Monday, April 13, 2009

காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத - மாற்று அணிக்கு -ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது-பிரகாஷ்காரத்


பதினைந்தாவது மக்களவைக்கான முதல் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நடைபெறும் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதென்பது தெளிவாகியுள்ளது. காங்கிரசும், பாஜகவும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சொல்லியதுபோல இது ஒன்றும் இரு அணிகளுக்கு இடையிலான தேர்தலாக இல்லை. மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜகஅல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து, காங்கிரசுக்கும், பாஜக-விற்கும் பல மாநிலங்களில் சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளன. காங்கிரசும் பாஜக தலைமையும் மூன்றாவது அணி மீது தாக்குதல்களைத் தொடுத்த பின்னணியில் இத்தகு நிலைமை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், மூன்றாவது அணியைத் தாக்கிக் கொண்டிருந்திருக்கிறார். தேர்தலுக்கு முன்னர் இவ்வாறு கூட்டணிகள் அமைப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்று அவர் கூறியிருக்கிறார். இத்தகைய கூட்டணிகளுக்கு கொள்கையோ திட்டமோ கிடையாது என்றும் இது நாட்டிற்குப் பேரிடர் ஏற்படுத்திவிடும் என்றும், கூறியிருக்கிறார். எல்.கே. அத்வானி, பாஜக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில், மூன்றாவது அணியை ஒரு ‘‘கேலிக்குரிய மாயை’’ என்று அழைத்திருக்கிறார்.
இவ்வாறாக, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவற்றை மதிப்பிழக்கச்செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளும் ஆறு மாநிலக் கட்சிகளும் பல மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு கொண்டிருப்பதானது, காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் மாபெரும் சவாலாக எழுந்துள்ளதுதான், இவ்விரு கட்சிகளுமே மூன்றாவது அணியைத் தாக்குவதற்குக் காரணமாகும். அவர்கள் கூறுவதுபோல, மூன்றாவது அணி என்பது ஒரு மாயையாக இருந்தாலோ அல்லது கோட்பாடற்ற கதம்பக் கூட்டணியாக இருந்தாலோ, பின் ஏன் இவ்விரு கட்சிகளும் இந்த அளவிற்குத் தாவிக் குதிக்கின்றன?
இவர்களின் கோபத்திற்கான விடையை, தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்வதன் மூலம் காண முடியும். 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரசுக்கு 26.53 சதவீத வாக்குகளும், பாஜக-விற்கு 22.16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இவ்விரு கட்சிகளின் வாக்குகளையும் இணைத்தால்கூட அது 48.67 சதவீதம்தான், அதாவது 50 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் வருகிறது. இவ்விரு கட்சிகளும், கணிசமான அளவில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளைத் தங்கள் பக்கத்தில் இருத்திக்கொள்ளவில்லையெனில், அவற்றின் வெற்றிவாய்ப்பு என்பது கானல் நீர்தான்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் பல அதனைக் கழட்டிவிட்டுவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் திமுக-வுடனும், ஜார்கண்டில் ஜேஎம்எம்-உடன் ஒருவிதமான உடன்பாடும் கண்டிருக்கிறது. தேசியவாதக் காங்கிரசைப் பொறுத்தவரை, மகாராஷ்ட்ரா மற்றும் கோவாவில் மட்டும் உடன்பாடு கொண்டிருக்கிறது. மற்றமாநிலங்களில் அது காங்கிரசை எதிர்த்துப் போட்டியிடுகிறது. காங்கிரசின் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரில் ராம் விலாஸ் பஸ்வானுடன் கைகோர்த்துக் கொண்டு, காங்கிரஸ் தற்போது தக்க வைத்துள்ள மூன்று இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. உத்தரப்பிரதேசத்திலும், அதன் மற்றொரு கூட்டாளிக்கட்சியான, சமஸ்வாதிக் கட்சி, சோனியா மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் இரு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிடுகின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, ஒரிசாவில் பிஜூஜனதா தளத்திடமிருந்து வந்த தாக்குதலிலிருந்து அது இன்னமும் மீளவில்லை. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள், இடதுசாரிகளுடன் இணைத்து, பல மாநிலங்களிலும் வீறுகொண்டு எழுந்துள்ளன. ஆந்திராவில் தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் பாமக, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரிசாவில் பிஜூஜனதா தளம் ஆகியவற்றுடன் சேர்ந்து வலுவான கூட்டணிகளாக மாறியுள்ளன.
ஐமுகூ போலல்லாத, தேர்தலுக்கு முன்பே ஒரு வலுவான கூட்டணியாக இது மாறியிருக்கிறது. இது, தேர்தலுக்குப்பின்னர் மேலும் ஒரு முழுமையான வடிவத்தைப் பெறும். இவ்வாறாக, மூன்றாவது அணியில் உள்ள கட்சிகளின் கூட்டணியானது ஒரு யதார்த்தபூர்வமானதாக மாறியிருக்கிறது.
காங்கிரசும், பாஜகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இவை ஒன்றையொன்று, தத்தம் தேர்தல் அறிக்கையை மற்றது காப்பியடித்துவிட்டதாகக் குறைகூறிக் கொண்டிருக்கின்றன யாரை, யார் காப்பியடித்திருக்கிறார்கள் என்பது மக்களைப் பொறுத்தவரைக்கும் தேவையில்லாத ஒன்று. ஆனால், குறித்துக்கொள்ளவேண்டிது என்னவென்றால், இவை இரண்டுமே, ஒரே மாதிரியானவை - அதாவது ஒரே மாதிரியான உறுதிமொழிகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டிருப்பவை என்பதாகும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அளித்து வந்த எதிர்ப்பினை பாஜக விலக்கிக் கொண்டிருப்பதிலிருந்து இதனைத் தெளிவாகக் காண முடியும். பாஜக-வானது, அணுசக்தி ஒப்பந்தம் மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறது. 2008 ஜூலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது இத்தகு நிலைப்பாடு அவர்கள் மேற்கொண்ட ஒன்றாகும். ஆயினும், தேர்தல் அறிக்கையில், இந்தக் கோரிக்கையை பாஜக கைவிட்டுவிட்டது. பாஜக ஆட்சியிலிருந்த சமயத்தில், அயல்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், ஒருபடி மேலேயே சென்று, அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களை ரத்து செய்திட முடியாது என்றே கூறியிருக்கிறார். இவ்வாறாக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதில் ஒத்த கருத்துடன்தான் இருக்கின்றன.
இத்தகைய பொதுவான அணுகுமுறை மற்ற பல அடிப்படைக் கொள்கைகளுக்கும் விரிவடைகின்றன. உதாரணமாக, காங்கிரசும் சரி அல்லது பாஜகவும் சரி, தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துதல் குறித்து எதுவுமே கூறிடவில்லை. நாடாளுமன்றத்திற்கான தேர்தல்அறிக்கையில் காங்கிரஸ் கட்சியானது நிலச்சீர்திருத்தம் குறித்து எதுவுமே கூறாதது இதுதான் முதல்தடவை. நாட்டின் இரு முதலாளித்துவ கட்சிகளின் மத்தியில், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் பிடிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்பதையும், நிலச்சீர்திருத்தம் குறித்து உதட்டளவில் கூறுவதற்குக்கூட அவை தயாராயில்லை என்பதையுமே இவை காட்டுகின்றன.
இரு கட்சிகளுமே மீண்டும் அனைவருக்குமான பொது விநியோகமுறையை அமல்படுத்தத் தயாரில்லை. இப்போது உள்ளதுபோன்ற மோசடியான வறுமைக்கோட்டுக்குக் கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற பொது விநியோக முறையையே அமல்படுத்துவதைத் தொடரவும், இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பகுதியினைரை பொது விநியோக முறைக்கு வெளியில் நிறுத்திடவும் அவை முடிவு செய்திருக்கின்றன என்பதும் அவற்றின் தேர்தல் அறிக்கைகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.
இரு கட்சிகளுமே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் இருக்கின்றன. அதனால்தான் அவை தங்கள் தேர்தல் அறிக்கைகளில், மத்திய மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்யவேண்டியதன் அவசியம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.
இவ்வாறாக இரு கட்சிகளுமே மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவேதான், மூன்றாவது அணி மக்கள் மத்தியில் வலிவும் பொலிவும் பெற்று மிகவும் வீறுகொண்டு வளர்ந்துகொண்டிருக்கிறது.
(தமிழில்: ச.வீரமணி)

1 comment:

சந்திப்பு said...

Third front will success.

Fine article.