Tuesday, March 24, 2009
14வது மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த-நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி?
நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவையில் மிகவும் ஆக்கபூர்வமாகவும், செயலூக்கத்துடனும் செயல்பட்ட ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறப்படும் அதே சமயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்ஙனம் செயல்பட்டிருக்கிறார்கள் என்று ஆராயும்போது அதிர்ச்சிதான் வருகிறது.
நாடாளுமன்ற மக்களவை சார்பில் உள்ள இணையதளத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ற விவாதங்களின் எண்ணிக்கை மற்றும் விவாதங்ளின் குறிப்புகளும் அவர்களால் முன்வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் முன் எடுத்துக்கொள்ளப்பட்ட கேள்வி - பதில்களின் விவரங்களும் தரப்பட்டுள்ளன.
அதனைக் கண்ணுறும்போது, தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ. ராசா, மணிசங்கர் ஐயர், ஆர்.வேலு, வெங்கடபதி, ரகுபதி, இ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ராதிகாசெல்வி ஆகிய பத்து பேரும் அமைச்சர்களாகிவிட்டார்கள். மீதமுள்ள 29 பேர் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள்?
சென்ற மக்களவையில் மத்தியரயில்வே இணை அமைச்சகராக இருந்த ஏ.கே. மூர்த்தி, இந்தத் தடவை அவையில் வாயே திறக்கவில்லை. காங்கிரஸ் உறுப்பினரான பிரபு 9 தடவைகளும், மதிமுக உறுப்பினரான ஜிஞ்சி ராமச்சந்திரன் 11 தடவைகளும், காங்கிரஸ் உறுப்பினர்களான ராணி, தனுஷ்கோடி ஆதித்தன், திமுக உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் 14 தடவைகளும், பாமகவைச் சேர்ந்த தனராஜூ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் மற்றும் மதிமுக எல்.கணேசன் 17 தடவைகளும் விவாதங்களில் பங்கேற்றிருக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக, கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 21 தடவைகளும், இ. பொன்னுசாமி (பாமக) 25 தடவைகளும், டி.வேணுகோபால் (திமுக) 27 தடவைகளும், ஏ.கே.எஸ். விஜயன், காதர்முகைதீன் (திமுக) 28 தடவைகளும், விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த சமயத்தில் செயல்பட்டதுதான். அதன்பின்னர் அவர் வாயே திறக்கவில்லை. கேள்விகளும் எதுவும் தாக்கல் செய்திடவில்லை. மற்ற உறுப்பினர்கள் கணிசமான அளவிற்கு விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகள் தாக்கல் செய்து பதில்களை வரவழைப்பது என்பது ஒரு கலை. இதிலும் தமிழக உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள்?
ஏ.கே.எஸ். விஜயன், டி. வேணுகோபால், கே.வி.கே. தங்கபாலு ஜிஞ்சி ராமச்சந்திரன், சி. கிருஷ்ணன், தயாநிதிமாறன் ஆகியோர் ஒரு கேள்வி கூட தாக்கல் செய்யவில்லை. பவானி ராஜேந்திரன் (திமுக) 2 கேள்விகளும், காதர்முகைதீன் (திமுக) 5 கேள்விகளும், கிருஷ்ணசாமி (திமுக) 9 கேள்விகளும், பிரபு (காங்) 12 கேள்விகளும் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்.
இதுதான் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக உறுப்பினர்களில் சிலரின் செயல்பாடுகளாக டில்லியில் இருந்திருக்கிறது. மற்றவர்களைப் பொறுத்தவரை சராசரிக்கும் மேலேயே செயல்பட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொ. மோகன் 88 தடவைகள் விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். 187 கேள்விகள் தாக்கல் செய்திருக்கிறார். ஏ.வி. பெல்லார்மின் 75 தடவைகள் விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். 171 கேள்விகள் தாக்கல் செய்திருக்கிறார்.
மக்களவையில் பொ. மோகன் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே. அப்பாதுரை விவாதங்களின்போது தமிழில் உரை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment