Thursday, December 16, 2010

பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்புகள்:பிரகாஷ் காரத்




நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் எவ்வித விவாதமோ நடவடிக்கை களோ இன்றி முடிவுற்றுள்ளது. 2ஜி ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரம் குறித் தும் அதனுடன் பின்னிப்பிணைந்துள்ள மற்ற அம்சங்கள் குறித்தும் விசாரிக்க, நாடாளு மன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண் டும் என்கிற கோரிக்கையை ஐ.மு.கூட்டணி அரசாங்கம் வீண்பிடிவாதத்துடன் மறுத்ததே இதற்குக் காரணமாகும்.

மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சிஏஜி) அறிக்கையானது, ஆ.ராசாவின் கீழிருந்த டெலிகாம் அமைச்ச கம், உரிமங்கள் மற்றும் அலைவரிசைகள் ஒதுக்கீடு செய்த வழி காரணமாக அரசின் கஜானாவிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. இது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களிலேயே மாபெரும் ஊழ லாக அமைந்திருக்கிறது. ஆயினும், காங்கி ரஸ் தலைமையோ, ஐ.மு.கூட்டணி அரசாங் கமோ இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசா ரணைக் குழுவை அமைக்க, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்திட அனுமதி தர தயாராக இல்லை.

அமைப்பு முழுமையாக அழுகி இருக்கிறது

காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் கடந்த சில மாதங் களில் எண்ணற்ற ஊழல்களைப் புரிந்துள் ளது. காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடத் தியது தொடர்பான ஊழலும் இதற்கிணையாக அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும். ஆயி னும், அதனை நடத்திய, அமைப்புக்குழு செய் திட்ட தவறான சில நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம் என்றும், பொதுப்பணத்தை மோசடி செய்வதில் இது மிகவும் அற்பத் தொகையே என்கிற முறையில் அரசாங்கம் அதனைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. மும்பையில் நடைபெற்றுள்ள ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றிற்கு அரிசி ஏற்றுமதி செய்ததில் உள்ள ஊழல் போன்றவை உயர்மட்ட அள வில் அரசில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சில உதாரணங்களாகும்.

இவ்வாறு நடைபெற்றுள்ள ஊழல் சம்ப வங்களை, ஒரு சில அரசியல்வாதிகள் அல் லது கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்ட ஊழல்களின் வெளிப்பாடு என்று கருதினால் தவறிழைத்துவிடுவோம். சமூகத்தில் ஏற்பட் டுள்ள அழுகல் நிலை மிகவும் ஆழமாகச் சென்று அமைப்பு முழுமையையும் வியாபித் திருக்கிறது. உயர் இடங்களில் இத்தகைய ஊழல் என்பது புதியது ஒன்றுமல்ல. தாராள மயப் பொருளாதாரக் கொள்கை துவங்கப்பட்ட 1990களிலேயே இது வேகமாக வளரத் தொடங்கிவிட்டது. தாராளமய சகாப்தத்தில் ஊழலின் தன்மை குறித்து 2001 மார்ச் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’இதழில் நான் எழுதி யிருந்ததாவது:

‘‘ஊழலின் தன்மையைப் பொறுத்தவரை, தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்து வதற்கு முன்பு இருந்த நிலைக்கும் இப்போதி ருக்கும் நிலைக்கும் இடையே என்ன வேறு பாடு? தாராளமயக் கொள்கைகள் அமல்படுத் தப்படுவதற்கு முன்பு, குறிப்பாக 1985கள் வரை, உயர்மட்ட அளவில் ஊழல் என்பது பெரும் வர்த்தக நிறுவனங்கள் உரிமங்கள் பெறுவதற்காகவும் சில விதிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காகவும் லஞ்சம் கொடுக்கும் நிலை மட்டுமே இருந் தது. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட பெரும் வர்த்தக நிறுவனத்திற்கும் அது சம்பந்தப்பட்ட அமைச்சர் அல்லது அதிகாரிகள் என்ற அளவில்தான் அது இருந்தது, இப்போது தாரா ளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்பு, அரசின் விதிமுறைகள் எல்லாம் தளர்த்தப் பட்ட பின்பு, ஆட்சியாளர்களின் கொள்கையே விற்பனைக்குத் தயாராகி விட்டது. அந்நியப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் தங்கள் தொழில்மயத்திற்குப் பெரும் லாபம் கிடைக் கும் வகையில் ஆட்சியாளர்களின் கொள்கை களையே பெரும் தொகைகளை அளித்து மாற்றமுடிந்தது. அவர்கள் கொடுக்கும் விலை சரியென்று அரசு கருதுமானால் இரவோடு இரவாகவே கொள்கைகளை மாற்ற முடியும். மிகமோசமான முறையில் டெலிகாம் துறை யில் இது நடந்தது. மின்சாரம், எண்ணெய் மற்றும் பல பெரிய தொழில்துறைகளிலும் இத் தகைய தாராளமயக் கொள்கைகள் தொடர்ந் தன. உண்மையில், அரசு மேற்கொண்ட ஒவ் வொரு கொள்கை முடிவுமே, பன்னாட்டு நிறு வனங்கள் மற்றும் இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களின் சங்கம் அளித்திட்ட தொகையின் அடிப்படையிலேயே மேற்கொள் ளப்பட்டன. இவ்வாறு நாட்டில் இருந்த அனைத்து நிறுவனங்களையும், அரசு ஏஜென் சிகளையும் நாட்டின் பெரு முதலாளிகள் லஞ்சம் கொடுத்துத் தங்கள் பக்கம் வசப்படுத் திக் கொள்ள முடிந்தது. பன்னாட்டு நிறுவ னங்களும், சட்டவிரோத முதலாளித்துவமும் (உசடிலே உயயீவையடளைஅ) ஆட்டிப்படைத்திடும் தாய் லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல் வாதிகள் - அதிகாரவர்க்கத்தினருக்கு இடை யிலான பிணைப்பு என்பது நவீனதாராளமயக் கொள்கை ஆட்சியில் மிக வேகமாக உரு வாகி இருக்கிறது. ஊழல்களின் முதல் அலை என்பது நரசிம்மராவ் அரசாங்கக் காலத்திலேயே வந்துவிட்டது. முதலாளித் துவ (பூர்சுவா) கட்சிகளின் உயர்மட்ட அர சியல்வாதிகள் மாட்டிக்கொண்ட ஹவாலா ஊழல், வங்கிப் பத்திரங்கள் (securities) ஊழல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் நடைபெற்ற மோசடிகள், பெட்ரோல் பங்க் ஊழல் என்று ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தன.

டெலிகாம், சுரங்கம் மற்றும் எண்ணெய் வளத்திற்காக நிலங்களைத் தோண்டி ஆராய் தல் முதலியவற்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், ஒருசில பெரும் வர்த்தக நிறுவ னங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக் காகவே வடிவமைக்கப்பட்டன. அரசின் கொள்கைகள் மூலதனக் குவியலின் முக்கிய மானதொரு கருவியாக எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றி மாறியது.

நவீனதாராளமயக் கொள்கை பெற்றெடுத்த குழந்தையே ஊழல்

பெரும் வர்த்தக நிறுவனங்களுடனான ஊழல் பிணைப்பில் காங்கிரஸ் கட்சி மிகவும் செங்குத்தாய் உயர்ந்தது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), ஜேஎம்எம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. அதில், 1997 ஆகஸ்டில் மக்கள வையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அம்பானிகள், எஸ்ஸார், வீடியோகான் மற்றும் பல பெரும் வர்த்தக நிறுவனங்கள் மத்திய பெட்ரோலிய அமைச்சராக இருந்த சதீஷ் ஷர்மாவிடம் கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைகளைப் பட்டியலிட்டிருந்தது. அவ்வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய் யப்பட்டார்கள் என்பது வேறு விஷயம்.

பாஜக ஆட்சியிலிருந்தபோது, அதன் செயல்பாடுகளும் அப்படி ஒன்றும் வித்தியாச மாக அமைந்துவிடவில்லை. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்,டெலிகாம் துறை, பெட்ரோல் பங்க் கள் மற்றும் எரிவாயு ஏஜென்சிகளை விற்றல், ராணுவத் தளவாடங்களை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் என அனைத்து அம்சங் களிலும் தங்களுக்கு வேண்டிய பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகை காட்டி யது என்று காங்கிரஸ் கட்சி சென்ற அதே பாதையில்தான் பாஜகவும் சென்றது. சமீபத் தில்கூட, பெல்லாரி சுரங்க மாஃபியா கும்ப லை பாஜக, கர்நாடகாவில் உள்ள தன்னு டைய அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டு புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது. எடி யூரப்பா அரசாங்கம், தங்கள் குடும்ப உறுப் பினர்களுக்கும், தன் உறவினர்களுக்கும் மற் றும் இதர அமைச்சர்களின் உறவினர்களுக் கும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கியிருப்பதில் புதிய சாதனையே படைத் திருக்கிறது.”

முதலாளிகளைப் பொறுத்தவரை, இவ் வாறு ஊழல்பேர்வழிகள் ஆட்சி யிலிருப்ப தை மிகவும் வசதியானதாகவே கருதுவர். சட்டவிரோத முதலாளித்துவமும் (உசடிலே உயயீவையடளைஅ), ஊழலும் நவீன தாராளமயக் கொள்கை யின் இரு கைகள் போன்றவையாகும். இத னை மறைக்கும் விதத்தில் முதலாளித்துவ வர்க்கம் புதிய அறநெறியைச் சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

ராடியாவின் ஒலிநாடாக்கள் (டேப்புகள்), பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசுக் கும் இடையில் பரஸ்பரம் உதவி செய்துகொள் ளும் கள்ள உறவுகளை வெளிக்கொணர்ந் திருக்கிறது, ஊடகங்களின் எடிட்டர்கள் மற் றும் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் வர்த் தக நிறுவனங்களின் ஏஜெண்டுகளுக்கும் இடையேயுள்ள மறைமுக உறவுகள் வெளி வந்திருப்பதைப் பார்த்து மத்தியதர வர்க்கம் அதிர்ச்சியடையலாம். ஆனால் இடதுசாரி களைப் பொறுத்தவரை, அதில் ஆச்சரியப்படு வதற்கு எதுவுமில்லை. எனவேதான் கார்ப்ப ரேட் ஊடகங்கள் நம்மை எப்போதும் வசை மாரி பொழிந்துகொண்டிருக்கின்றன. ஊடகங் களில் பெரும்பாலானவை கார்ப்பரேட் கட்ட மைப்பின் ஒரு பகுதியே. எனவேதான் அவை, அரசாங்கம் நவீன தாராளமயக் கொள் கைகளின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே வேண்டு மென்றே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின் றன. டெலிகாம் அமைச்சராக தயாநிதி மாறன் வர வேண்டுமா அல்லது ஆ.ராசா வரவேண் டுமா என்பதைக் கூட கார்ப்பரேட்டுகள் போட்டிப்போட்டுக்கொண்டு, ஒன்றுக் கொன்று தலையிட்டு, செல்வாக்கு செலுத்தும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்த அடிப்படையில் தங்களுக்கு வேண்டியவர் அமைச்சராக வரவில்லையென்றால், அதன் பின் அவர் எங்ஙனம் தங்கள் நலன்களுக்கு வளைந்து கொடுக்கிறார் என்பதை வைத்து அவரது செயல்பாடுகள் மதிப்பிடப்படுகிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் ஆரம்பகால கட்டத்தில் எப்படி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்த மணிசங்கர் ஐயர் மாற்றப்பட்டு, அந்த இடத் தில் முரளி தியோரா அமர்த்தப்பட்டார் என் பதை நினைவுகூர்ந்தால் இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

அரசியலில் பணபலத்தை முறியடிக்க வேண்டியது அவசியம்

சமீபத்திய வெளிப்பாடுகள் கசப்பான தோர் உண்மையை உறுதிப்படுத்தி இருக் கின்றன. பிரதமர் ஓர் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார். இதில் சிலர் சில வர்த் தக நிறுவனங்களின் நலன்களைப் பிரதி பலிக்கிறார்கள். சிலர் அவர்களே வர்த்தகர் களாக இருக்கிறார்கள். ஒருசிலர் வழக்கறிஞர் கள். இவர்கள் ஒருசில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞர்களும் ஆவார் கள். அவர்கள் வகிக்கும் இலாகாவில் அவர் கள் சார்ந்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் விஷ யங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். ஊழல்மிக்க பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தின ரின் பிணைப்பின் மூலமாக இயக்கப்படும் சட்டவிரோதப் பணம்தான் நாட்டின் அரசி யலையும் ஜனநாயகத்தையும் தவறான வழி யில் செலுத்தி, ஒரு மோசமான அரசியல மைப்பை உருவாக்கிக் கொண்டிருக் கிறது. இத்தகைய ஊழல் மற்றும் சட்ட விரோதப் பணத்திற்கும் இடையேயுள்ள நேரடித் தொடர் புதான் தேர்தல்களின்போது மிகப்பெரிய அள வில் பயன்படுத்தப்படுகிறது.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, அதன் பிறப்பிடமான இத்தகைய இழிவான பிணைப்பின் மூலாதாரத்தையே தாக்குவ திலிருந்து தொடங்க வேண்டும். 2ஜி ஸ்பெக்ட் ரம் அலைவரிசை விவகாரத்தில், அமைச்சர் மற்றும் குற்றமிழைத்துள்ள அதிகாரிகள் மட்டு மல்ல, அவர்களைக் கள்ளப் பணத்தாலேயே அடித்துத் தங்கள் வசமாக்கியுள்ள கார்ப்ப ரேட்டுகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத் தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். கபில் சிபல் டெலிகாம் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், மேற்கொண்ட நடவடிக்கைகள் பெயரள விலானவையே என்ற சந்தேகத்தை ஏற்படுத் தியுள்ளது. “உங்கள் உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்படக் கூடாது” என்று 85 கம்பெனிக ளுக்கு காரணம் கோரும் அறிவிக்கை அனுப்பப்பட்டபின், உள் விசாரணைக் குழு அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? சட்ட விரோதமான வகைகளில் உரிமங்கள் பெற்ற அனைத்துக் கம்பெனிகளின் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்க அமைச் சர் ஏன் தயங்குகிறார்? அலைவரிசையை ஏலமிடுவது சிறந்த வழியாக அமையாது போக லாம் என்று அமைச்சர் ஏன் கூறுகிறார்?

இவ்வாறு விஷயங்களை நுணுகி ஆராயும் போது சில விஷயங்களைத் தெளிவாக பார்க்க முடியும். அதாவது ஊழலின் அடிநாதமாக விளங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊழ லுடன் பிணைக்காமல் தப்பவிடும் முயற் சியே அது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைக்க அரசாங்கம் விரும்பாததன் உண் மையான காரணம் இதுவேயாகும். ஏனெனில் அவ்வாறு ஒரு விசாரணைக் குழு அமைக்கப் பட்டுவிட்டால், மேலே சொன்னவாறு பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தினர் இடையேயான பிணைப்பின் மூலமாக செயல்படுத்தப்பட்டு, கார்ப்பரேட் நலன்களுக்குச் சாதகமான கொள் கைகள் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டது வெட்டவெளிச்சமாகிவிடும். பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதி களுக்கு இடையிலான பிணைப்பின் மூலம் உருவாகும் ஆபத்தான அம்சங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு வின் விரிவடைந்த கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட அரசியல் தீர்மானம் மிகவும் கவலை யுடன் சுட்டிக்காட்டுகிறது. “அரசியலிலும் தேர்தல்களிலும், பணபலம் பாய்ச்சப்படு வதற்கு எதிராக மிகவும் விரிவான அளவில் பிரச்சாரத்தை கட்சி மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது. பணம்படைத்த பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணபலத்தின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளையே தங்கள் நலன்களுக்கு ஏற்ப உருவாக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்குத் துணையாக நிற்கும் முதலாளித்துவக் கட்சி களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.”

நவீனதாராளமயக் கொள்கைகளே ஊழல் என்னும் முட்டைகள் பெருமளவில் உற்பத்தி யாகக் காரணமாகும். எனவே, ஊழலுக்கு எதி ரான போராட்டத்தையும், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத் தையும் சரியானமுறையில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

No comments: