புதுடில்லி, ஏப். 18-
இலங்கையில் இலங்கைஅரசுக்கும் எல்டிடிஇ-இனருக்கும் இடையிலான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு, உயிரிழந்து வரும் லட்சக்கணக்கான தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி, உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக, வேல்முருகன் என்னும் காவலர் உலக அளவிலான கின்னஸ் சாதனை நிகழ்ச்சியினை மேற்கொண்டார். இந்நிகழ்பு புதுடில்லி, மந்திர்மார்க்கில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் மேல்நிலைப்பள்ளி விளையாட்டரங்கில் சனிக்கிழமை மதியம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில் கோவை மாவட்டம், வால்பாறை காவல்நிலையத்தில் தலைமைக்காவலராகப் பணியாற்றும் ஆர். வேல்முருகன், பல்வேறு உலக சாதனைகளைச் செய்துள்ளார். 157 கிலோ மீட்டர் காட்டாற்றில் இடைவிடாது நீச்சல், 15 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் ஓடியது உட்பட இதுவரை 14 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இப்போது பதினைந்தாவது சாதனையாக 36 அடி உயரத்திலிருந்து 18 செண்டி மீட்டர் அளவள்ள தண்ணிர் வயிறில் படுவதுபோல் பாய்ந்து சாதனை புரிந்திருக்கிறார். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் சிக்கம் என்பவர், 28 அடி உயரத்திலிருந்து 30 செ.மீ. அளவுள்ள தண்ணீரில் பாய்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இத்தகைய என்னுடைய உலக சாதனையை, இலங்கையில் போரில் சிக்கி இறந்து கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு அர்ப்பணம் செய்வதாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சொல்லொணா துயரத்தை இந்திய அரசுக்கும், உலகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், தலைநகர் புதுடில்லியில் இந்நிகழ்வினை நடத்தியதாகவும் கூறினார்.
இந்நிகழ்விற்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர் முகுந்தன், தில்லித் தமிழ்ச் சங்கப் பள்ளி செயலாளர் ஸ் வாமிமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
(ச. வீரமணி)
No comments:
Post a Comment