Saturday, March 28, 2009

மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி:சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 28-
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக, மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் சனிக்கிழமையன்று மதியம் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ‘‘உலகப் பொருளாதார நெருக்கடியும் இந்தியாவும்:மக்கள் ஆதரவு மாற்றுக் கொள்கை தேவை’’ என்கிற சிறுபிரசுரத்தையும், ‘‘அயல்துறைக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்’’ என்கிற சிறுவெளியீட்டையும் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டு, செய்தியாளர்களிடையே கூறியதாவது:
‘‘உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆட்சியாளர்கள் போதுமான அளவிற்கு செயலில் இறங்கவில்லை. ஸ்தானரீதியாக வேலையிலிருந்த தொழிலாளர்களிலேயே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். பல்வேறு மதிப்பீடுகளின்படி தினக்கூலிகளாக இருந்த கோடிக்கணக்கானோர் வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். வளர்ச்சி விகிதம் 2008 அக்டோபர் - டிசம்பருக்கான காலாண்டில் 5.3 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. வேளாண்மைத் துறையில் இது எதிர்மறை வளர்ச்சி விகிதமாக அதாவது 2.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2009 ஜனவரியில், 2008 ஜனவரியுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 15.9 சதவீதமும், இறக்குமதி 18.2 சதவீதமும் குறைந்திருக்கிறது.
பணவீக்கம், பணச்சுருக்கமாக மாறியிருக்கிறது. ஆயினும் மொத்த விலைக் குறியீட்டு அட்டவணையோ அல்லது நுகர்வோர் குறியீட்ட அட்டவணையோ பத்து சதவிதத்திற்குக் குறையவில்லை. இதன் பொருள், அத்தியாவசியப் பண்டங்களின் விலைகள் குறையவில்லை என்று பொருள். இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இதன்விளைவாக மக்கள் தொடர்ந்து விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்காது. வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகமாகும். இது உண்மையில் மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இவற்றிற்கெதிராகச் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், மக்களின் வாழ்க்கை படுநாசமாகும்.
இந்நிலைமையை சமாளிக்க வேண்டுமானால், அரசாங்கம் பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும். தற்சமயம் அரசு பொது முதலீட்டிற்கு ஒதுக்கியுள்ள தொகை மிகவும் குறைவு, நிலைமையைச் சமாளிக்கப் போதுமானதல்ல. சர்வதேச நிதியத்தின் சார்பில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகில் உள்ள 20 நாடுகளில் (ஜி.20) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவை செலவினத்திற்கு ஒதுக்கும் தொகை குறித்து பட்டியலிட்டிருக்கிறது. அதில் இந்தியா கடைசியிலிருந்து நான்காவதாக வருகிறது. இந்தியாவில் வெறும் 0.5 சதவீதமே பொது செலவினத்திற்காக ஒதுக்கப்படுகிறது. எனவேதான் நாம் இந்த அரசாங்கத்தை, பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும் என்று கோருகிறோம். இதற்கு முன்பும் பலமுறை நாம் இதனைக் கேட்டிருக்கிறோம்.
அதன்மூலம், கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகள் பெருகும். அதைவிடுத்து அரசாங்கம், பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதனால் அரசின் இருப்புநிலைக் குறிப்புதான் அழகுபடுத்தப்படுமே யொழிய, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கப் போவதில்லை. அதன் விளைவாக அவர்கள் உள்நாட்டுத் தேவையை விரிவாக்கவும் முடியாது, அதன் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க முடியாது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், உள்நாட்டுத் தேவையை அதிகரித்திட வேண்டும். இதற்கு மிகப்பெரிய அளவில் உள்நாட்டுத் தொழில்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
உலகப் பொருளதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஏழு விதமான நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.
ஆண்டுத் திட்டச் செலவினத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிதமாக உயர்த்திட வேண்டும். இப்போது இத 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு, குறிப்பிட்ட சிறப்பு நிவாரணத் திட்டங்களை அறிவித்திட வேண்டும். அத்தொழில் மையங்களில் வேலைபார்ப்போரக்கு வேலை மற்றும் ஊதியம் வெட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேளாண்மை மற்றும் பாசனத்துறையில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு விலைவீழ்ச்சி ஏற்பட்டால் ஆதரவு விலை அளித்து விவசாயிகளைக் காப்பாற்றிட வேண்டும், இறக்குமதிக் கட்டணங்களை உயர்த்திட வேண்டும்.
வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நாடு முழுமைக்கும் - கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறங்களுக்கும் - விரிவாக்கிட வேண்டும்.
பொது விநியோக முறையை அனைவருக்கும் அமல்படுத்தி, பதினான்கு அத்தியதாவசியப் பண்டங்களை அதன்மூலம் அளித்திட வேண்டும்.
மாத ஊதியம் வாங்கும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வருமானவரியிலிருந்து நிவாரணம் அளித்திட வேண்டும். கறுப்புப்பணக்காரர்கள், பணம்படைத்தவர்கள், ஊகவணிகர்கள் மீதான வரிகளை அதிகரித்திட வேண்டும்.
நிதித்துறையை முறைப்படுத்தி, ஊகவணிகம் வாயிலாக நாட்டிலிருந்து வெளியே செல்லும் அல்லது உள்ளேவரும் நிதியை, கறாராகக் கட்டுப்படுத்திட வேண்டும். நாட்டின் நிதிப் புழக்கத்தை அரசு தன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
ஐமுகூ அரசாங்கம் மற்றும் தேஜகூ அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கட்சி இத்தகைய மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறது.
உலகப் பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற, வாக்காளர்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் வாக்களித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
----

0 comments: