Saturday, December 25, 2010
வரலாறு படைத்திட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களின் வேலை நிறுத்தம்:விஏஎன் நம்பூதிரி, தலைவர்
பிஎஸ்என்எல்ஊழியர் சங்கம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல்-இல் டிசம்பர் 1 அன்று தொடங்கி டிசம்பர் 2 அன்றிரவு விலக்கிக்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் என்பது பிஎஸ்என்எல்-இல் வேலை செய்யும் மூன்று லட்சம் ஊழியர்கள், நிறுவனத்தைத் தனியாருக்கத் தாரை வார்ப்பதையோ, விருப்ப ஓய்வு என்ற பெயரிலோ அல்லது வேறெந்த வகையிலுமோ ஊழியர்களின் எண்ணிக்கையை வெட்டிக் குறைப்பதையோ, ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பிரகடனத்தின் அடையாளமாக அமைந்தது. பிஎஸ்என்எல் தொடர்புகளுக்காக வெகுகாலமாகக் காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான கைபேசி இணைப்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வேலைநிறுத்தம் முன்னிலைப் படுத்தியது.
ஏப்ரல் 20 வேலைநிறுத்தமும் அதன்பின் நடைபெற்ற தொடர் நடவடிக்கைகளும்
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், இதர பல கோரிக்கைகளுடன் மேற்கண்ட முக்கியமான கோரிக்கைகளையும் வலியுறுத்தி, 2010 ஏப்ரல் அன்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்றதன் காரணமாக வேலைநிறுத்தத்தின் முதல் நாளன்றே மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்த்து வைக்கப்படும் என்று அரசுத்தரப்பில் எழுத்து பூர்வமாக உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஒரு சில கோரிக்கைகள் மீது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், மற்ற கோரிக்கைகள் மீது கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் அமல்படுத்தப்படவில்லை. முக்கியமான கோரிக்கைகளை அமலாக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் விளைவாக ஊழியர்கள் மிகவும் கொதிப்படைந்திருந்தனர்.
தனியாருக்குத் தாரைவார்த்தல் / சுயஓய்வு மூலம் ஆட்குறைப்பு
ஐமுகூ-2 அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளை மிகத் துரிதகதியில் செய்யத் தொடங்கியது. சாம் பிட்ரோடா குழு அறிக்கையானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களைக் வெட்டிக்குறைத்திட வேண்டும் என்றும், கேந்திரமான தனியார் ஒருவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்திருந்தன. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவற்றை முழுiயாக எதிர்த்து நின்றபோதிலும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே இந்தத் திசைவழியில் நடவடிக்கைகளைத் தொடங்கி இருந்தன. பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் உள்ள கார்பரேட் நிறுவனங்களும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டில் உள்ள டெலிகாம் துறையை முழுமையாகத் தாங்கள் வசப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அதன் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தன.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாட்டின் அனைத்து நகரங்களிலும் மாநகரங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கேந்திரமான பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய கார்பரேட் நிறுவனங்களும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அமைக்கப்பட்ட துறையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக. டெலிகாம் துறையால் மற்றொரு குழு அமைக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தினை எந்த விதத்தில் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறப்பட்டது. அதேபோன்று சுய ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டது. ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசின் உயர்மட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி, அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான போராட்டத்திற்குச் செல்வது என்று தீர்மானித்தது.
எந்தவொரு வேலைநிறுத்தம் என்றாலும் அதற்கு முழுத் தயாரிப்புப் பணிகள் அவசியம். கோரிக்கைகள் குறித்து ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டியதும் அவசியம். வேலைநிறுத்தத்திற்காக கோரிக்கைகள் பிரதானமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துடன் சம்பந்தப்பட்டதால், இது தொடர்பாக மேலும் தீவிரமான பிரச்சாரம் அவசியமாக இருந்தது. எனவே இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் ஏராளமான எண்ணிக்கையில் சிறுபிரசுரங்களும் நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.
அகிலஇந்திய சிறப்பு மாநாடு - 19 ஜூலை 2010
வேலைநிறுத்தத்திற்கான தயாரிப்புப் பணிகளின் முதல் கட்டமாக 2010 ஜூலை 19 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக புதுதில்லியில் அகில இந்திய சிறப்பு மாநாடு நடைபெற்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து பங்கேற்றார்கள். இச்சிறப்பு மாநாட்டில் எம்.கே. பாந்தே (சிஐடியு), ஜி. சஞ்சீவரெட்டி (ஐஎன்டியுசி) மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இச்சிறப்பு மாநாட்டில் 2010 அக்டோபர 19 முதல் 21 வரை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மாநிலங்களிலும் மாநில அளவிலான சிறப்பு மாநாடுகள் நடைபெற்றன. ஏராளமான எண்ணிக்கையில் மாநில மொழிகளிலும் துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, சுற்றுக்கு விடப்பட்டன.
2010 அக்டோபர் 19 முதல் 21 பண்டிகைக் காலமாக இருந்ததாலும், கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதாலும், வேலைநிறுத்தத்தை 2010 டிசம்பர் 1 - 3 தேதிகளில் நடத்துவது என கூட்டு நடவடிக்கைக் குழு, தீர்மானித்தது.
நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி
2010 நவம்பர் 19 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வந்து கலந்து கொண்டனர். பேரணி, புதுதில்லி, ஜன்பத் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமையிடத்திலிருந்து புறப்பட்டு, டால்ஸ்டாய் வீதி வழியாக, நாடாளுமன்ற வீதியை அடைந்தபோது, காவல்துறையினரால் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சர்யா, பேரணியைத் துவக்கி வைத்து உரையாற்றினார். கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அபிமன்யு மற்றும் தலைவர்கள் உரையாற்றினார்கள். ஊழியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமருக்கும், மக்களவை சபாநாயகருக்கும் அளிக்கப்பட்டது.
2010 டிசம்பர் 1 அன்று வேலைநிறுத்தம் தொடங்கியது
வேலைநிறுத்தத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னரும், பிஎஸ்என்எல் நிர்வாகம் மௌம் சாதித்தது. பின்னர் பெயரளவில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், உருப்படியாக ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. 2010 நவம்பர் 29 அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் நடைபெற்ற மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள் முழுமையாக வெற்றி பெற்றன. வேலைநிறுத்தம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய/மாநில அரசு ஊழியர் அமைப்புகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. அவை தங்கள் முழுமையான ஆதரவை வேலைநிறுத்தத்திற்கு அளித்தன.
பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிசம்பர் 1 தினத்தை தனியார்தாரைவார்ப்பு எதிர்ப்பு தினமாக அனுசரித்து அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு அறைகூவல் விடுத்தது. மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் பெடரேஷன் மற்றும் பல்வேறு அமைப்புகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன. அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓட்டி ஓய்வூதியர் சங்கமும், பிஎஸ்என்எல் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனமும் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளித்தன.
டிசம்பர் 1 அன்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது. நாடு முழுதும் உள்ள பிஎஸ்என்எல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. பல மாநிலங்களில் மாநில அளவிலான முதன்மை பொது மேலாளர்கள்கூட அலுவலகத்திற்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். கொல்கத்தா, தில்லி, சென்னை, பங்களுரு, திருவனந்தபுரம் மற்றும் பெரிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகம் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. ஆயினும் கோரிக்கைகள் அரசுடனும் டெலிகாம் துறையுடனும் சம்பந்தப்பட்டதால் எவ்விதமான முடிவும் எடுக்கப்பட முடியவில்லை.
முதல் நாள் நடைபெற்ற வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றதால், சில இடங்களில் வேலைநிறுத்தத்தில் சேராத ஒரு சில ஊழியர்கள் கூட இரண்டாம் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களுடன் டெலிகாம் துறை செயலாளர் டிசம்பர் 2 அன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் அவர் விரிவான விவாதத்திற்குத் தயங்கியபோதிலும், பின்னர் முழுமையாக ஒத்துழைத்தார். பின்னர் பிஎஸ்என்எல் தலைவர்/மேலாண் இயக்குநருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்த்திட தற்சமயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும், ஊழியர்களை சுய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றும், அரசுத் தரப்பில்உறுதிமொழி அளிக்கப்பட்டது. மேலும் 15 மில்லியன் லைன்கள் வாங்குவதற்கான டெண்டரும் விரைவில் விடப்படும் என்று உறுதிதரப்பட்டது. 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் தொடர்பாக ஓய்வூதியத் திருத்தம் குறித்து மீள கேபினட் குறிப்பு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதிதரப்பட்து. ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் சங்கங்களுடன் கலந்து பேசி பிஎஸ்என்எல் போர்டுக்கு அனுப்பப்பட்டு புதிதாக ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும் உறுதிதரப்பட்டது.
பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 டிசம்பர் 2 அன்றிரவு 8 மணிக்குக்கூடி அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்தபின் வேவைநிறுத்தத்தை விலக்கிக்கொள்வதென முடிவு செய்தது.
வேலைநிறுத்தத்தில் கிடைத்த படிப்பினைகள்
வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஓரிரண்டு ஊழியர்களின் நிதிக் கோரிக்கைகளாக இருந்த போதிலும், மற்றவை அனைத்தும் பிஎஸ்என்எல் வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடியவைகளாகும். அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்றுகூட இதனைக் கூற முடியும்.
அரசுத்தரப்பில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தற்போதைக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்றும் சுய ஓய்வில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பமாட்டோம் என்றும் கூறப்பட்டிருந்தாலும் அவை தற்காலிகமானவைகள் மட்டுமே. அரசின் கொள்கைகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமானால், அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து வீரஞ்செறிந்த நீண்ட நெடிய போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியது அவசியம். இதற்கு மக்கள் மத்தியில் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.
கூட்டு நடவடிக்கைக் குழுவை உடைத்திட அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் பொடிப்பொடியாக்கியுள்ளோம். இதனை எதிர்காலத்திலும் பேணிப்பாதுகாத்து, கூட்டு நடவடிக்கைக் குழுவை மேலும் வலுவானதாக மாற்றிட வேண்டும்.
டெலிகாம் துறை மிகவும் விரிவானதும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு துறை. இதில் கிடைக்கும் லாபத்தை விழுங்குவதற்காக அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையே மிக மோசமான வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அவை பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தினால்தான் தாங்கள் மக்களை முழுமையாகக் கசக்கி அதன் மூலம் கொழுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் மிகவும் இழிவான முறையில் திட்டங்களைத் தீட்டிவருகின்றனர். இத்தகைய இவர்களின் இழிமுயற்சிகள் முறியடிக்கப்பட்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விழிப்புடனிருந்து, மக்களின் ஆதரவுடன் இப்போராட்டத்தை மேலும் தீவிரமான முறையில் முன்னெடுத்துச் சென்று, அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment