Wednesday, March 25, 2009

மாற்று விவசாயக் கொள்கையை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்திட முன்வர வேண்டும்



புதுடில்லி, மார்ச் 25-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில் புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘‘வேளாண்மைத்துறையில் ஐமுகூ அரசாங்கத்தின் பொய்கள், வஞ்சகம் மற்றும் ஏமாற்று’’என்னும் மக்களவைத் தேர்தல் பிரச்சார பிரசுரத்தை வெளியிட்டு எஸ். ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் கே.வரதராசன் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஐமுகூ அரசாங்கம் வேளாண்மைத் துறையில் கூறுகின்ற பொய்கள், வஞ்சகம் மற்றும் ஏமாற்றை விளக்கி ஒரு சிறுபிரசுரத்தையும் ‘பாரத் நிர்மாண்’ என்னும் ஆட்சியாளர்களின் திட்டம் கிராமப்புற இந்தியாவிற்கு அளித்திடும் ‘புதிய ஒப்பந்தமா’ அல்லது ‘மோசமான ஒப்பந்தமா’ என்னும் சிறுவெளியீட்டையும் (கடிடனநச) இப்போது வெளியிடுகிறோம்.
நம் நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விவசாய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. முன்பு ஆட்சி செய்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பின்னர் இப்போது ஆட்சி செய்திடும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணியும் பின்பற்றிய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே வேளாண்மைத்துறையில் இந்த அளவிற்கு மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேளாண்மை செய்வதென்பது ஆதாயம் இல்லாத துறையாக மாறிக்கொண்டிருக்கிறது. வேளாண் செலவினம் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. வேளாண்மைத்துறையின் மூலமாக வந்திடும் வருவாய், வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை நடத்திச் செல்லக்கூடிய அளவிற்குப் போதுமானதாக இல்லை. எனவேதான் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பான்மையோர் அதனை விட்டுவிட்டு வெளியேறிச் செல்லும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக தங்கள் கால்நடைகளை விற்றும், நிலங்களை விற்றும் விவசாயத் தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்குத் தேவையான கடன் வசதிகளை அரசாங்கம் அரசு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாகத் தருவது சுருங்கிக்கொண்டேயிருப்பதன் காரணமாக, ஏராளமான விவசாயிகள் தனியார் கடன்வலையில் சிக்கி வெளிவரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். பல்வேறு காரணங்களால் வேளாண்மை பொய்த்துப் போவதை அடுத்து, விவசாயிகளால் தாங்கள் தனியாரிடம் வாங்கிய கடன்களை மீள அடைக்க முடியாததன் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
விவசாய உற்பத்தியின் வளர்ச்சி விகிதமும் குறைந்து கொண்டிருக்கிறது. உணவு உற்பத்தியின் வளர்ச்சி விகிதமும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ற அளவிற்கு அதிகரித்திட வில்லை. இதனால் உணவு தான்ய இருப்பில் கடும் பற்றாக்குறையை நாடு எதிர்நோக்க இருக்கிறது.
ஐமுகூ அரசாங்கம் தன்னுடைய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் எண்ணற்ற உறுதிமொழிகளை விவசாயிகளுக்கு அளித்திருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்ற உருப்படியான நடவடிக்கைகள் எதையும் அது எடுத்திடவில்லை. பொது முதலீட்டை அதிகரித்திடவில்லை. அரசு வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் அளிப்பதையும் விரிவாக்கிடவில்லை. விளைபொருள்களின் விலை வீழ்ச்சியிலிருந்த விவசாயிகளைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் அது எடுத்திடவில்லை. அதேபோன்று விவசாயத் தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கும் ஓர் ஒருங்கிணைந்த மத்தியச் சட்டத்தை அது கொண்டுவர மறுத்தது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்திட அது தவறிவிட்டது. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் விநியோகிக்கப்படவில்லை. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அது அளித்திட்ட எந்த உறுதிமொழியையும் அது அமல்படுத்தவில்லை. எனவேதான் கடந்த நான்காண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு விவசாயத்துறையில் ஐமுகூ அரசாங்கம் முழுமையாகத் தோல்வி கண்டுவிட்டது.
மாற்று விவசாயக் கொள்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம். விவசாயத் துறையை அனைவரும் விரும்பி ஏற்கும் வண்ணம் அதனை மாற்றி இருக்கிறோம். விவசாயிகளுக்கு கட்டுப்பாடியான விலை கிடைக்கக்கூடிய வகையில், பொது முதலீட்டை அதிகப்படுத்தக்கூடிய விதத்தில், அரசுக் கடன்களை விவசாயிகளுக்கு விரிவாக்கக்கூடிய விதத்தில் மாற்றி அமைத்திருக்கிறோம்.
எனவே, மக்கள் இத்தகைய மாற்று விவசாயக் கொள்கையை முன்வைத்திடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு எஸ்.ராமச்சந்திரன் பிள்ளையும், கே.வரதராசனும் கூறினார்கள்.
*****

No comments: