிப்பதற்குப் பதிலாக, லோகல் போலீசார், கிரிமினல்களைப் பிடித்து,
அவர்களைத் திருத்துவதற்கு ஏன் முயலக் கூடாது? அவ்வாறு அவர்கள் செய்தார்களானால் அது
சமூகத்திற்குச் செய்யும் மாபெரும் சேவையாக இருக்காதா? மேலும் அவ்வாறு அவர்கள் செய்தால்
அவர்கள்மீதும் மக்களுக்கு இருக்கும் மோசமான எண்ணம் மாறும் அல்லவா?’’
தலையைச் சொறிந்துகொண்டே சேகர்
அவனிடம், ‘‘ஒருவேளை
சமூகத்தின் இத்தகைய நிலைமைக்கு இந்த அமைப்பு ஒரு காரணமாக இருக்கலாம். தண்டனை அளிப்பதன்
நோக்கமே கிரிமினல்கள் திருந்த வேண்டும் என்பதுதான். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, எப்போதும் அவ்வாறு நடப்பதில்லை. அந்த அடிப்படையில் பெரும்பாலான போலீசாரோ, சிறை அதிகாரிகளோ
நடந்துகொள்வதில்லை.’’
பின்னர், பையன்களின் பக்கம்
திரும்பி, ‘‘உண்மையில்
காவல்துறையினரில் சிலர் எப்படிப்பட்டவர்களாக இருந்திருக் கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள
வேண்டுமானால் நீங்கள் சுனில் மற்றும் லம்பா ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள
வேண்டும். அவர்கள் குறித்து கேட்க விரும்புகிறீர்களா?’’ என்றார். எப்போதும் இவர்கள்தான் அவரிடம் ஏதாவது கதை சொல்லுங்கள்
என்று கேட்பார்கள். இப்போது அவரே முன்வந்ததும் பையன்களுக்கு இனிய அதிர்ச்சி. இருவருக்கும்
சிலிர்த்துவிட்டது. மிகவும் ஆர்வத்துடன், ‘‘சொல்லுங்கள் மாமா,’’ என்றார்கள்.
அபிக்கு அவர்கள் குறித்த கதைகள் ஏற்கனவே தெரியும்தான். இருந்தாலும் அவனும் மீண்டும் கேட்கக்கூடிய விதத்தில் உட்கார்ந்து
கொண்டான். அவர்கள் குறித்த உண்மைகளை தன் மனக்கண் முன் ஒரு நிமிடம் கொண்டுவந்தபின்,
சேகர் முதலில் சுனிலின் கதையைச் சொல்லத் தொடங்கினார்:
தில்லியின் கேந்திரமான பகுதியில்தான்
இச் சம்பவம் நடந்தது.
சுனில் தன்னுடைய கிரிமினல் நடவடிக்கை
களில் மிகவும் வெறுப்படைந்து விட்டான். அவன் தன் வாழ்நாளில் திருட்டுக்களையும், வீடுகளைக்
கொள்ளை யடிப்பதையும் ஏராளமாகச் செய்து சலிப்படைந்து விட்டான். இதற்காக பலமுறை தண்டனை
பெற்று சிறைவாசம் அனுபவித்துள்ளான். தான் ரொம்பவும் மோசமாகவே இருந்துவிட்டோம், இனி
அவ்வாறு இருக்க வேண்டாம், ஒரு நாகரிக மனிதாக கவுரவமாக இனி வாழ்வோம் என்ற முடிவுக்கு
வருகிறான். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு பகுதியில் பழச்சாறு கடை ஒன்றைத் துவங்கியபோது
அதன் உண்மையான மதிப்பை நன்கு உணர்ந்தான்.
‘‘ஒருசமயம் அவன் என்னைப்பார்த்து,
தன் கடந்த கால வாழ்க்கைக்காக, தான் மிகவும் வருந்துவதாக அவன் என்னிடம் கூறினான். வழக்குகள்
பல ஆண்டுகள் நீடிப்பதால், வழக்கறிஞர்கள் வாய்தா வாங்கியே தன்னை கசக்கிப் பிழிந்து விடுகிறார்கள்,
அவர்களுக்கு பீஸ் கொடுப்பதற்காகவே மேலும் மேலும் குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.
தான் ஆரம்பத்திலேயே தண்டிக்கப்பட்டிருந்தால் கூட இந்த அளவிற்குக் குற்றங்கள் செய்திருக்கமாட்டேன்.
நான் திருந்தி வாழ விரும்புகிறேன் ஐயா, என்று கூறினான்.’’
பின்னர் சேகர் அப்போது வரப்பெற்ற காப்பியை அருந்திய
வண்ணம், மேலும் தொடர்ந்தார்:
எப்படியோ, அவன் மற்றவர்களைப்
போலவே இயல்பான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தான். ஆயினும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில்
அவன் போலீஸ் ஸ்டேசன் அதிகாரி முன்னிலையில் ஆஜராகி, அவன் அவர்களுடைய பார்வைக்குட்பட்ட
இடத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும், தான் எவ்விதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை
என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும். போலீசாரும் அவனுடைய இருப்பைச் சரிபார்த்திட அவ்வப்போது
போய் பார்த்து வருவார்கள்.
ஒருநாள், இப்பகுதிக்குப் பொறுப்பாக
இருந்த அதிகாரி மாற்றப்பட்டு, ஒரு புது அதிகாரி, வீரேந்தர், இப்பகுதிக்கு பொறுப்பேற்றான்.
இவன் காக்கிச் சீருடையில் இருக்கும் ஒரு மாபெரும் கிரிமினல் ஆவான். இவன், இரவில் சுனிலைப்
பரிசோதிப்பதற்காக வந்தான். மிகவும் தடித்தனமாக,
வீரேந்தர் அவனிடம், ‘‘ஏய், நாளைக் காலையில் பத்து மணிக்கு நீ என்னை
போலீஸ் நிலையத்தில் வந்து பார். ஞாபகம் வைத்துக்கொள்ளடா. மிகச்சரியாக அந்த நேரத்தில்
இருக்க வேண்டும்.’’ ‘‘சரிங்க ஐயா, நிச்சயமாக நான் அந்த நேரத்தில் அங்கே
இருப்பேன்.’’
மறுநாள், வீரேந்தர் அவனிடம்
முரட்டுத் தனமாக, கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். சுனில் மிகவும் பவ்யமாக அனைத்திற்கும்
பதில் சொன்னான். ‘‘ஐயா, நான் என் கிரிமினல் நடவடிக்கைகளை முழுமையாக
விட்டு விட்டேன். நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மிகவும் அமைதியான முறையில் என் கடையைப் பார்த்துக்கொண்டு
புதிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,’’ என்றான். இந்த வார்த்தைகளை அவன் சொல்லும்போது
அவன் முகம் பிரகாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் மலர்ந்தது.’’
வீரேந்தர் அதற்கு, ‘‘அப்படியா.
ஆனால், நீ இப்பவும் காவல் நிலையத்தில் ஒரு பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிதான், உனக்குத்
தெரியும், இல்லையா? அதற்கு நீ என்ன கூறுகிறாய்?’’
சுனில் ஒப்புக்கொண்டான். ‘‘ஐயா,
எனக்கு எதிராக வாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அது என்
மீது போடப்பட்ட பொய் வழக்கு. அந்தப் பகுதியில் நான் எந்தக் குற்றமும் செய்ததில்லை,’’
என்றான்.
வீரேந்தர் அவனைக் கேலி கலந்த
புன்னகை யுடன் பார்த்துக் கொண்டே, ‘‘இருந்தாலும், நீ ஒரு பிரகடனம்
செய்யப்பட்ட குற்றவாளி, ஞாபகம் வைத்துக்கொள். இந்த உண்மையை மறைத்து நான் ஒருவன் மட்டும்தான்
உனக்கு நல்லது செய்ய முடியும்,’’ என்றான். சுனில் செய்வதறியாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னர், ஒரு முரட்டுத்தனமான
பார்வையுடன், வீரேந்தர் தன் சுயரூபத்தைக் காட்டினான். ‘‘நான்
உனக்கு அந்த உதவியைச் செய்ய வேண்டுமானால், நீ என்னை கவனித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு
மாதமும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாயானால் நான் உன்னை விட்டுவிடுவேன்.’’
இதைக் கேட்ட சுனில் அதிர்ந்தான்.
‘‘ஐயா,
நான் மிகவும் சின்னக் கடைதான் வைத்திருக்கிறேன். இந்த அளவுக்கு என்னால் எப்படிக் கொடுக்க
முடியும்?’’
பரிகாசம் கலந்த தொனியில் வீரேந்தர்
அவனை எச்சரித்தான்: ‘‘நான் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
அது உன் பாடு. அதை உன் வியாபாரத்திலிருந்துதான் கொடுப்பியோ, இல்லை, மீண்டும் குற்றங்கள்
செய்துதான் கொடுப்பியோ, எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.ஆனால், அந்தப் பணம் ஒவ்வொரு
மாதமும் எனக்கு வந்தாகணும். ஞாபகம் வைத்துக்
கொள், நீ அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், உடனடியாக நான் உன்னைக் கைது செய்து,
போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுவேன். நீ ஒரு பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளி.’’
சுனில் அவனிடம் எவ்வளவோ மன்றாடிப்
பார்த்தான். வீரேந்தர் மனம் இறங்கவே இல்லை. என்ன செய்வது என்று தெரியாது சுனில் கதறினான்.
கடைசியாக, வீரேந்தர் அவனுக்கு ஒரு மாற்று யோசனை சொன்னான். ‘‘இங்கே
பார், உன் கடையை எல்லாம் மறந்துவிடு. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு பெரிய
வியாபாரி. அவரிடம் நிறைய பணமும் இருக்கிறது. அவரிடம் ஒரு நல்ல சம்பளத்துடன் நீ வேலை
செய்வதற்கு நான் உன்னை சிபாரிசு செய்கிறேன். ஆனால், உன் வேலை, அது கொஞ்சம் எளிமையான வேலையாக இருந்தாலும், கொஞ்சம்
வித்தியாசமானது. அந்த வியாபாரி மிகவும் அதிகமாக ரொக்கம் எடுத்துச் செல்கையில், சுமார்
50-60 லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்ளேன், அவ்வாறு எடுத்துச் செல்கையில், உடனே நீ
எனக்குத் தகவல் சொல்லிடணும். நான் என்னிடம் உள்ள திருடர் கும்பல் ஒன்றை வைத்து அதனைக்
கொள்ளையடித்து விடுவேன். மீண்டும், உனக்கு நான் எச்சரிக்கிறேன். இதில் ஏதாவது சூழ்ச்சி
செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால், அல்லது இந்த வேலையைச் செய்ய நீ தவறினால், நான்
முன்பே சொன்ன மாதிரி, உடனடியாக நீ சிறைக் கம்பிகளுக்குப்
பின்னால் போக வேண்டியிருக்கும்.’’ சுனில் என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்துப்போய்விட்டான். அவனுக்கு வேறு வழியே தெரியவில்லை. கடைசியில் வீரேந்தர்
சொன்னதற்கு ஒப்புக்கொண்டான்.
வீரேந்தர் சுனிலை, கிராமத்திலிருந்து
வந்திருக்கும் தன் சொந்தக்காரன் என்று அறிமுகப்படுத்தி அந்த வியாபாரி, சஞ்சயிடம் வேலைக்கு
சேர்த்துவிட்டான். சஞ்சய், சுனிலைத் தன் வர்த்தகத்தில் உதவி புரிய தன்னுடன் வைத்துக்
கொண்டான்.
நாள் செல்லச் செல்ல சுனில் சஞ்சயை
மிகவும் விரும்பவும், வீரேந்தரை அடியோடு வெறுக்கவும் தொடங்கினான். வீரேந்தருக்குக்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை என்று தீர்மானித்துவிட்டான். ஆயினும், வீரேந்தர்
விசாரிக்கும்போதெல்லாம், ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி நல்லவிதமாகவே அவனை அனுப்பி
வைத்துவிடுவான்.
அந்த சமயத்தில், கபூர் என்பவன்,
தான் வங்கி ஒன்றில் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் மிகவும் தவித்துக்கொண்டிருந்த
வேளையில், அந்த வங்கியில் கடன்களை வசூலிக்கும் ஏஜண்டுகளுக்கும் வீரேந்தருக்கும் நெருங்கிய
தொடர்புகள் உண்டு என்பதை அறிந்து, கபூர் வீரேந்தரிடம் உதவி நாடி வந்தான். வீரேந்தரின்
உதவியால் வங்கிக்கு அந்தப் பணத்தைச் செலுத்தாமல் அதற்குப் பதிலாக தங்களுக்குள் அந்தப்பணத்தைப்
பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று கபூர் திட்டமிட்டான்.
ஒருநாள், வீரேந்தர் ஒரு கொள்ளைக்
கூட்டத்தை, அதன் தலைவருடன் சேர்த்து பிடித்து விட்டார். அவர்கள் சுமார் ஒரு டஜன் வாகனத் திருட்டுகளில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.
ஒரு சில போலீஸ்காரர்கள் அவர்களை விசாரணை செய்வதில் மும்முரமாக இருந்த போது, வீரேந்தர்
அவர்களைக் கைது செய்தது தொடர்பாகவும் மற்றும் வழக்குகளுக்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதிலும்
கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். கபூர் அப்போது வீரேந்தரைப் பார்க்க வந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து, வீரேந்தர்
தான் செய்து கொண்டிருந்த வேலைகளைச் சற்றே ஒதுக்கிவைத்து விட்டுத் தலையை உயர்த்திப்
பார்த்தபோது, கபூர் அங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். என்ன என்று விசாரித்தபோது,
தங்களுடன் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருப்பதாகக் கபூர் கூறியதும், சுரேந்தர் எழுந்து
வந்தான். கபூர், தன்னை அவனிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு, தான் வங்கிக்குக் கட்டமுடியாது சிரமப்படுவதை மிகச்
சுருக்கமாக தெரிவித்திருக்கிறார். வீரேந்தர்,
கபூருக்கு உதவுவதாக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். ஆனால் அவர் கட்ட வேண்டிய தொகையான
பத்து லட்சத்தில் தனக்கு ஐந்து லட்சம் தந்துவிட வேண்டும் என்று பேரம் பேசியிருக்கிறான்.
கபூர் அதிர்ச்சியடைந்து விட்டார். இது ரொம்பவும் அதிகம் என்றும், அந்த அளவுக்குத் தன்னிடம்
பணம் இருந்திருந்தால் தான் வங்கிக்கு அந்தப் பணத்தைக் கட்டியிருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டுவிட்டது. வீரேந்தர் மிகவும் கொதித்துப்போய்விட்டான்.
அவன் மூளை வேகமாக வேலை செய்தது. உண்மையில் வீரேந்தர் எப்படிப்பட்ட நபர் என்று தெரியாமல்
கபூர் வழிய வந்து வீரேந்தரின் வலையில் விழுந்து விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில், அனைத்தும்
மாறிவிட்டன. வீரேந்தர் வாகனத் திருட்டுக்களைச் செய்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவனுடன்
மிகப் பெரிய அளவில் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு, அவனைத் தப்பவிட்டுவிட்டு, அவனுக்குப்
பதிலாக அனைத்து வழக்குகளிலும் கபூரை பிரதானக் குற்றம் சாட்டப்பட்டவனாகச் சேர்த்ததோடு,
சம்பவ இடத்தில் அவனைக் கையும் களவுமாகப் பிடித்ததாகவும் ஜோடித்து விட்டான். கபூர் முற்றிலுமாக திகைத்துத்
தடுமாறி, எதிர்த்திட்டான். வீரேந்தர் மிகவும்
வெறித்தனமாக சிரித்தான். இவனிடம் இவ்வாறு மோதுவதில் பயனில்லை என்பதை உணர்ந்த கபூர்
எப்படி இவனிடம் இருந்து தப்புவது என்று யோசிக்கத் தொடங்கினான். வீரேந்தர் கொள்ளைக்கூட்டத்
தலைவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக மதிமயங்கி இருந்ததால், கொள்ளைக் கூட்டத்
தலைவன் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களை மறைத்திட மறந்துவிட்டான். அது அவன் மேசையின்
மேலேயே இருந்தது. அதை, கபூர் நைசாக எடுத்து தன் பைக்குள் வைத்துக்கொண்டு விட்டான்.
இதனை வீரேந்தர் கவனிக்கவில்லை.
பின்னர், கபூர் சிறைக்கு அனுப்பப்பட்டபோது,
அவனது இளம் மனைவி உதவி கேட்டு வீரேந்தரை அணுகினாள். அவள் இளமையையும் அழகையும் பார்த்தவுடன்
வீரேந்தருக்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அவளையே வெறித்துப் பார்த்தான்.
அதை அவள் உதாசீனம் செய்துவிட்டு அவனிடம் உதவி கோரினாள். அதற்கு வீரேந்தர், தன்னுடன் படுப்பதற்கு அவள் ஒப்புக்கொள்வாளானால்,
அவளது கணவனை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தான் உதவுவதாக அவன் கூறினான்.
இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து, கத்திக்கொண்டே, அந்த இளம்பெண் போலீஸ் நிலையத்தை
விட்டு வெளியேறினாள்.
அன்றிரவு வீரேந்தர் வீட்டிலிருந்தபோது, அந்தப் பெண்
தூக்க மாத்திரைகளை நிறைய சாப்பிட்டுவிட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக
போலீஸ் நிலையத்திற்குத் தகவல் வந்ததை அறிந்து வீரேந்தர் ஆடிப்போய்விட்டான். அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, அவனது
வர்த்தக நண்பரான சஞ்சய்யை உதவி கேட்டு சந்திப்பதற்காக விரைந்தான். பின்னர் இருவரும்
மருத்துவமனை சென்று அவளைக் காப்பாற்றுவதற்காக மருத்தவர்களிடம் கோரினார்கள். பின்னர்
அங்கேயே காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அவள் ஆபத்து கட்டத்தைத் தாண்டிவிட்டாள்.
பின்னர்தான் வீரேந்தர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்தான்.
‘‘என்ன அசிங்கம்பிடித்த ஆள்.
இத்தகைய பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும்,’’ என்று
சுமன் ரேகாவிடம் கூறினார். ‘‘ஆம், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.
சேகர் சொல்வதைக் கேள். அவ்வாறான அசிங்கம்பிடித்தப் பயல்கள் எல்லாம், நிர்வாகத்தால்
எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று சேகரே சொல்வார். வீரேந்தர் ஒருவன் மட்டும்
அப்படியல்ல, அதைப்போல எண்ணற்றோர் அவர்கள் துறையில் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம்
சேகர் சொல்லுவார்.’’ சுமன், சேகர் சொல்வதைத் தொடர்ந்து கேட்டார்.
பின்னர் ஒரு சில நாட்களுக்குப்
பின், சிறையில் மகிழ்ச்சியற்று இருந்த கபூர்,
வீரேந்தர் மீது பழிக்குப்பழி வாங்கிட கங்கணம் கட்டிக்கொண்டிருந்துவிட்டு, பின்னர் பிணையில்
வெளியே வந்தான். வெகு நாட்களுக்குக் காத்துக் கொண்டிராமல், வீரேந்தர் இந்த வழக்கில்
தன்னை எப்படிப் பிணைத்தான் என்று முறையீடு ஒன்றை எழுதி, அதனுடன் தான் அன்றைய தினம்
எடுத்துவந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் குறித்த ஆவணங்களின் நகலையும் இணைத்தும், உண்மையான
குற்றவாளியிடம் ஒரு பெரும் தொகையை வாங்கிக்கொண்டு, வீரேந்தர் இவ்வாறு இந்த வழக்கில்
தன்னைப் பிணைத்து விட்டான் என்றும் குறிப்பிட்டு, உயரதிகாரிகளிடம் தெரிவித்தான்.
கபூர் அளித்த முறையீட்டின் அடிப்படையில்
வீரேந்தருக்கு எதிராக விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது அதிலிருந்து மீள்வது
எப்படி என்பது வீரேந்தரின் கவலையாக மாறியது. தன் வீட்டில் எந்த சமயத்திலும் சோதனை மேற்கொள்ளப்படலாம்
என்று ஊகித்த வீரேந்தர், அவசரம் அவசரமாகத் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான
பொருள்களான நான்கு நாட்டுத் துப்பாக்கிகள், சில பிரௌன் சுகர் பாக்கெட்டுகள், மிகப்
பெரிய அளவில் தங்க பிஸ்கட்டுகள் அனைத்தையும்
ஒரே பொட்டலமாகக் கட்டியபின், தன்னை உடனே வந்து சந்திக்குமாறு சுனிலுக்கு அழைப்பு விடுத்தான்.
இந்த சமயத்தில் சஞ்சய் மீது
சுனில் வைத்திருந்த விசுவாசம் வளர்ந்து கெட்டிப்பட்டிருந்தது. ஆயினும், வீரேந்தரின்
இழிநோக்கங்கள் குறித்தும், தன்னை எதற்காக இங்கே வீரேந்தர் வேலையில் சேர்த்திருக்கிறான்
என்பது குறித்தும் இதுவரை எதுவும் அவன் சஞ்சயிடம் சொன்னதில்லை.
வீரேந்தர் சுனிலிடம் தான் ஒரு
பொட்டலத்தை சஞ்சயின் வீட்டில் சில நாட்களுக்கு வைத்திருக்க விரும்புவதாகக் கூறினான்.
இவ்வாறு அவன் கூறும்போது அவன் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கலாம்
என்கிற சந்தேகத்தை சுனிலுக்கு ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், இருவரும் ஒன்றாகவே காரில்
சஞ்சயின் வீட்டிற்குச் சென்றார்கள். ஆயினும், செல்லும்வழியில், காரின் பின்னே உட்கார்ந்திருந்த
வீரேந்தர், பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். அதிலிருந்த துப்பாக்கிகளில் ஒன்றை
எடுத்துத் தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். காரை ஓட்டிக்கொண்டிருந்த
சுனில், கார் கண்ணாடி வழியே வீரேந்தர் செய்வதையெல்லாம் பார்த்துத் தெரிந்து கொண்டான்.
வீரேந்தரும் சுனிலும் சஞ்சயின்
அலுவலகத் திற்குச் சென்றார்கள். தன்னிடமிருந்த அதீத ஆர்வத்தை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல்
கொஞ்ச நேரம் சஞ்சயிடம் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் குறித்து குசலம் விசாரித்தான். பின்னர் மிகவும் சர்வசாதாரணமாகக் கூறுவது போல,
தான் கொண்டு வந்த பொட்டலத்தைச் சில நாட்கள் இங்கேயே வைத்துக்கொள்ளுமாறு சொன்னான்.
சஞ்சயும் மிகவும் வெகுளித்தனமாக
அதனை ஏற்றுக்கொள்ள இருந்த சமயத்தில், வீரேந்தரின் பின்னால் நின்றுகொண்டு அதனை வாங்காதீர்கள்
என்கிற முறையில் சுனில் சைகை செய்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் குழப்பத்திற்குள்ளானார்.
வீரேந்தருக்கு மிகவும் உறவினர் பையனான சுனில் இவ்வாறு செய்கிறானே, எதற்காக இவ்வாறு
செய்கிறான் என்று எதுவும் புரியவில்லை. சஞ்சய் கொஞ்ச நேரம் யோசித்தார். அப்போதும் சுனில் வாங்காதீர்கள் என்று சைகை காட்டிக் கொண்டே
இருந்தான். சஞ்சய் தீர்மானித்து விட்டார்.
தான் விரைவில் இந்த ஊரை விட்டு செல்ல இருப்பதாகக் கூறி தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு
கூறி அதனை வாங்க மறுத்துவிட்டார்.
அவ்வளவுதான். எமகாதகனான வீரேந்தருக்குப்
பிடரியிலும் கண் இருந்திருக்கும் போலிருக்கிறது.
தன் பின்னால் நின்று கொண்டு சுனில் சைகை செய்வதைப் புரிந்துகொண்டு விட்டான். அடுத்த நாள் சுனில் ஒரு பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளியாக
இருந்ததால் அவனைக் கைது செய்தான்.
இதுகுறித்து அறிந்த சஞ்சய் அவனை
சிறையில் சென்று பார்த்தபோது, மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். சுனில் அனைத்தையும் சொல்லிவிட்டான்.
உண்மையில் தான் யார் என்பதையும், இவை அனைத்தும் எப்படி நடந்தது என்பதையும் எதற்காக
வீரேந்தர் தன்னை சஞ்சயிடம் வேலைக்கு சேர்த்தான் என்பதையும் சொன்னான். இவன் கூறியவற்றை
சஞ்சயால் நம்பவே முடியவில்லை. மிகவும் ஸ்தம்பித்த நிலைக்குள்ளானார்.
அதன்பின்னர் சஞ்சய், வீரேந்தருடன்
மேற்கொண்ட உரையாடல்களையெல்லாம் ரகசியமாகப் பதிவு செய்யத் தொடங்கினார். வீரேந்தர் ஏதேனும் முறைகேடான வேலையில் ஈடுபடலாம்
என சந்தேகத்தின் அடிப்படையில் சஞ்சய் தன் அலுவலகத்தில் ரகசிய வீடியோ கேமராக்களைப் பொருத்தினார்.
வீரேந்தரும் சில திட்டங்கள்
வைத்திருந்தான். விரைவில், சஞ்சயின் அலுவலகத்தில் சோதனைகளை மேற்கொண்டு, அங்கிருந்த
தடயங்கள் அனைத்தையும் அழித்தான். அவனுடைய நடவடிக்கை
அனைத்தையும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து தங்கள் அலுவலகத்தில்
மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்து சஞ்சய் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முறையிட்டார். சஞ்சயின்
முறையீட்டின் அடிப்படையில் மற்றுமொரு விசாரணை வீரேந்தருக்கு எதிராகத் தொடங்கியது.
இதில் மிகவும் வருந்தத்தக்க
விஷயம் என்ன வெனில், சஞ்சய் தன்னுடை முறையீட்டுடன் ஆதாரமாக அளித்த வீடியோ கேசட்டுகள்
அனைத்தும் கோப்பு களிலிருந்து காணாமல் போய்விட்டன. மற்றும் ஒவ்வொரு தடவையும் சஞ்சய்
புதிது புதிதாக வீரேந்தருக்கு எதிராக கூடுதலான சாட்சியங்களைத் தாக்கல் செய்தார். வீரேந்தர்
உஷாராகி, சஞ்சயை மிரட்டத் தொடங்கினான். இது
அவன் மீதான விசாரணை முடியும் வரை தொடர்ந்தது. கபூரின் முறையீடும் மெய்ப்பிக்கப்படவில்லை
எனக்கூறி முடிக்கப் பட்டுவிட்டது. இவ்வாறு
அயோக்கியன் வீரேந்தருக்கு அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களை விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகளே அவனுக்கு உடந்தையாக இருந்து அவனைக் காப்பாற்றிவிட்டார்கள்.
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது மெய்யானது.
கடைசியில், சீருடையணிந்த கிரிமினல்
பேர்வழியான வீரேந்தர் அவன் துறையில் இருந்த சக கிரிமினல்ஊழியர்களின் உதவியுடன் மிகவும்
வல்லமை யுடையவனாக மாறினான். வீரேந்தர் போலீஸ் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றான். சஞ்சய்,
சுனில் மற்றும் கபூர் நிலைமைகள்தான் மிகவும் இக்கட்டுக்கு உள்ளாயின.
‘‘இது மிகவும் அட்டூழியம். இதற்குத்
தீர்வே இல்லையா?’’ சுமன் தன் மனவேதனையை வெளிப்படுத்தினார்.
பின்னர் சேகர் கூறினார்: ‘‘அதிர்ஷ்டவசமாக
அவற்றின் மீது தலையிடும் வாய்ப்பு என்னிடம் வந்தது. வீரேந்தர் மீது நடைபெற்ற விஜிலன்ஸ்
விசாரணைகளை எல்லாம் மீண்டும் தோண்டி எடுத்து, நடைபெற்ற உண்மைகளை வெளிச்சத்திற்குக்
கொண்டு வந்தேன். வீரேந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவன் மீது கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஆனால் இதுபோல் எத்தனை பேர்கள் மீது வழக்கு தொடுக்க முடியும்? இதைப் போன்று ஏராளமான நிகழ்வுகளில் உண்மைகள் குழிதோண்டிப்
புதைக்கப்பட்டுள்ளன. அனைத்திற்கும் லஞ்ச ஊழல்தான்
காரணங்களாகும். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு கிரிமினல் தான் திருந்திவிட்டதாகக்கூறி
உண்மையில் நல்லவனாக வாழ விரும்பினால்கூட இந்த ஊழல் அமைப்பு அவனுக்கு உதவ முன்வர மாட்டேன்
என்கிறது.’’
‘‘எப்படிப்பட்ட ஒரு கிரிமினல்
சீருடையில் இருந்திருக்கிறான்,’’ என்று ஆச்சர்யப்பட்டான் ரவி. இவ்வாறு ரவி சொன்னதைக்
கேட்டு, சேகர், ‘‘நிச்சயமாக. புலனாய்வுகள், கைதுகள், பொய் என்கவுண்டர்கள்
முதலானவைகளில் எந்த அளவுக்கு ஊழல்களைக் கயவர்கள் செய்கிறார்கள் என்பது இன்னமும் முழுமையாக எனக்குத் தெரியவில்லை. ஆயினும்,
அது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.’’ அவர் மேலும் கூறிக்கொண்டே சென்றார். ’’நான் உங்களுக்கு
ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போலீஸ் துறை `பெருமை’யுடன் `சேவை’ நோக்கம் ஒன்றை
மட்டுமே குறிக்கோளாகக் கொண்டதோர் அமைப்பாக மாறும். ஆனால், அதற்கு கொள்கையை உருவாக்குபவர்களின் தரப்பிலிருந்து,
அதாவது அரசியல்வாதிகளிடமிருந்து, `உறுதி’ தேவைப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இதை விரும்பவில்லை. ஏனெனில், எதிர்க்கட்சிகளை போலீசாரின்
உதவியின்றி அடக்க முடியாது. அதுமட்டுமல்ல, மேலும் அவர்களுக்கு கிரிமினல்கள் மற்றும்
மஃபியா கும்பல்களின் தயவும் தேவைப்படுகிறது. இத்தகைய அரசியல்வாதிகளின் உதவியுடன் நடைபெறும்
இழிசெயல்களை ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையாகச் செயல்படும் போலீஸ் துறையால் ஆதரித்திட
முடியாது. எனவேதான் எந்தக் கட்சி ஆட்சிக்கு
வந்தாலும் இப்போதைய குழப்பமான நிலையைத் தொடரவே விரும்புகிறது.’’
அன்றைய தினத்திற்கான கதைகளை
முடித்துவிட்டதாக சேகர் நினைத்தபோது, ரவி லம்புவின் கதை பற்றி நினைவுபடுத்தினான். அதற்கு சேகர், ‘‘ஆம், நான் அதனைக் கூற மறந்துவிட்டேன்,
இல்லையா?’’ என்று கூறிக்கொண்டே அவன் கதையையும் கூறத் தொடங்கினார்.
இது நடந்தது கோவாவில். ஒருநாள், போலீஸ் நிலையத்தில் இருந்த ஓர் அறிக்கையின்படி,
அப்துல் சத்தார் என்கிற `லம்பு’ என்கிற கிரிமினல் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வந்தது.
அப்துல் சத்தார் மிகவும் உயரமாக இருந்ததால் அவனுக்கு இந்தப் பட்டப்பெயர். இது எனக்கு
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதே நபர் முன்பு ஒரு கிரிமினலாகவும், போதைக்கு அடிமையாகியும்
இருந்தவன், தண்டிக்கப்பட்டு, திருந்தி, பின்னர் வீதிகளில் திரிந்து சாமான்கள் விற்கும்
சில்லரை வியாபாரியாக மாறினான். அவன் மீண்டும் ஒரு கிரிமினலாக மாறி இருக்க மாட்டான்
என்று நான் முழுமையாக நம்பினேன். ஆயினும், சிறைத்தண்டனை அவனை முழுமையாகத் திருத்த வில்லையோ,
எனவேதான் பழையபடியே மாறிவிட்டானோ என்று தோன்றியது.
லம்பு என் அலுவலகத்திற்குக்
கொண்டு வரப்பட்டான். அவன் காலில் விழுந்து என் கால்களைத் தொட முயற்சித்தபோது, நான்
வெறுப்புடன் ஒதுங்கிக் கொண்டேன். அவன் எதுவும் கூறவில்லை என்றபோதிலும், அவன் கண்களிலிருந்து
தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ‘‘உண்மையிலேயே மனம் நொந்து அழுகிறானா?
அல்லது என்னை ஏமாற்றுவதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறானா?’’ எனக்குள் பல்வேறு விதமான
சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.
லம்பு கெஞ்சினான், ‘‘ஐயா,
தயவுசெய்து என்மீது கோபப்படாதீங்க. அதேபோன்று உங்களை நான் ஏமாற்றிவிட்டதாகவும் நீங்க
கருதக்கூடாது. நான் முன்பு இருந்த மாதிரி ஒரு கிரிமினல் இல்லை. நான் அவற்றையெல்லாம்
விட்டுவிட்டு திருந்தி இப்போது ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று மிகவும்
பெருமிதத்துடன் என்னால் கூற முடியும். என்னைப் பொறுத்த வரைக்கும் குற்றம் செய்வது என்பது
கடந்த கால விஷயமாகும். நான் சிறையில் சிரமமான சமயங்களில்கூட அவற்றை நான் செய்திடவில்லை.’’
அவன் கண்களிலிருந்து கண்ணீர்
இன்னமும் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்தது. அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவன்
மேலும் கூறினான்: ‘‘சிறையில் மிகவும் சிரமமான சமயங்களில் என்று ஏன்
கூறினேன் என்றால்,உள்ளே இருந்த சிறை அதிகாரிகள் நான் திருந்தி விட்டதை நம்ப மறுத்தனர். என்னையும் சிறையில் இருந்த மற்றவர்களையும் கிரிமினல்களாகத்தான்
கருதினார்கள். அவ்வாறே தொடர்ந்து நாங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
சிறைக்குள் பல்வேறுவிதமான குற்றக் கும்பல்களை
உருவாக்குமாறு எங்களை அவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். அவர்களால் போதைப் பொருள்கள்
சிறைக்குள் ரகசியமாகக் கடத்தி வரப்பட்டன. அவற்றை அவர்கள் அதிக விலைக்கு உள்ளே இருப்பவர்களிடம்
விற்றார்கள். சிறையிலிருக்கும் வெளிநாட்டுக்காரர்களுக்கும், பணக்காரர்களுக்கும் அவர்கள்
எது கேட்டாலும் கிடைக்கும். மது, போதை மாத்திரைகள், நல்ல உணவு, ஏன் பெண்கள் கூட அவர்களுக்குக்
கிடைக்கும். சிறை என்பது ஊழல்களின் உறைவிடம். சிறை அதிகாரிகளின் சிறுசிறு வேலைகளைச்
செய்து தரும் தண்டனைக் கைதிகள் சிறையிலும் எவ்விதக் கஷ்டமும் இன்றி சொகுசாக இருந்து
கொள்ளமுடியும். ஆனால் அதே சமயத்தில் இவர்களின்
வேலைகளையும் சேர்த்து மற்ற தண்டனைக் கைதிகள் செய்திட வேண்டும். விரக்தியின் எல்லைக்குச் செல்லும் இந்தக் கைதிகள்
தங்களுக்குள் வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொண்டு, கடைசியில் ஓர் அமைப்பாகத் திரண்டு போராட்டத்திலும் இறங்கினார்கள்.’’ கண்ணீரைத் துடைப்பதற்காக
சற்று அவன் நிறுத்தினான்.
அவன் குரலில் இன்னமும் மூச்சுத்
திணறல் இருந்தது. அவன் தொடர்ந்தான்: ‘‘ஆனால், என்னை நம்புங்கள், ஐயா.
உள்ளுக்குள் காட்டப்பட்ட கடும் தண்டனைகள் மற்றும் பாகுபாடுகள் அனைத்தையும் நான் சகித்துக்
கொண்டேன். பின்னர் விடுதலையாகி வெளியே வந்தேன். அண்டை வீட்டுக்காரர்கள் என்னைப்பார்த்து
அருவருக்கத்தக்க முறையில் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்ட போதிலும், அவற்றையெல்லாம் பொருட் படுத்தாமல், புதிய வாழ்க்கைத்
தொடங்கினேன். ஒரு சிறு பெட்டிக் கடை வைத்தேன். என்னுடைய நடத்தையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்
தெரிந்த கொண்டபின் சமூகம் என்னை ஏற்றுக் கொண்டது. இப்போது நான் அவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.
நான் என் குடும்பத்தாருடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும்
விசாரணை செய்யலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன்
என்பதை அப்போது நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.’’ பின்னர், போலீஸ் நிலையத்தில் தனக்கு என்ன நடந்தது என்பதை
அவன் கூறத்தொடங்கியபோது, அவன் முகம் அச்சத்தாலும்
ஒருவித வெறுப்பாலும் இறுகியது.
அவன் கூறினான், ‘‘ஐயா,
சமீபத்தில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கூட்டுக்கொள்ளை சம்பவங்களின் உண்மையான கும்பலை
உங்கள் போலீசால் பிடிக்க முடியவில்லை. எனவே,
தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அப்பாவிகளைச் சுற்றி வளைத்து சிறையில்
அடைத்து வருகிறார்கள். அவ்வாறு பலியானவர்களில் நானும் ஒருவன்.’’
அவனைத் தொடர்ந்து பேச அனுமதித்தேன்.
கோபம் பொங்கிட அவன் தொடர்ந்தான்:
‘‘கைது
செய்தது மட்டுமல்ல. இப்போது நான் திருந்தி, ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு கிரிமினலாக இருந்தபோதுகூட நீங்கள் எந்த அளவிற்கு மனிதாபிமானத்துடன் என்னுடன்
நடந்துகொண்டீர்கள். ஆனால் உங்கள் ஆட்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு அந்த மாதிரி சிந்தனைகளோ,
உணர்வுகளோ கிடையாது. கிரிமினல்களுக்கும், உங்கள் போலீசுக்கும் வித்தியாசமே கிடையாது.
அவர்களுடைய குவி மையம் ஊழல்தான். இவ்வாறு இவர்கள் மிருகத்தனமாக நடந்துகொண்டால் கிரிமினல்களால்
எப்படித் திருந்தி வாழ முடியும்? அவன் தனக்கு ஏற்பட்ட மோசமான தாக்குதல்கள் குறித்துக்
கூறத் தொடங்குவதற்கு முன் சற்று ஓய்வெடுத்துக் கொண்டான்.
‘‘அவர்கள் என்னை என் கடையிலிருந்து
இழுத்துச் சென்றார்கள். போலீஸ் ஸ்டேசனில் வைத்து என்னைத் தொடர்ந்து தாக்கினார்கள்.
நான் செய்யாத குற்றங்களையெல்லாம் நான் செய்ததாக ஒப்புக் கொள்ளச் சொன்னார்கள். பின்னர்
அவர்கள் என்னைக் கொட்டடியில் ஓர் இரும்புக்
கட்டிலுடன் சங்கிலியால் கட்டிப் பிணைத்தார்கள். இரவு முழுதும் உணவோ, தண்ணீரோ எதுவும்
எனக்குக் கொடுக்கவில்லை. நள்ளிரவுக்குப்பின் நான் கடும் தாகத்தால் இறந்துகொண்டிருக்கையில்,
காவலுக்கு நின்றிருந்தவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டேன். ஒருவிதமான ஆணவச் சிரிப்புடன்,
ஒரு குவளை தண்ணீருடன் என்னருகே வந்த அவன், அவனே என் வாயில் அந்த நீரை ஊற்றுவதுபோல நடித்துக்
கொண்டு, என் கண்களை மூடிக்கொண்டு, வாயைத் திறக்கச் சொன்னான். அவன் சொன்னதுபோலவே நான்
செய்தேன். அடுத்த கணம், உப்புகரிக்கப்பட்ட ஒருவிதமான சூடான நீர் என் வாயை நிரப்பியது. அதிர்ச்சியடைந்து, கண்களைத்
திறந்து நான் பார்த்தபோது, அவன் தன் பேண்ட் ஜிப்பைத் திறந்து என்வாயின் மீது மூத்திரம்
அடித்துக் கொண்டிருந்தான். எனக்கு வந்த ஆத்திரத்தில் நான் பைத்தியம்பிடித்தவன் போலாகி
விட்டேன். இவ்வளவு அவமானகரமான அனுபவம் என் வாழ்க்கையில் ஏற்பட்டதே இல்லை. என் நிலைமை
எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். என் வாயிலிருந்த அவன்
மூத்திரத்தை அவன் மீதே துப்பினேன். அவனது ஆண்குறியைக் கடித்துக் குதற வேண்டும் என்று
நினைத்தேன். அவன் என் முகத்தில் குத்தினான். அதன் காரணமாகத்தான் என் உதட்டிலும், முகத்திலும்
கீறல்கள்.’’ இவ்வாறு கூறிவிட்டு அவன் பயங்கரமாகக் கதறி அழுதான். நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
எதுவும் பேசமுடியாது உணர்விழந்துவிட்டேன்.
சுமன் வியப்பினால் வாய்பிளந்து
சேகரையே பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவிதமான அச்ச உணர்வும் வெறுப்பும் அவர் முகத்தில்
தெரிந்தது. ரவியாலும், பிரதீப்பாலும் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை. சேகர் மேலும்
தொடர்ந்தார்:
அவனுடைய கதறல்களுக்கு மத்தியில்,
தனக்கு ஏற்பட்ட அவமானத்தாலும், வெட்கத்தாலும் மிகவும் தலைகுனிந்து இருந்த அந்த ஆறரை
அடி லம்பு, ஒரு பந்தைப்போல வளைந்து என்னிடம் கேட்டான்: ‘‘ஐயா,
நீங்கள், நாங்கள் எல்லாம் திருந்தி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். ஆனால், சொல்லுங்கள்.
நாங்கள் என்ன செய்ய முடியும்? நான் மீண்டும் குற்றங்களைச் செய்திடத் திரும்பிடட்டுமா?
ஆனாலும் என் இதயம் அதற்கு மறுக்கிறது. ஆனால் உங்கள் அமைப்பு என்னை மீண்டும் ஒரு கிரிமினலாக
மாறு என்று விரட்டுகிறது.’’ எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நடந்த செயல்களைப்
பார்த்து நான் மிகவும் மனம் இரங்கினேன். பின்னர் அவனருகில் சென்று அவனுக்கு ஆறுதலாகச்
சில வார்த்தைகளைக் கூறிவிட்டு அவனைத் தட்டிக் கொடுத்தேன்.
லம்புவின் கதையைக் கேட்டு மிகவும்
துயருற்ற பிரதீப் கேட்டான்: ‘‘அந்தப் போலீஸ்காரனுக்கு எதிராக
நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?’’
மிகவும் சோர்வடைந்ததைப்போல்
காணப்பட்ட சேகர், மிகவும் தாழ்ந்த குரலில், ‘‘அந்தப் போலீஸ்காரன் மீது நான்
நடவடிக்கை எடுத்தேன். ஆயினும், இந்த அமைப்பின் மீதுதான் எனக்கு ஆத்திரம். உண்மையில் இதற்காக யாரும் கவலைப்பட வில்லை. சீனியர்
அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு புள்ளிவிவரங்கள் மீதுதான் நம்பிக்கை. உண்மையாகப் பேசப் போனால், புள்ளிவிவரங்களைக் கொண்டு
இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாகச் சொல்லப்போனால் சமுதாயத்திற்குத் தேவை
புள்ளி விவரங்கள் அல்ல, மாறாக உண்மையில் அடிப்படையான மாற்றமேயாகும்.’’
மிகவும் குழப்பத்துடன், ரவி,
‘‘ஒரு
போலீஸ்காரன் உண்மையில் இப்படியெல்லாமா நடந்துகொள்வானா, மாமா?’’ என்று கேட்டான். மிகவும்
கவலைதோய்ந்த முகத்துடன் சேகர், ‘‘துரதிர்ஷ்டவசமாக அதுதான் உண்மை.
இவ்வாறு நாடு முழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் மிகவும் வருத்தம்தரக்கூடிய விஷயம்
என்னவென்றால், இத்தகைய சம்பவங்கள் குறித்து சீனியர் அதிகாரிகள் அலட்டிக்கொள்வதே இல்லை.
இத்தகைய பேர்வழிகளுக்குப் பாதுகாப்பும் கொடுக்கிறார்கள்.’’ பிறகு, ஒரு வேடிக்கையான
சம்பவம் நினைவுக்கு வரவும் சிரித்துக்கொண்டே அது குறித்துக் கூறத் தொடங்கினார்:
கோவாவில் உள்ள அஞ்சுனா கடற்கரையில்
சூரியக் குளியலுக்காக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நிர்வாணமாகப் படுத்துக்கொண்டிருப்பார்கள். அங்கே ‘‘நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருக்கிறது’’
என்று பலகைகள் நிறைய இருந்தும் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்களை நோக்கி
போலீசார் கும்பலாக வருவதைப் பார்த்த அவர்கள் தங்கள் துணிகளைக் கையில் எடுத்துக்கொண்டு
இங்கும் அங்கும் ஓடத் தொடங்கி விடுவார்கள். ஒருநாள் இதுபோல் போலீசார் வந்தபோது, ஓட
முடியாது நின்றுவிட்ட இரு பெண்களைக் கைது செய்து நீதிபதி முன் கொண்டு வந்து நிறுத்தி
இருக்கிறார்கள். நீதிபதி அவர்களிடம், ‘‘எப்படி கடற்கரையில் நிர்வாணமாக
நின்றீர்கள்?’’ என்று கேட்க, அவர்களில் ஒருத்தி, ‘‘இப்படித்தான்’’ என்று கூறி நீதிமன்றத்தில்
அனைவருக்கும் முன்பாக துணிகளை அவிழ்த்துக்காட்டத் தொடங்கிவிட்டாள். அவர்களைக் கூர்மையாகப் பார்த்த நீதிபதி, அவர்களுடைய
நேர்மையைப் பாராட்டியதுடன், உரிய முறையில் மன்னித்து அவர்களை விடுவித்துவிட்டார். அடுத்த
இரு நாட்கள் கழித்து, வேறு இரு பெண்கள் அவ்வாறு ஆஜர்படுத்தப்பட்டார்கள். மீண்டும்,
அதே கேள்வி. அதே மாதிரி பெண்கள் அவிழ்த்துக் காட்ட, அதே மாதிரி மன்னித்து விடுவிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு மூன்றாவது தடவையும் நடந்தது. எவரொருவரும் நீதிபதியால் தண்டிக்கப் படவில்லை.
நிர்வாணம் தொடர்ந்தது. போலீசார் சலிப்படைந்து விட்டனர். அடுத்த தடவை, அவர்கள் ஆண்கள்
இருவரை விரட்டிப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி கோபமடைந்து
அவர்களை சிறைக்கு அனுப்பினார். போலீசார் மறுபடியும் இதே மாதிரி செய்தார்கள். பின்னர்
மறுபடியும். நீதிபதிக்கு போலீசாரின் தந்திரம்
தெரிந்தபோதிலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்தக் கதையைக் கேட்டபின் எல்லோரும்
சிரித்து விட்டார்கள். பின்னர் பையன்கள் நாய்க்குட்டிகளைக் கவனிப்பதற்காகச் சென்று
விட்டார்கள். பின்னர், பயங்கர களைப்புடன், அனைவரும் ஆழ்ந்து தூங்கிவிட்டார்கள்.
……
No comments:
Post a Comment