புதுடில்லி, மார்ச் 31-
ஐமுகூ அரசாங்கம், கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் செவ்வாய் அன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘கல்வி: காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை, ’’ மற்றும் ‘‘சுகாதாரத் துறை: உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டது’’ என்னும் தேர்தல் பிரச்சார பிரசுரங்களை வெளியிட்டு, நிலோத்பால் பாசு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இவ்விரு துறைகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் தாங்கள் எவ்வளவு செலவிட்டோம் என்பதை அவர்கள் கூறிடவில்லை.
ஐமுகூ அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய சமயத்தில் ஐ.நா. ஸ்தாபனம் ஆண்டுதோறும் வெளியிடும் மனித வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடிஅநவே சுநடிசவ)யில் மொத்தம் உலகில் உள்ள 171 நாடுகளில் இந்தியா 128ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு 132ஆவது இடம் கிடைத்திருக்கிறது. ஒவ்வோராண்டும் பட்ஜெட் தாக்கல் செய்திடும்போது, நிதி அமைச்சர் அவர்கள் பொருளாதார ஆய்வு அறிக்கையையும் (நஉடிnடிஅiஉ ளரசஎநல டிக ஐனேயை), பட்ஜெட்டால் விளைந்த பயன்கள் (டிரவஉடிஅந ரெனபநவ) இரண்டையும் வெளியிடுவார். ஆனால் இந்த ஆண்டு அவற்றை வெளியிடாமல், இடைக்கால பட்ஜெட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு தப்பித்துக் கொண்டார்.
இந்தியாவை ஒரு சூப்பர் பவராக மாற்றப்போகிறோம் என்று தம்பட்டம் அடித்திருக்கிறார்கள். ஆனால் ஐ.நா.வின் அறிக்கையோ இந்தியா எவ்வளவு பரிதாபகரமான நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
ஐமுகூ அரசாங்கமானது தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்குவோம் என்று உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால் 2004-05ஆம் ஆண்டில் 2.67 சதவீதம் மட்டுமே ஒதுக்கியிருந்த அரசு, 2008-09இல் 3.08 சதவீத அளவிற்கே உயர்த்தியிருக்கிறது. இந்த உயர்வுக்கும் பல மாநில அரசுகள் கல்விக்காக உயர்த்திய ஒதுக்கீடுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட ஒன்றாகும்.
கல்வி உரிமை சட்டமுன்வடிவை நடைமுறையில் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இதன்மூலம் நாட்டில் 38 கோடி மக்களுக்குக் கல்வி பெறும் உரிமையை - எழுத்தறிவைத் - தராது மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.
மாறாக, கல்வித்துறையை தனியார் கொள்ளையடிக்கக் கூடிய வகையில் வணிகமயப்படுத்தியுள்ளார்கள்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு (சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு) அரசு ஒதுக்கீடு செய்து வந்த தொகையானது ஒவ்வோராண்டும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 2007-08ஆம் ஆண்டில் 12,020.2 கோடி ரூபாயாக இருந்தது, 2008-09இல் 11,940 கோடியாகக் குறைந்தது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் சமயத்தில் அது 11,933.9 கோடியாக மேலும் குறைக்கப்பட்டது.
நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை - 38 கோடி மக்களை - எழுத்தறிவற்றவர்களாகவே வைத்துக்கொண்டு - நாட்டை சூப்பர் பவராக மாற்றப் போவதாகத் தம்பட்டம் அடிக்கிறார்கள். எழுத்தறிவற்றவர்களில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் அதிகமானவர்களாகும். இவர்கள் நிலைமை மேலும் பரிதாபகரமானதாகும்.
சுகாதாரத் துறை
அதேபோல் சுகாதாரத் துறையிலும் ஐமுகூ அரசு அறிவித்துள்ள ‘‘அனைவருக்கும் சுகாதாரம்’’ என்கிற முழக்கம் கானல் நீராகவே தொடர்கிறது. சுகாதாரத் துறைக்கு அரசின் செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.9 சதவீதமேயாகும். உலகில் உள்ள நாடுகளில் மிகவும் கீழ் நிலையில் உள்ள நிலையாகும். நம்மைவிட சற்றே கூடுதலாகச் செலவு செய்கிற நாடுகளில் புருண்டி, மியான்மர், பாகிஸ்தான், சூடான் மற்றும் கம்போடியா ஆகியவைதான் வருகின்றன. ஐமுகூ அரசு பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2இலிருந்து 3 சதவீதம் வரை உயர்த்தும் என்று கூறியிருந்த உறுதிமொழியையும் இவ்வாறு அது காற்றில் பறக்கவிட்டுவிட்டது.
இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. நாட்டில் உள்ள குழந்தைகளில் 56 சதவீதத்தினர் தேசியத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துத் தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் தடுப்பூசி மருந்துகள் தயார் செய்து வந்த நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஐமுகூ அரசு மூடியதை அடுத்து, தடுப்பூசி மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளின் விலைகளும் விஷம் போல் ஏறியுள்ளன.
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால் அது எதிர்கால இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கும். இதை மக்கள் நன்கு உணர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதுமான அளவு கவனம் செலுத்தக் கூடிய மாற்று அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த முன்வர வேண்டும்.
இவ்வாறு நிலோத்பால் பாசு கூறினார்.
No comments:
Post a Comment