Monday, March 23, 2009

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரகாஷ்காரத் பேச்சு



புதுடில்லி, மார்ச் 16-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திங்களன்று மதியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, எம்.கே. பாந்தே, முகமது அமீன் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரகாஷ்காரத் பேசியதாது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையானது எங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையாகும். இதனை அடுத்து, அடுத்த சில நாட்களில் இடதுசாரிக் கட்சிகள் சார்பாக, ஒரு வேண்டுகோளையும் வெளியிட, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அனைவரும் சேர்ந்து தீர்மானித்திருக்கிறோம்.
பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெறும் வரவிருக்கும் தேர்தலில் மக்கள் காங்கிரசையும், பாஜகவையும் தோற்கடிக்க வேண்டும் என்றும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தக்கூடிய வகையில், மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமையக் கூடிய விதத்தில், வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஏனெனில், காங்கிரஸ் தலைமையிலிருந்த கடந்த ஐந்தாண்டு கால ஐமுகூ அரசாங்கமானது, மக்களுக்குப் பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்து விட்டது. இதனை அறிக்iயில் முதல் பகுதியில் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் ஆட்சியில் சமூகத்திலிருந்த ஏற்றத்தாழ்வுகள்மேலும் ஆழமாகிவிட்டன. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மிக மோசமான நிலைக்கும் மாறியுள்ளனர். ஐமுகூ ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைதான் இத்தகைய ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகிடக் காரணமாகும்.
கடந்த நான்கு ஆண்டு காலமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம் என்று அரசு தொடர்ந்து பீற்றிக்கொண்டு வருகிறது. ஆனால் இதன்காரணமாக ஒருசில பெரும் பணக்காரர்களைத்தான் உருவாக்க முடிந்திருக்கிறதேயொழிய, சாமானிய மக்களுக்கு மேலும் மேலும் துன்பதுயரங்களைத்தான் கொண்டு வந்திருக்கிறது.
ஐமுகூ ஆட்சியை, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடி.ப்படையில்தான் இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தன. ஆனால், அவற்றில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றிற்கு எதிராகத்தான் அது செயல்பட்டது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட விவசாய நெருக்கடியைத் தீர்த்திட முடியவில்லை. நெருக்கடிக்கு ஆளான விவசாயிகள் இன்றும் தற்கொலைகள் செய்வது தொடர்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையான முறையில் உயர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பொது விநியோக முறையை சீர்குலைப்பதில்தான் குறியாக இருந்தார்களேயொழிய, அதனை வலுப்படுத்திட முன்வரவில்லை. நாம் இந்த அரசை ஆதரித்துக் கொண்டிருந்த சமயத்திலும்கூட, ஆட்சியாளர்களின் பணக்காரர் ஆதரவுக் கொள்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்மோகன்சிங் - ப.சிதம்பரம் வகையறாக்கள் பெரும் பணக்காரர் ஆதரவு நிலைபாட்டினையே மேற்கொண்டார்கள். பங்குச்சந்தையில் கொள்ளைலாபம் அடிப்போரிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஊகவர்த்தகத்தில் நடைபெறும் வரிமோசடிகளைத் தடுத்திட நடவடிக்கைகள் கோரினோம். ஆனால் எதையும் செய்ய அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
நம்மைப் பொறுத்தவரை, நாட்டில் பெரும்பணக்காரர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இடைவெளி ஏற்பட்டிருப்பதற்கு, ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடித்த நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளே காரணமாகும்.
வகுப்புவாதத்திற் எதிராக....
அடுத்ததாக, 2004ஆம் ஆண்டு, நாம் ஏன் மதச்சார்பற்ற அரசாங்கமாகத் தன்னைக் கூறிக்கொண்ட ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்தோம். ஏனெனில் மதவெறி பாஜக தலைமையிலான கூட்டணியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவ்வாறு செய்தோம். ஆனால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆராந்தோமானால், அது மதவெறி சக்திகளுக்கு எதிராக, நடவடிக்கைள் எடுக்கத் தயங்கியதையும், ஊசலாடியதையும், அவற்றுடன் சமரசம் செய்து கொண்டதையும் பார்த்தோம். ஒரிசாவில் கிறித்தவ சிறுபான்மையினர் தாக்கப்பட்டனர். கர்நாடகாவில் இந்து - முஸ்லீம் மாணவர்கள் நட்புடன் இருப்பதையே சகித்துக்கொள்ள முடியாமல், தாக்குதல் தொடுத்தனர். நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் மதவெறியர்களுக்கு எதிரான பரிந்துரைகள் எதையும் அமல்படுத்திட முன்வரவில்லை.
ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக....
ஐமுகூ ஆட்சியாளர்களின் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, அது மாபெரும் துரோகம் இழைத்துவிட்டது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வரையறுக்கும்போதே, இந்தியா சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றும் என்ற உறுதிமொழியை உத்தரவாதப்படுத்தியிருந்தோம். அதில், அமெரிக்காவுடனான போர்த்தந்திர உடன்பாடு (ளவசயவநபiஉ யடடயைnஉந) குறித்து எதுவும் குறிப்பிடப்பட வில்லை. அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணி வேண்டாம் என்று நாம் இந்த அரசிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினோம். ஆனால் நாம் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இதற்கு அவர்கள் கூறிய காரணம், நாட்டிற்கு யுரேனியம் தேவைப்படுகிறது என்றும், அது இல்லாமல் நம் நாட்டில் உள்ள அணு உலைகளை இயக்க முடியாது என்றும் கூறினார்கள். ஆனால் நம் நாட்டிலேயே யுரேனியத்தைத் தோண்டி எடுத்திருக்க முடியும் என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி, தன்னுடைய அறிக்கையில் சாடியிருக்கிறார். ஆயினும் ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதன் காரணமாக நாம் 38 ஆயிரம் கோடி ரூபாய் அளிவிற்கு அணுஉலைகளை இறக்குமதி செய்ய இருக்கிறோம். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கட்டணமும் கடுமையான அளவில் இருந்திடும். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டின் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான அரசு துரதிர்ஷ்டவசமாக அணிசேராக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. அதனால்தான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டன.
ஐமுகூ அரசுக்கு அதன் முதல் நான்கு ஆண்டுகாலம் நாம் ஆதரவு அளித்தவந்த சமயத்தில், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்ட உறுதிமொழிகளை அது நிறைவேற்றிட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் அதில் எண்ணற்ற திருத்தங்களைக் கொண்டுவந்தோம். அவ்வாறு நாம் கொண்டுவந்திராவிடில் அந்தச் சட்டமே பயனற்றுப் போயிருந்திருக்கும். அதேபோல் பழங்குடியினர் வன உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் ‘கட்-ஆப்’ ஆண்டுகள் தொடர்பாக நாம் திருத்தம் கொண்டுவந்திராவிட்டால் இந்நேரம் பழங்குடியின மக்கள் வனங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்கள்.
ஐமுகூ அரசாங்கம், நாட்டில் தனியார் வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சித்தது. அதேபோல் காப்பீட்டுத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகரித்திட முயன்றது. இவற்றை நாம் உறுதியுடன் தடுத்திருந்திருக்காவிட்டால், உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகள் அனைத்தும் காணாமல் போயிருந்திருக்கும். இன்சூரன்ஸ் துறையும் கடுமையான அளவில் சிதைந்து போயிருக்கும்.
நாட்டின் அயல்துறைக் கொள்கையின் இரு விஷயங்கள் முக்கியமாகச் செய்யப்பட வேண்டியிருக்கிறது. முதலாவதாக, அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணி ரத்து செய்யப்பட வேண்டும். மற்ற பல்வேறு அம்சங்கள் குறித்து உறவுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் ராணுவக் கூட்டு ரத்து செய்யப்பட வேண்டும். இதனையொட்டியுள்ள 123 ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட வேண்டும். இதையெல்லாம் எப்படிச் செய்வது என்பதை புதியஅரசாங்கம் பொறுப்பேற்கும்போது அறிவித்திடுவோம்.
நேற்றையதினம் ஒன்பது கட்சிகள் நம்முடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கின்றன. இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அவை நாம் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றன.
மேலேகூறிய கருத்துக்களின் அடிப்படயில் மதச்சார்பற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு மாற்று அரசாங்கத்தை மத்தியில் அமைத்திடுவோம். இந்த அரசாங்கமானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூட்டணிக்கும் மாற்றாக அமைந்திடும். பல கட்சிகள் இப்போது நம்முடன் வந்திருக்கின்றன. மேலும் பல கட்சிகள் தேர்தலுக்குப்பின் முடிவுகள் மேற்கொள்வதாக அறிவித்திருக்கின்றன.
இவ்வாறு மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணி மத்தியில் ஆட்சியில் அமைந்திடும். அதற்கேற்ற முறையில் நாம் செயல்படுவோம்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். இலங்கையில் நடைபெறும் போரில் தமிழர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி இருப்பது தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது, பிரகாஷ்காரத், ‘‘இதில் இரு அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குட்பட்ட நிலையில் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் இந்தப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இலங்கையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கக்கூடிய வகையில் 13 திருத்தங்களைச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இலங்கை அரசும் செய்வதாக வாக்குறுதி அளிக்கிறதேயொழிய இதுவரை செய்யாமல் காலம் கடத்தி வருகிறது.அத்திருத்தங்களை அமல்படுத்திட வேண்டும். அவற்றைச் செய்திடாமல் அரசியல் தீர்வு சாத்தியமில்லை. இதனை ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் பல நாடுகள் அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் செய்திட வேண்டும். இரண்டாவதாக, சண்டை நடைபெறும் பகுதியில் உடனடியாக போர் இடைஓய்வு செய்யப்பட வேண்டும். சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் போர் நடைபெறும் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசும், எல்டிடியு-உம் முன்வர வேண்டும். ’’ என்று கூறினார்.
---


No comments: