Saturday, December 11, 2010
தமிழ் இனிய மொழி ஆனால் கற்பதற்குக் கடினமான மொழி-தமிழ் 2010 கருத்தரங்கில் தில்லி முதல்வர் புகழாரம்
புதுதில்லி, டிச. 12-
தமிழ் மிகவும் இனிய மொழி ஆனால் அதே சமயத்தில் கற்பதற்கு மிகவும் கடினமான மொழி என்று தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் 2010 கருத்தரங்கம் வெள்ளியன்று மாலை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கில் தொடங்கியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் பேசியதாவது:
‘‘நான் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் இங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த போது தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களும் வந்திருந்தார்கள்.
எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என் மருமகளே தமிழகத்தின்தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர்தான். எனக்கும் என் கணவருக்கும் தமிழ் நண்பர்கள் ஏராளம்.
தமிழகத்தில் எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள். அவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நான் படித்து மிகவும் உத்வேகம் அடைந்திருக்கிறேன். மனிதகுல சமத்துவத்திற்காகவும், பெண்கள் விடுதலைக்காகவும் சாதி ஒழிப்புக்காகவும் அவர் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டுவந்தவர் தந்தை பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்திருத்தவாதிகள் எண்ணற்றோரைத் தந்தது தமிழகம்.
தில்லி மாநகரத்தில் பல்வேறு மொழி பேசுவோர் வாழ்கிறோம். இதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.
தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்துகிற 2010கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.
அடுத்து தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், கனடா லிண்ட்சர் பல்கலைக்கழக பேராசிரியர் கவிஞர் சேரன், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக இந்திய மொழிகள் மையத் தலைவர் கி.நாச்சிமுத்து, தில்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் அ.மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பி.குருமூர்த்தி நன்றி கூறினார்.
முன்னதாக வலிவலம் ராஜேந்திரன் குழுவினரின் மங்கல இசை வாசிக்கப்பட்டது. நிறைவாக பத்மஸ்ரீ சரோஜா வைத்தியநாதன் மாணவியர் பரதநாட்டியம் நடைபெற்றது.
சனிக்கிழமை
கருத்தரங்கம் சனிக்கிழமையன்று தொடர்ந்தது. சனிக்கிழமை காலை நடைபெற்ற 50 ஆண்டு காலப் புனைவிலக்கியம் என்ற அமர்வு நடைபெற்றது. முனைவர் எம்.ஏ.சுசீலா நெறியாளுநராக இருந்து அமர்வினை நடத்தினார். தமிழில் கோட்பாட்டு எழுத்துக்கள் என்ற பொருளில் முனைவர் பிரேம், நாவல் இலக்கியம் என்ற பொருளில் நாஞ்சில் நாடன் உரையாற்றினார்கள். இன்றைய சிறுகதைகள்: சாதனைகளும் சவால்களும் என்ற பொருளில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அனுப்பி வைத்த கட்டுரையை ஷாஜஹான் வாசித்தார். இத்துடன் காலை அமர்வு நிறைவுற்றது.
இதனை அடுத்து கவிதை இலக்கியம் என்ற இரண்டாவது அமர்வு நடைபெற்றது. சிந்துக்கவி மா. சேது ராமலிங்கம் நெறியாளுநராக இருந்து அமர்வினை நடத்தினார். கவிஞர் கலாப்ரியா இன்றைய கவிதை போகும் திசை என்ற பொருளிலும், கவிஞர் முத்துலிங்கம் மரபுக் கவிதை மறக்கப்பட வேண்டியதா என்னும் பொருளிலும், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் இந்திய அளவில் தமிழ்க் கவிதையின் நிலை என்ற பொருளிலும் உரையாற்றினார்கள்.
அடுத்து கணினித் தமிழ் என்ற மூன்றாவது அமர்வு நடைபெற்றது. ஜான்சுந்தர் நெறியாளுநராக இருந்து அமர்வினை நடத்தினார். எழுத்துரு தரப்படுத்தல் என்னும் பொருளில் பத்ரி சேஷாத்ரி அவர்களும், கணினித் தமிழ் மொழியாக்கச் சிக்கல்கள் என்னும் பொருளில் முனைவர் பெ.சந்திரபோஸும் உரைநிகழ்த்தினார்கள்.
கருத்தரங்கம் ஞாயிறு அன்று நிறைவடைகிறது. ஞாயிறு காலை பிறமொழிகளில் தமிழ் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்விற்கு முனைவர் எச். பாலசுப்பிரமணியன் நெறியாளுநராக இருந்து நடத்துகிறார். பிறமொழி அறிஞரின் பார்வையில் தமிழ் என்னும் பொருளில் பேராசிரியர் சிவபிரகாஷ், சமூக மாற்றத்தில் மொழிபெயர்ப்பின் பங்கு என்னும் பொருளில் அமரந்த்தா உரையாற்றுகிறார்கள்.
ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்வை முனைவர் கோவி. இராசகோபால் நெறியாளுநராக இருந்து நடத்தி வைக்கிறார். கவிஞர் இமையம், ‘எது இலக்கியம - எது தலித் இலக்கியம’ என்னும் பொருளிலும், எழுத்தாளர் அம்பை, ‘பால்தன்மை, பட்டுணர்வு மற்றும் வெளிப்பாடு:படைப்பிலக்கியம் பற்றிய சிலகுறிப்புகள்’ என்னும் பொருளிலும், எழுத்தாளர் லிவிங்ஸ்மைல் வித்யா, ‘தமிழ்ச்சூழலில் பாலியல் சிறுபான்மையினர் - பதிவுகள்’ என்ற பொருளிலும் உரையாற்றுகிறார்கள்.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்வை எழுத்தாளர் நாக. வேணுகோபாலன் நெறியாளுநராக இருந்து நடத்துகிறார். உலகமயமாகும் தமிழிலக்கிய முயற்சிகள் என்னும் பொருளில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், புகலிடத் தமிழ் இலக்கியம - ஒரு பார்வை என்னும் பொருளில் லண்டனைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் மு. நித்திhனந்தன் உரையாற்றுகிறார்கள்.
நாடக - ஊடகத் தமிழ் என்னும் தலைப்பில் நடைபெறும் அமர்வை யதார்த்தா கே. பென்னேஸ்வரன் நெறியாளுநராக இருந்து நடத்துகிறார். நாடகம், நிகழ்வு, அழகியல் என்னும் பொருளில்‘வெளி’ ரங்கராஜன், ‘காளிதாஸ்’ முதல் ‘காதல்’ வரை தமிழ்த் திரைப்படங்கள் குறித்து தியடோர் பாஸ்கரன், ‘ஆக்டோபஸ் கைகளும் விடுபடும் உபாயங்களும்’ என்னும் பொருளில் குறும்பட இயக்குநர் கவிஞர் ரவி சுப்பிரமணியன் உரையாற்றுகிறார்கள்.
நிறைவு விழாவிற்கு மததிய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜெகத்ரட்சகன் தலைமை வகிக்கிறார். குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அ.ப.ஜெ. அப்துல்கலாம் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
vaazhthukkal.
http://kaatruveli-ithazh.blogspot.com/
Post a Comment