Sunday, December 26, 2010
உச்சரிப்பதோ சாமானியர், சேவகமோ பெருமுதலாளிக்கு...
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு நாள் மாநாடு தில்லி அருகே புராரியில் நடைபெற்று முடிந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங் கம் ஒன்றன்பின் ஒன்றாக பல ஊழல் குற்றச் சாட்டுக்களால் தாக்கப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் இம்மாநாடு நடந்து முடிந்துள்ளது. 2009 மே மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் முடிவின்போது வெற்றிக் களிப்பில் இருந்த மனோநிலை இப்போது மறைந்துவிட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் நிலை, தீர்க்கமுடியாத நிலையில் தொடரும் விவசாய நெருக்கடி, வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருத்தல் ஆகியவை காங்கிரசின் சாமானியர்களுக்கான மேடையை மிகவும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. கட்சி ஸ்தாபனமானது ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டியின் கலகம், பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட படுதோல்வி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் லஞ்சக் குற்றச்சாட்டுக்களாலும், இவற்றை சமாளிக்க முடியாததன் காரணமாக பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் ஏற்பட்ட நம்பகமின்மையாலும் நிலைகுலைந்து போயுள்ள காங்கிரஸ் தலைமையானது, குற்றச்சாட்டை எதிர்கொள்வதைவிட எதிர்த்தாக்குதல் தொடுக்கலாம் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளது. ஊழல் குறித்து பாஜக நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் ஊழல்களையும் தற்போதைய கர்நாடக பாஜக அரசாங்கத்தின் ஊழல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவை மிகச் சரியானவையே. ஆயினும், காங்கிரஸ் கட்சியானது தன்னுடைய அரசியல் தீர்மானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் அவை ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இடது முன்னணியைச் சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும் ஊழல் புகார்களை எதிர் கொண்டதில்லை என்பதை காங்கிரஸ் கட்சி நன்கு அறியும். காங்கிரஸ் தலைவர் தன் தலைமையுரையில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது லஞ்சக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் மெய்ப்பிக் கப்படுவதற்கு முன்பே அவர்கள் அமைச்சர் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டுவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் ஒப்புக்கொள்ளாத விஷயம் என்னவெனில், மகாராஷ்டிரா முதல்வரும் மற்ற அமைச்சர்களும் புரிந்திட்ட ஊழல்கள் மறைக்க முடியாத அளவிற்கு வெளிச்சத்திற்கு வந்த பின்னர்தான் அவர்கள் நீக்கப்பட்டார்கள் என்பதாகும்.
அதுமட்டுமல்ல, பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயுள்ள தொடர்பின் காரணமாகவே லஞ்சம் உச்சத்திற்குச் சென்றுள்ளது என்பதனை காங்கிரஸ் கட்சி உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையானது, தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தங்கள் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதிலோ, அதன் பிரதிபலனாக அவர்களிடமிருந்து சலுகைகள் பெறுவதிலோ தவறேதும் இல்லை என்றே காங்கிரஸ் தலைமை கருதுகிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க மறுப்பதே இதற்குச் சரியானதோர் எடுத்துக்காட்டாகும்.
காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரத் தீர்மானங்களில், கட்சியானது சமூக ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டது. உண்மையில் இது மக்களை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சிதான். பொருளாதாரத் தீர்மானமானது மக்களின் உள்ளார்ந்த வளர்ச்சி குறித்தும் மக்களின் உரிமைகள் குறித்தும் பேசுகிறது. வேலை செய்யும் உரிமை, கல்விக்கான உரிமை, நிலத்திற்கான உரிமை, உணவுக்கான உரிமை முதலானவற்றைக் காங்கிரஸ் கட்சியும் குறிப்பிடுகிறது. ஆனால், இவ்வாறு காங்கிரஸ் கட்சி கூறினாலும், அக்கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடு என்பது இதற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. இவ்வாறு சொல் ஒன்றாகவும், செயல் வேறாகவும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது.
‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது கிட்டத்தட்ட உத்தரவாதம் செய்யப்பட்டிருப்பதாக’’ தன்னுடைய பொருளாதாரத் தீர்மானத்தில், அது குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன? நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் ஒருசில மாநிலங்கள் தவிர வேறெங்கும் அமல்படுத்தப்பட்டிருக்க வில்லை. நாடு முழுவதுமே விவசாயிகள் தங்கள் நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் அரசின் கொள்கைகளின் காரணமாகப் பறிகொடுத்து விட்டு, பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பசி, பஞ்சம், பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு உரிமை என்பது இன்னமும் தொலை தூரக் கனவாகவே இருந்து வருகிறது. நாட்டில் பொது விநியோகமுறையை பெருமளவில் வெட்டிக் குறைத்திருக்கும் மத்திய அரசின் கொள்கையே இதற்குப் பிரதான காரணமாகும்.ஆனால் காங்கிரஸ் கட்சி இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு மாநில அரசுகளே காரணம் என்று வீணே பழிபோட முயற்சிக்கிறது.
பொதுத்துறையின் கேந்திரமான பங்களிப்பு குறித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எந்தச் சூழ்நிலையில்? மன் மோகன்சிங் அரசாங்கமானது, மிகஅதிக அள வில் இலாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில் மும்முரமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில்தான் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ‘பொதுத் துறையின் பங்குகளில் 51 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்திடும்’ என்று மக்களுக்கு உறுதிமொழி அளித்துக் கொண்டே, அவர்களை ஏமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கட்டற்ற வணிகமயம் மற்றும் தனியார்மயம் மூலமாக வசதி படைத்த பிரிவினருக்கான கல்வி முறையை மேம்படுத்தி, சாமானிய மக்களின் கல்வியை வெட்டிச் சுருக்கும் ஐ.மு.கூட்டணி அரசின் புதிய கொள்கைகள் மூலம் கல்வி உரிமையும் வெட்டிச் சுருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் பிரச்சனைகள் குறித்து அது நிறைவேற்றியுள்ள அரசியல் தீர்மானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடதுசாரிகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறித் தாக்குதல் தொடுத்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுராவில் அரசியல் அல்லது தேர்தல் ஆதாயங்களுக்காக தொடர்ந்து வன்முறையை பிரயோகிக்கின்றது என்று குற்றஞ்சாட்டி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தான் திரிணாமுல் காங்கிரசின் இளைய பங்காளியாக இருந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடதுசாரிகள் மீதும் வன்முறைத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. முர்சிதாபாத், பர்தமான் போன்ற மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சியானது மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது நேரடியாகவே தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. திரிபுராவில், மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியானது ராஜீவ்காந்தி காலத்திலிருந்தே, பிரிவினை சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு, பயங்கரவாத வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியையும் இடது ஜனநாயக முன்னணியையும் எதிர்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியானது சாதிய மற்றும் மதவெறி சக்திகளுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கியதில்லை.
மேலும் மற்றொரு அரசியல் தீர்மானத்தில், காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூட்டணி அரசாங் கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இடதுசாரிக் கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் குற்றஞ் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அயல்துறைக் கொள்கை நிலைகள் பலவற்றை எதிர்க்கின்றன. உண்மையில், காங்கிரசும் பாஜகவும்தான் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையும், அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையையும் பின்பற்றுவதில் ஒரு பொதுவான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.
அயல்துறைக் கொள்கைத் தீர்மானம், ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் அயல்துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கை போன்றே வாசிக்கப் பட்டிருக்கிறது. நாட்டின் அயல் துறைக் கொள்கையைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றிருக் கும் யதார்த்தத்தை மறைக்க முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்திய அதிகாரிகள், வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கியபோதிலும், அயல்துறைக் கொள்கையில் அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய விதத்தில் திருப்திகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடமிருந்து தந்திச் செய்தி (கேபிள்) சென்றிருப்பதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது.
தீர்மானத்தில் மேலும், ‘‘மூன்றாம் உலக நாடுகளை வழிநடத்திச் செல்வதில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் இந்தியா’’, என்று குறிப்பிட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியா, மூன்றாம் உலகத்தில் நடைபெற்ற இயக்கங்களுக்குத் தலைமை தாங்கியது உண்மைதான். ஆனால் இன்றைய தினம் அதனை அது கைகழுவிவிட்டது என்பதில் ஐயமில்லை. இப்போது அது அமெரிக்காவின் ஆசியுடன் ‘‘உலக அளவிலான அதிகார மையமாக’’ மாறிட அவா கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 125 ஆண் டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அதன் நிலை எப்படி இருக்கிறது? ‘‘சாமானிய மனிதர்’’களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை உதறித் தள்ளிவிட்டு, அதிகார வெறி பிடித்த பெரு முதலாளிகளின் கருவி யாக மாறியதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி அழுகிக்கொண்டிருக்கும் அறிகுறி களையே காண முடிகிறது.
தமிழில்: ச.வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment