Tuesday, June 7, 2016

பகாசுரன் - ஏழாம் நாள்


ஏழாம் நாள் பையன்கள் அனைவரும்  தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு களைப்புடன் வந்தார்கள். ``என்னாச்சு,  எப்போதும் துறுதுறுவென இருக்கும் உங்களுக்கு என்னாச்சு, ஏன் களைத்துப்போய் இருக்கிறீர்கள்,`` என்றார் ரேகா.
அவருக்குப் பதில் அளிக்காமல் நேரே சேகரிடம் சென்று முறையிட்டான் ரவி, ``மாமா, என்ன இது? இதென்ன தலைநகரமா அல்லது வாய்க்காலா? ஒரு சிறிய மழை தூறலில் ஒவ்வொரு இடமும் மிதக்கத்தொடங்கிவிட்டன.   எல்லா இடங்களிலும் நிறைய தண்ணீர் தேங்கியுள்ளன.  சாக்கடைகளே இல்லாத ஊர் போலவும், ஆங்காங்கே எல்லாம் தேங்கியிருப்பது போலவும் தெரிகிறது.  இதில் போக்குவரத்து நெரிசல் வேறு. சில வாகனங்கள் படகு போல் நீரில் மிதந்து செல்கின்றன.  மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சாகேட் மாலுக்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது,`` என்றான்.  அன்றைய அனுபவத்தில் அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான்.  
…..
அன்று காலை நடைபயிற்சி முடிந்த பிறகு, குப்பைகள் அள்ளப்பட்டது கண்டு பெருமூச்சு விட்டான். இந்த நாற்றமாவது நம்மைவிட்டு செல்கிறதே என்றான்.  அன்று காலை பத்து மணி அளவில் காலை உணவை முடித்துக்கொண்டுஅவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பினார்கள்.  அன்று மிகவும் புழுக்கமாக இருந்தது. மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் அதன் குளுமை அவர்களுக்கு இனிமையூட்டியது. மூவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் உல்லாசமாக நடந்துகொண்டிருந்தார்கள்.
வழியில் ஒரு நடுத்தர வயது மனிதரைக் கண்டார்கள்.  அவரது தொப்பை சட்டைக்குள் திணிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளிவருவது போல் இருந்தது. அதைப்பார்த்ததும், ``அவரைப் பார், நடமாடும் பொருளாதாரம். அவரது முன்னந்தலை வீழ்ச்சி நிலையில் உள்ளது. ஆம் வழுக்கை விழுந்துள்ளது. அவரது வயிறு பணவீக்கத்தைப் போல் வீங்கியுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து அவரை மிகவும் மந்தமாக்கி இருக்கின்றன,`` என்று அபி சொன்னான்.  உடனே வழக்கம் போல் பிரதீப் வார்த்தைகளில் விளையாடத் துவங்கினான்.  ``ஓர் இளைஞனுக்கும்  நடுத்தர வயது மனிதனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?`` என்றான்.  அவனது கேள்விக்கு அபியும் ரவியும் எத்தனையோ பதில்கள் சொன்னார்கள். ஆனால் அவை அனைத்தும் தவறு என்றான் பிரதீப். ஏனெனில் அவன் தனக்கென ஒரு பதில் வைத்திருந்தான். ``ஓர் இளைஞனுக்கு இடுப்பு சிறியது, மனம் பெரியது. ஆனால் நடுத்தர வயதுக்காரனுக்கோ இடுப்பு பெரியது, ஆனால் மனம் மிகவும் சிறியது,`` என்றான் பிரதீப்.  அவர்கள் மூவரும் வாய்விட்டு சிரித்தார்கள்.
அங்குமிங்கும் ஒரு குழந்தை ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.  அவனது  தாய் அந்தக் குழந்தையைக் கண்டித்தாள். இதைப் பார்த்தவுடன்,  ``குழந்தை பிறந்து முதல் பன்னிரண்டு மாதங்கள், தாய்தான் அதற்கு நடக்கவும பேசவும் கற்றுத் தருகிறாள்.  ஆனால் அடுத்த பன்னிரண்டு மாதங்களில அந்தக் குழந்தை வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்கிறாள், என்னே விந்தை,`` என்றான் பிரதீப்.
அவர்கள் சாகேத் மாவட்ட மையத்திற்கு சென்றபோது தட்பவெப்பம் இதமாக இருந்தது. ``இன்று நிச்சயம் மழை பெய்யும். நம் வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு வீடு திரும்பவேண்டும்,``  என்றான் அபி.  ஆனால் பிரதீப் அங்கிருந்த பிரம்மாண்டமான மால் எனப்படும் பேரங்காடியைப் பார்த்து வாயடைத்து நின்றான். அவனால் தன் கண்ணைக் கூட சில நிமிடங்கள் சிமிட்ட முடியவில்லை. செலக்ட் சிட்டி மால், டி.எல்.எஃப் அங்காடி, எம்ஜிஎம் மால் என பல்வேறு பெரிய பெரிய அங்காடிகள் அங்கு வரிசையாக இருந்தன.  ``இந்த இடத்தில் நாம் இரண்டு நாட்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். எதுவும் வாங்கவில்லை என்றாலும்  வெறுமனே சுற்றிப் பார்க்கவே இரண்டு நாட்கள் வேண்டும்,`` என்றான் பிரதீப்.  ``நீ  அடுத்த முறை தில்லி வரும் போது ஒட்டுமொத்த பயணத்தையும் இங்கேயே முடித்துக் கொள்ளலாம். இப்போது ஏதாவது வாங்க முடியுமா என பார்ப்போம்,`` என்றான் அபி.
அது முற்றிலும் வேறு உலகம். உள்ளே சொர்க்கம் போல் இருந்தது. எங்கு பார்த்தாலும் குளிர்பதனப் பெட்டி பொருத்தப்பட்டு இருந்தது. எங்கு நோக்கினும் பளபளப்பு, மினுமினுப்பு. பல வகையான பொருட்கள். தரமான ஆடைகள்.  மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்து ஒரு வார்த்தை கூட பேசாமல்  பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர்.  அங்கிருந்த ஒரு சட்டை பிரதீப்பைக் கவரவே அவன் அதனருகில் சென்று விலை என்னவென்று விசாரித்தான். அதில் மூவாயிரம் ரூபாய் என்று விலை ஒட்டப்பட்டிருந்தது. அந்த லேபிளை தன் சகோதரர்களுக்குக் காண்பித்தான். உடனே அபி சொன்னான், ``அதனடைய உண்மை விலை என்னவாக இருக்கும் தெரியுமா? முந்நூறிலிருந்து நானூறு ரூபாய் வரைதான் இருக்கும். பிராண்ட் என்ற பெயரிலும் பெரிய கடைகள் என்ற பெயரிலும் அதனுடைய விலை பத்து மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.  எங்களுக்கு இது நன்றாகத் தெரியும். அதனால் இத்தகு அங்காடிகளில் நாங்கள் எதுவும் வாங்குவதில்லை. இதே சட்டையை சாந்தினி சவுக்கில் முந்நூறு ரூபாய்க்கு வாங்கலாம். பெயரில் என்ன இருக்கிறது?`` என்றான் அபி.
சட்டையை வாங்காமல் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். பின்னர் ஒரு சில சிறு பொருட்களை வாங்கிக் கொண்டனர். அங்கேயே அவர்கள் மதியஉணவு உண்டனர். அங்கிருந்த இசைக்கும் இரைச்சலுக்கும் மத்தியில் வெளியில் நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை. சாப்பிட்ட பிறகு வெளியே வந்த போது அவர்கள் ஸ்தம்பித்து நின்றார்கள்.  வாடகைக் கார்களைக் கூட அவர்களால் அடைய முடியவில்லை. அவர்கள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
சிறிது  நேரம் கழித்து மழை சற்றே விட்டதும் மிகவும் சிரமப்பட்டு மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தார்கள். அவர்கள் நிலையத்திற்குள் நுழைவதற்குள் முற்றிலும் நனைந் திருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்குள் நன்கு இருட்டிவிட்டது.
…..
இந்த சூழ்நிலையில் வீடு வந்ததால்தான் ரவிக்கு மிகவும் எரிச்சல்.  அதனால்தான் தனது மாமாவைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டான். அவனது கேள்விக்கு சேகர் மாமா பதில் சொன்னார், ``தில்லி ஒரு வாய்க்கால்தான். இங்குள்ள மக்களுக்கு வெள்ளமும் தண்ணீர் தேங்கி நிற்பதும் புதிதல்ல. ஒவ்வொரு ஆண்டும் இது நடக்கிறது. நடப்பது நடக்கட்டும் என்று தில்லி மக்கள் இதனை எடுத்துக்கொள்கிறார்கள்.``
இன்னும் ரவிக்கு விரக்தி போகவில்லை. ``ஏன் மாமா, ஏன்? மக்கள் வரி செலுத்தவில்லையா? அரசாங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?`` என்றான்.
சேகர் சொன்னார், ``இந்த வெள்ளம், போக்குவரத்து நெரிசல் எல்லாவற்றிற்கும் ஆட்சியில் உள்ள ஊழல்பேர்வழிகள்தான் காரணம். இங்குள்ள சாக்கடைகளை தூர்வாருவதற்கென்றே நூறுகோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும்  பருவ மழை துவங்கும்போது நகராட்சி  அலுவலகங்கள்தான்  இந்தப் பணியை செய்கின்றன.    தெருக்களில் உள்ள சாக்கடைகளை  தூர்வாரும் பணி அவர்களுடையது. ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை. இந்தப் பணியை அவர்கள் சில ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கிறார்கள். தூர் வாறும் அழுக்கை அவர்கள் ஊருக்கு வெளியில் உள்ள காசிபூர் என்னும் பகுதியில் சேர்க்கவேண்டும். அங்கே எவ்வளவு தூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்பதை எடைபோட்டு அதற்கேற்றபடி ஒப்பந்தக்காரருக்கு  பணம் வழங்கப்படும். இது சரியான அணுகுமுறைதான்.
ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா? கட்டுமானப் பணிகளில் கிடைக்கும் மண்ணையும் கல்லையும் சாக்கடைக் கழிவு என்று சொல்லி ஒப்பந்தக்காரர்கள் எடுத்துச் செல்கிறார்கள். இதனை அங்குள்ள  பொறியாளர்களும்  சான்றளித்து அவர்களுக்கான தொகையைத் தருகிறார்கள். இந்த நடவடிக்கைகள் இரவில்தான் நடக்கும். இதனை நாங்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து ரகசிய நடவடிக்கை மூலம் கண்காணித்துப் பிடித்தோம். இதில் சில ஒப்பந்தக்காரர்களும் பொறியாளர்களும் சிக்கினார்கள்.
வீடியோ கேமரா பொறுத்தப்பட்ட ஒரு வாகனம் இவர்கள் மண் அள்ளும் கட்டுமான இடத்தில் நிறுத்தப்பட்டது. எங்கெல்லாம் குப்பைகள் கொட்டப்படுகின்றனவோ அவற்றை எடுத்து வந்து இவர்கள் காசிபூரில் கொடுத்து பணம் பெறுகின்றனர். இவர்கள் செய்யவேண்டிய பணியான சாக்கடையை தூர்வாறுவதில்லை. சிலர் இதனை தொடர்ச்சியாக நாட்குறிப்பில் குறித்துக்கொண்டனர். எங்கள் அதிகாரிகள் எல்லாவற்றையும் பிடித்தனர்.
எப்பொழுதெல்லாம் ஒரு குப்பை வண்டி கிளம்புகிறதோ அப்பொழுதெல்லாம் எங்கள் அதிகாரி ஒருவர் அதன் எண்ணை தனது செல்பேசி மூலம் மற்றொரு அதிகாரிக்கு அனுப்புவார்.  அவர் அதனை காசிபூரில் உள்ள மற்றொரு அதிகாரிக்கு அனுப்புவார். இப்படியாக சில நாட்கள் சோதனை தொடர்ந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு காசிபூரில் உள்ள அத்தனை பதிவுகளும் கைப்பற்றப்பட்டன. எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. இந்த காசிபூர் தளத்தில் கட்டுமானக்கழிவுகளைக் கொண்டுவந்த எல்லா வண்டிகளும் படம்பிடிக்கப்பட்டு கணினியில் பதிவுசெய்யப்பட்டன. ரோகினி பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவு என்று சொல்லி கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்திருந்தனர். எங்களது புலனாய்வு பதிவு செய்த அனைத்து தகவல்களும் அங்குள்ள பதிவேட்டுத் தகவல்களுடன் ஒத்துப்போயின,`` என்றார் சேகர்.
``அவற்றை வைத்து என்ன செய்தீர்கள்?`` என்று கேட்டான் பிரதீப்.
சேகர் தொடர்ந்தார், ``ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொறியாளர்களும் ஒப்பந்தக்காரர்களும் சிறையில் தள்ளப் பட்டனர். புலனாய்வு விசாரணை தொடர்ந்தது.
ரோகிணியில் தூர் வாருவதற்காக ஒப்பந்தம் கிடைத்தவன் ரோகினியில் ஒரு நாள் கூட தூர் வாரியதில்லை என்று தெரிய வந்தது. எனவே ரோகிணியில் இருந்த சாக்கடைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் ரோகிணியில் தூர்வாருகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல ஆண்டுகளாக அந்த ஒப்பந்தக்காரன் பணம் வாங்கியிருக்கிறான்.  பொது மக்களின் வரிப்பணம் இந்தப் பகாசுரன்களால் ஏப்பம் விடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தக்காரன் இரண்டு விதமாக சம்பாதித்துள்ளான். ஒன்று, கட்டுமானக் குப்பையை அள்ளியதற்கு அவனுக்குப் பணம் கிடைத்துள்ளது. ரோகிணியில் தூர் வாருகிறேன் என்று பெயர பண்ணியதற்கும்அவனுக்குப் பணம் கிடைத்துள்ளது. ஒப்பந்தக்காரர்களும் பொறியாளர்களும் கைகோர்த்துக் கொண்டு எவ்வளவு திமிருடன் நடந்துகொண்டுள்ளனர் பாருங்கள். கண்டிப்பாக இதற்குப் பின்னால் ஏதேனும் ஓர் அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்காது.
``இப்பொழுது புரிகிறதா தில்லியில் ஏன் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது என்று`` என சிறுவர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே சேகர் டின்னருக்காக தயாரானார்.
அந்நேரம் நன்றாக மழை விட்டிருந்தது. அந்த  மழையால் நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.  ஆனால் இத்தனை நாட்களாக இருந்த வெப்பம் சற்று தணிந்திருந்தது.  காலநிலை இதமானது போல் ரவியின் மனநிலையும் சற்று இதமானது.
ஆனால் மாமா சொன்ன கதையை அவன் மனம் அசைபோடாமல் இல்லை. ‘இந்த நகரம் மிகவும் பெரியதாகவும், நிறைய நகரங்களை உடையதாகவும் இருப்பதால்தான் இப்படி நடக்கிறதா மாமா,`` என்றான் ரவி.
``இல்லை, இல்லை. நகரம் பெரியதாக இருப்பது ஒரு பிரச்சினையே அல்ல.   உலகில் இதைவிட பெரிய நகரங்கள் எத்தனையோ இருக்கின்றன. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வுதான் தேவை. பல பகாசுரன்களின் பேராசையால்  அந்த அர்ப்பணிப்பு உணர்வு நம்மில் குறைந்துள்ளது.  அப்படிப்பட்டவர்கள் நகரம் பெரிதாக இருந்தால் அதனையும் ஒரு வரப்பிரசாதமாகவே நினைக்கிறார்கள்.  இத்தகு ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது தெரியுமா?`` என்றார் சேகர்.
அவர் இதனை சொல்லிக்கொண்டே தன் வாயிலிருந்த உணவை மென்று விழுங்கினார். அப்பொழுது சில அதிகாரிகள்  அவரிடம் ஒரு முக்கிய பிரச்சினை குறித்து விவாதிக்க வந்தனர்.  அடுத்த நாள் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.  ஏனெனில் துணை ஆணையரையும் அவரது பொறியாளரையும் கைது செய்து அறுபது நாட்கள் முடிந்திருந்தது.  தனது பணியாளரிடம் சொல்லி அவர்களை உட்காரச் சொன்னார் சேகர்.
ரவி சரியாக சாப்பிடவில்லை. இதனை அறிந்த ரேகா கேட்டாள், ``என்ன ஆச்சு ரவி. சாப்பாடு சரியில்லையா?``
உடனே ரவி திடுக்கிட்டான். ``இல்லை மாமி. சாப்பாடு உண்மையிலேயே பிரமாதம். நீங்களே சமைத்திருக்கும்போது அது எப்படி மோசமாக இருக்கும்?  மாமா சொன்ன கதையைக் கேட்டவுடன் ஒவ்வொரு பொறியாளரும் எவ்வளவு சம்பாதிப்பார் என நான் கணக்கிட்டுக்கொண்டிருந்தேன்,`` என்றான் ரவி.
இதைக் கேட்டு சேகரும் மற்றவர்களும் சிரித்தனர். ``அவர்கள் அனைவரும் துர்நாற்றம் பிடித்த பணக்காரர்கள். ஒவ்வொரு பொறியாளரும் ஒரு கோடீஸ்வரர். இங்கு கட்டப்படும் ஒவ்வொரு தளத்திற்கும் இலஞ்சமாக ஒரு விலை உண்டு. ஒவ்வொரு தளமும், அது சட்ட  ரீதியானதோ அல்லது சட்ட விரோதமானதோ, அதற்கென ஒரு விலை உண்டு. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு விலை உண்டு. இத்தகு  பொறியாளர்களின் தகுதிகள் அறிந்த அரசியல்வாதிகள் அவர்களுக்குப் பிடித்த அதிகாரிகளை  அந்தந்தப் பகுதிகளில் பதவிக்கு அமர்த்துகிறார்கள்.  அவரவர்கள் அவரவர் பங்குகளை எந்த  பிரச்சினையும் இல்லாமல் பெற்றுக் கொள்கிறார்கள்.  இத்தகு காரணங்களால்தான்  சட்டவிரோதமான காலனிகள் ஒரே இரவில் பல்கிப் பெருகுகின்றன. இந்த காலனிகளை ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில்  வரும பணத்தையும் இவர்களே சுருட்டுகிறார்கள். இத்தகு காலனிகளை ஒழுங்குபடுத்த முயற்சிப்பதாலேயே அவர்களுக்கு அம்மக்களின் வாக்குகள் கிடைக்கின்றன. இவ்வாறு ஒரு விஷ வட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது,`` என்றார் சேகர்.
``இப்படியிருந்தால் போலீஸ் எப்படி இவர்கள் பிரச்சினையில் நுழைய முடியும்?`` என்று ரவி கேட்டான்.
``எந்தவொரு கட்டுமானப் பணியும் அந்தப் பகுதி போலீஸ்காரர்களின் தலையீடு இல்லாமல் முடியாது.  அந்தப் பணி துவங்கும் போதே அது கொட்டும் கட்டுமானக் கழிவுகளால் போக்குவரத்தும் மக்களின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் கூறுவர்.  சட்டவிரோதமான கட்டுமானமாக இருந்தால் அவர்கள் காட்டில் மழைதான். நகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாகக் கூறி அவர்களை நன்கு கசக்கிப் பிழிவார்கள். இது எல்லாருக்குமே தெரிந்த ரகசியம்தான்.
சட்டவிரோதமான கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரை, நாம் எதுவுமே சொல்ல முடியாது. அவர்கள் பாதிக்கப்படடவர்கள் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இத்தகு அதிகாரிகளுடன் கைகோர்த்துக்கொண்டுதான் அவர்கள் இத்தனை காரியங்களையும் முடிக்கிறார்கள்.  ஆனால் ஒருவர் எல்லா அனுமதியும் பெற்று மிகவும் சட்டரீதியாக ஒரு கட்டிடத்தைக் கட்டும்போது அவருக்கு சிக்கல் வந்தால் நாம் அதில் தலையிட முடியும்,`` என்றார் சேகர்.
இதன் பின் தன்னை சந்திக்க வந்த அதிகாரிகள் கொண்டு வந்திருந்த குற்றப் பத்திரிகையைப் படித்து  அதில் தேவையான திருத்தங்களை செய்து அவர்களை அனுப்பி வைத்தார். அந்நேரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் புல்வெளியில் அமர்ந்திருந்தனர். ``இப்பொழுதாவது அந்த துணை ஆணையரின் வழக்கு முடிந்ததா,`` எனக் கேட்டார் ரேகா. ``பரவாயில்லையே. நீங்கள் அனைவரும் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்கிறீர்கள். வழக்கு முடியும்வரை அவரால் சிறையில் இருந்து வெளிவரவே முடியாது.  நீதிபதி வழக்கை வெகு விரைவில் துவங்கவிருக்கிறார், ‘‘ என்றார் சேகர்.  இவர்களது அரட்டையில் சுமனும் இணைந்து கொண்டார்.
சேகர் மாமா அடுத்த கதையை ஆரம்பிப்பார் என்று சிறுவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அடுத்த  கதை துவங்குவது போல் தெரியவில்லை. பொறுமையிழந்த பிரதீப், ``மாமா, அந்த துணை ஆணையரின் கதையை எங்களுக்கும் சொல்லலாம் அல்லவா`` எனக் கேட்டான்.
``இப்போது அந்த வழக்குநீதிமன்றத்திற்கு சென்றுவிட்டது. இனிமேல் அது ஒன்றும் ரகசியம் இல்லை. ஆனால் இன்று வெகுநேரமாகிவிட்டது. நாம் வேறு வேளையில் இது குறித்துப் பேசலாமே,`` என்றார் சேகர்.
``மாமா. எங்களுக்கு இன்னும் ஒரே ஒரு நாள்தான் உள்ளது.  நாளை மறுநாள் நாங்கள்  செல்கிறோம். இன்றே சொல்லுங்கள்,`` என்று வற்புறுத்தினான் ரவி. ``அப்படியென்றால் முதலில் நான் ஒரு காபி குடித்துக்கொள்கிறேன்,`` என்று காபி குடித்தார் சேகர்.  அதன் பின் கதை சொல்ல ஆரம்பித்தார்.
``மாண்டேக்சிங் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு பண்ணை வீடு இருந்தது.  அவர் ஒரு நாள் என்னிடம் வந்து  ஒரு புகாரை அளித்தார். ஐயா நான் கடந்த ஓராண்டாக மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். என்னுடைய பண்ணை வீடு மூடப்பட்டதிலிருந்து என்னுடைய வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  என்னிடம் சில ஆவணங்கள் இல்லை என குறை கூறி அவர்கள் எனது பண்ணை வீட்டை மூடி விட்டார்கள். ஆனால் என் பக்கம் எந்தத் தவறும் இல்லை.  துணை ஆணையர் அலுவலத்திற்கு சென்று புகார் அளித்தபோது அவர்கள் இரண்டு கோடி ருபாய் இலஞ்சமாகக் கேட்டார்கள்.  பின்னர் நான் மத்திய புலனாய்வு பிரிவினரிடம் சென்றேன். அவர்கள் முப்பதிலிருந்து நாற்பது லட்சம் வரை கேட்டார்கள்.`` என்றார்.
``நீங்கள் அப்படி செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?`` என்று அவரைக் கேட்டபோதுஅவர் சொன்னார், ``எனக்கென எந்த வணிகமும் தற்போது இல்லை. அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவது?`` என்றார். மிகவும் மனம் வெதும்பி கையெடுத்துக் கும்பிட்டார் அந்த மனிதர்.  அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. ``கவலைப்படாதீர்கள். எதுவும் செலவு செய்ய முடியவில்லை என்றாலும் அவர்களைப் பிடித்துவிடலாம்.`` என்றேன். அதைக் கேட்டவுடன் அந்த மனிதர் ‘ஆ’ வென வியப்பினால் வாயைப் பிளந்தார். அடுத்த என்ன பேசுவதென்று தெரியாமல் வாயடைத்து நின்றார்.  அவரது கண்களில் ஓர் ஒளி தெரிந்தது.  அதன் பின் என்ன செய்வது என்று அவர் ஆர்வமுடன் கேட்டார்.
அவருக்கான திட்டத்தை அவருக்கு விரிவாக விளக்கினோம். கடந்த ஓராண்டாக என்னவெல்லாம் நடந்ததோ அதற்கான ஆவணத்தை அவர் சேகரித்து தர வேண்டும் என்று கூறினோம். நாங்கள் கூறிய திட்டத்தை அவர் பொறுமையுடன் கேட்டார்.  அதன் பின்தான் அவரது முகத்தில் தன்னம்பிக்கை பிறந்தது.
வெகு விரைவில் அவரது அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அவர் பேச வேண்டியவற்றை அவர் நன்கு ஒத்திகை பார்த்துக்கொண்டார்.  அந்த உபகரணமும் சோதனை செய்யப்பட்டது. அவருக்கு அவர் மீதே நம்பிக்கை பிறந்தது.  அதன் பின்னர் அவர் பொறியாளரையும் துணை ஆணையரின் உதவி ஆய்வாளரையும் தொடர்பு கொண்டு அவர்களை சனிக்கிழமை மதியம் விருந்துக்காக அழைத்தார்.  அதற்காகக் காத்திருந்தார்.
கடைசியாக அந்த நாள் வந்தது.  காலையிலிருந்தே மான்டேக் சிங்கிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவர் என்ன பேசி நடிக்க வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டே தனது அவசரத் திட்டங்களையும் எண்ணிப் பார்த்துக்கொண்டார்.
மதிய உணவு நேரம் வந்தது. அவரது அலுவலகத்திற்கு பொறியாளர் சரியான நேரத்தில் வந்தார். நாடகம் துவங்கியது. எல்லாம் கேமராவில்பதிவு செய்யப்பட்டது.
``ஐயா, என்னை முதலில் மன்னித்து விடுங்கள்,`` என்று அவரை  வணங்கி வரவேற்றார் மான்டேக் சிங். உடனே பொறியாளருக்கு சந்தேகம் வந்தது. அவர் சற்று தயங்கிக்கொண்டே கேட்டார், ``பரவாயில்லை. என்னை எதற்காக அழைத்தீர்கள்?``
வீட்டு முதலாளி தனது பணிவை பவ்யமாக வெளிப்படுத்தினார். ``ஐயா, நடந்தவற்றிற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.  நான் என் வாழ்வில் மாபெரும் தவறு இழைத்து விட்டேன். அதை நான் தற்போது உணர்ந்து விட்டேன்.  தாமதமானாலும் நான் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். கடந்த ஓராண்டில் எனக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இனிமேலும் கஷ்டப்பட நான் தயாராக இல்லை.  நீங்களும் உங்கள் துணை ஆணையரும் எவ்வளவு பெரிய மனது படைத்தவர்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.  உங்களது ஆதரவில்லை என்றால் எனக்கு அது எவ்வளவு பெரிய இழுக்கு என்று இப்போதுதான் நான் உணர்கிறேன். எனக்கு என்னுடைய வியாபாரம் மிகவும் முக்கியம். அதனால்தான் நான் உங்களை விருந்துக்கு அழைத்துள்ளேன்,`` என்றார் மான்டேக் சிங்.
இதையெல்லாம் கேட்ட பொறியாளருக்கு  ஒரே சந்தோஷம்.  அவரைப் பார்த்து மெல்ல புன்னகைத்தார். உடனே இருவரும் நட்புடன் உரையாட ஆரம்பித்தார்கள். அதிலிருந்து அந்த முதியவர்  சற்று வசதியாக அவருடன் உரையாடினார். அவரது வாழ்வில் அவர் கண்ட பொற்காலங்கள், அவரது வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்iயும் பகிர்ந்துகொண்டார்.  இதற்கிடையில விருந்துக்கான மேசை தயாரானது. இருவரும் எதிரெதிரே உட்கார்ந்தனர்.
அவர்களது அரட்டையின் போது ஏற்கெனவே திட்டமிடப்பட்டபடி மாண்டேக் சிங் நடந்துகொண்டார். ‘ஐயா,  உங்களது துணை ஆணையர் இரண்டு கோடி ரூபாய் கேட்டபோது எனது மகன் மிகவும் கோபமுற்றான். கைப்பிடியை தூக்கி எறிந்தான். அப்பொழுது நான் குறுக்கிட்டு தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது என் தவறுதான். அதனால்தான் நான் கஷ்டப்பட்டுள்ளேன்.  ஒரு வருடமாக மிகவும் கஷ்டப்பட்டுளேன். நீங்கள்தான் உண்மையான அதிகாரம் படைத்தவர்கள் என்பதை நான் இப்போது உணர்ந்துவிட்டேன். உங்களது ஆதரவில்லாமல் எங்களால்  பிழைக்க இயலாது. இதை உணர்ந்த பிறகு, நான் என்னை மாற்றிக்கொண்டேன். நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ அதை செய்வதற்கு நான் தயாராக உள்ளேன்,`` என்றார் மாண்டேக் சிங்.
அவர்களது பேச்சுக்கிடையே அந்த முதியவர் சொன்னார், ``ஐயா, நீங்கள் மிகவும் தயை கூர்ந்து என்னிடம் கேட்ட தொகையை ஒரு கோடியாக குறைத்துக் கொண்டீர்கள். அப்பொழுதாவது நான் சரி என்று சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் அப்பொழுதும்  நான் சரி என்று சொல்லவில்லை.   அதற்காக நான் உங்களிடமும் துணை ஆணையரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,`` என்றார் முதியவர்.  இதையெல்லாம் கேட்ட பொறி யாளருக்கு சந்தோஷத்தில்  என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் வலைக்குள் சிக்கி யிருக்கிறோம் என்பது தெரியாமலேயே அவர் கனவுலகத்தில சஞ்சரித்தார். அவர்கள் முன்னர் கேசினோ உணவகத்தில் இறால் வறுவல் சாப்பிட்டதை இருவரும் நினைவு கூர்ந்தனர். அப்பொழுதுகூட முன்பணமாக இருபது லட்சம்  ரூபாய் இருந்தால் பேச்சு வார்த்தையை துவங்கலாம் என்று பொறியாளர் கூறியதை நினைவுபடுத்தினார் மாண்டேக்.
தனது தவறை எண்ணி வருந்துவதுபோல் பலமுறை கூறினார் மாண்டேக் சிங். ``அப்பொழுதும் எனக்கு புத்தியில்லை. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நடப்பது நல்லதாக இருக்கட்டும். என்னுடைய தவறுக்கு என்னை மன்னித்துவிடுங்கள் பொறியாளர் ஐயா.  நான் உங்களுக்கு  தலைவணங்குகிறேன்.  என்னை ஆசிர்வதியுங்கள். துணை ஆணையரும் என்னை ஆசிர்வதிக்கவேண்டும் , ‘‘ என்றார் மாண்டேக் சிங்.
உடனே பொறியாளருக்கு ஒரே பூரிப்பு. ``பரவாயில்லை. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். துணை ஆணையரை சமரசம் செய்து உங்கள் சிக்கலை நான் தீர்க்கச் சொல்கிறேன். நாம் மீண்டும் நண்பர்களாவோம்.  நான் அடிக்கடி உங்களை தொடர்பு கொள்கிறேன், ‘‘ என்றார் பொறியாளர்.
``ஐயா நீங்கள் உதவினால் துணை ஆணையர் காலில் விழுந்து நான் மன்னிப்பு கேட்கிறேன்.`` என்றார் மாண்டேக் சிங். அவரது இத்தகு நடவடிக்கைகளில் திக்கு முக்காடிப்போனார் பொறியாளர். ``கண்டிப்பாக. கண்டிப்பாக உங்கள் சமரசத்திற்கு நான் முயற்சி செய்கிறேன். எது எப்படியோ நீங்கள் அளித்த மதிய உணவிற்கு மிக மிக நன்றி.`` என்றார் பொறியாளர்.
``மாண்டேக் சிங் நல்ல தந்திரக்காரர்தான். நரி போல் செயல்பட்டுள்ளார். அவர் விரித்த வலையில் பொறியாளர் மாட்டிக்கொண்டார், ‘‘  என்றான்  ரவி.
``அவர் ஒரு புத்திசாலி வணிகர்தான். அந்த நேரத்தில் ஏதேனும் தீர்வு கிடைக்காதா என அவர் காத்திருந்தார். அதனால் அவர் அதிகம் நடிக்க வேண்டியிருந்தது.  அதை அவர் கச்சிதமாக செய்தார்,`` என்று அந்த சர்தாரை சேகர் பாராட்டினார்.
``அப்புறம் என்ன நடந்தது?`` என ஆர்வமாகக் கேட்டான் ரவி.
``இது வரை சேகரித்த சான்றுகளே போதும்.  துணை ஆணையரிடமும் அவரது பேச்சுவார்த்த எங்களுக்கு தேவைப்பட்டது.  அதுவும் எங்களுக்குக் கிடைத்தது.  தனது டைக்கு பின்னால் ஒரு பட்டன் காமிரா பொருத்திக்கொண்டார் மாண்டேக் சிங்.  அதில் அனைவரது குரல்களும் பதிவுசெய்யப்படும்.  ஆனால் அவர்களது முகத்தைப் பதிவு செய்ய அவர் அவரது டையை அடிக்கடி ஆட்ட வேண்டும். இதற்கான ஒத்திகையை சந்தோசமாக பல முறை செய்துகொண்டார் மாண்டேக் சிங்.
துணை ஆணையரின் அலுவலகத்தில் மாண்டேக் சிங்கை ஓடோடி வந்து வரவேற்றார் பொறியாளர். அவருக்கு தேநீர்  அளித்தனர். ``ஐயா, நீங்கள் கூறியது போல் இருபது லட்சம் ரூபாய் முன் பணமாக அளிக்க  என்னால் இயலாது. முதலில் பத்து லட்சம் ரூபாய் வாங்கிகொள்கிறீர்களா?`` எனக் கேட்டார் மாண்டேக் சிங். உடனே அந்த பொறியாளரின் முகம் வாடியது. ``நீங்கள் வார்த்தை தவறக் கூடாது. ஏற்னெவே நான் துணை ஆணையரிடம் இது குறித்து பேசியிருக்கிறேன். நீங்கள் அவரை சந்திக்கும்போது உங்களது அதிர்ஷ்டம் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள்,`` என்றார் பொறியாளர்.
ஒரு பெரிய அறைக்கு மாண்டேக் சிங்கை அழைத்துச்சென்றர் பொறியாளர். அவரைக் கண்டவுடனே துணை ஆணையர் எழுந்து நின்று இன்முகத்துடன் வரவேற்று அவருடன் கை குழுக்கினார்.  ஆனால் அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க முயன்றார் மாண்டேக் சிங். ஒரு மெல்லிய புன்னகையுடன் துணை ஆணையர் சொன்னார், ``சர்தார்ஜி, நீங்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடாது. நாம் அனைவரும் சகோதரர்கள்,``.
அதிகாரி மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து, ``மிக்க நன்றி கமிஷனர் ஐயா,`` என்றார் மாண்டேக் சிங். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டனர். தான் மிகவும் வருந்துவதாக மாண்டேக் சிங் கூறினார். ``நடந்தவற்றிற்காக நான் மிகவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தவறு என் மீதுதான் உள்ளது. மூடப்பட்ட  எங்களது பண்ணை வீட்டைத் திறப்பதற்காக நீங்கள் இரண்டு கோடி ரூபாய் கேட்டீர்கள்.  ஆனால் அப்போது எனது மகன் அறிவீனமாக நடந்துகொண்டுள்ளான்.  அதற்காக நான் மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,`` என்றார் மாண்டேக் சிங்.
அந்த அதிகாரியின் முகத்தில் ஏதேனும் சந்தேகத் தொனி தெரிகிறதா என தேடினார் மாண்டேக் சிங்.  அப்படி எதுவும் தெரியாததால் தனது நடிப்பைத் தொடர்ந்தார். ``அதற்குப் பின்னும் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது எனது மாபெரும் தவறுதான்,``  என்றார்  மாண்டேக் சிங்.
``நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். கடந்த காலத்தை நினைத்து வருத்தப்பட்டு ஒன்றும்  ஆகப்போவது இல்லை. நான் பொதுவாக பெரிய மனது உள்ளவன். மறப்போம், மன்னிப்போம். நாம் இப்போது அடுத்த கட்டத்திற்குத்  தயாராவோம்,`` என்றார் துணை ஆணையர்.
``ஐயா. மிக்க நன்றி. நீங்கள் கேட்ட பணத்தை நான் கொடுப்பதற்குத்  தயாராக இருந்தாலும் எனக்கென்று  சில பிரச்சினைகள் உள்ளன.  எனது வியாபாரம் தற்போது சற்று பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கொஞ்சம் கருணை காட்டுங்கள்,`` என்றான்.
உடனே துணை ஆணையருக்கு அதிர்ச்சி.  அவர் மாண்டேக் சிங்கை கனிவுடன் பார்த்தாலும், அவரிடம் மிகவும் மென்மையாகவே பேசினாலும், தனது விருப்பத்தை சற்று அழுத்தமாகவே கூறினார், ``அப்படியென்றால் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?`` என்றார் துணை ஆணையர்.
உடனே மாண்டேக் சிங் இருகை கூப்பி அவரை வணங்கி, ``ஐயா, நீங்கள் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? என்னை சந்தேகப்படாதீர்கள்.  நான் உறுதி அளித்த பணத்தை நிச்சயமாக தருவேன்.  ஆனால் என்னுடைய நிதி நிலைமையை தாங்கள் சற்று கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,`` என்றார்.
உடனே அந்த தந்திரமிக்க அதிகாரி ஒரு புரிந்துணர்வு நிலைக்கு வந்தார். ``சரி, எதுவாக இருந்தாலும் நீங்கள் எனது பொறியாளரிடம் பேசி ஒரு புரிந்துணர்வுக்கு வாருங்கள்,`` என்றார்.
``சரி ஐயா. உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. நான் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். நான் உங்களிடமிருந்து தற்போது விடைபெறட்டுமா?`` என்றார் மாண்டேக் சிங்.
``சரி. நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்,`` என்று சொல்லிவிட்டு துணை ஆணையர் தனது இருக்கையிலிருந்து எழுந்தார். மாண்டேக் சிங்கை தட்டிக்கொடுத்து, நன்றாக பல்வரிசை தெரியுமாறு இளித்துக்கொண்டே அந்த ஊழல் பேர்வழி சொன்னார், ``என்ன இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் அல்லவா,`` என்றார்.  அவரை மிகவும் நன்றியுடன் பார்த்துவிட்டு மாண்டேக் சிங் அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.
அதன் பின்னர் அவர் பொறியாளரை மீண்டும் சந்தித்தார். ``இருபது லட்சம் ரூபாய்க்கு குறைந்து பொறியாளர்  எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே நீங்கள் பணத்தைக் குறைத்துக் கொடுத்தால் என்னால் உங்களுக்கு உதவ முடியாது.`` என்றார் பொறியாளர்.
``அப்படியென்றால் எப்பாடு பட்டாவது அந்த பணத்தை நான் தயார் செய்கிறேன்,`` என்றார் பொறியாளர். அவரது கண்கள் பளபளத்தன.  அவரை அவரது கார் வரை வந்த ஏற்றிவிட்டு சென்றார் பொறியாளர்.
``சர்தார்ஜி நல்ல காரியம் செய்துள்ளார். அதன் பின் என்ன நடந்தது?`` என்று ஆர்வமுடன் கேட்டார் சுமன்.
``அவர் சேகரித்த சாட்சிகள் தேவைக்கு அதிகமாகவே இருந்தன.  அன்றே அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  அவர்கள் இருவரும் போலீஸ் காவலில் காத்துக்கொண்டிருந்தனர். அது மட்டுமல்ல,  மாண்டேக் சிங்கின் பண்ணை வீடு திறக்கப்பட்டது. அவரது வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கியது. இப்படியாக அந்த கதைக்கு நல்ல முடிவு கிடைத்தது,`` என்றார் சேகர்.
``நல்ல கதை. அவர்கள் எவ்வளவு நாள் காவலில் இருந்தனர்,`` என்றான் ப்ரதீப்.
``ஓ. வெகு நாட்களாக இருந்தார்கள். நல்ல நீதிபதிகள் இருக்கும் வரை யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நீதிமன்றத்தின் வழக்குகள் மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்புக்கும் வழிவகுக்கும் என்ற பயமும் உண்டு. ஊழல், கூட்டுத்திருடு இவற்றைத் தவிர இரக்கமின்மையும் சேர்ந்துள்ளது.
ஏழை மக்கள் குளிரில் நடுங்கும்போது கூட அதிகாரிகள் அது குறித்து கவலைப்படுவதில்லை.  அவர்கள் குறித்து நீதிமன்றங்கள்  ஆணைகள் வழங்கும்போதுதான் அவர்கள் தங்கள் உறக்கத்திலிருந்து விழிக்கிறார்கள். ஒரே இரவில் இரவு குடில்கள் பெருகின.  தில்லியில் பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்திய புளூ லைன் தனியார் பேருந்துகளை நீதிமன்றத்தின் ஆணையின் மூலம்தான் தடுக்க முடிந்தது.  பல்வேறு நாட்களாக தேங்கியிருக்கும் புகார்களை நீதிமன்றம் தலையிட்டதன் பின்புதான் காவல்துறையினர் விரைவாக விசாரிக்கிறார்கள்.  இல்லையென்றால், ஊழல் அவர்களது கண்களைக் கட்டியிருக்கும். இத்தகு அதிகாரிகள் தானாக எப்பொழுதுமே செயல்பட்டதில்லை.
உடனே ரவி சொன்னான், ``எவ்வளவு மோசமான நிலைமை இது.``
ரேகா குழந்தைகளுக்கு பால் கொண்டுவந்து கொடுத்தார். அன்றைய தினத்தின் கதைகள் நிறைவடைந்தன. அனைவரும் ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்.
``மாமாவிற்கு யானை மாதிரி ஞாபக சக்தி அதிகம். ஒவ்வொரு வழக்கையும் அதன் நுணுக்கத்துடன் நன்கு நினைவு கூர்ந்துள்ளார்,`` என்றான் ரவி. ``ஆம், முற்றிலும் சரி.  ஒரு வழக்கில் முழுமையாக ஈடுபட்டோமானால் அவ்வளவு விவரங்களையும் எளிதில் மறக்க இயலாது.  அவர்கள் வயோதிகம் அடையும் போதுதான் அவர்களுக்கு நினைவாற்றல் குறைகிறது.  வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் மனநோய்களினால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புண்டு,`` என்றான் அபி. இதைச் சொன்ன பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் அவனது மனநல ஆசிரியர் சொன்ன துணுக்கு ஒன்றையும் நினைவுபடுத்தினான்.
``இரண்டு வயோதிக தம்பதிகள் அவ்வப்போது இணைந்து வெளியே சென்று உணவு உண்டு ஓய்வெடுத்து வருவார்கள். அவர்களுள் ஒருவர், அன்றொரு நாள் வேறு  உணவகத்தில் மனைவியுடன்  உணவருந்திக் கொண்டிருந்தது குறித்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உணவகத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை.  ஆனால் அது ஏதோ ஒரு பூவின் பெயர் என்பது மட்டும் அவருக்கு நினைவிருந்தது.  ‘நல்ல வாசனையான ஒருபூவின் பெயர் சொல்லுங்கள்,’ என்றார். உடனே அவரது நண்பர் கேட்டார், ``மல்லிகையா`` என்று.  உடனே கேட்டவருக்கு சந்தோசம். மிகச் சரி. அதன் பெயர் மல்லிகைதான் என்றவர் அதன் பின் அந்த உணவகத்தை மறந்துவிட்டு, தனது மனைவியைப் பார்த்து, ``மல்லிகை, நாம் அன்று இரவு ஓர் உணவகத்திற்குச் சென்றோம் அல்லவா. அதன் பெயர் என்ன?`` என்று கேட்டார்.
இதற்குப் பெயர்தான் ஞாபக மறதி என்பது என்றான் அபி.
இதைக் கேட்டவுடன் சிறுவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.  அதன்பின் நன்கு அசந்து தூங்கினார்கள். 
…..