Thursday, April 5, 2018

தலித்துகளின் கிளர்ச்சிக்கு செவிசாய்த்திடுக



பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் ஏப்ரல் 2 அன்று விடுக்கப்பட்டிருந்த பந்த் அறைகூவலுக்கு வட இந்தியா முழுவதும் குறிப்பாக குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் தலித்துகளிடமிருந்து தீவிரமான விதத்தில் பங்கேற்பு இருந்தது. இந்தக் கிளர்ச்சி, தலித்துகள்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் ஷரத்துக்கள் சிலவற்றை நீர்த்துப்போகச்செய்யக்கூடிய அளவிற்கு உச்சநீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்டதாகும்.
ஆனால், இவ்வாறு தலித்துகளின் கிளர்ச்சி, வீதிகளில் நடைபெற்ற சமயத்தில், அதற்கு ஆதரவாகப் பெரும்திரளான அளவில் தலித்துகள் அணிவகுத்ததைத் தொடர்ந்து, வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில், அவர்கள்மீது இதுநாள்வரை ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்சாதியினரின் அப்பட்டமான கோபாவேசத்தை, நன்கு காண முடிந்தது. அவர்கள்மீது மிக மோசமான அளவில் தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளனர்.
தலித்துகளின் கோபம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக மத்தியிலும் மாநிலங்களில் ஆட்சி செய்திடும் பாஜக அரசாங்கங்களுக்கு எதிரானதுமாகும். ரோகித் வெமுலா மரணம், அந்தப் பிரச்சனையை மத்திய அரசு கையாண்ட விதம், தலித் இளைஞன் உனாவில் சாட்டையால் அடிக்கப்பட்ட நிகழ்வு, பீமா கொரிகான் பேரணியின்போது தலித்துகள் தாக்கப்பட்டமை மற்றும் பல்கலைக் கழக மானியக்குழு உட்பட மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவிற்கு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் தலித் விரோத கண்ணோட்டத்தைப் பிரதிபலித்திடப் போதுமானவைகளாகும். இவற்றை மூடிமறைப்பதற்காக இந்துத்துவாவாதிகள் தலித்துகளில் ஒருசிலருக்கு பதவி சுகங்களைக் காட்டி ஏமாற்ற முயன்றபோதிலும், அனைத்துத் தலித்துகளும் ஏமாறத் தயாராயில்லை.
கிளர்ச்சி ஆர்ப்பாட்டத்தின்போது  காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மை காவல்துறையினர் எந்த அளவிற்கு தலித்துகளுக்கு விரோதமாக இருந்து வருகிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. தலித்துகள் போராட்டங்கள் என்கிறபோது துப்பாக்கிகளின் ரவைகளை மிகவும் வெறித்தனமான சந்தோஷத்துடன் முடுக்குவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை.
ஏப்ரல் 2 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மிகவும் அமைதியைக் குலைக்கும் விதம் நடந்த நிகழ்வுகள் என்பவை, மத்தியப்பிரதேசம் குவாலியர் பிராந்தியத்திலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில இடங்களிலும் ஆர்எஸ்எஸ் ரவுடிகளும் உயர்சாதி வெறியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலித்துகள் மீது திட்டமிட்டமுறையில் தாக்குதல் தொடுத்திருப்பவைகளாகும்.
இவ்வாறு பந்த் கிளர்ச்சிகள் நடைபெறும் சமயங்களில் உயர்சாதி வெறியர்களும், இந்துத்துவாவாதிகளும் அவர்கள்மீது திட்டமிட்டமுறையில் தாக்குவதென்பது தற்சமயம் அதிகரித்துவருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் கரௌலி மாவட்டத்தில் காங்கிரஸ் தலித் சட்டமன்ற உறுப்பினர் வீடும். பாஜக தலித் சட்டமன்ற உறுப்பினர் வீடும் இத்தகு சாதி வெறியர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. மற்றும் பல இடங்களிலும் தலித்துகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். தலித்துகளுக்கு எதிராக சாதி வெறி எந்த அளவிற்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இவை எடுத்துக்காட்டுகளாகும்.
தலித்துகள்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் ஷரத்துக்களை நீர்த்துப்போகச் செய்திருப்பதை, பொய் வழக்குகளால் துன்பத்திற்கு ஆளான அப்பாவிகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்களைக் கைது செய்வதிலிருந்து தடுப்பதற்காகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று கூறி, சிலர் நியாயப்படுத்தி இருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பானது, தலித்துகள் காலங்காலமாகத் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கும், பாகுபாடுகளுக்கும் ஆளாகிவரும் எதார்த்த உண்மைகளிலிருந்து முற்றிலுமாக விலகிச் சென்றிருக்கிறது.  இன்றைய தேவை என்பது, தலித்துகள்/பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாத்திட கடுமையான ஷரத்துக்களுடன் கூடியதொரு சட்டமாகும்.  ஏனெனில் அவர்கள் இன்றைய தினம் சமூகரீதியாகவும், அரசாங்கங்களின் சார்பிலும் மிகவும் கீழ்நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருப்பவர்கள் என்கிற உண்மையை மறந்துவிடக்கூடாது.
தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டம் உண்மையில் நடைமுறையில் எப்படி இருந்து வந்தது? இச்சட்டம் அமலானபிறகும்கூட தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் ஒடுக்கமுறைகள் குறைந்துவிட்டன என்றோ அவற்றை இச்சட்டம் கடுமையான முறையில் தடுத்துவிட்டன என்றோ கூறிவிட முடியாது. அதனால்தான் இச்சசட்டத்தில் காணப்படும் ஓட்டைகளை அடைத்து இதனை ஒரு வலுவான சட்டமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நெடிய காலமாகவே இயக்கங்கள் நடைபெற்றுவந்தன. அத்தகைய முயற்சிகளின் விளைவாகத்தான் 2015இல் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திற்கு சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
தலித்துகள்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின் ஷரத்துக்களை நீர்த்துப்போகச் செய்ததற்கு எதிராக, கிளர்ச்சி நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் அதே சமயத்தில், இச்சட்டப்பிரிவின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் கதி என்ன என்பதை உண்மை விவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசியக் குற்றப்பிரிவு பதிவேடுகள் நிலையம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள 2017 தரவின்படி, இச்சட்டத்தின்கீழான வழக்குகளின் தண்டனை பெற்றவை என்பது மிகவும் கூர்மையான முறையில் சரிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.  இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 2010இல் 38 சதவீதமாக இருந்த தண்டனை என்பது, 2016இல் வெறும் 16 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  
இவ்வாறு தண்டனைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள அதே சமயத்தில், இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் என்பவை அதிகரித்திருக்கின்றன. அதாவது, 2010இல் இச்சட்டத்தின்கீழ் 40,481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அது 2016இல் 45,286ஆக உயர்ந்திருக்கிறது.
எனவே பிரதான பிரச்சனை என்பது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவது என்பதல்ல, மாறாக ஒடுக்குமுறைக்கும் அட்டூழியங்களுக்கும் ஆளாகும் தலித்/பழங்குடியினருக்கு உரிய நீதி வழங்கப்படுவதில் தோல்வியே கிடைத்திருக்கிறது என்பதாகும்.

நாட்டில் செயல்பட்டுவரும் காவல்துறை மற்றும் நீதிபரிபாலன அமைப்பு நடைமுறைகள் எந்த அளவிற்கு தலித்துகளுக்கு விரோதமான மனநிலையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உச்சநீதிமன்ற அமர்வாயம் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானதாகும். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு உச்சநீதிமன்றத்திலிருந்தே தீர்ப்பு வந்திருப்பதிலிருந்து, நாட்டிலுள்ள உயர்மட்டத்திலுள்ள நீதித்துறையே சாதிய ஒடுக்குமுறை மற்றும் தப்பெண்ணங்களுக்கு கூருணர்ச்சியற்ற முறையில் எந்த அளவிற்கு இருந்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
மத்திய அரசாங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிற மறு ஆய்வு, உச்சநீதிமன்றம் தன்னுடைய முந்தைய தீர்ப்புரையை மாற்றியமைத்திட இட்டுச்செல்லும் என்று நம்புவோமாக. இல்லையேல், இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு எதிரான போராட்டம் தொடரும்.
(ஏப்ரல் 4, 2018)
(தமிழில்: ச. வீரமணி)

No comments: