Sunday, March 29, 2009

ஐமுகூ அரசாங்கம் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றிவிட்டது:சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 28-
ஐமுகூ அரசாங்கம், இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாற்றிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் சனிக்கிழமையன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘அயல்துறைக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்’’ என்கிற சிறுவெளியீட்டை வெளியிட்டு, சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

‘‘ஐமுகூ அரசாங்கத்திற்கு, குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே ஆதரவு அளித்தனர். அதில் அரசாங்கம் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை அனுசரிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான ஒருதுருவக் கோட்பாடு (unilateralism) அமல்படுத்தப்படாது, மாறாக அனைத்து நாடுகளையும் சமமாகப் பாவிக்கும் பல்துருவக் கோட்பாடே (multipolarity) பின்பற்றப்படும் என்று மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த உறுதிமொழியை உதாசீனப்படுத்திவிட்டு, அமெரிக்காவுடன் ராணுவரீதியான போர்த்தந்திர ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதன் மூலமாக ஐமுகூ அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளுக்கும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்காவுடனான ராணுவரீதியான போர்த்தந்திர ஒப்பந்தத்தின் ஒரு பகுதியேயாகும். ஐமுகூ அரசு அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களையும் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி அமெரிக்காவிற்கு இந்தியா ராணுவ ரீதியாக அனைத்துவிதங்களிலும் ஒத்துழைக்க வேண்டும். இதன் பொருள் இரானைத் தாக்கு என்று அமெரிக்கா கட்டளையிட்டால், இந்தியா இரானைத் தாக்க வேண்டும்.

இவ்வாறு அமெரிக்காவுடன் ஐமுகூ அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகத்தான் இஸ்ரேலுடனான உறவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு, மறுபக்கத்தில் பாலஸ்தீனப்பகுதியில் அரக்கத்தனமான முறையில் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் இஸ்ரேலுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறது.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அடிப்படையாக உள்ள ஹைடு சட்டம், இனிவருங்காலங்களில் இந்தியாவின் அயல்துறைக் கொள்கை என்பது, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போக ‘‘(congruent)’’ வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை ஐமுகூ அரசாங்கம், மாற்றியமைத்திருப்பதானது, நாட்டுக்கு மிகவும் கேடுபயக்கக்கூடிய ஒன்றாகும்.

இந்தியா, தன் அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் செயல்பட வேண்டுமானால், அமைதியாகவும் (peace) உறுதியாகவும் (stability) விளங்க வேண்டுமானால் அது சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றியாக வேண்டும். அப்போதுதான் நாம், நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பர்மா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகியவற்றுடன் நல்லுறவுடன் இருந்திட முடியும்.

அத்தகைய முறையில் நாட்டில் மீண்டும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை அமல்படுத்த, மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை வரும் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

No comments: