Sunday, December 12, 2010

நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம்-தில்லித் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் அப்துல் கலாம் அறைகூவல்



புதுதில்லி, டிச. 2-
எதிர்கால இந்தியாவை, நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாடாக உருவாக்குவோம் என்று இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் முனைவர் ஏபிஜெ அப்துல் கலாம் கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் 2010 கருத்தரங்கம் வெள்ளி, சனி, ஞாயிறு தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளன்று படைப்பாளர்களின் கட்டுரைத் தொகுப்பான ‘இதுவரை, இன்று, இனி’ என்னும் நூலை வெளியிட்டு அப்துல் கலாம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘இந்த விழாவைச் சிறப்பாக நடத்தும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின்று என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கடந்த மூன்று நாட்ள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழை ஆராய்ந்து, தமிழை வளப்படுத்தி, தமிழ் மொழியின் மாட்சிமையை வெளிக்கொணர்ந்து, அதன் படைப்பாக இன்றைக்கு ‘‘இதுவரை, இன்று, இனி...’’ என்ற புத்தகத்தினை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

1946இலிருந்து இன்றுவரை இப்படிப்பட்ட ஓர் அறிவார்ந்த கருத்தரங்கம் இந்தத் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இப்போதுதான் இவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது என்று அறிகிறேன். இதைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இப்படிப்பட்டதோர் அருமையான புத்தகத்தை வெளியிட எடுத்துக்கொண்ட முயற்சிக்காக தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கும், குறிப்பாக தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் பொதுச் செயலாளர் சக்தி பெருமாள் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

கட்டுரைகளின் படைப்பாளிகள் தமிழ்த் திறனை, ஆராய்ச்சியை, கவிதை நடையை, மொழியின் திறனை, கற்பனை வளத்தை, வாழ்வின் சூழலை, இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களை, உலகமயமாகும் தமிழை, கணினித் துறையில் பல்வேறு பரிணாமம் பெற்ற தமிழை, பிற மொழிகளுடன் தமிழ் எவ்வாறு சமூக மாற்றத்தில் பங்கு பெற்றுள்ளது என்பதை நூலைத் தொகுத்தளித்துள்ள தொகுப்பாசிரியர் கோ. பாலச்சந்திரன் அருமையாகத் தொகுத்தளித்துள்ளார்கள்.

கணினித் தமிழில் எப்படிப் பல்வேறு வடிவங்கள் இன்றைக்கு யூனிகோடாக வடிவம் பெற்றுள்ளது? இன்றைக்கு உள்ள Level 2 Complex Script என்ற முறையில் தமிழ் யூனிகோடும் அதன் பயன்பாடும் மற்றும் அதில் உள்ள குறைபாடுகளையும் TACE-16 என்ற முறையில் உருவாக்கினால் அது எப்படி கணினி மட்டுமல்ல, iphone, smart phone, android போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும்? இவை குறித்த ஒரு விவாதம் இங்கே தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் முடிவு ஆறு கோடி மக்களின் பயன்பாட்டுக்கு உபயோகமானதாக மாறும் என்பது திண்ணம். எனவே, இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படைத்த அத்துணைப் படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் 2010 கருத்தரங்கத்தில் ஏழு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. இனிவரும் காலங்களில் மேலும் இரண்டு தலைப்புக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒன்று தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், தமிழ் மக்களின் சிறப்பியல்புகளையும் சித்தரிப்பதாக அது அமைய வேண்டும். இரண்டாவது தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் பத்தாண்டுகளில் எவ்வாறு மேம்பட வேண்டும், எப்படி ஒரு வளமான தமிழகத்தை நாம் காண முடியும் என்கிற வகையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேயிற்குச் சென்றிருந்தேன். உலகக் கவிஞர்களின் 30ஆவது மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் உலகம் முழுதுமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். சீன நாட்டைச் சேர்ந்த கவிஞர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அது என்ன நிகழ்வு? தைவான் நாட்டைச் சேர்ந்த என்னுடைய சீன நண்பர் கவிஞர் யூசி அவர்கள் மேடையேறினார்கள். அவர் சொன்னார்: ‘‘நான் 2005ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு என் நண்பர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தார். அவரிடம் கவிதையைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தபொழுது, கலாம் என்னிடம் 2200 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழகத்தில் பிறந்து, இந்த உலகத்திற்கு, உலகத் திருமுறையை, திருவள்ளுவரின் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை எனக்கு வழங்கினார்.

அதைக் கடந்த ஐந்தாண்டுகளாகப் படித்தேன். பல்வேறு ஆங்கில உரைநடைகளை வாங்கிப் படித்தேன். எவ்வளவு அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் என்பதை அறிந்தேன். அறம், பொருள், இன்பம் குறித்து அவர் எழுதிய இரு வரி கொண்ட குறள், 2200 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் மாட்சிமையை, அறிவார்ந்த சமூகத்தின் மகிமையின் வெளிப்பாடாக அமைந்திருந்ததை அறிந்தேன். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும், முழு உலகத்திற்கும் பொருந்தும் வகையிலும் அது அமைந்திருந்ததை உணர்ந்தேன். 2005இல் திருக்குறளை கலாம் எனக்கு அளித்தபோது, இதனைச் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திருக்குறளைப் படிக்க படிக்க, என் நண்பர் கலாம் சொன்னது என்னைத் தூங்கவிடவில்லை. திருக்குறள் சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக அதைச் சீன மொழியில், மொழிபெயர்த்தேன். இன்றைக்கு என் நண்பர் கலாம் முன்னிலையில் உலகக் கவிஞர்களின் 30ஆவது மாநாட்டில் அதனை வெளியிடுகிறேன்’’ என்று சொன்னார். உடனடியாக அங்கு கூடியிருந்த அத்தனை உலக அறிஞர்களும் கவிஞர்களும் ஆரவாரத்துடன் திருக்குறளின் சீன மொழிபெயர்ப்பை வரவேற்று அங்கீகரித்தார்கள். இது வரும் 2011 ஜனவரியில் சீனத்தில் மட்டுமல்ல, சீன மொழி பேசுவோர் உலகில் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அதன் மகிமையை வெளிப்படுத்தி மக்களின் வாழ்வை வளப்படுத்தும். இவ்வாறு தமிழர் படைத்த திருக்குறள் உலகத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.

அப்படித் தமிழை வளர்த்த தமிழர்கள் எப்படி இருக்க வேண்டும்? அதாவது இன்றைய சூழலில் தமிழர்களின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட வாழ்வு தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏற்றம் தரும்? இன்றைக்கு ஆறு கோடி பேராக இருக்கக் கூடிய தமிழ் மக்கள் 2020இல் பத்து கோடிக்கும் மேலாக உயர்ந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கை உயர்ந்து சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டுமானால், என்ன வேண்டும்? சிறப்பாக வாழ, முதலாவதாக சிறந்த கல்வி அவசியம். கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு அவசியம். வேலைவாய்ப்பு மட்டுமல்ல, பண்டைத் தமிழர்களுக்கிருந்த நற்பண்புகள் அவசியம். உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியம் வேண்டும். தனது செயலில் நேர்மை வேண்டும். பகைக்கு அஞ்சா விவேகத்துடன் கூடிய வீரம் வேண்டும். அனைவரையும் மதிக்கும் பண்பு வேண்டும். வாழ்க்கையில் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். பயனற்ற வார்த்தைகளைச் சொல்லாமலிருக்க வேண்டும். அரசியலில் நேர்மை, நாணயம் வேண்டும், தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுக்கும் தலைமைப் பண்பு வேண்டும். நமது முன்னோர்கள் காட்டிய அறவழியை நமது குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும். வாழ்க்கையில் உழைத்து, செல்வம் சேர்த்தோருக்கு ஈகைப் பண்பு வேண்டும். ஈகை அறிவுச் செல்வத்தைத் தருவதாக அமைய வேண்டுமேயல்லாமல், தானமாகக் கூடாது.

இதற்கெல்லாம் ஒரு அடிப்படைப் பண்பு வேண்டும். என்ன அந்த அடிப்படைப் பண்பு? அதுதான் நல்லொழுக்கம். நல்லொழுக்கம் என்றால் என்ன?

எண்ணத்திலே நல்லொழுக்கம் இருந்தால், நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி நிலவினால், நாட்டில் சீர் முறை உயரும்.
நாட்டில் சீர்முறை உயர்ந்தால் உலகத்தில் அமைதி நிலவும்.
எல்லாவற்றிற்கும் அடிப்படை நல்லொழுக்கம என்பது இந்த சிறு கவிதை மூலம் உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன்.

நல்லொழுக்கத்துடன் உழைத்தால், நல்ல எண்ணங்கள் உண்டாகும். நல்ல சிந்தனையால், நல்ல கவிதைகள் பிறக்கும். தமிழ் மொழி இலக்கியம் வளரும். தமிழ் விஞ்ஞானம் வளரும். தமிழர் தம் தொழிலில் சிறந்து விளங்குவர். தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கும். நல்லொழுக்கம் உள்ள தமிழகம் உழைப்பால் சிறப்பாக வளரும். திருவள்ளுவர் கண்ட திருக்குறள் போல் மற்றுமொரு மறுமலர்ச்சிக் காவியம் பிறக்கும். தொல்காப்பியத்தைப்போல் தமிழ் இலக்கியப் படைப்புகள் பலபல உண்டாகும். ஐம்பெரும் காப்பியங்கள் கண்ட தமிழகம் பல அரிய காப்பியங்ளை வடிக்கும். தமிழ்மொழி சிறக்கும். அப்படிப்பட்ட தமிழகம் உருவாக வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் நல்லொழுக்கததை நமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். நிறைவாக சங்கத்தின் செயலாளர் சக்திபெருமாள் நன்றி கூறினார்.
--

No comments: