Wednesday, April 29, 2009

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அழகிரிக்குத் துணைபோகும் அரசு எந்திரம் -

தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திட வேண்டும்
பிரகாஷ்காரத் கடிதம்
புதுடில்லி, ஏப். 29-
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க. அழகிரிக்குத் துணைபோகும் அரசு எந்திரத்திற்கு எதிராக, தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கோரியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொ.மோகனுக்கு எதிராகப் போட்டியிடும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி போட்டியிடும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும் அசாதாரணமான நிலைமைகள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், தலைமைத் தேர்தல் ஆணையர் சால்வாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
‘‘தமிழ்நாட்டில் மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற அசாதாரணமான நிலைமைகள் குறித்து இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். எங்கள் கட்சியின் வேட்பாளர் பொ.மோகன் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே, இத்தொகுதியில் வாக்காளர்களை வஞ்சகமானமுறையில் கவர்வதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பணமும் பொருளும் விநியோகிக்கப்படுவதையும், அரசு எந்திரம் முழுமையாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் காண முடிகிறது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட எங்கள் கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திருமங்கலம் என்னும் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணபலம் பயன்படுத்தப்பட்டது. அதே ‘திருமங்கலம் பாணி’ மதுரையிலும் பெரிய அளவில் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது.
எங்கள் கட்சியின் சார்பிலும், எங்கள் வேட்பாளரின் தேர்தல் முகவர் சார்பில் செய்யப்பட்டுள்ள முறையீடுகளின் பட்டியலை இத்துடன் இணைத்திருக்கிறேன். இதில் கண்டுள்ள துஷ்பிரயோகங்களை நிறுத்தி, நியாயமான மற்றும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற வலுவான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட வில்லை.
எனவே, இவ்விஷயத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும் மதுரை மாவட்டத் தேர்தல் அலுவலர், மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் உடனடியாக மாற்றல் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நடுநிலை தவறாது செயல்படும் அதிகாரிகள் அப்பொறுப்புக்களிவ் நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், தன்னுடைய சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி, அரசு எந்திரம் அங்கே துஷ்பிரயோகம் செய்யப்படாது பார்த்துக்கொள்ள வேண்டும், தேர்தல் நடத்தைவிதி அப்பட்டமாக மீறப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மதுரையில் தேர்தல் பணிகள் கறைப்படுத்தப்படாமல் நடைபெற வேண்டுமெனில் தாங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
கடிதத்துடன் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள குறிப்பிவ் கூறப்பட்டிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில், ஆளும்கட்சியினர் வாக்காளர்களைக் கவர்வதற்காக மேற்கொண்டுள்ள அனைத்துவிதமான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டுவந்துகொண்டிருக்கிறோம். தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்திருந்தபோதிலும், அவர்களின் இழிவான சட்டவிரோத நடவடிக்கைகள் கிஞ்சிற்றும் குறைந்திடவில்லை, மாறாக தேர்தல் நாள் நெருங்க நெருங்க மேலும் மேலும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆளும் திமுக=-வும் அதன் வேட்பாளரும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திட புதுப் புதுப்பாணிகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகமோ, தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பான இத்தகைய இழிவான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, திமுக வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியின் மாவட்டச் செயலர், சட்டமன்ற உறுப்பினர், தேர்தல் முகவர் மற்றும் கட்சியின் மற்ற பிரிவு ஊழியர்களால் தரப்பட்டுள்ள கீழ்க்கண்ட நிகழ்வுகள், சட்டவிரோத நடவடிக்கைகளின் தன்மைகளைத் தங்களுக்கு விளக்கிடும்.
(1) திமுக-வின் சார்பில் 3.3.2009 அன்று நுகர்வுப் பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதற்கு எதிரான முறையீடு.
(2) 3.3.2009 அன்று திமுக வேட்பாளர் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையிடு.
(3) 5.3.2009 அன்று தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கு எதிராக, மாவட்டத் தேர்தல் அலுவலருக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(4) 20.3.2009 அன்று மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் சேர்க்கைக்காக அளிக்கப்பட்ட பட்டியலுக்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(5) 28.3.2009 அ ன்று சுய உதவிக் குழுக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பணம், புடவை, முதலானவை விநியோகிக்கப்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(6) 31.3.2009 அன்று திமுக-வால் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(7) 3.4.2009 அன்று திமுக-வால் பணம் பட்டுவாடா செய்வதற்காக திருமண மண்டபங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(8) 8.4.2009 அன்று திமுக வேட்பாளரால் தேர்தல் பிரச்சாரத்திற்காக, சாமி கும்பிடும் இடங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(9) 15.4.2009 அன்று மாவட்ட ஆட்சியர், ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறார் என்று, மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் அவர்களால் அளிக்கப்பட்ட முறையீடு.
(10) 15.4.2009 அன்று எங்கள் கட்சி ஊழியர் விஜயராஜன் மீது நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராக காவல்துறையில் முறையீடு அளிக்கப்பட்டும் அதன்மீது அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காததற்காக அளிக்கப்பட்ட முறையீடு.
(11) 16.4.2009 அன்று திமுக-வினரால் மார்க்சிஸ்ட் கட்சித் தேர்தல் கூட்டத்தை சீர்குலைவு செய்ததற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(12) ஆளும் கட்சியின் அளித்துள்ள பொய்ப் புகார்களின் அடிப்படையில் எங்கள் கட்சி ஊழியர்களைக் கைது செய்ய, காவல்துறை எந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(13) 17.4.2009 அன்று எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்திட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் செயல்படாதிருப்பதற்கு எதிராக அளிக்கப்பட்ட முறையீடு.
(14) 18.4.2009 அன்று திமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்துக்காக மக்கள் தொடர் அலுவலரின் அலுவலகம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிராகக் கொடுக்கப்பட்ட முறையீடு.
(15) 22.4.2009 அன்று மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு திமுகவினரால் டோக்கன்கள் அளிக்கப்பட்டதற்கு எதிராக தரப்பட்ட முறையீடு.
இந்த முறையீடுகளில் பல மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அவ்வப்போது அளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் எந்த நடவடிக்கையும் தேர்தல் அலுவலரால் இதுவரை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இவ்வாறு சட்டவிரோத தேர்தல் உத்திகளில் ஈடுபட்டுள்ள கயவர்களுக்கு மேலும் தைர்யம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலர், மாநகரக் காவல்துறை கண்காணிப்பாளர், மக்கள் தொடர்பு அலுவலர் உடனடியாக அங்கிருந்து மாற்றப்படவில்லை என்றால், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவே மாறிடும்.
எனவே, தேர்தல் ஆணையம், மதுரைத் தொகுதியில் நடைபெறும் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நேர்மையான, நடுநிலை வழுவாத அதிகாரிகளை அங்கு தேர்தல் பணியில் அமர்த்திடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அரசு எந்திரம் அங்கே துஷ்பிரயோகம் செய்யப்படுவதாலும், சட்டவிரோதமான பண பலம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதாலும் சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
(ச.வீரமணி.)

No comments: