Thursday, April 2, 2009

70 இடங்கள் உறுதி-இடதுசாரிகளால்தான் மக்களைக் காக்க முடியும்-அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கப்போகிறார்கள்

மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டும் 70க்கம் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று யூனியன் டெர்ரிடரி இண்டிபெண்ட் என்னும் ஏடு கூறுகிறது. அந்த ஏட்டில் வந்துள்ள செய்திக் கட்டுரை வருமாறு:
இடதுசாரிக் கட்சிகள்தான் உண்மையான அரசியல் கட்சிகள். அவைகளால்தான் மக்களுக்குத் தேவையான மக்கள் நலம்சார்ந்த கொள்கைகளை வடித்தெடுக்க முடிகின்றன. அவர்கள் மக்களிடம் தெளிவான கொள்கைகளுடன் செல்கிறார்கள். மக்கள் நலஞ்சார்ந்த அரசாங்கத்தை அமைத்திட தங்களுக்கு அதிகாரம் வழங்குமாறு கோருகிறார்கள். இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய மிக எளிய வாழ்க்கைமுறை அதே சமயத்தில் மிக உயர்ந்த சிந்தனையாளர்களாக விளங்குதல், அனைத்துத்தரப்பு மக்களும் விரும்பக் கூடியவர்களாக அவர்களை மாற்றியிருக்கின்றன. அவர்கள் எப்போதும் மக்களை நேசமுடன் அணுகும் முறையினால் மக்கள் மத்தியில் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இடதுசாரிக் கட்சிகள் மற்ற கட்சியினரையும் மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளைப் பின்பற்ற நிர்ப்பந்தம் அளித்து வருகிறார்கள்.

வரவிருக்கும் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை ஆளக்கூடிய அளவிற்கு இடங்களைப் பெறப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல, 70 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமான இடங்களைப் பெற்று, நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு உருவாகப் போகிறார்கள்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப்பின், இடதுசாரிக் கட்சிகள்தான் அதிகாரமையமாக உருவாகப்போகிறது என்றும், இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அவர்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் நம்புகிறார்கள். ‘‘சித்தாந்தரீதியாக, சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக் போன்ற இடதுசாரிக் கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைய முடியாது. அதேபோன்று, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியுடனும் அவர்களால் தங்களை இணைத்துக் கொள்ள முடியவில்லை’’ என்று ஒரு விமர்சகர்க
கூறினார்.
மேலும் அவர், ‘‘இவ்விரு கூட்டணிகளுமே பணக்காரர் ஆதரவு - ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளையே கடைப்பிடித்தன’’ என்றும், ‘‘இதன் காரணமாக நாட்டில் அதிகரித்து வரும் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றால் இடதுசாரிக் கட்சிகள் மிகவும் ஆத்திரமடைந்திருக்கின்றன’’ என்றும், இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனும், நாட்டிற்கு மூன்றாவது மாற்றைக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்றும் அவர் கூறினார்.

கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, மத்தியில் அடுத்த ஆட்சி மூன்றாவது முன்னணிக்குத்தான் என்பதையும், அதில் இடதுசாரிக் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தம் என்பதையும் ஊகித்துணர முடிகிறது.
இடதுசாரிக் கட்சிகள் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மற்றும் சில மாநிலங்களில் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் அவர்களால் முக்கியமான பங்களிப்பினைச் செய்திட முடியும். ‘‘நிச்சயமாக இடதுசாரிக் கட்சிகள் 70 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவார்கள். இதில் மிகவும் சிறந்த அம்சம் என்னவென்றால், இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், சாமானியர்களைப் போலவே மிகவும் எளிமையானவர்கள். மக்கள் அவர்களை மிக எளிதாக அணுக முடியும். தொலைபேசியில் அவர்களைத் தொடர்பு கொள்ளும்போது, எந்தவிதத் தயக்கமுமின்றி அவர்கள் எடுத்துப் பேசுகிறார்கள். இது அவர்களுக்கு வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. ‘‘நம் தலைவர்களும் நம்மைப் போலவே எளிமையானவர்கள்’’ என்கிற உணர்வை இது வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்படுத்துகிறது. ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சொகுசு வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியும் உள்ள துதிபாடிகளின் செயல்களும் இவர்களை அவர்களிடம் நெருங்கவே அனுமதிக்க மறுக்கிறது.

பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் சொகுசு வாழ்க்கை, மக்களுக்கும் அவர்களுக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ்காந்திக்கு அடுத்து காங்கிரசில் மக்கள்தலைவர் எவரும் இல்லை. இதேநிலைதான் பாஜகவிலும், வாஜ்பாய் உடல் நலிவுற்றதை அடுத்து ஓரளவுக்கு அத்வானியைக் கூறலாம். வேறு மக்கள் தலைவர் எவரும் பாஜகவிலும் இல்லை. ஒருவர் ராகுல் காந்தியைப் பார்க்க விரும்பினால் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் கெடுபிடிகள் மிக அதிகம்.

அதேசமயத்தில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களான பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா, குருதாஸ் தாஸ் குப்தா, வாசுதேவ் ஆச்சார்யா, ஏ.பி.பரதன் போன்றோர் சாமானிய நாட்டுப்புற ஏழை மக்களை மட்டுமல்ல, நகர்ப்புறங்களில் இருக்கக்கூடிய அனைத்துத்தரப்பு மக்களாலும் நேசமுடனும் மதிப்புடனும் ஈர்க்கக்கூடிய தலைவர்களாக உயர்ந்துள்ளார்கள். மற்ற சிறிய கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
(நன்றி: யூனியன் டெர்ரிடரி இண்டிபெண்டண்ட்)

தமிழில்: ச.வீரமணி

No comments: