Friday, April 24, 2009

இலங்கை அரசு உடனடியாகப் போரை நிறுத்திட வேண்டும் -இந்திய அரசு, இதற்கு இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும்: பிரகாஷ் காரத்



புதுடில்லி, ஏப். 24-
இலங்கை அரசு, உடனடியாகப் போரை நிறுத்திட வேண்டும், இதற்கு இந்திய அரசு, இலங்கை அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் வெள்ளியன்று மாலை செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசியல் தலைமைக்குழு சார்பில் செய்தி அறிக்கையை வெளியிட்டு, பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் சிக்கிக்கொண்டு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சொல்லொணா அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பாதுகாப்பு கவுன்சில், இலங்கை அரசாங்கத்தை உடனடியாகப் போரை நிறுத்தச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். போரை உடனடியாக நிறுத்திட வேண்டும், எல்டிடிஇ-இனரால் வலுக்கட்டாயமாக இருத்தி வைக்கப்பட்டுள்ள மக்களையும் பாதுகாத்திட வேண்டும். எல்டிடிஇ-இனர் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில் அவர்களிடமிருந்தும் போர் நிறுத்தத்திற்கான அறைகூவல் வர வேண்டும் என்று இலங்கை அரசு எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. இலங்கை அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாமிட்டுள்ள பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் உட்பட அனைத்து நிவாரணக் குழுக்களையும் அனுமதித்திட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது இப்போது நம்முன் உள்ள தலையாயக் கடமை என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எல்டிடிஇ-இனரும் தங்கள் பயனற்ற எதிர்ப்பினை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கமானது, தன்னுடைய அயல்துறைச் செயலாளரையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இவர்கள் மூலமாக இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்தை மேலும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இலங்கை அரசாங்கத்திடம் போரை உடனடியாக நிறுத்திடுமாறும், எல்டிடிஇ-இனரிடம் நிராயுதபாணியாகி சரணடைந்திடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கடுமையாக இருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவிடும் வகையில் சர்வதேச உதவி அமைப்புகள் வருவதற்கு இலங்கை அரசு அனுமதித்திட வேண்டும். இவற்றை இலங்கை அரசு நிறைவேற்றிட, இந்திய அரசு அதிகபட்ச அளவிற்கு நிர்ப்பந்தத்தை அளித்திட வேண்டும்.
எல்டிடிஇ சரணடைந்தால்தான் போர் நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்று இலங்கை அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. எல்டிடிஇ வலுவிழந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவும் வகையில் அரசு போரை நிறுத்திட வேண்டும். இது மிகவும் அவசரமாகச் செய்யப்பட வேண்டும். இவ்வாறு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய அரசு தலையாய முன்னுரிமை கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
இலங்கை அரசு போர்நிறுத்தம் (ceasefire) செய்ய முன்வர வேண்டும் என்று ஏன் கோரவில்லை என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, போர்நிறுத்தம் (ceasefire) என்பது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் உடன்பட்டு மேற்கொள்வது என்றும், எல்டிடிஇ-இனர் இதற்கு உடன்படாத நிலையில் இவ்வாறு செய்ய முடியாது என்றும் எனவேதான் எல்டிடிஇ-இனர் உடன்படாவிட்டாலும், போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போர் இடை நிறுத்தம் (cessation of hostilities) என்கிற வார்த்தைகளை உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்றும் பிரகாஷ் கூறினார்.
(ச.வீரமணி.)

No comments: