Friday, December 31, 2010

சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவோம்



அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள்தோறும் ஏற்றப்படும் பொருளாதாரச் சுமைகளின் வேதனை தாங்காது முனகிக் கொண்டிருக்கும் மக்கள் மீதான ஆழ்ந்த அனுதாபங்களுடனேயே இவ்வாழ்த்துக் களை தெரிவிக்க வேண்டி இருக்கிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதன் காரணமாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கொடூரமான வகை யில் அரிக்கப்பட்டு சரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 77 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க வழியின்றி உழன்று கொண்டிருக்கக்கூடிய நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதானது, அவர்களை மேலும் மேலும் கொடிய பஞ்சநிலையை நோக்கித் தள்ளிக் கொண்டி ருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களின் கொள்ளைக்கு உதவி

2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு சர்க்கரை கிலோ 50 ரூபாய் என்ற அளவிலும் துவரம் பருப்பு கிலோ 100 ரூபாய் என்ற அளவிலும் மற்றும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும், அதேபோன்று சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்குக் கடுமையாக உயர்ந்தும் இருந்தன. இப்போது 2010 முடிவுக்கு வரக்கூடிய நிலையில். வெங்காயத்தின் விலை அநேகமாக அனைத்து நகரங்களிலும் கிலோ 70 ரூபாய்க்கு விற்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறது. இது மற்ற காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருள்களின் வழங்குதல் மற்றும் தேவை ஆகியவற்றிற்கு இடையேயான பொருத்தமின்மையே இதற்குக் காரணம் என்கிற அரசாங்கத்தின் வாதமெல்லாம் ஏற்புடையதல்ல.

தில்லியில் 2008க்குப் பின் வெங்காயம் வழங்கப்படுவது என்பது 60 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்திருக்கிறது. ஆயினும் அதன் மொத்த விலை 300 விழுக்காட்டிற்கும் மேலாகப் பாய்ந்து சென்றிருக்கிறது. சென்ற ஆண்டு சர்க்கரைக்குச் செய்ததுபோலவே இந்த ஆண்டு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவது தாராளமாக்கப்பட்டிருக்கிறது. வெங்காயத்தின் தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விளைவாக விலைகள் தாறுமாறாக உயரக்கூடும் என்று தெரிந்திருந்தும் அரசு இவ்வாறு செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இத்தகைய ஏற்று மதிக்கு ஊக்கத் தொகைகளும் அளிக்கப்பட்டிருக்கிறது. 2005-06ஆம் ஆண்டில் 7.8 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த வெங்காய ஏற்றுமதி, 2009-10ஆம் ஆண்டில் சுமார் 19 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் மத்தியில் கடும் ஆவேசம் ஏற்பட்டதை அடுத்து, அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்திருக்கிறது. இப்போது வெங்காய இறக்குமதியை எவ்விதத் தீர்வையுமின்றி அனுமதித்திருக்கிறது. அதாவது, விலை வாசியைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதிக்கு மானியம் அளித்திருக்கிறது. ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை அளிப்பதும், இறக்குமதிக்கு மானியம் அளிப்பதும் இவ்வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான வழிவகைகள் என்பது தெள்ளத்தெளிவான ஒன்று.

இந்த ஆண்டு ஏப்ரல் 1இலிருந்து நவம்பர் 30 வரையிலான காலத்தில் வேளாண் பொருட்களின் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 8,33,605.53 கோடி ரூபாயாக இருந்தது. சென்ற ஆண்டு இதே கால அளவிற்கு இது, 7,66,133.46 கோடி ரூபா யாக இருந்தது. இத்தகைய கூர்மையான உயர்விலிருந்து ஊக வர்த்தகத்தின் மூலமாக வர்த்தகர்கள் கொள்ளை லாபம் ஈட்டியிருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், அரசாங் கம் அத்தியாவசியப் பொருள்களின் மீதான ஊக வர்த்தகத்தைத் தடை செய்யவோ அல் லது நிறுத்தி வைக்கவோ மறுக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கக் கூடிய மற்றுமொரு மாபெரும் ஊழல் என்று இதனை கூறலாம் அல்லவா?

கருப்பு எழுத்துக்களால்

ஊழல்களைப் பற்றிப் பேசப்புகுந்தால், 2010ஆம் ஆண்டினை சுதந்திர இந்திய வர லாற்றிலேயே கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஆண்டாகக் கொள்ளலாம். ஊழல்கள் அனைத்திற்கும் தாயாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைச் சொல்லலாம். இதனை அடுத்து சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டமை, நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டமை, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுக்கள், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழல் முதலானவற்றைக் குறிப்பிடலாம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு கஜானாவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி(சிஏஜி)யால் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாபெரும் ஊழல்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக நம் மக்களின் வாழ்க்கைத்தரம் கடு மையான முறையில் பறிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் வளங்கள்

கொள்ளை போக அனுமதி

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது, மக்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படா மல், நாட்டின் வளங்கள் இவ்வாறு மிகப் பெரிய அளவில் கொள்ளை போக அனுமதித் திருப்பது, அதன் மீது வலுவான வகையிலும் மற்றும் நியாயமான முறையிலும் சந்தேகத் தினை ஏற்படுத்தி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை செய்திட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்திட நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் கோரியபோதும் அதனை ஏற்க அகம்பாவத்துடன் அது மறுத்ததன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் ‘வீணடிக்கப்படுவதற்கு’ இட்டுச் சென்றது, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டதற்குப் பின்னர், பிரதமர் தன்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவைச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்தார். இதையே அவர் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாரானால் நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கக் கூடும்.

மேலும் பிரதமர் பொதுக்கணக்குக் குழுவின் முன்பு ஆஜராகத் தயார் என்றால், அவர் ஏன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜராகக் கூடாது?

பயன்தராத நடவடிக்கைகள்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் பல்வேறு அமைப்புகளின் மீதும் கடும் தாக்குதல்கள் தொடுப்பதிலும் முனைப்பாய் இருந்தது, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), மத்திய விஜிலன்ஸ் கமிஷன் போன்றவைகளின் செயல் பாடுகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 2ஜி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல்களின் தொடர்பாக சோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. ஊழல்கள் நடைபெற்ற சமயத்தில் சோதனை நடத்தாமல் வெகுகாலம் கழித்து நடத்துவதால் பெரிய அளவிற்கு பிரயோசனம் இருக்காது என்ற போதிலும் அரசாங்கம் தான் மிகவும் நியாயமாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு செய் திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.

மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு

மேற்கண்ட நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் கொள்கைகள் நெறிபிறழ்ந்து சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கின்றன. வரவிருக்கும் ஆண்டுகளிலும் இத்தகைய நிலைமைகள் தொடரக் கூடும். இந்த ஆண்டின் நடவடிக் கைகளைப் பரிசீலனை செய்ததிலிருந்து நம் அனுபவம் என்னவெனில், ஓர் அரசாங்கம் திறமையுடன் செயல்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை இருந்தால் மட்டும் போதாது, அதற்கும் மேலாக நம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், அதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, அது செயல்படவும் வேண்டும். ஆனால் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவற்றைச் செய்திடாமல், ஜி-20 மாநாடுகளிலும், அனைத்து பி-5 நாடுகளின் தலைவர்களுடனும் பங்கேற்பதால் பயனேதும் இல்லை.

மக்கள் இயக்கம் ஒன்றே வழி

இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சிப் போக்குகளை வைத்து வரவிருக்கும் ஆண்டிற்கான நிகழ்ச்சிநிரலை வரையறுக்க வேண்டியிருக்கிறது. வெகுஜனப் போராட்டங்களின் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களுக்கு ஆதரவானதாக மாற்றக்கூடிய விதத்தில் நிர்ப்பந்தம் அளிக்காவிட்டால், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கமுடியாது. நாட்டை நல்லமுறையில் உருவாக்கிடவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திடவும் சமூக நீதியை நிலைநாட்டவும் இந்திய மக்களாகிய நாம் மகத்தான சக்தியைப் பெற்றிருக்கிறோம். ஆயினும், நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுத்திடவும், சிறந்ததோர் இந் தியாவை உருவாக்கிடவும் கூடிய வகையில் அரசின் கொள்கைகள் அமைந்தால்தான் இவற்றை அடைவது சாத்தியம். அரசாங்கம் அத்தகைய வகையில் செயல்பட வேண்டும். நம் மக்களுக்கான சிறந்ததோர் இந்தியாவை உருவாக்க 2011இல் வலுவான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்!

தமிழில்: ச.வீரமணி

No comments: